Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2009

சங்கராச்சாரி மடத்துக்குள் தலித் சிற்பிகளின் சிலை


தலித் சிற்பிகள் வடித்தசிலைகளே சங்கராச்சாரி மடத்துக்குள்ளும் இருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த சிற்பி ராசனின் சமூகப் புரட்சியை ஏடுகள் பலவும் வெளியிட்டு வருகின்றன. 'குமுதம் ரிப்போர்ட்டர்' ஏடு வெளியிட்டுள்ள அவரது பேட்டி இது.

கோயில்களுக்குள் நுழைந்து சாமி கும்பிடக் கூட தலித்துகளுக்கு பல இடங் களில் தடையிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கருவறைகளுக்குள் கம்பீரமாக நிற்கும் தெய்வத் திருவுருவச் சிலைகளை இன்று தலித்துகள் தயாரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் தகவல் அல்லவா? அப்படி சிலை வடிக்கும் வேலைகளில் தலித்துகளைத் தயார்படுத்தி சைலண்டாக ஒரு புரட்சியை நடத்தி வருகிறார் ராஜன் என்பவர்.

தஞ்சை மாவட்டம் சுவாமி மலையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள திம்மக்குடியில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக்கிறார் அந்த அற்புத மனிதர் ராஜன். சிலை செய்யும் தொழில் ஆன்மிகம் கலந்தது என்றாலும், ராஜன் ஒரு பழுத்த பெரியார்வாதி என்பது ஆச்சரியம் கலந்த ஆனந்தம். சிலை செய்வதில் இருக்கும் ஐதீகங்களை உடைத்து, முற்போக்காக சிலை வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இவர்.

அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ஆச்சரியம் விலகாமல் திம்மக்குடிக்கு விரைந்தோம். இதோ அவரே நம்மிடம் பேசுகிறார்:

"திருச்சி ஸ்ரீரங்கம்தான் என் சொந்த ஊர். பதின்மூன்று வயதிலேயே பெரியார் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். யாராவது என்னிடம், 'நீ என்ன சாதி? மதம்?' என்று கேட்டால், 'மனுஷ சாதி. திராவிட மதம்' என்றுதான் சொல்வேன். ஆனால், என் குடும்பத்தவர்கள் ஆன்மிகத்தில் ஊறிப் போனவர்கள். அதனால் என்னை அவர்கள் கண்டிக்க, வீட்டில் தினம் தினம் சண்டை சச்சரவுதான்.

1978 இல், என் பத்தொன்பது வயதில், பி.யூ.சி. முடித்தேன். அப்போது சுவாமிலையில் சிலை செய்யும் கலை செழிப்பாக இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கே போய் அந்தக் கலையைக் கற்றுக் கொள்ள ஆர்வமானேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த என் அப்பா, 'இதற்காகவா உன்னைப் படிக்க வைத்தேன்?' என தாம்தூமென்று குதித்தார். கோபமான நான், என் பி.யூ.சி. சான்றிதழைக் கிழித்தெறிந்து விட்டுக் கிளம்பத் தயாரானேன். 'நீ எங்களை மீறிப் போனால் மீண்டும் திரும்ப வராதே' என்றார் அப்பா. 'சரிப்பா' என்று செருப்பைக்கூட உதறித் தள்ளிவிட்டு இங்கே வந்து விட்டேன். இன்றைக்கு முப்பத்தொன்பது வருஷங்கள் ஆச்சு. இன்னும்கூட நான் வீட்டுக்குப் போக வில்லை" என்று கூறி நிறுத்திய ராஜன் தொடர்ந்தார்.

"78 இல் சுவாமிமலை வந்த நான் மூன்று வருட காலம் சிலை செய்யும் கலையைக் கற்றுக் கொண்டு 81 ஆம் வருடம் கும்பகோணத்தில் தங்கியிருந்து சிலை செய்ய ஆரம்பித்தேன். நான் செய்த சிலைகள் பிரபலமாகி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்தன. சிலைகளுக்கான தேவை அதிகமானதால் எனக்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்பட்டார்கள். அப்போதுதான் சிலை வடிக்கும் தொழிலில் பெரியாரிசத்தைப் புகுத்தி சாதி ஒழிப்புச் செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.

அதனால் தலித்துகளைப் பயன்படுத்தி சிலை வடிக்கத் தீர்மானித்தேன். அதுவரை விவசாயக் கூலிகளாக வெட்டியான்களாக, பறை அடிப்பவர்களாக இருந்த தலித்துகளை அழைத்து சிலை செய்ய சொல்லித் தந்தேன். 'இந்தத் தொழில் நமக்கு ஒத்து வருமா?' என்று ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவர்கள், பிறகு ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்கள். 'தலித்துகள் சிலை செய்வதா?' என்று ஆரம்பத்தில் பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, என் முயற்சியை மழுங்கடிக்கப் பார்த்தாலும் நான் மசிந்து கொடுக்கவில்லை.

