Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2006

‘தகுதி-திறமைக்கு’ அளவுகோல் என்ன?
கொளத்தூர் மணி

‘தகுதி-திறமை’ என்பது - அந்த நாடு ஏற்றுள்ள சமூக மாற்றத்துக்கான கொள்கையின் பின்னணயில் முடிவு செய்யப்பட வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் கூறியதை சுட்டிக் காட்டிய தோழர் கொளத்தூர் மணி, ‘மதிப்பெண்’ எப்படி ‘தகுதி-திறமைக்கு’ அளவுகோலாகும் என்று கேட்டார்.

தமிழ்நாட்டில் தற்போது 69 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், 1963 இல் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் 50 விழுக்காடுக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று கூறியதைக் காட்டி 50 விழுக்காடுக்கு மேல் தர மறுக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த 50 விழுக்காட்டிற்குள் (தாழ்த்தப்பட்டோர் 15 சதவீதம், மலைசாதியினர் 7.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீதம்)

உச்சநீதிமன்றம் கொடுக்கச் சொன்னா 27 விழுக்காட்டைக் கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மய்ய அரசு தருவதில்கூட உயர்சாதியினர் தடையாக இருக்கிறார்கள்.

பல்வேறு வகையான வாதங்களை அவர்கள் முன் வைக்கிறார்கள். அவற்றுள் ஒன்று, இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போய்விடும் என்பது. அதற்கு பதிலளிக்கும் வகையில் நாம் பல விளக்கங்களைக் கொடுத்து விட்டோம். தகுதி என்பதை மதிப்பெண்ணில் மட்டும் தற்போது அடங்கி இருக்கிறது. மனப்பாடம் செய்யும் யாராலும் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நிலை தான் தற்போது உள்ளது. பரம்பரையாக மனப்பாடம் செய்யும் பார்ப்பனர்களுக்கு அது எளிதாக இருக்கிறது. ஆனாலும், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த பிள்ளைகளும் பார்ப்பனர்களுக்கு கொஞ்சமும் சளைத்த வர்கள் இல்லை என்று நிருபித் திருப்பதை சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரியின் திறந்த வெளிப் போட்டியின் கட் ஆப் மதிப்பெண்களைப் பார்த்தாலே நன்கு விளங்கும். அதில் பொதுப் போட்டிக்கான கட் ஆப் மதிப் பெண் 294.83. பிற்படுத்தப் பட்டோருக்கானது 294.59 ஆகும். 300 மதிப்பெண்களுககு 0.3 மதிப்பெண்தான் வேறுபாடு. நூற்றுக்கு 0.15 மதிப்பெண் தான். இதில்தான் தகுதி, திறமை போய் விடுகிறது என்று பார்ப்பனர்கள் பதறுகிறார்கள். 98 விழுக்காடு மதிப்பெண் வாங்கிய பார்ப்பான், 96 விழுக்காடு மதிப்பெண் வாங்கிய தாழ்த்தப்பட்ட மாணவரைப் பார்த்து தகுதி, திறமை போய் விடுகிறது என கூச்சல் போடுகிறான்.

கோவை மாவட்ட பெரியார் தி.க. சார்பில் இரு மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்களை ஒப்பிட்டு ஒரு துண்டறிக்கை அச்சிட்டு இருந்தோம். +2 தேர்வில் முதல் மதிப்பெண் (1180) பெற்ற பார்ப்பன மாணவன் பரத்ராமின் தந்தை பட்டதாரி, சென்னை உர நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கூடுதல் மேலாளர். தாய் பட்டதாரி இந்தியன் வங்கி ஊழியர். அந்த மாணவன் படித்தது சகல வசதிகளுடன் கூடிய பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் முதல் தரப்பள்ளி.

மற்றொரு மாணவன் பார்ப்பனரல்லாதவரான குமார். 1003 மதிப்பெண்கள் பெற்ற இவர், கோவையில் உள்ள உணவகத்தில் மேசை துடைக்கிறார். இவருக்குத் தந்தை இல்லை. தாய் கூலித் தொழிலாளி. நெல்லை அம்பா சமுத்திரத்திலுள்ள ஊர்க்காடு என்னும் ஊரைச் சார்ந்த இவர் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே படிக்க வேண்டும். இந்த இரண்டு மதிப்பெண்களில் யார் பெற்றது அதிகம்?

