Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2006

தில்லையில் ஆட்டம் போடும் ‘வர்ணாஸ்ரம நந்திகள்’
மதுக்கூர் இராமலிங்கம்

சபரிமலை ஐயப்பன் சுவாமி மூல விக்கிரகத்தை கன்னட திரைப்படக் கலைஞர் ஜெயமாலா தொட்டதாக எழுந்துள்ள விவகாரமும், ராஜ ராஜேஸ்வரர் கோயிலில் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர் மீரா ஜாஸ்மின் சென்று வழிபட்டதற்கு அபராதம் செலுத்திய விவகாரமும் பத்திரிகைகளில் தினந்தோறும் பரபரப்பான செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் நடராஜர் கோயிலில் கருவறைக்கு அருகில் சென்று தேவாரம், திருவாசகம் ஆகிய தமிழ்ப் பாடல் களைப் பாட போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளார் ஒருவர்.

புவனகிரிக்கு அருகில் உள்ள கும்மிடிமூலை என்ற கிராமத்தில் நால்வர் மன்றம் என் ற அமைப்பை நடத்தி வருகிறார் 73 வயதான ஆறுமுக சாமி. ஜூலை 15 ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்று தேவாரம், திருவாசகம் ஆகிய தமிழ்ப் பாடல்களைப் பாட தமக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று அவர் மனு கொடுத்துள்ளார்.

இறைவன் சன்னதியில் சென்று பாடுவதற்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு? என்று கேள்வி எழலாம். அங்குதான் இருக்கிறது வில்லங்கமும், விவகாரமும். சிதம்பரம் நடராஜர் கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் இருந்தபோதும், கருவறை உள்ள பகுதியான “திருச்சிற்றம்பலம்” மட்டும் சிதம்பரம் தீட்சிதர்கள் கட்டுப் பாட்டில் உள்ளது.
தீட்சிதர்களைத் தவிர வேறு யாரும் இந்தப் பகுதிக்குள் நுழையக் கூடாது என்று இவர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

தீட்சிதர்கள் அல்லாதவர் மட்டுமல்ல, சமஸ்கிருதம் அல்லாத வேறு எந்த மொழியும் இந்தப் பகுதிக்குள் நுழையக் கூடாது என்பது இவர்கள் விதித்துள்ள தடை.

நடராஜரின் காது குளிர தேவாரத்தையும், திருவாசகத்தையும் இசைக்க வேண்டும் என்பது ஆறுமுகசாமியின் நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையுடன் இரண்டாயிரம் ஆண்டில் அவர் திருச்சிற்றம்பலம் பகுதிக்குச் சென்று தேவாரம், திருவாசகம் பாட முயன்ற போது தீட்சிதர்கள் ஒன்றுகூடி அவரை அடித்து உதைத்து தூக்கி வெளியே போட்டுவிட்டனர். இரத்தக் காயத்தோடு அப்போது தப்பியதால்தான் இப்போது போலீஸ் பாதுகாப்பு கேட்கிறார் ஆறுமுகசாமி.

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது முது மொழி. ஆனால், தமிழில் எழுதப் பட்டுள்ள காரணத்தால் திருவாசகத் திற்கு உருக தீட்சிதர்கள் தயாராக இல்லை. இறைவன் காதிலும்

“நீச மொழி”யான தமிழ் விழுந்து விடக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

தேவபாஷையான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள வேதங்களும், மந்திரங்களும் மட்டுமே திருச்சிற்றம் பலம் பகுதிக்குள் கேட்க வேண்டும். தமிழ் தப்பித் தவறிக்கூட அந்தப் பகுதிக்கு வந்து விடக்கூடாது என்பதில் திட்சிதர்கள் கவனமாக உள்ளனர்.

