Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2009

'குடிஅரசு' 'விடுதலை'யை தேடுகிறார்களாம்!


இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்துக்கு எதிராக முதல் புரட்சியைத் தொடங்கியவர் புத்தர். பகுத்தறிவு பொருள் முதல்வாதக் கருத்துகளை முன் வைத்த புத்தத்தை கருத்து முதல்வாதத்தின் பக்கம் திருப்பிடும் பார்ப்பன சதிகள் நடந்தன. புத்தருக்குப் பிறகு ஹீனயான பவுத்தம், மகாயன பவுத்தம் என்று புத்த மார்க்கம் இரு பிரிவுகளாயிற்று.

நாகர்ஜுனன் எனும் பார்ப்பான், மகாயான பவுத்தப் பிரிவைப் பார்ப்பனிய கோட்பாடுகளுக்கு இசைந்ததாக மாற்றி அமைத்துவிட்டான். புத்தர் உருவாக்கிய சமூகப் புரட்சி தடம் புரண்டது. வேதங்களை மறுத்த கலகக் குரல்கள் பலவும் பார்ப்பனியத்தால் பல்வேறு சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டதை வரலாறுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. நீலகேசி என்ற சமண காப்பியத்தில் வரும் நீலகேசி என்ற பெண் வேதம் சுயம்புவாகத் தோன்றியது என்ற பார்ப்பன கருத்தியலை மறுத்தார். வேதத்தையும் யாகங்களையும் கடுமையாக சாடும் வாதங்கள் நீலகேசியில் இடம் பெற்றுள்ளன. இப்படி பார்ப்பனர்களை சாடும் வாதங்கள் அடங்கிய வாத சருக்கத்தில் பல செய்யுள்கள் காணாமலே போய்விட்டன. வேத, கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் இலக்கியங்களை எல்லாம் பார்ப்பனர்கள் திட்டமிட்டு அழித்தார்கள்.

'லோகாயதம்' என்ற தத்துவம், கடவுள் மறுப்பை பேசியது. பார்ப்பனர்களை எதிர்த்தது. லோகாயதவாதிகள் பல நூல்களை எழுதினார்கள். ஆனால், அவைகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. இந்திய தத்துவங்கள் பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதிய தேவிப் பிரசாத் சட்டோபாத்யாய இவ்வாறு குறிப்பிடுகிறார்: "லோகாயதர்களின் உன்னதப் படைப்பிலயக்கியங்களின் மூலப் படிகள் மீட்கவே முடியாதவாறு அழிக்கப்பட்டு விட்டன. துண்டு துண்டாக வெட்டப்பட்ட சில வரிகள் காணக் கிடைக்கின்றன. அவைகூட லோகாயத எதிர்ப்பாளர்களின் நூல்களில் தான் உயிர்வாழ்கின்றன. அதாவது லோகாயதக் கோட்பாடுகளை மறுத்துரைக்கவும், இகழ்ந்துரைக்கவும் பார்ப்பன நூலாசிரியர்கள் லோகாய வரிகளை மேற்கோள்களாகப் பயன்படுத்தியுள்ள இடங்களில் மட்டும் உயிர் வாழ்கின்றன" - என்று குறிப்பிடுகிறார். ('லோகாயதா' நூல்).

பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கிய நிலங்களையெல்லாம் பறிமுதல் செய்த களப்பிரர்கள் ஆட்சி பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இல்லாமல் அழித்துவிட்டு, 'களப்பிரர் காலம் இருண்ட காலம்' என்று வரலாற்றை எழுதியவர்கள் பார்ப்பனர்கள்தான். இப்படி வேத பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களும், சிந்தனைகளும், தலைவர்களும் வரலாற்றில் சுவடு இல்லாமல் அழித்தொழிப்புக்கு உள்ளான அவலங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு. இந்த வேத பார்ப்பனக் கொடுமைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மகத்தான பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை நடத்திய பெரியார் சிந்தனைகளும் இதே விபத்துகளை சந்திக்கிறது என்பது மிகப் பெரும் அவலமாகும்!

பெரியாரும், அவருடைய இயக்கமும் கட்டுப்பாடாக பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிக்கப்பட்டே வந்த நிலையில்அந்த இயக்கத்தின் எதிர்நீச்சல் பயணத்தை உள்ளது உள்ளவாறே அறிவதற்கான ஒரே ஆதாரமாகத் திகழ்பவை பெரியர் நடத்திய ஏடுகள்தான். அவைகள் மறைந்து விட்டால், அக்கால கட்டங்களில் பெரியார் இயக்கத்தின் வரலாறுகளும் இருண்டு போய் விடுகிறது. பயணத்தின் பாதை தடைபட்டு விடுகிறது. பெரியாரின் எழுத்து பேச்சுகளின் வரலாற்றுப் பதிவுகளை பெரியார் இயக்கம் நடத்துவதாகக் கூறுவோரே, தொலைக்கலாமா? அதைக் கருவூலமாக கண்காணித்துப் பேண வேண்டியவர்களே, அவற்றை எக்கேடு கெட்டுப் போனால் என்ன, என்று அலட்சியப்படுத்தலாமா?

பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரத்தின் நிறுவனர் - திராவிடர் கழகத் தலைவர் என்ற பதவிப் பொறுப்புகளோடு உலாவரும் கி.வீரமணி, கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி 'விடுதலை'யில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு இதற்கு சான்றாக விளங்குகிறது!அதை அப்படியே வெளியிடுகிறோம்:

1935, 1936 ஆம் ஆண்டுகளுக்கான 'விடுதலை' நாளேடுகள், தங்களிடம் முழுமையாக இல்லை என்கிறார். இதைத் தவிர 12 ஆண்டுகளுக்கான 'விடுதலை' நாளேடுகள் பாதிக்கு மேல் அவர்களிடம் இல்லை. இதைவிடக் கொடுமை - 1989, 1990 ஆம் ஆண்டுகளின் 'விடுதலை' நாளேடுகள்கூட இவர்களிடம் முழுமையாக இல்லை என்பதாகும். 'குடி அரசு' வார பத்திரிகையோ, 8 ஆண்டுகளுக்கான பத்திரிகை இவர்களிடம் ஒன்றுகூட இல்லை என்பதாகும். இது ஏதோ, இல்லாத பத்திரிகைகள் என்று பார்ப்பது மிகவும் குறுகிய பார்வையாகும். முழுமையான வரலாறுகளைக் கூறும் ஆவணங்களே இல்லாமல் போவதால் வரலாறு களும் இருட்டுக்குள் தள்ளப்பட்டு விடுகிறது;

இது வரலாற்றுத் துரோகம்! பெரியார் கருத்துக் கருவூலங்களைப் பாதுகாப்பதைவிட பெரியார் இயக்கத் துக்கு முதன்மையான பணி வேறு இருக்க முடியுமா? பெரியார் கொள்கைகளை பரப்புவதுகூட இருக்கட்டும்; அவர் சேமித்து வைத்த அறிவுச் செல்வங்களை பாதுகாக்கவாவது வேண்டாமா? பெரி யாரின் கட்டிடங்களையும், நிலங்களையும் சொத்க்களையும் பத்திரப்படுத்தினால் போதும். இந்தக் "காகிதங்கள்", சந்தையில் விலை போகாது என்று கருதி விட்டார்கள் போலும்! இந்த வரலாற்று ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்பதுகூட - எப்போது இவர்களுக்கு தெரிகிறது?

பெரியார் திராவிடர் கழகம் 'குடிஅரசு' தொகுப்பு வெளியீட்டு முயற்சிகளுக்குப் பிறகுதான். பெரியார் திராவிடர் கழக செயல்பாட்டை முடக்கத் துடிக்கும் போதுதான் இவ்வளவு பெரியார் நூல்கள் தங்களிடம் இல்லை என்பதே இவர்களுக்குத் தெரிகிறது. பெரியார் திராவிடர் கழகம் இந்த முயற்சியில் இறங்காவிட்டால், இந்த வரலாற்று ஆவணங்களைத் தேடும் முயற்சிகளில் இறங்கியிருக்கவே மாட்டார்கள். பார்ப்பன வேத எதிர்ப்பு வரலாற்றுச் சான்றுகளை அழித்தவர்கள் பார்ப்பனர்கள் தான்! ஆனால், பெரியார் வரலாற்று ஆவணங்களைத் தொலைத்தவர்கள் அது பற்றி இத்தனை ஆண்டுகளாக கிஞ்சித்தும் கவலைப்படாதவர்கள்.

பெரியார் இயக்கத்தின் பெயரைச் சொல்கிறவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வரலாற்று துரோகம் அல்லவா? பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து, 'திரிபுவாதிகள்', 'புரட்டர்கள்', 'திருடர்கள்', 'திம்மன்கள்' என்று தரம் குறைந்த வார்த்தைகளைத் தேடித் தேடி எழுதும் கி.வீரமணியை கேட்கிறோம்: இப்படி ஒரு அறிக்கை வெளியிடும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பதே, அவமானம் அல்லவா? பெரியாருக்கு இழைத்த துரோகம் அல்லவா?'நான் என்ன செய்வது; எனக்கு முன்னால் இருந்தவர்கள் பாதுகாக்கவில்லை' என்று சமாதானம் சொல்வீர்களேயானால், இதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதற்கு இவ்வளவு காலம் தேவையா என்ற கேள்விக்கு என்ன சமாதானம் கூறப் போகிறீர்கள்? அதுவும், 1989, 90 ஆம் ஆண்டு 'விடுதலை' ஏடுகள் கூட காணாமல் போனதற்கான பழியை எவர் மீது போடப் போகிறீர்கள்? பதில் வருமா?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com