இவர்கள் பேசுகிற தகுதி, திறமையை எல்லாவற்றிற்கும் எடுத்துக் கொள்வதில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில், தனியார் பல்கலைக் கழகங்களில் பணம் பெற்றுக் கொண்டு வெறுமனே தேர்ச்சி மட்டும் பெற்றவர்களைச் சேர்த்த போது இப்போது தகுதி, திறமை என்று பேசி கூச்சல் போடுகிறவர்கள் யாரும் தடை கூறியதில்லையே. 5 இலட்சம் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளலாமா? தகுதி திறமை போய்விடாதா? என்று இவர்கள் போராடியதில்லை.

தகுதி, திறமை கூட வேலைக்குப் போகும்போது எப்படிப் பார்க்கிறார்கள்? பெரியார் சொல்வார்: ‘காவல் ஆய்வாளர் பதவிக்கு இளங்கலை அறிவியல் பட்டத்தை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரை எடுக்கிறார்கள். காவல் வேலையில் திருடனைப் பிடிக்க, திருட்டைக் கண்டுபிடிக்க அல்லது கொலையாளியைப் பிடிக்கத் தேவையான மனத் துணிவு, உடல் திறன், முடிவெடுக்கும் ஆற்றல், சோதனைகளைத் தாங்குகின்ற துணிச்சல் போன்றவைதான் வேண்டுமே தவிர இளங்கலை அறிவியலில் முதல் வகுப்புத் தேர்ச்சி தேவையில்லை. கொலையாளியைப் பிடிக்க, அவனின் கையை முறுக்கி அடிக்க சக்தி இருக்க வேண்டுமே தவிர கொலையாளியிடம் போய் நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்று சொன்னால் அவன் சிக்க மாட்டான்’ என்பார்.

அப்படித்தான் எல்லா வேலைகளுக்கும், அலுவலகத்தில் ஒரு முடிவை எடுக்க தேர்வு எழுதுவது போல இரண்டு மணி நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடிவெடுக்க ஒருவர் சட்ட புத்தகங்களையும், விதி நூல்களையும் ஆய்ந்து பார்க்கலாம். அல்லது உயர் அதிகாரிகளிடம் கருத்தைக் கேட்கலாம். இவ்வளவுக்கும் பிறகு முடிவெடுத்தால் போதும். இதற்கு மதிப்பெண் அவசியமில்லை. இருந்தாலும்கூட பார்ப்பனர்கள் மதிப்பெண் தேவை என்று கூறுகிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியாசென் சொன்னார்: ‘தகுதி-திறமை என், அந்த நாடு ஏற்றுக் கொண்டுள்ள சமூக மாற்றத்துக்கான கொள்கையைச் சார்ந்து இருக்க வேண்டும்’ என்றார். அய்.அய்.டி.யில் பேராசிரியர் பணிக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றால், உலகளவில் தேர்வு வைக்க உயர்சாதியினர் ஒப்புக் கொள்வார்களா? இந்தியர்களுக்கு மட்டும் தான் தேர்வு, அவர்களுக்கு தகுதி, திறமை குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்கள். நாங்கள் கூறுகிறோம் தகுதி, திறமை குறைவாக இருந்தாலும் இந்தியாவில் இருக்கிற எல்லா குடிமக்களின் பிரதிநிதிகளும் இருக்கட்டும் என்கிறோம்.

