Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2006

மூடநம்பிக்கைகளை எதிர்த்து தோழர்கள் முழக்கம்
கழக இணையர்கள் சக்திவேல்-தனசீலி புதிய இல்லத் திறப்பு எழுச்சி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் உள்ள பொன்நகர் அருகிலிருக்கும் திலீபன் நகரில், நமது இயக்கத்தின் இணையர் சக்திவேல்-தனசீலி, தங்கள் வசதிக்கும் ரசனைக்கும் ஏற்றார்போல் (வாஸ்து பார்க்காமல்) தங்கள் வீட்டைக் கட்டியுள்ளனர். நல்லநாள், நேரம் பார்க்காமல், எந்தவிதச் சடங்கு களுமின்றி அவ்வீட்டை சூன் மாதம் 25 ஆம் தேதியன்று மதியம் 12 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார்.

வீட்டு வாசலில் மிகப் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேட்டூரின் முதன்மைச் சாலையிலிருந்து வீடு இருக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் சாலையின் இருபுறமும் கழகக் கொடிகள் நடப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் பறந்தன. திலீபனின் மிகப் பெரிய படம் வரையப்பட்டு நகரின் நுழைவாயிலில் வைக்கப்பட்ட ‘திலீபன் நகர் அறிவிப்புப் பலகை’ அனைவரின் கவனத்தைக் கவர்ந்தது.

இல்லத் திறப்பு நிகழ்ச்சி சேலம் மாவட்டத் தலைவர் கி.முல்லைவேந்தனின் வரவேற்புரையுடன் தொடங்கியது. கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பேசுகையில், “பெரியார் கொள்கையைப் பேசுபவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் சிறப்பதில்லை என்றொரு மூடநம்பிக்கைக் கருத்து நிலவுகிறது. ஆனால் தங்களின் கடுமையான உழைப்பால் இப்படியொரு சிறப்பான நிலையிலிருக்கும் பெரியார் கொள்கைக் குடும்ப இணையர்களான சக்திவேல்-தனசீலி இருவரும் மேற்சொன்ன மூட நம்பிக்கைக் கருத்தை தகர்த்து எறிந்த தற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள். ‘கிரகப் பிரவேசம்’ என்ற பெயரில் நம் வீட்டிற்குள் நுழையும் பார்ப்பனர்கள், அந்த வீட்டிற்கு சடங்கு செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, உழைக்கும் மக்களாகிய நம்மையே இழிவுபடுத்துகிறார்கள். வீடு கட்டுவதில் முழு உடலுழைப்பையும் கொடுப்பவர்கள் இந்த மக்கள் தான். ஆனால், அவர்களால் கட்டி முடிக்கப் பட்ட அந்த வீடு தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி, பசு மாட்டை வீட்டிற்குள் கொண்டுவந்து, தோஷத்தைக் கழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு உழைக்கும் மக்களாகிய நம்மை சடங்குகளின் மூலம் பார்ப்பனர்கள் இழிவுபடுத்துகிறார்கள்.

ஆனால், நமது கொள்கைக் குடும்ப இணையர் அதுபோன்ற எந்த இழிவுபடுத்தலையும் செய்ய வில்லை. மாறாக, சிறப்பான முறையில் இந்த வீட்டைக் கட்ட உதவிய உழைப்பாளர்களை பெருமைப் படுத்தியிருக்கிறார்கள்.

அதே போன்று, ‘கிரகப்பிரவேச’த்தின் போது வீடு கட்டுவதற்கு எந்த வகையிலும் பயன்தராத வாழை மரத்தை வீட்டின் முகப்பில் கட்டுகிறார்கள். ஆனால், அந்த வீட்டையே அதுவரை தாங்கிக் கொண்டிருந்த சவுக்குக் கட்டைகளை வீடு கட்டி முடிந்ததும், வீட்டின் பின்புறம் கொண்டு போட்டு அதை முக்கிய மற்றதாக ஆக்கிவிடுகிறார்கள். எந்த வகையிலும் நமக்குத் தொடர்பில்லாத பார்ப்பனர்களை நமது விழாக்களில் முன்னிலைப்படுத்துவதும், வாழை மரத்தை வீட்டின் முகப்பில் கட்டுவதும் பொருத்த மற்றது ஆகும். எனவே, உழைக்கும் மக்களை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகளையே நாம் முன்னிலைப் படுத்த வேண்டும். அதற்கும் பெரியாரின் குடும்பக் கொள்கையான இந்த இணையர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார்கள்” என்று பேசினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில், “தமிழர் இல்லம் என்பதன் அடையாளம் - சாதி, மத, மூடநம்பிக்கை ஒழிப்பு மட்டுமல்ல, பெண்ணுக்கு சமத்து வம் வழங்குவதும் தான். சமையலறையில் பெண் - ஆண் சமத்துவம் வர வேண்டியது அவசியமாகும்” - என்றார்.

