Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2006

துடைப்பம் ஏற்றுமதி
குத்தூசி குருசாமி

1950 ஆம் ஆண்டில் குத்தூசி குருசாமி ‘விடுதலை’யில் எழுதிய ‘கிண்டல்’ கட்டுரை இது. அன்றைய பிரதமர் நேரு வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, குத்தூசியார் ‘ஏற்றுமதி - இறக்குமதி’யை வைத்து, உருவாக்கிய ஆக்கம் இது! ‘இப்போது, உணவுப் பொருளை இறக்குமதி செய்யாமல் இருக்க மாட்டோம்’ என்று கொள்கை தலைகீழாகிவிட்டது என்பது வேறு செய்தி. புல் ஏந்திய கைகள் வாளும் ஏந்தும் என்று சுப்பிரமணிய அய்யர் என்ற தேசியப் பார்ப்பனர் கொக்கரித்ததையும், ‘குத்தூசி’ இடித்துக் காட்டுகிறார். ‘நாத்திகம்’ வெளியீடான குத்தூசி கட்டுரைக் களஞ்சியத்திலிருந்து இது வெளியிடப்படுகிறது. அவ்வப்போது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இந்தக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும்.

இந்தியச் சரக்குகளை வெளிநாட்டுக்கு ஏராளமாய் அனுப்பினால் நமக்கு டாலர் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டுச் சரக்குகளை வரவழைத்தால் நம் பணம் வெளிநாட்டுக்குப் போய்விடும். ஆதலால் தான் ஜவகர்லால்ஜி 1951க்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து ஒரு பிடி தானியங்கூட இறக்குமதி செய்யப் போவதில்லை என்று அடிக்கடி கூறி வருகிறார். வெளிநாட்டுத் தானியங்களை இறக்குமதி செய்து குறைந்த செலவில் வயிறு நிறைய உண்பதைவிட நிரந்தரமாக ரேஷன் அரிசியையே கால் வயிறாவது உண்டு பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது இந்த அறிஞர் கொள்கை!

வெளிநாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யுஞ் சரக்குகளில் கடலை எண்ணெய், தோல், சணல், தேயிலை, எண்ணெய் வித்துக்கள், பருத்தி முதலியவை குறிப்பிடத்தக்கவை! இவைகள் மட்டும் ஏற்றுமதி செய்தால் போதாதல்லவா? அதற்காக புதுப் புதுச் சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கு சர்க்கார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

ஸ்வீடன் நாட்டுத் தலைநகராகிய ‘ஸ்டாக்ஹோமில்’ சர்வதேசப் பொருட்காட்சியொன்று நடைபெறப் போகிறதாம்! அதில் இந்தியக் கைத்தொழில் சரக்குகள் பல வைக்கப்படுமாம். அவைகளில் அப்பளம் - ஊறுகாய் முதலியவைகளும் வைக்கப்படுமாம். உலகில் பல நாடுகளிலும் நம் நாட்டு உற்பத்திப் பொருள்கள் இனி பொருட்காட்சிகளில் வைத்து விளம்பரம் செய்யப்படும் என்று புது டெல்லி செய்தியொன்று கூறுகிறது.

அவசியம் வேண்டியதுதான்! நமக்கு ஒரு சிறு குண்டூசிகூடச் செய்யத் தெரியாவிட்டாலும், வெளி நாட்டார் நம்முடைய சரக்குகளை எப்படியாவது வாங்குமாறு செய்தாக வேண்டுமே? என்ன செய்வது? நம் சரக்குகளை உலகெங்கும் நன்றாக விளம்பரஞ் செய்துவிட்டால், நமக்கு ஏராளமான டாலர்கள் கிடைக்கும்!

அட்லி அப்பளத்துக்கு ஆர்டர் கொடுப்பார். ட்ரூமன் ஊறுகாய்க்கு ஆர்டர் தருவார். ஸ்டாலின் நம் நாட்டுத் துடைப்பத்துக்கு ஏராளமான ஆர்டர் கொடுப்பார்.

ஸ்விட்சர்லாண்டுக்கு முறுக்கு பார்சல்களை ஏற்றுமதி செய்யலாம்! ஜப்பானுக்கு ஜாங்கிரியைக் கப்பல் கப்பலாக அனுப்பலாம்! ஆஸ்ட்ரேலியாவுக்கு அக்கார வடிசலும், இத்தாலிக்கு இடியாப்பமும் அனுப்பலாம்! துருக்கிக்கு தோசையனுப்பலாம்!
இந்தோனேஷ்யாவுக்கு இட்லி அனுப்பலாம்!

நம்மிடம் உள்ள மாதிரிச் சரக்குகள் வேறெங்காவதுண்டா? விதவிதமாக வைத்திருக்கிறோமே! கிரீஸ் நாட்டு மக்களிடையே நம் காசிக் கயிற்றை விளம்பரப்படுத்தினால் ஆளுக்கொரு கயிறு வாங்கிக் கையில் கட்டிக் கொண்டு திரிவார்களல்லவா?

இறுதியாக இரண்டு முக்கியமான சரக்குகளை சர்க்கார் மறந்துவிடக் கூடாது!

1. தர்ப்பைப் புல் 2. பூணூல் இந்த இரண்டையும் வெளிநாட்டுக் கண்காட்சிகளில் கட்டாயம் வைக்க வேண்டும்! இரண்டின் பெருமையையும் நன்றாக விளக்கிக் கூறவேண்டும்!

தர்ப்பைப் புல்லான ஆசனத்திற்குப் பதிலாகவும், பசு மாட்டுக்குப் பதிலாகவும் பயன்பட்டு வருகிற விவரத்தை வெளி நாட்டாருக்குச் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் அணுக்குண்டுக்குப் பதிலாக உபயோகிப்பார்கள் அல்லவா? ‘அணுக்குண்டு சமர்ப்பியாமி’, என்று கூறி ஒரு தர்ப்பையை வீசி எறிந்தால் ஊரே நாசமாகிவிடாதா?

அதுபோலவேதான் பூணூலும்! நீக்ரோக்களுக்குக் கூடப் பூணூல் அணிந்து “உயர் ஜாதி” ஆகலாமல்லவா? அப்பளமும் ஊறுகாயும் போகும்போது தர்ப்பையும் பூணூலும் ஏன் போகக் கூடாது? சந்தேகமிருந்தால் “வாள் ஏந்தும்” வீரர் எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யரைக் கேட்டுப் பாருங்கள்!

- 13.7.1950



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com