எத்தனையோ சிவன் கோயில் இருக்கும்போது இங்கு வந்து தேவாரம், திருவாசகம் பாட வேண்டுமென ஆறுமுகசாமி கேட்பது ஏன்? என தீட்சிதர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆறுமுகசாமியோ, அண்மையில் தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்துள்ள நிலையில், தமிழ்மறை என்று போற்றப்படும் தேவாரம், திருவாசகத்தை நன்குணர்ந்த நான் கருவறைக்குக்கூட அல்ல, கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்குக்கூட செல்லக் கூடாதா? தமிழ் பாடக் கூடாதா? என்று கேட்கிறார். ஆனால் தீட்சிதர்கள் தமிழையும், ஆறுமுக சாமியையும் அனுமதிக்கத் தயாராக இல்லை. சமஸ்கிருதம் தெரிந்த தகுதி பெற்ற தீட்சிதர்கள் மட்டுமே திருச் சிற்றம்பலம் பகுதிக்கு வர முடியும் என்பது தீட்சிதர்கள் பிடிவாதம்.

இதே சிதம்பரத்தில்தான் தேவார மும், திருவாசகமும் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்தன என்பது வரலாறு. தேவாரம், திருவாசகம் அடங்கிய ஒலைச் சுவடிகளை ஒரு அறையில் பூட்டி வைத்து கரையானுக்கு இரையாக்கிய அன்னாள் தீட்சிதர்கள், தேவாரம் பாடிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர் ஆகிய நால்வரும் உயிரோடு சேர்ந்து வந்து கேட்டால் தான் ஓலைச் சுவடிகளை தர வேண்டுமென்று இறைவன் கனவில் கூறியதாக கதை விட்டனர்.

ராஜராஜசோழன் காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்பவர் தேவாரம், திருவாசகத்தை தொகுக்க விரும்பினார். ஆனால் தீட்சிதர்கள் இந்த தமிழ் நூல்கள் கரையானுக்கு ஏற்றதே தவிர, காதில் விழக் கூடாது என்று தடுத்து விட்டனர். பிறகு ராஜராஜசோழன் நால்வர் சிலைகளை கொண்டுவந்து காட்டி ஓலைச் சுவடிகளை தருமாறு கேட்டாராம். அதற்கு தீட்சிதர்கள் இந்த சிலைகளை எப்படி நால்வர் என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேட்டதற்கு, அப்படியென்றால் இறைவனும் சிலைதானா? என்று கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார். வேறு வழியின்றி தேவாரம், திருவாசகத்தை அன்றைக்கு விடுவித்த தீட்சிதர்கள் இன்றுவரை கருவறைப் பக்கம் அந்த பாடல்கள் வரவிடாமல் 144 தடை உத்தரவு போட்டு வைத்துள்ளனர்.

நாத வடிவமான நடராஜர் தனது கையில் உள்ள உடுக்கையை அடிக்கும் போது, ஒரு புறமிருந்து வடமொழியும், மறுபுறமிருந்து தமிழ்மொழியும் உருவானதாக புராணீகர்கள் கூறுகின்றனர். ஆனால், உடுக்கையை ஒரு பக்கம் மட்டும் அடித்தால் போதும் என்று கடவுளுக்கே கட்டளை போடுகின்றனர் தீட்சிதர்கள்.

நடராஜரை காண விரும்பிய நந்தனுக்கே அனுமதி மறுத்தவர்கள் தில்லை தீட்சிதர்கள். பிறகு கடவுள் நந்தியை பார்த்து, “சற்றே நகரும் பிள்ளாய்” என்று கூறி நந்தனுக்கு தரிசனம் கொடுத்தாராம். அதற்கு முன்னால் நந்தன் தீக்குளித்தாரா? தீயில் தள்ளப்பட்டாரா? என்பது புலனாய்வுக்குரிய விஷயம்.

அன்றைக்காவது நந்தனுக்காக நந்தி நகர்ந்ததாக கதை சொன்னார்கள். ஆனால் இன்றைக்கோ தமிழை உள்ளே நுழைய விடாமல் தடுக்கின்றன வருணாஸ்ரம நந்திகள்.

- மதுக்கூர் இராமலிங்கம்
‘தீக்கதிர்’ நாளேட்டில் 12.7.2006


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com