Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2006

மக்கள் வரிப்பணத்தில் உயர்கல்வி படித்தவர்கள் வெளிநாடு போகத் தடை போடுக!
கொளத்தூர் மணி

மக்கள் வரிப்பணத்தில் உயர் கல்வி படித்தவர்கள் உடனே வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்ப்பதை தடை செய்ய வேண்டும் என்றும், குறைந்தது 10 ஆண்டுகளாவது உள்நாட்டிலேயே பணியாற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வற்புறுத்தினார்.

மேட்டூரில் ஜூன் 25-ல் நடந்த நாத்திகர் விழாவையொட்டி நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் இட ஒதுக்கீடு பற்றி அவர் ஆற்றிய உரை.

நோயாளி குழந்தைக்கு ஒரு தாய் எவ்வாறு சிறப்பு உணவு அளிப்பாரோ அதுபோல் அழுத்தப்பட்டு கிடக்கும் மக்கள் மேலே வர வேண்டும் என்ற நோக்கில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசால் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதே போல் எந்த சாதியின் பெயரால் மக்கள் அழுத்தப்படுகிறார்களோ அதே சாதியின் பெயரால் அவர்களுக்கு அந்த உரிமை வழங்கப்படுகிறது.

ஆங்கில ஆட்சியின் ஆதிக்கத்திற்கு உட்படாத கோரக்பூர் சிற்றரசின் அரசராக இருந்த சாகு மகாராஜ் தான் இடஒதுக்கீட்டின் மூலம் முதன்முதலில் 1902 இல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பைத் தந்தார். 50 விழுக்காடு இடங்களை பார்ப்பனரல்லாத மக்களுக்கு அவர் கொடுத்தார். அதன் பிறகு 1920 இல் மைசூர் அரசராக இருந்த கிருஷ்ணராஜ் (உடையார்) அவர்கள், தனது சமஸ்தானத்தின் தலைமை நீதிபதியைக் கொண்டு ஆய்ந்து அறிக்கை பெற்று அதன்படி 75 விழுக்காடு இடங்களை பார்ப்பனரல்லாதவர்களுக்கு தந்தார். கோரக்பூர், மைசூர் இரண்டும் ஆங்கில ஆட்சிக்கு அப்போது உட்படாமல் இருந்த தனி அரசுகள்.

ஆங்கில ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் என்று வரும்போது, முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் அதுவும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தான் (நீதிக்கட்சி) இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது. 100 விழுக்காடு இடங்களையும் பிரித்து பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இசுலாமியர், கிறித்தவர், ஆங்கிலோ-இந்தியர் என அனைவருக்கும் 1921 இல் நீதிக்கட்சி கொடுத்தது. அனைத்து வகுப்புகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டதே இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது. ஆனால், விடுதலைக்குப் பிறகு இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது மாறி விழுக்காடு அடிப்படையில் இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தது. மாநில அரசில் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 69 விழுக்காடு இடத்தை நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், மய்ய அரசைப் பொறுத்த வரை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டைத் தவிர கல்வி, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாத நிலையே மிக நீண்டகாலம் இருந்தது. அதற்காக பிற்படுத்தப்பட்டோர் நல உரிமைக் குழு காகா கலேல்கர் தலைமையில் 1953 இல் அமைக்கப்பட்டு அது 1955 இல் தனது அறிக்கையை மய்ய அரசிடம் கொடுத்தது. ஆனால், அது நடைமுறை படுத்தப்படவில்லை. அதன் பிறகு, பிற்பட்டோர் நலனுக்கான மற்றொரு குழு பிஸ்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் 1978 இல் அமைக்கப்பட்டது. அது தனது அறிக்கையை 1980 இல் அரசிடம் கொடுத்தது. அந்த அறிக்கையும் நடைமுறைக்கு வராமல் பத்து ஆண்டுகள் முடங்கிக் கிடந்தது. இந்தியத் துணைக் கண்டத்தின் தலைமையமைச்சராக சில மாதங்கள் மட்டுமே இருந்து சரித்திர சாதனைகள் பல படைத்த வி.பி.சிங் அவர்கள்தான் மண்டல் அறிக்கையின் ஒரு பகுதியை மட்டும் நடைமுறைப்படுத்தினார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசின் வேலை வாய்ப்பில் மட்டும் 27 விழுக்காடு என்று ஆணை பிறப்பித்தார். அதுவும்கூட - ராணுவம், நீதித்துறை, உயர்கல்வி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளித்தே அந்த ஆணையைப் பிறப்பித்தார். இதற்கேகூட நீதிமன்றம் சென்று பல தடைகளை பெற்றனர் உயர்சாதியினர். கடைசியாக, 1994 இல் தான் வி.பி.சிங்கின் ஆணை நடை முறைக்கு வந்தது. ஆனால், 1998 இல் மய்ய அரசில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., மய்ய அரசுப் பணியில் உள்ளவர்களின் ஓய்வு வயதை 58லிருந்த 60 ஆண்டுகள் என 2 வருடங்களுக்கு உயர்த்தி உயர்சாதியினருக்கு பணியை நீட்டித்தது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் இதன் மூலம் இரு ஆண்டுகள் தள்ளிப் போட்டன.

