Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2006

அர்ச்சகர் பதவியில் ‘தகுதி-திறமை’ கூடாது என்பது ஏன்?
கோவை இராமகிருட்டிணன்

உயர்கல்வி இடஒதுக்கீட்டில் ‘தகுதி-திறமை’ வேண்டும் என்று கூறும் பார்ப்பனர்கள், அர்ச்சகர் பதவியில் ‘தகுதி-திறமை’ கூடாது - ‘சாதி’ வேண்டும் என்று கூறுவது ஏன், என்று பொதுச்செயலாளர் கோவை. இராமகிருட்டிணன் கேட்டார்.

சாதி, ஆகமம், சோதிடம், வழிபாட்டு மொழி தொடர்பாக பார்ப்பனர்கள் வைக்கும் வாதங்களைத் தகர்த்து எறிந்தது அவரது உரை.

"‘சோதிடப் புரட்டு’ என்ற அருமையான நூல் இந்த நாத்திகர் விழாவில் வெளியிடப்பட இருக்கிறது. சோதிடத்தை எதிர்த்து இந்நூலில் கூறியவற்றுக்கு எந்த சோதிடராலும் நிச்சயம் பதில் கூற முடியாத நிலைதான் இருக்கும். சென்ற சில வருடங்களுக்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்ற தங்களின் கணிப்பை இந்தியாவின் புகழ்பெற்ற சோதிடர்கள் எல்லாம் பத்திரிகைகளில் எழுதினர். இந்தியாவின் தலைமை அமைச்சராக வாஜ்பேயி தான் வருவார் எனச் சிலரும், சோனியாகாந்திதான் என சிலரும் கணித்தனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், எந்த பிரபல சோதிடராலும் கணிக்க முடியாத மன்மோகன் சிங் தலைமை அமைச்சராக ஆனார்.

இது போன்ற நூல்களை வெளியிடுவது மாதிரியான சரியான பணிகளைச் செய்ய பெரியாரின் வழியிலே இயங்குகின்ற எங்களின் பெரியார் திராவிடர் கழகம் முனைந்து ஈடுபட்டு வருகிறது. எங்கள் இயக்கத்திற்கு பெரியார் விட்டுச் சென்ற பொருள் எதுவும் கிடையாது. பொது மக்களாகிய உங்களிடம் கையேந்தி, பொருள் திரட்டி, உங்களுக்காகவே இவற்றை வெளியிடுகிறோம்.

அனைத்து சாதிகளைச் சார்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் இயக்கத்தைச் சார்ந்த சுமார் ஆயிரம் பேர் 2004 ஆம் ஆண்டில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினோம். அதனால் சிறைபட்டோம். நம்முடைய அந்தக் கோரிக்கை இப்போது சட்டமாகியிருக்கிறது என்று சொன்னால், கழகத்தின் முன்னணியினரும் தோழர்களும் சுமார் 30 ஆண்டுகாலம் இதற்காக பல்வேறு போராட்டங்களை இடை விடாது சந்தித்தோம். அந்த வகையில் இது வெற்றி பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனாலும், பார்ப்பனர்கள் எங்களைக் கேட்கிறார்கள், ‘நீங்கள்தான் கடவுள் இல்லை என்று கூறுபவர் களாயிற்றே, யார் அர்ச்சகர் ஆனால் உங்களுக்கு என்ன? என்கிறார்கள். நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். அதுவும்கூட சிவன், சரசுவதி, விஷ்ணு, பிரம்மா போன்ற இந்துக் கடவுள்களை மட்டும் இல்லை என்று சொல்பவர்கள் அல்ல. எந்தக் கடவுளும் இல்லை என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மருத்துவ மனைகளுக்கும், சிறைச்சாலைகளுக் கும் சென்று அங்குள்ளோருக்காக பாதிரியார்கள் ஜெபிக்கிறார்கள். மக்கள் அவதிப்படும், வேதனைப்படும் இடங்களுக்குச் சென்று அங்கு போய் பாதிரியார்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். மக்களின் துன்பத்தைப் பயன்படுத்தி மதத்தை வளர்க்கத் துடிக்கிறார்கள். அவ்வாறு ஒரு மருத்துவமனைக்குச் சென்ற பாதிரியார், மரணப் படுக்கையிலிருந்து நோயாளி ஒருவரிடம் சென்று அவருக்காக ஜெபித்தார். அப்போது அந்த நோயாளி உரத்த குரலில் கத்தினார். அதைப் பற்றிய கவலையின்றி, அந்தப் பாதிரியார் ஜெபித்துக் கொண்டே இருந்தார். அந்த நோயாளி சிறிது நேரத்தில் மரணமடைந்தார். அந்த பாதிரியார் வேற்று நாட்டுக்காரர் என்பதால், நோயாளி கடைசியாக என்ன சொல்லி புலம்பினார் என்பதை பாதிரியார் தெரிந்து கொள்ள விரும்பினார். ‘நீங்கள் என்னுடைய சுவாசத்திற்குப் பயன்படும் ஆக்சிஜன் குழாயை மிதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்; உங்கள் காலை எடுத்தாலே நான் பிழைத்துக் கொள்வேன்’ என்று மரணமடைந்த நோயாளி புலம்பியிருக்கிறார். (பலத்த சிரிப்பு)

