Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2009

தீஸ்டா செதல்வாட் - விளக்கம்
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் மதவன்முறையாளர்கள்

'காம்பட் கம்யூனலிசம்' ஆசிரியரும், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போராளியுமான தோழர் தீஸ்டா செதல்வாட் டிச.11 அன்று 'மதச்சார்பற்றோர் மாமன்றம்' சார்பில் சென்னையில் ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி.

இப்போது டிசம்பர் 6, 1992க்கு வருவோம். பாபர் மசூதியின் இடிப்பு. அந்த ஒரேயொரு பயங்கரவாதச் செயல், மென்மேலும் பயங்கரவாதம் பரவுவதற்கும் தனிமைப் படுத்துதல் அதிகமாவதற்கும் வழி வகுத்தது. ஆனால் 1985க்கும் 1992-வுக்கும் இடைப்பட்ட காலத்தின் வரலாற்றை நாம் பார்ப்போமேயானால், ரத யாத்திரை நடத்தப்படட இடங்களிலெல்லாம், குறிப்பாக இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட விரும்புகிறேன். மீரட்டில் ஹாஷிம் புரா என்ற இடத்தில் 1987, மற்றும் 89-ல் இரண்டு நிகழ்ச்சிகள் ரதயாத்திரையின்போது நடந்தன. ஐம்பத்தோரு முஸ்லிம் சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய உத்தரபிரதேச ஊர்க்காவல் படையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சாட்சிகள் தொலைந்து விட்டனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி வேண்டி குரல் எழுப்பிக் கொண்டுள்ளனர்.

ம.பி. மாநிலம் பகல்பூரில் சந்தேரி, லொகாயன் என்ற இரண்டு கிராமங்கள். ஒரே இரவில் எண்ணற்ற மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சென்ற ஆண்டு சிலர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். ஆனால் கத்தி, லத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திட்டம் தீட்டியவர்களல்ல. வெறுப்பை உருவாக்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் எய்யப்பட்ட வெறும் அம்புகள்தான்.

1992க்கு வருகிறோம். வெறுப்பு கர்நாடகத்தையும் விடவில்லை. இப்படிப்பட்ட மத வெறுப்பு உள்ளே வர தென்னிந்தியா அனுமதிக்காது என்றே என்னைப்போன்ற வரலாற்று மாணவர்கள் நம்புகிறோம். 1980களிலும், குறிப்பாக 1992லும் நாம் பார்த்தோம், டிசம்பர் 92லும், ஜனவரி 93-யிலும் மும்பை போன்ற ஒரு மாநகரில், காவல்துறையினரின் ஒரு சார்புத் தன்மை கொண்ட முகத்தை, பெரும்பான்மை சமூகத்தவருக்கு ஆதரவாக இருந்ததையும், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்கு எதிராக இருந்தததையும் நாம் பார்த்தோம். 1980கள் முழுதும் இதுதான் நிகழ்ந்தது. அதன் பிறகு 92ல் மசூதி இடிப்பு. பின் திட்டமிடப்பட்ட படுகொலை பம்பாயில் நிகழ்ந்தது. அப்போது அது பம்பாய்தான். மும்பை ஆகவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற சிறீ கிருஷ்ணா விசாரணை ஆணையமும் கூறிவிட்டது.

நண்பர்களே, 1984, 1992, 2002களில் குஜராத். இடையே, 1998லிருந்து இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தவர் தெளிவாகத் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டனர். 1998லிருந்தே, ஒரிசாவும் கர்நாடகாவும் குறிவைக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 48 தாக்குதல்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ நிறுவனங்களையும், குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்பதை அகில இந்திய கத்தோலிக்க யூனியனோடு சேர்ந்து நாங்கள் பதிவு செய்தோம். 1998ல், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஏன் தமிழ்நாட்டின் ஊட்டியிலும் ஒரு தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. குஜராத்தில்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் அது நடந்தது. ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்தப்பட்ட முறையில் வித்தியாசம் இருந்தது. ஆனால், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் கிறிஸ்தவ சமுதாயம் செய்து கொண்டிருக்கும் சேவைகளையெல்லாம் மீறி, தூரமாக இருக்கும் பகுதிகளில் கூட ஆதிவாசிகளுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தினர் செய்த சேவைகளையெல்லாம் கூட மதமாற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லி அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் வேலை நடந்தது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினரின் சேவைகள் இருந்தாலும், அந்த சமுதாயமும் மதமாற்றம் செய்கிறது என்று சொல்லி கேவலப்படுத்தப்பட்டது. மறுபடியும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியது. குற்றவாளிகள் திரிந்து கொண்டிருக்க நாம் அனுமதித்தோம்.

