Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2009

கொள்கையற்ற கட்டுப்பாட்டை சாடுகிறார் பெரியார்


2002 ஆம் ஆண்டு 'விடுதலை' ஞாயிறு மலரில் வாசகர் ஒருவர் கி.வீரமணியிடம் ஒரு கேள்வி கேட்டார். தோழர் என்று அழைப்பது பற்றிய கேள்வி இது. அந்தக் கேள்வியும், கி.வீரமணி தந்த பதிலும் இது தான்.

கேள்வி : கம்யூனிஸ்ட் கட்சிகளில் தோழர் சங்கரய்யா என அழைக்கும் நிலை உள்ளது. அதுபோல நமது கழகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுமா?

வீரமணி பதில் : அவரவர்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. பிறரைப் பார்த்து காப்பியடிப்பது நமது வேலை அல்ல.

- இப்படி ஒரு பதிலை ஒரு பெரியாரியல்வாதி கூறுவது பெரியாரியலுக்கு எதிரானதேயாகும். 1932 ஆம் ஆண்டிலேயே 'தோழர்' என்றே அழைக்க வேண்டும் என 'குடிஅரசு' பத்திரிகையில் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டவர் பெரியார். அந்த அறிக்கை இதுதான்.

"இயக்கத் தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால், பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக, "தோழர்" என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, நீஜத் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். 'குடிஅரசி'லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்".

- ஈ.வெ.ரா. (குடிஅரசு 13.11.1932)

- இப்படி தோழர் என்றே அழையுங்கள் என்று பெரியார் கூறியதை, இளம் தலைமுறையினரிடம் மறைப்பது பெரியாரியல் புரட்டு அல்லவா?


1932 இல் பெரியார் வலியுறுத்திய ஒரு கருத்து, ஏதோ கழகத்துக்கு தொடர்பே இல்லாதது போல் அது பிறருக்குரியது என்றும், அதை காப்பியடிக்க வேண்டாம் என்றும், அப்படி காப்பியடிப்பது நமது வேலை அல்ல என்றும் எழுதுவதற்குப் பெயர் என்ன? இப்படி கேள்வி கேட்ட இளைஞர்கள் எல்லாம் 'குடிஅரசை' பார்க்கவா போகிறார்கள் என்ற நம்பிக்கை தானே? அப்படி இளைஞர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதால்தான் காலவரிசைப்படி முழுமையான பெரியார் தொகுப்பு வெளியிடுவதை, இவர்கள் தடுத்திட துடிக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறதா?

இப்படி பெரியாரியலுக்கு எதிராக வீரமணி எதை வேண்டுமானாலும் கூறினாலும் அதை கேள்விக்கு உட்படுத்தும் நிலையே அந்த அமைப்பில் இல்லை. திராவிடர் கழகத்தில் வீரமணி - கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதைத் தட்டிக் கேட்டால், உடனே துரோகிகள் என்ற முத்திரையைக் குத்திவிடுவது அவரது வழக்கம். பார்ப்பன ஜெயலலிதாவை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதை 1996 இல் திராவிடர் கழகத்துக்குள் இருந்த இளைஞர்கள் கேள்விக்கு உட்படுத்திய போது வழக்கம்போல 'துரோகிகள்' பட்டத்தையே கி.வீரமணி சூட்டினார். ஒரு இயக்கம் கொள்கையை விட்டே விலகிப் போகும்போது, கட்டுப்பாடு பேசுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும் என்ற கேள்வியைத்தான் அன்று இளைஞர்கள் முன் வைத்தார்கள். கொள்கையா, கட்டுப்பாடா என்ற கேள்வி எழும்போது, கட்டுப்பாடு என்பதைவிட கொள்கைதான் முன்னுரிமை பெற வேண்டும் என்பதே சரியான பெரியாரியல் பார்வை.

பெரியார் காங்கிரசில் இணைந்து அதன் கொள்கைகளை நம்பி கடுமையாக உழைத்த தலைவர். கதர் மூட்டையைத் தெருதெருவாக சுமந்து விற்றார். நீதிமன்ற புறக்கணிப்புக்காக தனக்கு வரவேண்டிய பல ஆயிரம் ரூபாய்க்கான பத்திரங்களையும் உதறித் தள்ளினார். அதே பெரியார் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஏற்க மறுத்த போது காங்கிரசு மாநாட்டிலே 'கலக'க் குரலை உயர்த்தினார். கி.வீரமணி வாதப்படி பார்த்தால் பெரியார் கூட காங்கிரஸ் வலியுறுத்திய ஒற்றுமையை கட்டுப்பாட்டை மீறியவர்தான். அதற்காக பெரியாருக்கு துரோகி பட்டம் தந்துவிட முடியுமா? அது பெரியாரியல் அணுகுமுறையா என்று கேட்கிறோம். திராவிடர் கழகத்தில் வீரமணியால் வெளி யேற்றப்பட்டவர்கள் துரோகிகள் பட்டம் தரப்பட்டவர்கள்கூட வீரமணி அணுகுமுறையை கேள்வி கேட்டவர்களாகவே இருப்பார்களேதவிர, பெரியார் கொள்கைக்கு எதிராக செயல்பட்டவர்களாக இருப்பதில்லை.