கிருபானந்த வாரியார் அந்தக் காலங்களில் எங்களின் பகுத்தறிவு வாதங்களுக்கு எதிர் வழக்காடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ஒரு முறை வாரியார் கூறும்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை எதிர்த்து ஒரு எடுத்துக்காட்டோடு பதில் உரைத்தார். ‘உணவு விடுதிக்குச் சென்றால், எல்லோரும் சமையலறைக்குச் செல்ல முடியுமா? சாப்பிடுகிறவர்கள் சாப்பிடும் இடத்தில்தான் இருக்க வேண்டும்; சமைக்கிறவர்கள் தான் சமையற் கூடத்தில் இருக்க முடியும்’ என்றார் வாரியார். திராவிடர் கழகத்தின் பிரச்சார அணிச் செயலராக அப்போது இருந்த செல்வேந்திரன் அதற்கு இப்படி பதில் கூறினார். ‘காசு கொடுக்காமல் ஓட்டலில் சாப்பிட்டால், சாப்பிடுகிறவர்களும் மாவு ஆட்ட சமையலறைக்குச் செல்ல முடியும்’ என்றார். (பலத்த கைதட்டல்)

பார்ப்பனர்கள் சொன்னார்கள்: ‘நாயில்கூட பொமரேனியன், புல்டாக், அல்சேஷன், ராஜபாளையம், நாட்டு நாய் என்ற பல சாதி நாய்கள் இருக்கின்றன. நாய்களிலேயே இவ்வளவு சாதிகள் இருக்கும்போது, மனிதரில் சாதிகள் இருக்காதா?’ என்றனர். நாய்களுக்கு அதனுடைய சாதி தெரியாதய்யா. எந்த நாய்க்காவது தான் நாட்டு நாய் என்றோ, ராஜபாளையம் என்றோ தெரியுமோ? இன்னும் சொல்லப் போனால், உயர்வகை என்று சொல்லப்படுகிற நாய்களை பெரிய பெரிய பங்களாக்களில் வெளியே விடாமல் பூட்டி வைத்திருக்கிறார்கள். புரட்டாசி மாதம் அந்த நாய்களை எல்லாம் வெளியே விட்டுப் பாருங்கள். எந்த நாயாவது அந்த சாதி நாயோடுதான் சேர்வேன் என்று சொல்லுமா? எந்த நாய் கிடைத்தாலும் அது தன்னுடைய வேலையைச் செய்யும். (பலத்த கைதட்டல்)
ஏனென்றால், நாய்களுக்கு சாதி தெரியாது. பார்ப்பனர்கள் மக்களையெல்லாம் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான்.

‘கோயிலின் ஆகம விதிப்படிதான் எதுவும் நடக்க வேண்டும்’ என ‘துக்ளக்’ சோ சொல்கிறார். சிவன் கோயில், விஷ்ணு கோயில் என்று தனித்தனியே ஆகமங்கள் உள்ளன. அதன்படிதான் நடக்கவேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்கிறார்கள். அதனால், அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் சென்று பூசை செய்ய முடியாது என்கிறார்கள் பார்ப்பனர்கள்.