2002ல் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாமனைவரும் அறிவோம். முடிந்துபோன கதை அல்ல இது. ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கையில் படுகொலைகள் ஒரு சமூகமும், அரசும், நாடும் அனுமதிக்குமானால், குற்றவாளிகளை தண்டனைக் குரியவர்களாக அடையாளம் காட்டாது விடுமானால், பெரிய அளவில் தனிமைப் படுத்துதலையும், காழ்ப்புணர்வையும் தேக்கி வைக்க உதவும். ஒரு சமூகம் என்ற அளவிலும், அரசாங்கம் என்ற அளவிலும் நாம் இதைச் சரி செய்யத் தவறிவிட்டோம். அப்படி ஒன்று நடந்தது என்று கூட நாம் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

குஜராத்தில் வெகுகாலத்துக்கு திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப்புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப்புத்தகங்களில் சிறுபான்மை சமூகத்தினரை கேவலப்படுத்தி எழுதுதல்... இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்படடன. இனப்படுகொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

கம்யூனலிசம் காம்பாட் ஆங்கில பத்திரிக்கையின் இனப்படுகொலை பற்றிய இதழின் தமிழாக்கத்தை வெளியிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது சென்னையில் இருக்கும் தோழர்களால் வெளியிடப்பட்டது. அதை நான் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமென்றே தமிழில் கொடுத்தேன். ஏனெனில் குஜராத்தில் ஒரு நிவாரண முகாமில் அவர் முதல்வர் மோடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். நிவாரண முகாமுக்குள் செல்லக்கூடாதென எனக்கு மாவட்ட அதிகாரி சொல்லி இருந்தார். எனவே, நான் புர்கா அணிந்து உள்ளே சென்று தமிழ் இதழை அப்துல் கலாமிடம் கொடுத்தேன்.

குஜராத் பெஸ்ட் பேக்ரியில் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது. நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இன்றுகூட, சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் சிபிஐ இயக்குனர், சென்னையைச் சேர்ந்த திரு. ராகவன் அவர்கள் தலைமையில் கோத்ரா, குல்பர்க், நரோடாகாம், நரோடா பாட்டியா, ஓட், மற்றும் சர்தார் பூர் படுகொலைகளை மறுபுலனாய்வு செய்து கொண்டிருக்கிறது.

வழக்கை உயிருடன் வைத்திருக்க மூன்று நான்கு ஆண்டுகளாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தோடு போராட வேண்டியிருந்தது. காலம் கடந்து விட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்திலேயே அழுகிச் சாகட்டும் என்று தடுப்பதற்கு தன் சக்தியையெல்லாம் பயன்படுத்தியது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழலில் வாழும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்சலோடும் மனசாட்சியோடும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத்தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் துணிச்சல் நீடித்திருக்க எங்களில் சிலர் எங்களால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை அவர்கள் எந்த அச்சுறுத் தலுக்கும் பணிந்துவிடவில்லை. உங்களைப்போன்ற மக்களின் ஆதரவுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

பெஸ்ட் பாக்டரியில் குடும்பமே உயிருடன் எரிக்கப்பட்டபோது உயிர் பிழைத்த ஒரே பெண் - ஜாஹிரா தான் சாட்சி;. அவரை மிரட்டி, ஆட்சியாளர்கள் பொய் சாட்சி கூற வைத்தனர்.

ஜாஹிராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா என்ற பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமையானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள்? உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய்சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த பா.ஜ.க. தலைவர் மது ஷிவாசுக்கு ஒரு மாதம் கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பில் எங்கோ தவறு உள்ளது. இப்படியெல்லாம் பேசியதால் நீதிமன்றத்தின் கோபத்துக்கு நான் ஆளாகி இருக்கிறேன்.

