Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2007

வன்கொடுமைகளும் சட்ட அமுலாக்கமும்

‘வன்கொடுமைகளும் சட்ட அமுலாக்கமும்’ - என்ற ஆய்வு நூலை எம்.ஏ. பிரிட்டோ, களப்பணியாளர்களின் உதவியோடு எழுதியுள்ளார். மதுரை டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மய்யம், 404 பக்கங்களைக் கொண்ட இந்த விரிவான ஆய்வை வெளியிட்டுள்ளது. நூலின் விலை ரூ.250. நூலின் உள்ளடக்கம் பற்றி நூலாசிரியர், தமது முன்னுரையில் சுருக்கமாக இவ்வாறு பட்டியலிட்டுள்ளார்.

“.... அய்ந்து தலைப்புகளாக அமைந்துள்ள இந்த ஆய்வு நூலின் முதல் அத்தியாயம் சாதியம், தீண்டாமை குறித்த சில அடிப்படையான விஷயங்களை முன் வைக்கிறது. சாதியக் கட்டமைப்பின் பல்வேறு பரிமாணங்களுக்கான அடிப்படைகளைச் சுட்டிக் காட்டுவதோடு, வரலாற்றில் தலித்துகளுக்கு எதிராக சமூகப், பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் நடைபெற்ற ஒடுக்கு முறைகளையும், உரிமை மீறல்களையும் ஆங்காங்கே தொட்டுக் காட்டுகிறது. தீண்டாமை ஒழிப்பில் சட்டங்கள் என்ற தலைப்பில் அமைந்துள்ள இரண்டாவது அத்தியாயம், ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கி இந்த ஆய்விற்கான கருப் பொருளான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் வரையில் தீண்டாமை ஒழிப்பிற்கென இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களின் சாராம்சங்களைக் குறிப்பிடுவதோடு, அவற்றின் அமலாக்கம், அரசால் எடுக்கப்பட்ட முயற்சிகள், விடுபாடுகள் பற்றிப் பேசுகின்றது. இந்த ஆய்வுக்கான நோக்கங்கள், ஆய்வு அணுகுமுறை மற்றும் அறிக்கைத் தயாரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாம் அத்தியாயம் ஆய்வுக்கான பின்னணிக் குறிப்புகளை வழங்குகிறது.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வழக்குகளின் அடிப்படையில் தென் தமிழகத்தில் ஆய்விற்கான கால வரம்பில் தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன் கொடுமைகள், அவற்றின் பின்னணி, குற்றம் புரிந்ததற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்கள் போன்ற தகவல்களைத் தாங்கிய விரிவான பகுதியாக நான்காவது அத்தியாயம் அமைந்துள்ளது. இவ்வாய்வின் நோக்கமான வன் கொடுமைகள் தடுப்புச் சட்ட அமலாக்கம் குறித்த பகுதியாக ஐந்தாம் அத்தியாயம் அமைகிறது. இச்சட்ட விதிமுறைகளின் கீழ் அரசு அதிகாரிகளுக்குள்ள குறிப்பான பணிகள் மற்றும் கடமைகளைப் பல்வேறு நிலைகளில் விரிவாக அலசி ஆராய்கிறது.”

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகெங்கை ஆகிய 6 மாவட்டங்களில் 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளின் நிலை ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் கணிசமானவை, புலனாய்வு நிலையில் காவல்துறை அதிகாரிகளாலேயே தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதை அரசு புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன. அப்படியே விசாரணைக்கு ஏற்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்ட பல வழக்குகளிலும் தண்டனை விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது என்ற உண்மையை தக்க தரவுகளுடன் இந்த ஆய்வு நிறுவுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் - திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் நிலவும் ‘இரட்டை டம்ளர் - இரட்டை இருக்கை’ தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்ட பிரச்சாரப் பயணத்தில், கிராமங்களில் சாதி வெறியர்களின் கடும் எதிர்ப்புகளை தோழர்கள் சந்தித்தனர். தீண்டாமைக்கு எதிரான வழக்கை காவல் நிலையத்தில் பதிவு செய்வதற்கே கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஒரு இயக்கத்துக்கே இந்த நிலை என்றால், தனிப்பட்ட புகார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

பாதிக்கப்பட்டோர் தரும் புகார் மனுக்களை காவல்துறையினர் உடனே முதல் தகவல் அறிக்கையாகப் பதியாமல், தாமதப்படுத்தும் காரணங்களை, இந்த ஆய்வு இப்படி பட்டியலிட்டுக் காட்டுகிறது. (பக்.167)

• “பாதிக்கப்பட்டோரை காவல் துறையினர் பலமுறை அலைக் கழிப்பது, காவல் நிலையங்களில் காரணமின்றி நெடுநேரம் காத்திருக்க வைப்பது.

• பாதிக்கப்பட்டோர் கொடுக்கும் புகாரைத் திரும்பப் பெற வைக்க அவர்களிடம் பல்வேறு விதமான சமரச முயற்சிகளில் காவல்துறையினர் ஈடுபடுவது.

• வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க வரும் தலித்துகளை காவல்துறையினர் மிரட்டுவது.

• பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் மீதே பொய் வழக்குப் பதியப் போவதாக மிரட்டுவது, பதிவு செய்ய முனைவது, சில சம்பவங்களில் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்வது.

• பாதிக்கப்பட்டோரின் புகார் மனுக்களில் அவர்கள் கூறும் முழுமையான சம்பவ விவரங்கள், வன்கொடுமையின் தன்மை, பாதிப்பு, சேத விவரம் ஆகியவற்றை முழுமையாக எழுதாமல், முக்கிய பல தகவல்களை விட்டு விட்டு தாங்களாகவே ஏனோ தானோவென பெயருக்கு எழுதிக் கொள்வது.

• நடந்த வன்கொடுமைகளுக்கு ஏற்ற சரியான பிரிவுகளைக் குறிப்பிடாது. இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளை மட்டும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்வது.

• புகார் கொடுக்க காவல் நிலையங்களுக்கு வரும் பாதிக்கப்பட்ட தலித்துகளை காவல்துறையினர் தாக்குவது அல்லது இழிவுபடுத்துவது.

• காவல் துணைக் கண்காணிப்பாளர் போன்ற உயர் அதிகாரிகள் அறிவுறுத்துதலின்படி மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிய முடியும் என்று கூறி வேண்டுமென்றே காலம் கடத்துவது.

• முதல் தகவல் அறிக்கையினைப் பதிவு செய்ய இலஞ்சம் பெறுவது, எதிரிகளிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுப்பது.

• பாதிக்கப்பட்ட புகார்தாரர்களை எதிரிகள் மிரட்டுவது, கொடுத்த புகார்களைத் திரும்பப் பெற அவர்களுடன் சமரச முயற்சிகளில் ஈடுபடுவது.

• ஊர்ப் பெரியவர்கள், நாட்டாண்மைகள், பஞ்சாயத்துத் தலைவர்கள் போன்றோர் புகார்தாரர்களை சமரசப்படுத்த முயற்சிப்பது, புகார் மனுக்களைக் கொடுக்கவிடாமல் தடுப்பது.

• காவல் துறை அதிகாரிகளை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவிடாமல் உள்ளூர் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் குறுக்கீடு செய்வது அல்லது தடுப்பது.

மேற்கண்ட நீண்ட பட்டியலைப் பார்க்கும்போது நடந்த வன்கொடுமைகளால் ஆதிக்க சாதியினரிடம் பட்ட இன்னல்கள், அவமானங்களைவிட அவற்றைப் புகார் மனுக்களாக ஏந்திக் கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையங்களுக்கு வரும்போது பாதிக்கப்பட்டோர் கூடுதலான போராட்டங்களையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது தெரிகிறது” - என்று படம் பிடிக்கிறது, இந்த ஆய்வு நூல்.

புதிய ஜனநாயகப் புரட்சி, தமிழ்த் தேசக் குடியரசு உருவாக்கம் என்ற தொலைநோக்கு இலக்குகளோடு, இவற்றில்தான் அனைத்துப் பிரச்சினைக்குமான தீர்வு அடங்கியுள்ளது. பல்வேறு அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரின் ஆட்சியே வந்து விட்டது; எனவே சாதி, மத சுரண்டல் முற்றிலுமாக ஒழிந்து விட்டன என்ற கற்பனைக்குள் மூழ்கிக் கொண்டு, அரசவைப் புலவர்களாக, ஆட்சிக்குப் புகழாரம் சூட்டுவதையே, அன்றாடப் பணியாக்கிக் கொண்ட “தமிழர் தலைவர்கள்” அறிக்கைப் புரட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் - கண்களுக்கு எதிராக கிராமங்களில், தலைவிரித்தாடும் இந்த தீண்டாமைக் கொடுமைகளைக் காணாமல் அதற்கு எதிரானப் போராட்டத்தில் பங்களிப்பை வழங்காமல், தத்துவ - விவாதங்களில் இன்பம் காண்பது மிகப் பெரும் சமூக அநீதியாகும்.

இப்போதும் தமிழ்நாட்டில் இத்தனை தீண்டாமைக் கொடுமைகள் - இன்னமும் தலைவிரித்தாடுகிறது என்பதை இந்நூல் ஆய்வுகளோடு உறுதி செய்துள்ளது.

சாதி ஒழிப்புப் போராட்டக்களத்தில் இந்நூல், ஒரு வலிமையான படைக்கலன் என்று உறுதியாகக் கூறலாம்.

சாதி ஒழிப்புக்காக களத்தில் இறங்கிப் போராடுவோருக்கு, நல்ல வெளிச்சத்தைத் தரக்கூடிய இந்த ஆய்வு நூலைப் படைத்த நூலாசிரியர் எம்.ஏ. பிரிட்டோவையும், மதுரை டாக்டர் அம்பேத்கர் மய்யத்தையும் பாராட்டுகிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com