அனைத்துச் சாதியினர் என்றால் யார்? பெரியாரின் தொண்டர்களாகிய நாங்கள் கோயிலுக்குள் சென்று மணியடிப்பதற்கா கேட்கிறோம்? நாங்கள் எந்தக் காலத்திலும் கோயிலுக்குள் போகப் போவதில்லை. கோயிலைக் கட்டவும், கட்ட உதவியர்களுமான வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், நாடார்கள், கவுண்டர்கள், செட்டியார்கள் இவர்களைப் போன்று கடவுளை நம்பும் மக்கள், அவர்கள் வணங்குகிற கடவுளைத் தொட்டு ஏன் வணங்கக் கூடாது? என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

சிவப்புச் சட்டை, சிவப்புச் சேலை என்று பக்தர்களின் உடையால் மேல் மருவத்தூர் முழுவதும் ஒரே சிவப்பாகவே காட்சியளிக்கிறது. சீனாவில் கூட அவ்வளவு சிவப்பு இருக்காது போல் தெரிகிறது. அந்த பங்காரு அடிகளாரின் ஆதி பராசக்தி கோயிலில் ஆகமத்தின் நிலை என்ன? பெண்களே அந்தக் கோயிலில் பூசை செய்கிறார்களே! பார்ப்பனர்கள் சொல்லும் ஆகமம் அங்கு என்னாச்சு? ஆகமம் அழிந்து போய்விட்டதா? அப்ப, ஆதிபராசக்தி கோயிலில் இருப்பது கடவுள் இல்லையா? ஆதிபராசக்தி கோயிலில் இருப்பது கடவுள் இல்லை என்று எந்தப் பார்ப்பானாவது மக்களிடம் போய் பிரச்சாரம் செய்வானா? ஆக, ஆகமம் அங்கே நிற்கவில்லையே?

சரி, ஆகமம், ஆகமம் என்கிறார்களே பார்ப்பனர்கள், உண்மையிலேயே ஆகமப்படிதான் எல்லாம் நடக்கிறதா? முன்பெல்லாம் கோயில்களில் இசைக்கருவிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இசைக் கலைஞர்கள் தனித்தனியே உட்கார்ந்து கோயிலின் சிறப்புப் பூசையின் போது வாசித்து வந்தார்கள். இப்போது, சிறப்புப் பூசையின்போது எல்லாக் கோயில்களிலும் மின்சாரத்தின் மூலம் மோட்டார் வைத்து இயக்கி அவ்வளவு இசைக் கருவிகளையும் ஒலிபரப்புகிறார்களே? மோட்டர் மூலம் இசையைக் கோயில்களில் ஒலிபரப்பலாம் என்று எந்த ஆகமத்தில் எழுதி இருக்கிறது?

கோயில்களில் திடீரென்று எதையும் மாற்றினால் மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு கோயில் நிர்வாகிகள் கடவுளின் மேல் அந்தப் பழியைப் போடுகிறார்கள். அதே போல்தான், அண்மையில் சபரிமலையில் இருக்கும் அய்யப்பனிடம் கேட்டார்களாம். அய்யப்பனும் சபரிமலைக்கு ‘ரோப்கார்’ விடலாம் என்று சொல்லி உத்தரவு கொடுத்து விட்டாராம்! அய்யப்பன் கோயிலில் ‘ரோப் கார்’ வசதி மிக விரைவில் வர இருக்கிறது. என்ன காரணம்? அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. ‘ரோப் கார்’ விட்டாவது மக்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதுதான் காரணம். கோயிலுக்கு ஆட்களை ‘ரோப்கார்’ மூலம் கொண்டு செல்லலாம் என்று எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

திருப்பதி கோயிலில் குளிரூட்டும் (ஏர்கண்டிஷன்) வசதியை செய்திருக்கிறார்கள். அங்கே குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டரிலேயே வந்து இறங்கலாம் என்கிறார்கள். எந்த ஆகமத்திலாவது இதைப் பற்றியெல்லாம்; குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

சென்ற மாதம் மேட்டூரில் இருந்து ஓடஓட விரட்டி அடிக்கப்பட்ட சமண (ஜைன) மதத்தைச் சார்ந்த அம்மணச் சாமியார்களைப் போலத் தானே காட்டு மிராண்டி காலத்தில் இருந்த சாமிகளும் இருந்திருக்கும்!

ஜைன சாமியார்கள் உடலில் ஆடையின்றி அம்மணமாக சாலையில் நடந்தார்கள். நாகரிக உலகில் இவ்வாறு அம்மணமாக உலா வரலமா என்று நமது கழகத் தோழர்கள் மறியல் செய்தார்கள். அதன் விளைவாக, அந்தச் சாமியார்களைச் சுற்றி திரையைக் கட்டி, திரையில்லாத அந்தக் கால திரைப்படத்தில் திரையைப் பிடித்துக் கொண்டே ஓடுவதுபோல மேட்டூரில் திரையைப் பிடித்த காவல்துறை ‘கொள்ளேகால்’ வரைக்கும் சாமியார்களுக்குத் திரைப்பிடித்துக் கொண்டே ஓடியது. (பலத்த கைதட்டல்). கடவுளும் அது உருவாக்கப்பட்ட பைபிளும் சொல்கிறது: ‘தன்னுடைய உருவத்திலேயே மனிதர்களை தோற்றுவித்தார்’ என்று.

