Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2009

தலையங்கம்
மற்றொரு 'பொடா'

மீண்டும் 'பொடா'வைக் கொண்டு வரமாட்டோம் என்று பாசாங்கு காட்டி வந்த மத்திய காங்கிரஸ் ஆட்சி இப்போது தனது பார்ப்பன சுயரூபத்தைக் காட்டிவிட்டது. பார்ப்பன சக்திகளுடனும், பா.ஜ.க.வுடனும் கைகோர்த்துக் கொண்டு, 'பொடா'வை புதிய வடிவில் கொண்டு வந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் சில மன வியாதி கொண்ட மனிதர்கள் இலக்கு இல்லாத பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் போதெல்லாம் அரசுகள் அதையே வாய்ப்பாக்கி, அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வருவதும், அந்த சட்டம் அப்பாவிகளைப் பழிவாங்குவதற்கே பயன் படுத்தப்படுவதும் இந்திய தேசிய பார்ப்பன ஆட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்று ஏற்கனவே ஒரு கறுப்புச் சட்டம் தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த முகத்தை மேலும் விகாரமாக்கி, மேலும் பல கொடூரமான சட்டப் பிரிவுகளை நுழைத்து, சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்து, கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தினார்கள். அடுத்த நாளே எவ்வித விவாதமும் இன்றி சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதன்படி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான கெடு 90 நாட்களிலிருந்து 180 நாட்கள் வரை உயர்த்தப்பட் டுள்ளது. அதுவரை பிணையில் வர முடியாது; மற்றொரு பிரிவின்படி கைது செய்யப்பட்டவர். விசாரணை தொடங்கிய நிலையிலும்கூட பிணையில் வெளிவர முடியாது குற்றப் பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டவர் குற்றமிழைத்துள்ளார் என்பதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதினால், பிணை வழங்கலை மறுக்கும் அதிகாரம்நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதி என்பதற்கான விளக்கங்கள் ஏதுமில்லாத நிலையில், இச்சட்டம் மீண்டும் முறைகேடாகவே பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. காவல்நிலையத்தில் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஏற்கத் தேவையில்லை என்ற ஒன்றில்தான் - பொடாவிலிருந்து இந்த சட்டம் மாறுபடுகிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை சிறப்பு புலனாய்வுக் குழு எனும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தும் இந்த விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

எனவே மாநிலங்களுக்கான உரிமையில் இச்சட்டம் தலையீடு செய்த நிலையிலும் மாநில சுயாட்சி பேசிய தி.மு.க. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை மட்டும் பாதுகாப்பாக முன் வைத்துவிட்டு, சட்டத்தை ஆதரித்துவிட்டது. பொடா சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நீண்டகாலமாக வற்புறுத்தி வந்த பா.ஜ.க. மகிழ்ச்சியோடு சட்டத்தை ஆதரித்துள்ளது. அப்பாவி முஸ்லீம்களை பழிவாங்குவதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது, பா.ஜ.க. விட்டு விடுமா? தமிழ்நாட்டில் தப்பித் தவறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழின உணர்வாளர்களை நசுக்குவதற்கு இந்தச் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வார் என்பதில் சந்தேகமே இல்லை. ம.தி.மு.க.வால் ஆதரிக்கப்பட்ட பொடாதான் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மீதே பாய்ந்தது என்பது கடந்தகால வரலாறு. இத்தகைய கடுமையான சட்டங்களால் தீவிரவாதத்தை நிறுத்தவே முடியாது என்பதுதான் கடந்த காலங்களில் கிடைத்த பாடமாகும்.

துப்பாக்கியை கையில் எடுத்துவிட்ட தீவிரவாதிகள் மரணத்துக்கே அஞ்சாத நிலையில், கடுமையான சட்டங்களுக்கா அஞ்சுவார்கள்? ஈராக்கில் எவரையும் கைது செய்து, காலவரையறையின்றி சிறையிலடைக்கவும், சுட்டுத் தள்ளவும், ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தும்கூட, அங்கே தீவிரவாதிகள் செயல்பாடுகளை தடுக்க முடிந்ததா? தீவிரவாதிகளைத் தடுக்க முடியாத இந்த சட்டங்கள், அப்பாவிகளுக்கு எதிராகவே முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்ட பினாயக்சென் என்ற மருத்துவர், சட்டீஸ்கர் மாநிலத்தில் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலுள்ள மாவோயிஸ்டுகள் தந்த கடிதத்தை வெளியில் உள்ள தோழர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட "பயங்கரவாத" குற்றச்சாட்டு. அந்தக் கடிதத்தில் தேசவிரோத கருத்துகூட ஏதும் இல்லை.

நீண்டகாலம் விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்க இந்தச் சட்டங்கள் பயன்பட்டனவே தவிர, குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படுவதே இல்லை. இத்தகைய 'தடா, பொடா' சட்டங்களின் கீழ் 98 சதவீத குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதே இல்லை. குஜராத் முதல்வர் மோடி மதவெறிப் பார்வையோடு சிறுபான்மையினரை பொடாவின் கீழ் ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்தார். அவர்கள் உச்சநீதிமன்றத்தால் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டு விட்டனர். தற்போது வந்துள்ள சட்டப்படி, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டதாக சந்தேகித்தாலேகூட ஒருவரைக் கைது செய்துவிட முடியும். போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் காலமும் 15 நாளிலிருந்து 30 நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை என்றாலே அது சித்ரவதைதான். ஒருவரை கட்டாயப்படுத்தி அவருக்கே எதிரான சாட்சியாக்கக்கூடாது என்று இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவுகள் இருந்தாலும்கூட, இந்த சட்டத்துக்கு எதிராகவே காவல்துறை விசாரணைகள் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படுகின்றன. சித்திரவதைகள் செய்யக் கூடாது என்று அய்.நா.வின் சர்வதேச உடன்பாடுகள் வலியுறுத்துகின்றன. இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுக்கும் வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது என்பதே உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவுதான்.

இந்தியாவில் கிரிமினல் குற்றங்களில் கைது செய்யப்படுவோர் "சூத்திரர்களாகவும்", "தீண்டாதவர்களாகவும்" இருப்பதால் இந்திய பார்ப்பன ஆட்சி, மனித உரிமைகள் பற்றி கவலைப்படுவதே இல்லை.ஆக, மீண்டும் மனித உரிமைகளுக்கான ஒரு கொடும் சட்டம் அரசிடம் வந்துவிட்டது. இதனால் தீவிரவாதம் குறைந்துவிடாது. தீவிரவாதத்துக்கான பிரச்சினைகளை அரசியல் ரீதியாக தீர்ப்பது ஒன்றே தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமே தவிர, அடக்குமுறை சட்டங்கள் அல்ல!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com