இந்தியா என்ற ஒன்று விடுதலை பெற்றதாகச் சொல்லி அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அதை ஆண்டவர்கள் எல்லாம் யார்? தலைமை அமைச்சராக இருந்தவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்கள்தான். 1946 இல் ஏற்பட்ட இடைக்கால அமைச்சரவையிலிருந்து கணக்கிட்டால், தலைமை அமைச்சராக இருந்த பார்ப்பனரல்லாதவர்களான லால்பகதூர் சாஸ்திரி, வி.பி.சிங், சந்திரசேகர், தேவகவுடா ஆகியோர் மாதக் கணக்கில் தான் இருந்தார்கள். இவர்கள் அனைவரின் ஆட்சிக் காலத்தையும் கூட்டினால் மொத்தமாக 3 ஆண்டுகள் கூட வரவில்லை. மீதி 57 ஆண்டுகள் உயர்சாதியினர் தானே ஆண்டார்கள். அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்தவர்கள் எல்லாம் யார். தாழ்த்தப்பட்டோர் கொஞ்சம் இருந்தனர். அதுவும் 2.5 விழுக்காடுதான். மீதி 97.5 விழுக்காடு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பார்ப்பனர்கள், உயர்சாதியினர் தானே? அய்.பி.எஸ். அதிகாரிகளின் நிலையும் அதே தான். நீதிபதிகள் என்றாலும், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ள 26 பேரில் ஒரு இஸ்லாமியர், ஒரு தாழ்த்தப்பட்டவர் தவிர மீதி 24 பேரும் உயர்சாதியினர் தானே? ஆட்சித் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை என அனைத்திலும் 60 ஆண்டுகளாக உயர் சாதியினர்தானே இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவை என்ன முன்னேற்றி இருக்கிறார்கள்? இவர்கள் சொல்கிற தகுதி, திறமை இந்தியாவை முன்னேற்றவில்லை. ஆனாலும் தகுதி, திறமை வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற நிறுவனங்களைப் பற்றி இப்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிறுவனங்கள் இருப்பதேகூட ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த நமது மாணவர்களுக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால், மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கின்ற ஆசிரியர்களுக்கேகூட இது தெரியாது. இந்தப் போராட்டத்திற்குப் பிறகுதான் அவர்களுக்கும் இது தெரிய வந்திருக்கிறது.

உயர்கல்விகளில் படிக்கும் மாணவர்கள் வெறும் 4000 பேர் தான். ஆனால், இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இப்படி நம் அனைவரின் வரிப் பணத்தில் படிக்கும் இவர்கள், படிப்பை முடித்தவுடன் இந்தியாவில் வேலை செய்வதில்லை. வெளிநாடுகளுக்குத்தான் வேலைக்குப் போகிறார்கள்.

இப்போது, போராட்டம் நடத்தியவர்களில் அதிகம் பேர் மருத்துவர்கள். வடநாட்டில் நடந்தப் போராட்டத்தையும் தொலைக்காட்சியில் காட்டினார்கள். தற்போது அதிகமான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் வேணுகோபால் என்பவர், ஆந்திரப் பார்ப்பனர். மூன்றாண்டுகளுக்கு முன் ஏ.ஐ.ஐ.எம்.எஸ். இல் பணியாற்றும் ஊழியரின் குழந்தைக்கு அந்த மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்பதால், அந்த ஊழியர் சப்தம் போட்டார். உடனே வேணுகோபால் நீதிமன்றம் சென்று ஏ.ஐ.ஐ.எம்.எஸ். இல் உரிமை கேட்டு போராடக் கூடாது என்று கூறி வளாகத்தில் போராட்டம் நடத்தத் தடை வாங்கினார்.

ஆனால், இடஒதுக்கீட்டை மறுத்து அதே வளாகத்தில் 100 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் அங்கேயே ‘சாமியானா’ போட்டனர். குளிர்காற்றுக் கருவிக்கும் மின் இணைப்பை மருத்துவமனையிலிருந்தே பெற்றனர். இவை போன்ற சில வசதிகளுக்காக இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடும் மாணவர்களுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்தார். இவற்றையெல்லாம் எப்படி வேணுகோபால் அனுமதித்தார்? பணியாளர்கள் போராட்டத்திற்குத் தடை பெற்றவர், உயர்சாதி மருத்துவர்கள் பொது மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவையைச் செய்யாமல் போராடியபோது அதற்கு வேணுகோபால் தடைவிதிக்கவில்லை; மாறாக ஊக்கப்படுத்தினார்.