இதுவரை முந்நூறு தலித்துகளுக்கு சிலை செய்ய கற்றுத் தந்திருக்கிறேன். அதில் முக்கால்வாசிப் பேர் இன்று தனிப் பட்டறை அமைத்து சிலை செய்து வருகிறார்கள். அவர்களை இந்தத் தொழிலைச் செய்ய விடாமல் தடுக்க முயன்ற சிலரது முயற்சி எடுபடாமலேயே போய்விட்டது. இன்று தலித் சிற்பிகள் தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இதே சுவாமிமலையில் கண்ணன் என்பவரும், பட்டீஸ்வரத்தில் சுந்தர் என்பவரும் பெரிய அளவில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக் கிறார்கள். இவர்கள் இருவருமே தலித்துகள்.

கும்பகோணம் நீதிமன்றம் அருகிலுள்ள கோயிலில் உள்ள ஐயப்பன் சிலையை ஒரு தலித்து தான் செய்தார். பெருந்துறை சிவன் கோயில், சென்னை, கோவை, சேலம், மதுரையிலுள்ள கோயில்கள், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலுள்ள கோயில்களில் எல்லாம் என் பட்டறையில் பணிபுரிந்த தலித்துகள் செய்த சிலைகள் இருக்கின்றன. நாங்கள் சங்கராச்சாரி யாரின் ஸ்ரீ மடத்திற்கு நூற்றுக்கணக்கில் மகாமேரு செய்து தந்திருக்கிறோம். அந்தப் பணியில் பாதிக்குப் பாதி ஈடுபட்டவர்கள் தலித்துகள்தான்.

நடராஜரின் 108 தாண்டவத்தில், 103-வது தாண்டவமான அதோ தாண்டவத்தை' சிலையாகச் செய்பவர்கள் செத்து விடுவார்கள் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. அந்தத் தாண்டவத்தின் அமைப்பை ஒரு புத்தகத்தில் யதேச்சையாகப் பார்த்த நான், 83 ஆம் ஆண்டு நாலரை அடி உயரத்தில் மும்பை கோயில் ஒன்றுக்கு அதைச் செய்து கொடுத்தேன். ஆனால், இன்றுவரை நான் இறந்து போகவில்லை. அதே மாதிரி சில தலித்துகளும் அந்த தாண்டவச் சிலையைச் செய்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலை என் மியூசியத்திலும், இன்னொன்று என் பட்டறையிலும் இருக்கிறது.

என் பட்டறை மற்றும் மியூசியத்தைப் பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த், நடிகர் முரளி, இசைஞானி இளையராஜா போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். இதில் இளையராஜா வந்தபோது நடராஜர் சிலையைப் பார்த்து அதிசயமாகி, 'இதை நான் தொட்டுப் பார்க்கலாமா?' என்றார். 'தொடுவதற்குத் தானே சிலை?' என்று நான் சொன்னதும் கண்கலங்கிப் போனார்.

தலித்துகளுக்கு நான் சிலை செய்யக் கற்றுத் தந்தததால் ஏதோ பூமியைப் புரட்டிப் போட்டு சாதனை செய்துவிட்டதாக நினைக்கவில்லை. மனிதர்களைப் பிடித்து ஆட்டி, அலைக்கழிக்கும் சாதிப் பேயை ஏதோ கொஞ்சம் வேப்பிலையடித்து விரட்டியிருப்பதாக நினைக்கிறேன். என் மியூசியத்தைப் பார்க்க வந்த ஒருவர், 'இவ்வளவு நாத்திகம் பேசும் நீங்கள் ஏன் ஆத்திக சமாசாரமான சிலைகளைச் செய்கிறீர்கள்' என்று கேட்டார். அதற்கு நான், 'இவ்வளவு ஆத்திகம் பேசும் நீங்கள் சிலை செய்ய வேண்டியது தானே? ஏன் என்னைத்தேடி வருகிறீர்கள்? இது ஒரு தொழில். இதில்கூட நாத்திக கருத்து களைப் பரப்ப முடியும்' என்று நான் சொன்னதும் வாயடைத்துப் போனார்.

கடவுள் விஷயத்திலும் மறை முகமாக இப்படி சாதிகளை ஒழிக்க முடிகிறபோது, மற்ற தொழில்கள், விஷயங்களிலும் மனம் ஒப்பி முயற்சி செய்தால் சாதியை முழுமையாக ஒழித்து விடலாம்" என்ற நமக்கு நம்பிக்கை ஊட்டினார் ராஜன்.

அவரது பட்டறையின் மேலாளரான கார்த்திகேயனிடம் பேசினோம்.