குஜராத்துக்குப் பிறகு, ஒரிசாவும் கர்நாடகாவும் வந்துள்ளன. ஒரிசாவில் பயங்கரம் இன்னும் தொடர்கிறது. 35000 பேருக்கு மேல் நிவாரண முகாமில் உள்ளனர். ஜூலை மாதத்திலிருந்து இதுவரை நான் மூன்று முறை அங்கு சென்று வந்துவிட்டேன்.

குஜராத்தில் இன்னும் கும்பல் கும்பலாக கல்லறைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நேசத்துக்கு உரியவர்களின் உடல்களை கேட்டுப் பெறுவதற்கும் முடியாமல் இருக்கின்றனர். குஜராத்தில் படுகொலைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கேமராக்கள் அங்கிருந்து நகர்ந்துவிட்டன. சிறுபான்மை சமூகத்தின் செல்வாக்குள்ளவர்கள் சமரசம் செய்து கொண்டுவிட்டனர். இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன். சாட்சிகளும், பாதிக்கப்படடவர்களும்தான் இப்போது களத்தில் தனியாக உள்ளனர். நாம் இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு மேடையைத் தயார் செய்தோமெனில், காயங்களை மறுபடியும் திறப்பதாக நாம் குற்றம் சுமத்தப்படுகிறோம். நான் கேட்கிறேன், ரத்தத்தை ஓடவிடாமல் தடுத்துவிட்டால், எந்தக் காயமாவது குணமடையுமா?

ஒரிசா பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசே முன் நின்று நடத்திய பயங்கரவாதம்தான் குஜராத்தில் அரங்கேறியது. கிறிஸ்தவர்கள் மீதும், தலித்துகள் மீதும் நடத்தப்பட்டது பயங்கரவாதச் செயல்பாடுகள். பெண் குழந்தைகளைக் கருவில் கொல்வதும் பயங்கரவாதச் செயல்பாடுதான். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறோம் இன்று. ஆனால் நாம் எங்கே தொடங்கி எங்கே முடிக்கிறோம்?

கடந்த 15 ஆண்டுகளில் நான்கு முக்கிய சீர்திருத்தங்கள் வேண்டுமென்று நாம் கேட்டு கொண்டிருக்கிறோம். ஒன்று, காவல்துறை சீர்திருத்தம். அது தொடர்பான சட்டதிட்டங்கள் எல்லாம் நமது காலனிய முதலாளியாக இருந்த பிரிட்டிஷாரால் வகுக்கப்பட்டவை. அவை நமது அடிமை மனப்பான்மை கொண்ட மக்கள் தொகையை அடக்கியாள்வதற்காக, நம் அரசியல் சாசனம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. நமது காவல் துறையை நாம் அரசியல் சாசன ரீதியாக அமைக்கவோ, ஜனநாயகப்படுத்தவோ இல்லை. எனவே காவல் துறையினர் மக்களுக்கு சேவை செய்யவில்லை. மாறாக, மக்களை அடக்கியாளவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த உறவு முறை மாற வேண்டும். சட்டம் மாற வேண்டும்.

ஓய்வு பெற்ற நமது மூத்த காவல்துறை அதிகாரிகளும், 1975லிருந்து 1999 வரையிலான நேஷனல் போலீஸ் கமிஷன் அறிக்கைகளும் காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பலமாக சிபாரிசு செய்துள்ளன. ஆனால் நமது அரசியல் கட்சிகள், அது யாராக இருந்தாலும், காவல்துறை மீது உள்ள கட்டுப்பாட்டை இழக்க விரும்பவில்லை.

காவல்துறை சீர்திருத்தத்துக்கான கோரிக்கையை மக்கள் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். இது ஒரு அறிவுஜீவித்தனமான கோரிக்கை அல்ல. இது நமது பாதுகாப்பு தொடர்பான விஷயம். சார்பு எதுவும் இல்லாமல் காவல்துறை நடக்க வேண்டும் என்பதற்காக. சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக. காவல்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதற்காக. எனவே பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக்கையை நிச்சயம் முன்வைத்துப் போராட வேண்டும்.

இரண்டாவது, நீதித்துறைச் சீர்திருத்தம். நீதித்துறை கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று நாம் இந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும். நிதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். இந்திய நாட்டின் குடிமகன் எனற நிலையில், ஒருமுறை ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதென்றால், நீதிபதியின் நோக்கத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லையெனில், அந்த தீர்ப்பை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கு இருக்க வேண்டும்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com