பெரியார் கொள்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே கூட வீரமணி கூடாரத்தில் இருக்கலாம். ஒரு தடையும் இருக்காது. வீரமணி புகழ் பாடினால் யாரும் ஆதிக்கசாதி உணர்வாளராக இருக்கலாம். தலித் வெறுப்புள்ளவராக இருக்கலாம். அவையெல்லாம் பிரச்சினை அல்ல. ஈரோட்டில் தீண்டாமை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி போராடியவர் தோழர் இரத்தினசாமி. அவர் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர். இப்போது திராவிடர் கழகத் தலைமை அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டது. காரணம் - அந்த சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தில் பெரியார் திராவிடர் கழகமும் இடம் பெற்றுள்ளது என்பதால் தான், தமிழ்நாட்டில் இன்னும் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடி வருகிறது. தலித் மக்களை அனுமதிக்காத கோயில்கள், கோயில் நுழைவுப் போராட்டங்களும்,இரட்டை தம்ளர் உள்ள தேனீர் கடைகளை எதிர்க்கும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

வீரமணியோ, அவரது 'விடுதலை'யோ இவைகளை எதிர்ப்பதிலோ, போராடுவதிலோ முனைப்புக் காட்டுவது இல்லை. அந்தக் கழகத்துக்குள்ளே ஓரளவு கொள்கை உணர்வோடு செயல்படும் இரத்தினசாமிகளும் வெளியேற்றப்படுகிறார்கள். கேட்டால் 'கட்டுப்பாடு', 'ஒற்றுமை குலைவு' என்ற 'தாரக மந்திரத்தை' வீசி விடுவார்கள்.

கொள்கையற்ற ஒற்றுமை கட்டுப்பாடு பற்றி பெரியார் என்ன கூறினார்? இதோ அவரது கருத்து:

"ஒற்றுமையை உச்தேசித்து, கொள்கைகளை விட்டுக் கொடுத்தன் பலன்தான், மகாத்மா முக்காடிட்டு சங்கராச்சாரி போல் மூலையில் உட்கார நேர்ந்ததும் அவரது நடவடிக்கைகள் இப்போது ஒரு மடாதிபதி சம்பிரதாயம் போல் ஆனதும் மடங்களில் பலர் ஆஷாடபூதித்தனம் செய்து பெருமை அடைவது போல் காந்தி மடத்திலும் பல சாஸ்திரிகள் போய் அமர்ந்து முகஸ்துதி செய்து பெருமை பெற்று வாழ்வதுமான காரியங்கள் நடந்தது. காந்தி கொள்கைக்கு இருந்த மதிப்புகள் அடியோடு போய் காந்தி மடம் ஏற்பட்டதற்குக் காரணமே கொள்கையை விட்டுக் கொடுத்து ஒற்றுமையை நாடிய பைத்தியக்காரத்தனம்தான். மகான்களின் செயலில் பைத்தியக்காரத்தனமும் ஒன்றாதலால் மகாத்மா காந்திக்கு அது தகும். ஒரு சமயம் அதை மாற்றிக் கொள்ள அவருக்கு நம்பிக்கைப் பிறந்தாலும் பிறக்கும். நமக்கு அது தகாது. நமக்கு அந்த நம்பிக்கை இல்லை. கொள்கையை விட்டு இராஜியான ஒரு ஸ்தாபனமும் ஒரு மனிதனும் ஒரு நாடும் உருப்படியாகாது என்பது என் புத்திக்கு எட்டிய உறுதியான முடிவு."

பெரியார் - 'குடிஅரசு' 12.6.1927


- பெரியார் இவ்வளவு தெளிவாகக் கூறிய கருத்துகள் வீரமணியால், இளைய சமுதாயத்திடம் விளக்கப்படுவது இல்லை. காரணம், இந்தக் கருத்துகள் நூலாக அச்சேற்றப்படாததுதான். இதுவே - இவர்கள் பெரியாரியலைப் புரட்டுவதற்கும் திருப்புவதற்கும் வாய்ப்பாகி விடுகிறது.

கொள்கையற்ற ஒற்றுமை, கட்டுப்பாடு பற்றி பெரியார் கூறும் இந்தக் கருத்துக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com