"இங்கே வேலை பார்ப்பதை ஒரு பாக்கியமாக நினைக்கிறோம் சார். ராஜன் கல்யாணமே செய்து கொள்ள வில்லை. கேட்டால், 'நான் பெரியார் கொள்கையைத் திருமணம் செய்து விட்டேன். எனக்கு எதற்கு இரண்டாவது தாரம்? என்பார். ஆரம்பத்தில் வீட்டில் வைத்துச் சிலை செய்து வந்த அவர், 1990 இல் இந்த இடத்தை வாங்கி இங்கே பட்டறை அமைத்தார். 'இந்த இடம் நாலைந்து பேர் தூக்கு மாட்டிச் செத்த இடம். இங்கே அவர்களின் ஆவி உலவுது, பேய் பிறாண்டுது' என்றெல்லாம் சிலர் கதைகளை அள்ளி விட்டார்கள். அதைப் புறந்தள்ளிவிட்டு இந்த இடத்தை வாங்கிப் பட்டறை அமைத்தார். ராஜனுக்கு ரேஷன் கார்டு கூட கிடையாது. ரேஷன் கார்டு வாங்கப் போனபோது, 'என்ன மதம்?' என்று கேட்டிருக்கிறார்கள். இவர், 'திராவிட மதம்' என்றிருக்கிறார். கடுப்பான அவர்கள், 'ஒழுங்கா மதத்தைச் சொல்லுங்க. இல்லாவிட்டால், ரேஷன் கார்டு கிடைக்காது' என்றிருக்கிறார்கள். 'அப்படியொரு ரேஷன் கார்டே எனக்கு வேண்டாம்' என்று கூறிவிட்டு இவர் வந்துவிட்டார். அதுபோல வாக்காளர் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை. அதனால் ஓட்டுரிமை யும் இவருக்கு இல்லை.

பல நாட்டுச் சுற்றுலா கையேடுகளில் ராஜன் சாரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஒரு முறை பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து எங்கள் மியூசியத்தைப் பார்த்துவிட்டுச் சென்ற சிலர், அந்த நாட்டின் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ராஜனைப் பற்றிய ஒரு பாடத்தை இடம்பெறச் செய்து விட்டார்கள். அதுபோல சென்னையில் உள்ள விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் தரும் மாநில விருதை ஐந்து முறை இவர் வாங்கியிருக்கிறார். லண்டனில் 97 ஆம் ஆண்டு 'ஆர்ட் அண்ட் ஆக்ஷன்'என்ற பெயரில் நடந்த சிலை வடிக்கும் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து எட்டாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். அதில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு ராஜன் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

தற்போது மாநிலம் முழுவதும் உள்ள சமத்துவபுரங்களில் தமிழக அரசு நூறு பெரியார் சிலைகளை வைக்கப் போகிறது. அதில் தஞ்சை மாவட்டத் திலுள்ள ஆறு சமத்துவபுரங்களுக்கு பெரியார் சிலை செய்து தரும்படி எங்களிடம் கேட்டிருக்கிறார்கள்" என்றார் அவர்.

ராஜனின் பட்டறையில் பாண்டு ரங்கன் என்ற தலித்தும் சிலை செய்யப் பழகி வருகிறார். ஏகரத்தைச் சேர்ந்த அவரிடம் பேசினோம். "கூலி வேலை பார்த்து வந்த நான், இப்போது நான்கு வருடங்களாக இங்கே தொழில் கற்று வருகிறேன். அடுத்த வருடம் தனியாகப் பட்டறை போடப் போகிறேன். இந்தத் தொழிலைச் செய்வதை நினைத்தால் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கும் சார். கோயில்களிலும் கருவறைகளிலும் நுழைந்து சிலை எப்படி இருக்கிறது என்று எங்களைப் பார்க்கக்கூட விடாத இந்த சமூகத்தில், என் இன ஆட்கள் செய்த சிலைகள் முக்கிய கோயில்களிலும், கோயில் கருவறைகளிலும் இருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாங்கள் தொட்டுத் தடவி, செதுக்கி, கூர் நேர் பார்த்து அங்குல அங்குலமாக வடித்துத் தரும் சிலைகளை மற்றவர்கள் வணங்குகிறார்கள் எனும்போது மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. எல்லா எதிர்ப்பையும் மீறி எங்களுக்கு ஒரு நம்பிக்கையும், திடமும் கொடுத்து இந்தத் தொழிலில் ஈடு படுத்தியவர் ராஜன் அய்யா தான். எங்களுக்கு அவர் இன்னொரு பெரியாராகத் தெரிகிறார்" என்றார் பாண்டுரங்கன் நெகிழ்வுடன்.

நன்றி : 'குமுதம் ரிப்போர்ட்டர்' 11.1.2009