இயக்குநர் சீமான் அவர்கள் பேசும்போது மூடநம்பிக்கையின் பல்வேறு வடிவங்களையும் சாடினார். அவர் பேசுகையில், “வெறுமனே பெயரை மட்டும் மாற்றி வைத்துக் கொண்டாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்றொரு மூடநம்பிக்கை அண்மைக் காலமாக மக்களிடம் பரவி வருகிறது. வெறும் டி. ராஜேந்தராக இருந்த வரையில் திரைப்பட இயக்குநராக அவர் அனைவரும் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றார். ஆனால், விஜய் டி.ராஜேந்தர் என்று பெயர் மாற்றிக் கொண்ட பிறகுதான் அவரின் எந்தப் படமும் வெற்றி பெறாமல் அதல பாதாளத்தில் வீழ்ந்தார்.

அதே போன்று, வெறும் கண்ணப்பனாக இருந்த வரையில் அவரால், தமிழ்நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்க முடிந்தது. ஆனால், அவரே ராஜ.கண்ணப்பனாகிய பிறகு, அவர் தொடங்கிய கட்சி அவரின் சாதி என்று சொல்லப்படுகின்ற அந்த மக்களிடம்கூட செல்வாக்குப் பெற முடியாமல் போனது.

வண்ண வண்ண நிறங்களில் கல் வைத்து மோதிரம் அணிபவர்கள் பெரும் பணக்காரர்களாக திகழ்வார்கள் என்பதும் ஒரு மூட நம்பிக்கையே. அது உண்மையாக இருக்குமானால், அந்தக் கற்களை எதற்கு வியாபாரம் செய்ய வேண்டும்? அவர்களே அணிந்து கொண்டு பணக்காரர்களாகி விடலாமே?

கழுதையைப் பார்த்தால் யோகம் வருமாம்? அதன்படி பார்த்தால் சலவைத் தொழிலாளிகளுக்குத் தானே யோகம் அடித்திருக்க வேண்டும்?

பின் ஏன் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயராமல் போனது?

நரி முகத்தில் விழிப்பதையும் கூட அவ்வாறுதான் கூறுகிறார்கள். ஆனால், தினமும் நரி முகத்தில் விழிக்கும் நரிக் குறவர்கள் வாழ்க்கையில் சிறு அளவுகூட முன்னேறாமல், இன்னும் சொல்லப் போனால், நிரந்தர தங்குமிடம்கூட இன்றி நாடோடிகளாகவே பல வருடங்களாக இருப்பது ஏன்?”

இதுபோன்று பகுத்தறிவு சிந்தனைகளைத் தூண்டும் வினாக்கள் பலவற்றை தனது தனித்துவமான நடையில் மக்களைச் சிந்திக்க வைத்தார்.

பாவலர் அறிவுமதி பேசுகையில் உணர்ச்சிகரமான ஒரு வேண்டுகோளை வைத்தார். “ஈழத்தில் போர் நடப்பதால் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நாம் அகதிகள் (ஏதிலிகள்) என்று அழைக்கிறோம். நமது தொப்புள்கொடி சொந்தங்களை இனி நாம் அவ்வாறு அழைக்காமல், அவர்களை ‘ஈழ விருந்தாளிகள்’ என அழைக்க வேண்டும்” என்று கூறியபோது, அங்கு கூடியிருந்த மக்கள் நீண்டதொரு கைத்தட்டலின் மூலம் அந்த வேண்டுகோளை அங்கீகரித்தனர். அதன் பின் ஈழ விருந்தாளிகளின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளுக்குத் தானே துண்டேந்தி வசூலிக்க வருவதாக அறிவித்து விட்டு துண்டேந்திச் சென்றார் பாவலர் அறிவுமதி. அப்படி துண்டேந்தி சென்றபோது மக்கள் அளித்தக் கொடை ரு.9367. அதில் சக்திவேல்-தனசீலி இணையர் அளித்தத் தொகை ரூ.5000/- அடங்கும்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “வாஸ்து மூடநம்பிக்கையை சுட்டிக் காட்டிப் பேசினார். அவர் பேசுகையில்,
“இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வீடு கட்டும் யாரும் கழிப்பிடம் இன்றி கட்டுவதேயில்லை. ஆனால், வாஸ்துவில் கழிப்பிடம் பற்றிய எந்த செய்தியும் குறிப்பிடப் படவில்லை. மேலும் வீட்டின் முன் கம்பம் இருந்தால் குழந்தைகளின் உயிருக்குக் கேடு என்றும், வீட்டின் முன் மரம் இருந்தால் பெண்களின் கற்பு நிலைக்காது என்றும் கூறுகிறது. இது எப்படி அறிவுக்குப் பொருந்தும்?