மருத்துவ சேவையில் இந்தியத் துணை கண்டத்திலேயே தமிழ்நாடு தான் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வடநாட்டில் அது போன்ற நிலை இல்லை. ஏனென்றால், வடநாட்டு மருத்துவர்கள் அனைவரும் உயர்சாதியினர். மருத்துவமனைக்கு வரும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும் இந்த உயர்சாதி மருத்துவர்களுக்கும் தொடர்பே இருப்பதில்லை. அதனால், மருத்துவமனைக்கு வரும் ஏழைகளை உயர்சாதி மருத்துவர்கள் இழிவாகப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மருத்துவர்களில் பெரும்பாலோர் இடஒதுக்கீடு இருப்பதால் நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். (அவர்களிடம் பல குறைபாடுகளை நாம் கண்டாலும்) இந்த மருத்துவர்கள் நோயாளிகளிடம் நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள் என்ற பார்வையாவது தமிழ்நாட்டு மருத்துவர்களிடம் இருக்கிறது. இந்தப் பார்வை வட நாட்டில் இல்லை.

நமது கோரிக்கைகள்

இந்த நிலையில், பல கோரிக்கைகளை வைத்து நாம் போராட்டங்களை நடத்தினோம்.

முதல் கோரிக்கை, இந்த ஆண்டே (ஜுலை 2006) உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்பது. ஏனென்றால், மய்ய அரசு 2007 ஜூலை முதல் அது நடை முறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறது. அய்.அய்.டி. போன்றவற்றில் ஆண்டுக்கு இருமுறை (ஜூலை, ஆகஸ்டு) மாணவர்களைச் சேர்க்கிறார்கள்.

அப்படியே 27 விழுக்காடு இடங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கினாலும் அதன் மூலம் பார்ப்பனர்கள் 27 இடங்களைத்தான் இழப்பார்கள். ஆனால், பார்ப்பனர்களுக்கு 54 இடங்களை உயர்த்திக் கொடுப்பதாக அரசு சொல்லியிருக்கிறது. ஆனால், அதற்கும்கூட பார்ப்பனர்கள் மறுக்கிறார்கள். இந்த நாட்டில் மிகக் குறைவான எண்ணிக்கையிலுள்ள பார்ப்பனர்கள், அரசு அதிகாரங்களின் எல்லா இடங்களிலும் படர்ந்து பரவி இருப்பதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இப்படிப்பட்ட செயல்களைச் செய்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடாமல் நாம் விட்டு விடுவோமேயானால், இப்போது கேட்பதை மட்டும் நாம் இழக்கப் போவதில்லை; ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதையும் பார்ப்பனர்கள் பறிக்க முயற்சிப்பார்கள்.

மய்ய அரசின் உயர் கல்வியில் 27 விழுக்காடு என்பது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மிக அதிகம் என்கிறார்கள். தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மாநில அரசில் 50 விழுக்காடு வழங்கப்படுகிறது. எனவே மய்ய அரசின் உயர்கல்வியில் 27 விழுக்காட்டைப் பெற நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

நமது அடுத்த கோரிக்கை, மய்ய அரசின் உயர்கல்வி நிலையங்களில் படித்து முடித்தவர்கள் கட்டாயம் பத்து ஆண்டுகளாவது இந்தியாவில் பணி புரிய வேண்டும் என்பதை கட்டாய மாக்க வேண்டும் என்பதுதான். காரணம், நம்முடைய வரிப்பணத்தில் உயர்கல்வி நிலையங்களில் படித்து முடித்த அடுத்த ஆண்டே வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கிறார்கள்.

அய்.அய்.டி.யில் பொறியியல் படித்தவர்கள் தொடர்பேயில்லாத வங்கித் துறைக்கு ஜப்பானுக்குச் செல்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், படித்து முடித்து தேர்வு முடிவு வராததற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அய்.அய்.எம். என்கிற மேலாண்மை உயர்கல்வியை படிக்கிறவர்களுக்கு முடித்தவுடன் ஆண்டுக்கு எண்பத்து மூன்று லட்சம் ரூபாய் சம்பளமாகக் கிடைக்கும். ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்கள். எனவே, நம் வரிப்பணம் பாழாவதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