அதுபோலவே, காட்டுமிராண்டி காலத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற உலகிலுள்ள எல்லா மனிதர்களும் விவசாயம்தான் செய்தார்கள்; கால்நடைகளைத்தான் மேய்த்தார்கள். அதனால்தான் மனிதனால் அக்காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்துக் கடவுள்களும் ஆடு, மாடு மேய்க்கும் கடவுள்களாகவே இருந்திருக்கின்றன. கிருஷ்ணனும் மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார். இயேசுவும் மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார். காரணம், அப்போது இருந்த மனிதர்களின் நிலை அப்படி.

இப்போது கடவுள்கள் உருவாக்கப்பட்டால் ‘செல்போனோடு’தான் இருப்பார்கள். அப்போது கடவுள் கைகளில் சூலாயுதம், வேல், கம்பு போன்றவை இருப்பது போன்று தோற்றுவிக்கப்பட்டது. இப்போது பிள்ளையார்கூட ஏ.கே.47 வுடன்தான் வலம் வருகிறார். கார்கில் பிள்ளையார் என்றுகூட தமிழ்நாட்டில் வந்து விட்டது. கார்கில் பிள்ளையாரை சண்டை போட கார்கிலுக்கு அனுப்பியிருந்தால், நமது வரிப்பணமாவது மிச்சாமாகி இருக்கும். அந்த கார்கில் போரினால் நிறைய பிணங்கள் தமிழ்நாட்டுக்குத்தான் வந்தன. ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற இடங்களிலிருந்து வயிற்றுப் பிழைப்பிற்காக சிப்பாய்களாகப் போனவர்கள் கார்கிலிருந்து பிணங்களாக பெட்டிகளில் திரும்பி வந்தார்கள்.

கடவுளுக்கு பூசை செய்யும்போதுகூட சமற்கிருதத்தில்தான் மந்திரம் சொல்ல வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்கிறார்கள். ஒரே ஒரு கடவுள்தான் உலகம் பூராவையும் படைத்ததாகச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணர்தான் ‘ஜகத் குரு’ என்றால், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, அரபு நாடுகள் போன்ற எல்லா நாடுகளுக்கும் கடவுள் கிருஷ்ணரின் மொழி என்று சொல்லப்படுகிற சமஸ்கிருதம் தானே அந்த நாடுகளுக்கும் மொழியாக இருந்திருக்க வேண்டும். அவ்வளவு ஏன், நம் எல்லோரையும் படைத்ததாகச் சொல்லப்படுகிற கடவுள் நம் எல்லோரையும் தமிழ் பேச வைத்துவிட்டு கடவுள் மட்டும் தனக்கு சமற்கிருதத்தில்தான் பூசை செய்ய வேண்டும் என்று கூறுகிறது என்றால் நாம் அதை ஏற்க முடியுமா?

நம் வீடுகளில் வளர்க்கும் நாய்க்குட்டியைக்கூட இங்கே வா, உட்கார், இதைப் பிடி, அதைப் போய் வாங்கி வா என்று தமிழ் மொழியில் சொல்லி நாயை ஏவினால் நாய் அதன்படி நடக்கிறது. நாய்க்குட்டிக்குத் தமிழ் தெரியாது. ஆனால், நம் அனைவரையும் படைத்ததாகச் சொல்லப்படுகிற கடவுளுக்கும் தமிழ் தெரியாது என்கிறார்கள். (கை தட்டல்) எனவே, இது பார்ப்பனர்களின் ஏற்பாடு.

எங்களுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை. ஆனாலும், இங்கு நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் எதற்காக எங்கள் தோழர்கள் தங்களை வருத்திக் கொண்டு முதுகிலும், வாயிலும் அலகு குத்தி வந்தார்கள்? எவ்வளவு சங்கடம் தெரியுமா அது? பக்தராயிருந்து கடவுள் பெயரில் தங்களை வருத்திக் கொள்பவர்களுக்கும் இதே அளவு சங்கடம் உள்ளது. இதை எல்லோரும் செய்ய முடியும்; இதனால் யாரும் செத்துப் போய்விடப் போவதில்லை. கொஞ்சம் நேரம் வலிக்கும்; அதைப் பொறுத்துக் கொண்டால் போதும்.