மய்ய அரசின் எந்தக் கல்வி நிறுவனங்களிலும், மய்ய பல்கலைக் கழகங்களிலும், உயர் கல்வியிலும், பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லை. மய்ய அரசில் தற்போதுள்ள அய்க்கிய முற்போக்கு கூட்டணி தனது அமைச்சரவையின் அறிவிப்பாக மய்ய அரசின் உயர்கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுக்கப்படும் என்றது. மய்ய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இதை அறிவித்தார். உடனே உயர்சாதியைச் சேர்ந்த சில நூறு பேர் போராட்டம் நடத்தினர். ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் கையில் இருந்ததால் இச்சிறு சலசலப்பை மிகப் பெரிய போராட்டமாகவும், இந்தியத் துணைக் கண்டமே குலுங்குவது போலவும் ஊதிப் பெரிதுபடுத்தினர்.

மண்டல்குழு இந்தியா முழுக்க உள்ள பிற்படுத்தப்பட்டோர் 52 விழுக்காடு என்றும் அதில் 3743 சாதிகள் அடங்கும் என்றும் பட்டியலிட்டது. 52 விழுக்காட்டில் 42 விழுக்காடு இந்துக்கள் என்றும், 8 விழுக்காடு மற்ற மதத்தவர் என்றும் மண்டல் அறிக்கை கொடுத்தார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு மேலும் 700 சாதிகள் அடங்கிய எட்டு விழுக்காட்டினரையும் பிற் படுத்தப்பட்டோர் என்றது. ஆக பிற் படுத்தப்பட்டோர் என்பவர் 60 விழுக்காடாக உள்ளனர். இப்படி 60 விழுக்காடாக உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு விடுதலை பெற்றதாகச் சொல்லப்படுகிற 60 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட 27 விழுக்காட்டைத் தர மறுக்கிறார்கள்.

மண்டல் தனது அறிக்கையைக் கொடுத்தபோது, அதில் பொருளாதார நிலையை கணக்கெடுக்கத் தவறிவிட்டார் என்றெல்லாம் சிலர் கூறுகிறார்கள். பொதுவுடைமை இயக்கங்கள்கூட இப்படிப் பேசுகின்றன. ஆனால், தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் இதற்கு எதிர்குரல் கொடுத்திருப்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். மண்டல் தன் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோரை தேர்ந்தெடுத்தபோது சமூகரீதியாக சில செய்திகளைச் சொல்கிறார். அப்படிச் சொல்லப்பட்ட சமூகக் காரணங்களுக்கு 12 மதிப்பெண் என்றும், கல்விக்கு 6 மதிப்பெண் என்றும், பொருளாதார காரணங்களுக்கு 4 மதிப்பெண் என்றும் ஆக மொத்தம் 22 மதிப்பெண்களை மொத்தமாக வைத்தார். இதை அளவுகோலாக வைத்து அதிலிருந்து தான் பிற்படுத்தப்பட்ட சாதிகளை மண்டல் அடையாளம் காட்டினார். ஆனால், அவரின் அறிக்கையை சரியாகப் படிக்காத சிலர் மண்டல் பொருளாதாரத்தைக் கணக்கில் எடுக்கவில்லை என்கின்றனர்.

இப்போது ஒரு வழக்கு போட்டிருக்கிறார்கள். மண்டல் சொல்வதுபோல் பிற்படுத்தப்பட்டவர்கள் 52 விழுக்காடு இலலை. வெறும் 39 விழுக்காடுதான் இருக்கிறார்கள் என்று ஒரு வழக்கு. சரி 39 விழுக்காடு இருப்பவர்களுக்கு 27 விழுக்காடு கொடுப்பதில் தான் என்ன தவறு வந்து விட்டது? சாதி வாரியாக மக்கள் தொகை கடைசியாக கணக்கெடுக்கப்பட்டது 1931 ஆம் ஆண்டில்.

1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்டதால் அக்கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 1951 இல் கணக்கெடுத்தபோது சாதிவாரியாக கணக்கெடுப்பதைக் கைவிட்டு விட்டார்கள். எனவே, பிற்படுத்தப்பட்டோர் 52 விழுக்காடு இல்லை என்பதாக ஒரு வழக்கைப் போட்டு, ஒரு குழுவை வைத்து சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, தங்களிடம் இருக்கும் நீதித்துறையை பயன்படுத்தி இடஒதுக்கீட்டைத் தடுப்பதற்கான மிக மோசமான வழிகளை உயர்சாதியினர் கையாளுகிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com