மூன்றாவது கோரிக்கை, மேற் சொன்னவற்றையெல்லாம் விட மிக முக்கியமானது. நாம், மய்ய அரசின் உயர்கல்வித் துறைகளில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறோம். இங்கு தமிழ்நாட்டில் ப்ளஸ் 1 (+1) வகுப்பில் சேருகிற போதே சிக்கல் தொடங்கி விடுகிறது. ப்ளஸ் 2 படிப்பு அறிமுகப்படுத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டிலேயே ஒரு ஆணை வெளியிடப்பட்டது. அதன்படி, ப்ளஸ் + 1 முறையில் இருக்கிற ஒவ்வொரு கல்விப் பிரிவுக்கும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்ற அரசாணையே அது. அவ்வரசாணை சரியாக பின்பற்றப்படாத காரணத்தால் 1994 ஆம் ஆண்டு மீண்டு மொரு அரசாணை வெளியிடப்பட்டது. நம்மில் பலருக்கு இது தெரியாது.

ஒடுக்கப்பட்ட இனத்துப் பெற்றோர்களுக்கு இது தெரியாது. இது தெரியாததால்தான் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கின்ற போது நிறைய ஆசிரியர்கள் ஒடுக்கப்பட்ட இனத்து மாணவர்களை தொழில் பிரிவில் சேர்ந்து விடுமாறு கூறுகிறார்கள். சீக்கிரம் வேலை கிடைக்கும் என்பதையும் காரணம் காட்டுகிறார்கள். பிளஸ் ஒன்று படிக்கும் போதே அறிவியல் பிரிவுக்கு ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தானே அவர்கள் பொறியியலோ, மருத்துவமோ படிக்க முடியும். கூடுதல் வாய்ப்புள்ளவர்கள் உயர் கல்விக்குச் செல்ல முடியும். எனவே, இதைக் களைவதில் நாம் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

ஏ.ஐ.ஐ.எம்.எஸ். இல் நடக்கும் “தகுதி திறமை” மோசடி!

பார்ப்பன வேணுகோபாலை இயக்குநராகக் கொண்ட ஏ.ஐ.ஐ.எம்.எஸ். இல் என்ன நடக்கிறது தெரியுமா? இங்கு இளநிலை மருத்துவப் படிப்புக்கு இருக்கும் இடம் வெறும் நாற்பதுதான். ஆனால், முதுகலை மருத்துவத்திற்கு இருப்பதோ 120 இடங்கள். முதுகலையில் சேர்வதற்கு (120 இடங்களுக்கு) ஒரு விதி வைத்துள்ளனர். மூன்றில் ஒரு பங்கு இடம் (40) அதே கல்லூரியில் படிக்கும் இளநிலை மருத்துவர்களுக்கு வழங்கப்படும். அடுத்த மூன்றில் ஒரு பங்கு இடம் கிராமப்புறத்தில் பணியாற்றியவர்களுக்கு. அடுத்த மூன்றில் ஒரு பங்கு இடம் மற்றவர்களுக்கு. நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதே கல்லூரியில் படிக்கும் இளநிலை மருத்துவர்கள் அனைவருக்கும் முதுகலையில் அப்படியே இடம் கிடைத்துவிடும். இந்த முறையில் முதுகலைக்கு போனவர்களைப் பற்றி ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். ஏ.ஐ.ஐ.எம்.எஸ். முதுநிலையில் இப்படிச் சேர்க்கப்பட்ட மாணவர்களில் 16 பேர் பழங்குடி மக்கள் வாங்கிய கட் ஆப் மதிப் பெண்களைவிடக் குறைவாகப் பெற்றவர்களே. பழங்குடி மக்கள் தான் வாய்ப்புக் குறைவின் காரணமாக மிகக் குறைவான கட் ஆப் மதிப்பெண் பெறுபவர்கள் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். பார்ப்பன மாணவர்களுக்கு ஆதரவாக இவ்வளவு பித்தலாட்டங்களையும் செய்துவிட்டு இயக்குநர் வேணு கோபால், மய்ய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு எதிர்ப்பு காட்டி பேசி வருகிறார்.

- மேட்டூர் விழாவில் கொளத்தூர் மணி உரையிலிருந்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com