Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2009

ஈழத் தமிழர் பிரச்சினையில் 8 ஆண்டுகள் 'மவுனப் புரட்சி'


ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு இழைத்த துரோகம் பற்றி தமிழக முதல்வர் வாய் திறக்கவில்லை. அவருக்கு திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவைப்படுவதால், வாய் திறக்க தயாராக இல்லை. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் இராமதாசுகூட, "மத்திய அரசு எங்களை அவமானப்படுத்திவிட்டது; இழிவுபடுத்திவிட்டது" என்று பேட்டி அளித்துள்ளார். ஆனால், பெரியார் இயக்கம் ஒன்றை வழி நடத்தும் - தலைவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? உண்மைகளை எவருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்திக் கண்டனம் தெரிவிப்பதுதானே பெரியார் பின்பற்றிய அணுகுமுறை? ஆனால், தனக்கு 'தமிழர் தலைவர்' பட்டம் சூட்டிக் கொண்ட வீரமணி, 'விடுதலை'யில் வெளியிட்ட அறிக்கை (4.1.2009) எப்படி இருக்கிறது? அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் மொத்தம் 305. இதில் ஒரு வார்த்தைகூட இந்திய அரசு பற்றியோ, அதன் துரோகம் பற்றியோ கிடையாது. இது பற்றி கலைஞர் வாய்திறக்காத காரணத்தால் வீரமணியும் வாயை மூடிக் கொண்டுவிட்டார் போலும்.

"ஓ தமிழ்ச்சாதியே! உன் நிலைக்கு என்றுதான் விடுதலை? நியாயம் பேசும் உலகமே? நீ ஏன் உண்மையானாய்?"

என்று சர்வதேசத்தையே கேள்வி கேட்கிறாரே தவிர, இந்தியாவின் துரோகத்தைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட கிடையாது. அது மட்டுமல்ல, புலிகளை ஆதரிப்பதாக, தம் மீது குற்றச்சாட்டுகள் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, "பத்துத் தடவை பாடை வராது என செத்து மடிய செரு களம் கண்ட போராளிகளுக்காக நாம் வருந்தவில்லை. சாகத் தேவை இல்லாத அப்பாவி மக்கள், பிஞ்சுகள், என்னருமை தமிழ் இனம் இப்படி நாளும் அழிய வேண்டுமா?" என்று எழுதி, தான் போராளிகளுக்காக குரல் கொடுக்கவில்லை; அப்பாவி மக்களுக்காகவே குரல் கொடுக்கிறேன் என்று "வீர"மணி பதுங்கிக் கொள்கிறார்.

1971 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வர இருந்த நேரத்தில்தான், சேலத்தில் பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். அப்போது நடந்த ஊர்வலத்தில் ராமன் படத்தை செருப்பாலடித்த தற்காக நாடு முழுதும் பார்ப்பனர்களும், காங்கிரசாரும் கூக்குரல் எழுப்பி, அதையே தி.மு.க.வுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரமாக மாற்றினார்கள். தி.மு.க.வை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்த பெரியார், அந்த நிலையில் என்ன கூறினார், தெரியுமா? "ஆமாம்; ராமனை செருப்பால் தான் அடித்தேன். அடித்ததில் என்ன தவறு? இன்னும் சொல்லப் போனால், எவன் எவன் அப்படி அடிக்கவில்லையோ, அவன் மானமற்றவன்" என்று கூறினார். அதுதான் பெரியாரின் அணுகுமுறை. ஆனால், பெரியாரின் வாரிசாக அறிவித்துக் கொண்டுள்ள வீரமணியோ பெரியார் இயக்கத்தின் அடையாளங்களையே குலைத்து வருகிறார்.கி.வீரமணி ஆசிரியராக உள்ள 'உண்மை' ஏடு, அவரது பிறந்தநாள் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. (டிச.1-15, 2008) அதில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன், 1983 ஆம் ஆண்டுகளிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஈழத்தமிழர் பிரச்சினைக்காக திராவிடர் கழகம் நடத்திய பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை எல்லாம் தொகுத்துத் தந்திருக்கிறார்.

"1983 முதல் இந்நாள் வரை ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தொய்வின்றி தொடர்ச்சியாக ஒரே நிலையில் நின்று குரல் கொடுத்தும், போராடியும் வரும் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு வரலாற்றில் என்றும் நின்று பேசக் கூடியதாகும்" என்ற "வரலாற்றுக் குறிப்போடு" அத்தொகுப்பு முடிகிறது. அத்தொகுப்பை உற்றுக் கவனித்தால், ஒரு உண்மை புரியும். 25.12.1998 - அன்று பெரியார் திடலில் ராஜீவ் கொலை வழக்குத் தீர்ப்புக் குறித்து ஒரு கூட்டம் நடந்தததற்குப் பிறகு அடுத்த ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சியை 7.12.2006 இல் தான் திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது. இடைப்பட்ட 8 ஆண்டுகளில் திராவிடர் கழகம் ஒரு துரும்பைக்கூட ஈழத் தமிழர் பிரச்சினைக்காக அசைக்கவில்லை என்று அவர்களே பதிவு செய்திருக்கிறார்கள். என்ன காரணம்? இந்த 8 ஆண்டுகாலத்தில் ஈழத் தமிழர் பிரச் சினையே முடிவுக்கு வந்து விட்டதா? தொய்வின்றி - தொடர்ச்சியாகப் போராடுபவர்கள் ஏன் தொடர்ச்சியை விட்டார்கள்? ஏன் தோய்ந்து போனார்கள்?இந்த இடைப்பட்ட காலத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தன.

ஒன்று - ராஜீவ் வழக்கில் 'தடா' சட்டத்தின் முறையற்ற விசாரணையின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டோருக்கு தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி நாடு முழுதும் நடந்த பிரச்சார இயக்கம். இரண்டாவது - 2001 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த ஜெயலலிதாவின் ஆட்சி! 1996இல் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறி பெரியார் திராவிடர் கழகத்தைத் தொடங்கிய லட்சியத் துடிப்பு மிக்க இளைஞர்கள் தூக்குத் தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை கையில் எடுத்தார்கள். வழக்கில் உள்ள 26 தமிழர்களுக்காக மக்களிடம் நிதி திரட்டியது பெரியார் திராவிடர் கழகம். தூக்குத் தண்டனை எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியது.

பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, '26 தமிழர்கள் உயிர்க்காப்பு வழக்கு நிதிக்குழு' பழ. நெடுமாறன் தலைமையில் அமைக்கப்பட்டு, அதில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரமாக தனது பங்களிப்பை வழங்கியது. நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய இப்பிரச்சினையில் வழக்கம் போல் வீரமணியின் திராவிடர் கழகம் ஒதுங்கிக் கொண்டுவிட்டது. தூக்குத் தண்டனை எதிர்ப்பு இயக்கத்துக்கு ஒரு ரூபாய்கூட நிதி தராத வீரமணி, அதே காலகட்டத்தில் நடந்த 'கார்கில்' யுத்தத்துக்கு தேச பக்தியோடு' ஒரு லட்சம் நிதியை அறக்கட்டளை சார்பில் வழங்கினார். தூக்கு தண்டனை எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம், தமிழகம் தழுவிய அளவில் இரண்டு முறை நடந்தது. தி.க. புறக்கணித்தது.

நாமக்கல்லில் நடந்த தூக்குத் தண்டனை எதிர்ப்பு மாநாட்டில் பேசுவதற்கு தோழர் கொளத்தூர் மணியை அழைத்தார்கள். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக பெரும் பங்களிப்பை வழங்கி, கடுமையான விலை தந்து சிறைச்சாலைகளில் ஆண்டுக்கணக்கில் இருந்த தோழர் கொளத்தூர் மணி, அப்போது திராவிடர் கழகத்தில்தான் இருந்தார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியிடம், கொளத்தூர் மணி அனுமதி கேட்டார். அப்போது துணைப் பொதுச்செயலாளராக இருந்த கோ.சாமி துரை, பங்கேற்கக் கூடாது என்றார். காரணம் கேட்ட போது, விடுதலை இராசேந்திரனும் அதில் பேசுவதால் பங்கேற்கக் கூடாது என்றார். அவர் வேறு ஒரு இயக்கம்; நான் வேறு ஒரு இயக்கம். அவர் பங்கேற்பதால், நான் பங்கேற்கக் கூடாது என்பது என்ன நியாயம் என்று, தோழர் கொளத்தூர் மணி கேட்டார். பதில் இல்லை. ஆனாலும் கழகத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு தோழர் கொளத்தூர் மணி, அந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றாலும், தனது எதிர்ப்பை தி.க. பொதுச் செயலாளர் கி.வீரமணிக்கு கடிதமாக எழுதினார்.

"கடைவீதிக்குப் போன மனைவி, எங்கே கண்டவன் பின் ஓடிவிடுவாளோ என்று சந்தேகிக்கும் கணவனின் மனநிலையைப் போலவே உங்களின் அணுகுமுறை இருக்கிறது"

என்று அந்தக் கடிதத்தில் தனது அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்தார். கொளத்தூர் மணி கழகத்திலிருந்து பிறகு ஓரம் கட்டப்பட்டதற்கு இவை எல்லாம் காரணமாயின. 2001 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி, சமூகநீதி காத்த வீராங்கனையாக்கிய கி.வீரமணி, விடுதலைப்புலிகளின் கடும் பகைவர் ஜெயலலிதா என்ற காரணத்தால் அந்த 5 ஆண்டுகாலத்தில் எந்த சிறு நிகழ்வையும் ஈழத்தமிழர்களுக்கு நடத்தவில்லை; துரும்பையும் அசைக்கவில்லை. இதை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.ஜெயலலிதாவின் புகழ் பாடிக் கொண்டு - அவருக்கு உடன்பாடில்லை என்றால் தனக்கும் உடன்பாடில்லை என்று - ஈழத் தமிழர் பிரச்சினை பக்கம் திரும்பவே மறுத்தவர்தான், கி.வீரமணி! 2001-2006 காலகட்டத்தில் இவர்கள் திரும்பிப் பார்க்காதது ஈழத் தமிழர் பிரச்சினை மட்டும்தானா?

எத்தனையோ பெரியாரிய கொள்கைகள் காவு கொடுக்கப் பட்டன; அந்தப் பட்டியல்களின் தொகுப்பும், இத் தொடரில் வரத்தான் போகிறது.

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com