வாஸ்துவைப் பற்றி பெரிதும் புகழ்ந்து பி.என்.ரெட்டி என்பவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1991-ல் அய்தராபாத்தில் ஒரு கட்டடத்தை பி.என். ரெட்டியின் வாஸ்து படி கட்டினார்கள். ஆனால், தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் விடும்போது அந்த அடுக்குமாடி கட்டடமே கீழே விழுந்து நொறுங்கியது. இதுதான் வாஸ்துவின் இலட்சணம்.

ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமா ராவ், தனது அலுவலகத்தை வாஸ்துப்படி வடக்கு நோக்கி நுழைவு வாயில் இருக்கும் படி மாற்றியமைத்தார். ஆனால், அடுத்த முறை அவரால் முதல்வராக முடியவில்லை. தேவ கவுடா இந்திய துணைக் கண்டத்தில் தலைமையமைச்சராக இருந்தபோது தனது அலுவலகத்தில் வாஸ்து படி சில படிக்கட்டுகளை இடித்து விட்டு மாற்றிக் கட்டி னார்.
ஆனால், பாவம் அவரால் தனது முழு பதவிக் காலத்தைக்கூட அங்கே கழிக்க முடியாத படியான நிலை ஏற்பட்டுவிட்டது” என்றார், கொளத்தூர் மணி.

வீடுகட்ட உடலுழைப்பைக் கொடுத்த அனைவருக்கும் கழகத் தலைவர் இல்லத்தார் சார்பில் சிறப்பு செய்தார். இறுதியாக சக்திவேல் நன்றி கூற நிகழ்ச்சி முடிந்தது. அதன் பின்னர், கழகத் தலைவர் ரிப்பன்வெட்டி வீட்டைத் திறந்து வைத்தார். சுமார் ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பெரும் திரளாக நிகழ்ச்சியைக் கண்டு கேட்டு களித்தனர். மிகப் பெரிய அளவில் கொள்கைப் பிரச்சார நிகழ்ச்சியாக இது அமைந்து.

மாவட்டச் செயலாளர் டைகர் பாலன், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.சக்திவேல், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், செயலாளர் கோவிந்தராசு, நங்கவள்ளி அன்பு மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இணையர் சக்திவேல்-தனசீலி - சாதி, மத மறுப்பு இணையர் இவர்கள்.

தோழர் சக்திவேல் அவர்கள் மேட்டூர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக களப்பணியை சிறப்பாக ஆற்றி வருபவர். இது வரையில் இயக்கத்திற்காக நடந்த பல நிகழ்ச்சிகளிலும் தனது சிறப்பான பங்கை செய்தவர். அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
தோழர் தனசீலி அவர்கள் ஓவியர், நடன ஆசிரியர். ஓவியம், நடனத்தை பயிற்றுவிப்பவராக தற்போது இருக்கிறார். இயக்கக் கூட்டங்களில் பெரியார் கொள்கைகளை விளக்கும் பேச்சாளர். மேட்டூர் சதுரங்காடியில் மகளிரே வசூல் செய்து முழுவதும் மகளிரின் பங்களிப்பில் நடந்த கூட்டத்தில் பங்கு பெற்று ‘நான் ஏன் கிறித்தவரல்ல’ என்னும் தலைப்பில் விளக்கங்களை அளித்துப் பேசிய அவரின் பேச்சு பொது மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இவர்களுக்கு தமிழழகி என்ற 10 வயது மகள் உள்ளார்.
இவ்விணையர் சாதி மறுப்பு, மத மறுப்பு, சடங்கு மறுப்பு, தாலி மறுப்பு மணம் புரிந்து கொண்டவர்கள்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com