பக்தர்கள் பத்தியைப் பரப்ப அதுபோல் செய்கிறார்கள். இதில் பக்தி என்பது அவசியமில்லை என்பதை செயல்முறை விளக்கமாகச் செய்து, அதனால் எல்லோரும் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதற்காக நாங்களும் அலகு குத்திக் காட்டி இந்த சங்கடத்தை ஏற்றுக் கொள்கிறோம். பக்தியின் பேரால் இதைச் செய்வதால் அவர் களுக்கும், அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும். ஆனால், அறிவுப் பிரச்சாரம் செய்கிற நாங்கள் எங்கள் சொந்தப் பணத்தைப் போட்டும், மக்களிடம் எங்கள் தோழர்கள் கையேந்தி பெற்ற பணத்தைக் கொண்டும் இதைச் செய்கிறோம். மக்களை அறிவியல் ரீதியாக சிந்திக்கத் தூண்டும் முயற்சியாகத்தான் இதைச் செய்கிறோமே அன்றி, தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை.

பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று கூறுவதன் மூலம் கோயில் கருவறைக்குள் தீண்டாமை நிலவு கிறது. அங்குதான் சாதி காப்பாற்றப்படுகிறது. பார்ப்பான் உயர்ந்தவன்; அவன் தான் கற்பனையான கடவுளின் முதல் குடிமகன் என்ற நிலை உள்ளது. உலகம், கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள், மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்; மந்திரம், பார்ப்பானுக்குக் கட்டுப் பட்டது என்று இந்துமதம் சொல்கிறது. இதை அடிப்படையாக வைத்து தான் பார்ப்பனரல்லாதவர்களாகிய நம் அனைவரையும் சூத்திரர்கள் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. அதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதனால் தான், 1973 இல் கலைஞர் அவர்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்தபோது, அது செல்லாததாக ஆக்கப்பட்டது.

மிகப் பெரிய பக்தனான ‘நந்தன்’ ஏன் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை? நந்தன் கோயிலின் வாசலில் நின்று சிவனை ‘தரிசிக்க’ வந்த போது, ‘நந்தா உள்ளே வா’ என்று சிவன் ஏன் சொல்லவில்லை? மாறாக, நந்தியே விலகி நில் நந்தன் என்னைப் பார்க்கட்டும் என்றுதான் சிவன் சொன்னான். நந்தன் வெளியிலேயே நிற்க வைக்கப்பட்டதற்குக் காரணம் ஆகம விதிகள் தான் என்று கூறினார்கள்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தத் தோழர்கள் கோயிலின் கோபுரத்தைத்தான் தரிசிக்கவேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் அர்த்த மண்டபம் வரையிலும் தான் செல்ல முடியும் என்றும், பார்ப்பனர்கள் மட்டுமே கோயிலின் உள்ளே, கருவறையின் உள்ளே வரையும் செல்லலாம் என்றும் ஆகம விதிகள் கூறுகிறதாம். இதற்குப் பெயர் என்ன ஆகமமா? வெங்காய ஆகமம்.

இப்பொழுதெல்லாம், உணவு விடுதிகளில் ஒருவர் சாப்பிட்ட தட்டை இன்னொருவருக்கு வைக்கிறார்கள். அப்படி வைக்கப்படுகிற தட்டை இன்னொருவருக்கு வைக்கிறார்கள். அப்படி வைக்கப்படுகிற தட்டை சில விடுதிகளில் சோப், சுடுநீர், நீராவி ஆகியவற்றின் உதவியுடன் கழுவி வைக்கிறார்கள். ஏன்? அதில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அதைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக. ஆனால், கோயிலின் கர்ப்பகிரகத்திற்குள் மனிதர்கள் நுழையவே முடியாது. நம்மை அனுமதித்தால்கூட நாம் போக மாட்டோம். அவ்வளவு நாற்றம். நாள் கணக்கில் எண்ணெய், நெய், பால் போன்றவற்றை சிலைமீது ஊற்றி, அதோடு கர்ப்பகிரத்திற்குள் இருக்கும் பார்ப்பானின் வேர்வையும் சிந்தி, மூக்கை சிந்தி - அவ்வளவு அசிங்கம் அங்கிருக்கிறது. இதற்குப் பெயர் ஆகமமாம்.

கோயில்களில் குடமுழுக்கு செய்கிறார்கள். இதைப் பற்றி பெரியார் வேடிக்கையாகச் சொல்வார்: ‘கோயிலின் உச்சிக்கு குடமுழுக்கு என்ற பெயரில் பார்ப்பனர்கள் விடிகாலை 4 மணிக்கே சென்று விடுகிறார்கள். பார்ப்பனச் சிறுவர்கள் (சின்ன சிண்டு) சிலரையும் கூட்டிச் செல்கிறார்கள். குடமுழுக்கைக் காண லட்சக்கணக்கில் மக்கள் வெளியில் கூடி நிற்கிறார்கள். சின்ன சிண்டு பார்ப்பான் ‘இயற்கைச் சிக்கலுக்காக’ அவசரம் என்று பெரிய பார்ப்பானிடம் கூறுகிறான். காலையில் 4 மணிக்கே குடமுழுக்கிற்காக மேலே ஏறிய பார்ப்பானுக்கு காலை 9 மணிக்கு சிறுநீர் அவசரமாக வருவது இயல்பு தான். குடமுழுக்கு செய்ய குடத்திலிருந்து நீரை எடுத்து கும்பத்தின் மேல் ஊற்றும்போது, இப்போது விடுடா என சின்ன பாப்பானிடம் கூறுகிறான்.

குடத்து நீரை ஊற்ற, ஊற்ற அவனும் சிறுநீரை கழித்து விடுகிறான். கீழே இருக்கும் நம்மாட்கள் எல்லாம் தீர்த்தம் என்ன உப்புக் கரிக்கிறது என்கிறார்கள். சிண்டு பாப்பான் சிறுநீர் கழித்தாலும் உப்பாகத்தானே இருக்கும்’. பூணூல் போட்டு ‘பிராமணன்’ ஆனாலும் சிறுநீர் சிறுநீர் தானே!

அப்படி ஒரு காலத்தில் செய்த பார்ப்பனர்கள், இப்போது, தீர்த்தம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக தீயணைக்கும் வண்டியை பயன்படுத்தி தீர்த்தத்தை அதன் குழாயில் வைத்து பீய்ச்சி அடிக்கிறார்கள். இது எந்த ஆகமத்தில் இருக்கிறது?

உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடம் கொடுக்கப்படும் என்று மய்ய அரசு சொன்னவுடன், தகுதி-திறமை என்று பார்ப்பனர்கள் கூச்சல் போடுகிறார்கள். ஆனால், இந்த அர்ச்சகர் வேலைக்கு மட்டும் தகுதி, திறமை வேண்டாமா? பெரியாரின் நெஞ்சிலே தைத்து இருந்த முள்ளை தமிழினத்தின் சாதி ஒழிப்புப் போரில், மிகப் பெரிய பாய்ச்சலாக, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கலைஞர் அவர்கள் போட்டிருக்கிற ஆணையை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி தனது நன்றியை தெரிவிக்கிறது. அதன்படி, இப்போது நான்கு இடங்களில் ஆகமக் கல்லூரிகளை திறக்க இருக்கிறார்கள். அங்கு படித்துத் தேர்வானவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தானே தகுதி-திறமைக்கு மதிப்பளிப்பதாகும்? இதற்கு மட்டும் பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ளாமல், தங்களுக்கு மட்டும் அது உரியது என்கிறார்கள்.

பார்ப்பனர்களில்கூட 98 சதவீதம் மதிப்பெண் வாங்குபவர்கள் மருத்துவத்துக்கும், 95 சதவீதம் பெறுபவர்கள் பொறியியலுக்கும் செல்கிறார்கள். படிப்பே வராத முட்டாள் பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர் வேலைக்கு வருகிறார்கள். நாம் அந்த முட்டாள்களை தெய்வத்தைவிட உயர்ந்தவர்களாக மதிக்கிறோம். நமது தலை எழுத்தே அவர்கள் கையில் இருப்பது போல நம்மாட்கள் அவர்கள் முன் கை கட்டி, வாய்பொத்தி நிற்கிறார்கள்.

தமிழர்கள், இவைகளை எல்லாம் சிந்திக்க வேண்டும். நாங்கள் முன் வைக்கும் இந்தக் கருத்துகளில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் தன்மானத்துக்காகவே நாங்கள் இந்த சிந்தனைகளை முன் வைக்கிறோம் - இவ்வாறு பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் குறிப்பிட்டார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP