Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2008

பெரியார் போராட்டங்களிலும் பங்கேற்றவர் நடிகவேள் எம்.ஆர்.இராதா:

கொளத்தூர் மணி

29.12.2007 அன்று சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடான, தோழர் ‘மணா’ அவர்கள் எழுதிய “எம்.ஆர்.இராதா காலத்தின் கலைஞன்” என்ற நூல் வெளியீட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று பேசியதாவது:

நடிகவேள் இராதா அவர்களுடைய நூற்றாண்டு விழாவில் அவரைக் குறித்து பல்வேறு இடங்களில் நூற்றாண்டு விழாக்களாக நடத்தி, அதில் அவருடைய சிந்தனைகளை மக்கள் முன்னால் எடுத்துச் சென்றிருக்கிற பல இயக்கங்கள் உண்டு. இந்த ஆண்டில் பல நூல்களும் அவரைப் பற்றி வந்திருக்கின்றன. அதில் குறிப்பாக தஞ்சை சோமசுந்தரம் அவர்கள் எழுதிய ‘பெரியாரின் போர்வாள் எம்.ஆர்.இராதா 100” போன்ற நூல்கள் வந்திருக்கின்றன. இப்படிப் பல நூல்களின் தொடர்ச்சியாக இப்படி ஒரு அரிய நூலை நமக்குத் தந்திருக்கிற மணா அவர்களுக்கு, பதிப்பித்திருக்கிற உயிர்மை பதிப்பகத் தோழர் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை, வணக்கங்களை, பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஒரு பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவன், ஒரு பெரியார் தொண்டன் என்பதால்தான் எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக் கிறது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இராதா அவர்களோ பெரியார் தொண்டராக, இன்னும் சொல்லப் போனால் ‘பெரியார் பைத்தியம்’ என்றுகூட சொல்லலாம்; அப்படி தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர். இந்த நாட்டு சிக்கல்களுக்கு, இந்த நாட்டு நோய்க்கு நல்ல மருத்துவராக வந்த சமுதாய மருத்துவர் பெரியார்.

பெரியாருடைய சிறப்புத் தன்மைகளே இந்த நாட்டின் நோயை சரியாகப் புரிந்து கொண்டவர்; சரியான மருந்தை நமக்கு அளித்தவர் என்பதை ஏற்று, அதை பரப்பவும், செயல்படுத்தவும் பல்வேறு முறைகளில் பல்வேறு தலைவர்கள் போராடி இருக்கிறார்கள். வாழ்ந்திருக்கிறார்கள். தங்களுக்குள்ள ஆற்றலை எல்லாம் இந்த இயக்கத்தைப் பரப்புவதற்கு செயல்பட்டிருக்கிறார்கள். தன்னுடைய சொல்லாற்றலை அழகிரி போன்ற பெரும் பேச்சாளர்கள், தன்னுடைய எழுத்தாற்றலை குத்தூசி குருசாமி போன்றவர்கள் தன்னுடைய மொழியாற்றலை பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் இப்படித் தங்களுக்குள்ள ஆற்றல்களையெல்லாம் இதற்காக பயன்படுத்தியதைப்போல, தனக்குள்ள நடிப்பாற்றலை, நாடகத் திறனை இந்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கே அவர் முழுக்க பயன்படுத்தி இருக்கிறார் என்பது தான் நாங்கள், பெரியார் இயக்கங்கள் அவருக்கு நூற்றாண்டு விழா எடுப்பதற்கான காரணம்.

நாங்கள் புதுவையில் தொடங்கி பல்வேறு இடங்களில் அவருக்கு நூற்றாண்டு விழாவும், அடுத்த வாரம்கூட சென்னையில் அவர் பெயரால் ஏற்படுத்தி இருக்கும் நிழற்குடை திறப்பும், நூற்றாண்டு விழாவும் எடுக்க இருக்கிறோம், நாத்திகர் விழாவோடு சேர்த்து. அந்த அடிப்படையில்தான் அவரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் தன் வாழ்க்கையைத் தொடங்கி பெரியாரைத் தெரிந்த பின்னால், அறிந்து கொண்ட பின்னால் தன்னுடைய நாடகக் குழுவின் அமைப்பாளராக இருந்த ‘யதார்த்தம் பொன்னுசாமி’ அவர்கள் அவர் படித்த பச்சை அட்டைக் ‘குடிஅரசை’ப் பார்த்து, அவர் அழைத்துச் சென்று பெரியாரை அறிமுகப்படுத்திய பின்னால் முற்றும் முழுதாகவே ஒரு பெரியார் தொண்டராகவே தன்னை மாற்றிக் கொண்டு, தன்னுடைய நாடகக் குழுவிற்குக்கூட திராவிட புது மலர்ச்சி, திராவிட மறுமலர்ச்சி நாடக சபாவாக பெயரை மாற்றிக் கொண்டு அவர் எடுத்த நாடகங்களிலெல்லாம் பெரியாரின் புரட்சிக் கருத்துகளை, சமுதாய கருத்துகளை மக்களிடம் கொண்டு போய் எளிமையாக சேர்க்கிற தனக்குள்ள நடிப்பாற்றல் மட்டுமல்ல, வேளை அறிந்து எடுத்துச் சொல்லுகின்ற அந்த ஆற்றல், அவ்வப்போது திடீரென்று சொல்லக்கூடிய அவருடைய தனி ஆற்றல் தான் பெரிதும் அவரை மக்கள் முன்னால் புகழுர நிறுத்தி வைத்தது.

அதில் அவர் எடுத்த நாடகங்களெல்லாம் தொடக்கத்தில் ‘இழந்த காதல்’ அல்லது ‘விமலா’ என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால், பெரியார் இயக்கத்தோடு தொடர்பு வந்த பின்னால், அவர் நடித்த நாடகங்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் எழுதிய நாடகங்கள் தான். ‘போர் வாள்’ என்ற சி.பி. சிற்றரசு அவர்களுடைய நாடகத்தை முதல் நாடகமாக இந்த இயக்கத்தின் சார்பாக அவர் நடத்தி, அது புகழ் பெற்ற பின்னால், அடுத்து கலைஞர் அவர்கள் எழுதிய ‘தூக்கு மேடை’, அதற்குப் பின்னால் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய ‘இராமாயண நாடகம்’, அதற்கடுத்து குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய ‘தசாவதாரம்’ இப்படித்தான் அந்த நாடகங்களை அமைத்துக் கொண்டார்.

அதை நாடகத்தை ஒரு போராட்டமாக, நாடகம் ஒரு போராட்டத்தை விளக்க, அதை நடத்துவதும் ஒரு போராட்டமாக அவருக்கு இருந்திருக்கிறது. ஒவ்வொரு நாடகத்திலும் அவர் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். இராமாயண நாடகம் வந்த பின்னால் அதற்கு தடை போட்டு, அதற்கு பின்னால் அதை நடத்தி, நடத்திக் கொண்டிருக்கிறபோது நாடகத் தடைச் சட்டம் என்று புதிதாகக் கொண்டு வந்த சட்டத்திற்குப் பின்னாலும், அவர் சோர்ந்து போய்விடவில்லை. அதற்குப் பிறகு குத்தூசி குருசாமியைப் பார்த்துக் கேட்டாராம். இந்த ஒரு அவதாரம், இராம அவதாரத்தை காட்டுவதற்கே இவ்வளவு பரபரப்பாகி விட்டதே. பத்து அவதாரத்தைக் காட்டினால் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும். எனவே ‘தசாவதாரம்’ எழுதுங்கள். அதைப்பூரா மக்களுக்குக் கொண்டு போய் காட்ட வேண்டும் என்று சொன்னாராம். ஏன் என்றால் அவர் சோர்ந்து போய்விடவில்லை. அப்புறம் தான் அவருக்கு வேகம் வருகிறது. அப்படிப்பட்ட அளவில் நாடகங்களை நடத்தி வந்த அவர் அதோடு மட்டும் நிற்கவில்லை.

பெரியார் நடத்திய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவராக இருந்திருக்கிறார். ‘பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்’, ‘பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்’, ‘வடநாட்டு ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்’ எல்லாவற்றிலும் தான் மட்டும் அல்ல, தன்னுடைய நாடகக் குழுவினரையும் அதில் சேர்த்து அவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார். இன்னும் பெரியார் நடத்திய மிகப் பெரிய போராட்டமாக இன்றளவும் எண்ணிப் பார்க்கவும் நமக்கு வியப்பாக இருக்கிற ‘சட்ட எரிப்புப் போராட்டம்’. சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரிக்க வேண்டும் என்று பெரியார் 1957 நவம்பர் 3 ஆம் நாளில் அறிவிக்கிறார். அரசியல் சட்டத்தை எரித்தால் 3 ஆண்டுகள் கடும் தண்டனை என்று சட்டம் இயற்றப்படுகிறது எட்டே நாட்களில். ஆனாலும் நவம்பர் 26 ஆம் நாள் எரித்தார்.

நவம்பர் 26 இல் சட்ட தினத்தில், எந்த நாளில் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அதே நாளில் எரிக்கிறார். அந்த எரிப்புப் போராட்டத்தின் பின்னால், அப்போது சட்ட எரிப்பில் சிறைக்குச் சென்ற இரண்டு தோழர்கள் இறக்கிறார்கள். அவர்கள் உடலைப் பெற்று இறுதி ஊர்வலத்தை அன்னை மணியம்மையார் அவர்கள் முன்னின்று நடத்துகிறார்கள். அந்தப் போராட்டத்தில் முன்னணி தலைவர்கள் எல்லோரும் சிறையில் இருக்கிறார்கள். அந்தப் போராட்டம், அது குறித்த விளக்கக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்தபோது மணியம்மையார் அவர்களோடு திருவாரூர் தங்கராசு, மதிப்பிற்குரிய வீரமணி, இராதா ஆகியோர் எல்லா ஊரிலும் பொதுக் கூட்டத்தில் பேசி இருக்கிறார்கள். போராட்டம் குறித்த செய்தியை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, புது சட்டம் குறித்து அவர் அந்த சமயத்தில் ஒரு வழக்குப் போடுகிறார். அரசியல் சட்டத்தை எரிப்பது பற்றி சட்டம் போட வேண்டுமென்று சொன்னால் முதலாவதாக அரசியல் சட்டம் மத்திய அரசு தொடர்பானது, அவர்களல்லவா அந்த சட்டத்தை இயற்ற வேண்டும். இரண்டாவது, எதிர்ப்பைக் காட்டுவது நோக்கமே தவிர அவமதிப்பது நோக்கமல்லவே. மூன்றாவதாக, இந்த சட்டத்திற்கு இன்னும் குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை என்று அந்த கூட்டத்தில் இவர் பேசுகிறார். இந்த மூன்று செய்திகளை அழுத்தமாக எடுத்து வைக்கிறார். அதையே காட்டி வழக்கு தொடுக்கிறார். ஆக, பெரியாருடைய போராட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, பெரியாரை எப்படி கண்மூடித்தனமாக பின்பற்றினார் என்றால் யாராக இருந்தாலும் சரி, அவர் அதுவரை போற்றிய தலைவராக இருந்தாலும் சரி, பெரியார் ஒதுக்கினால் ஒதுக்கியதுதான்; அவரும் ஒதுக்கி விடுவார்.

அவருடைய நாடகத்தை முதலில் பார்த்து, பெரியார் இயக்கத்திற்கே தொடர்பில்லாத காலத்தில், நாங்கள் நூறு மாநாடுகள் நடத்துவதும் சரி, இராதா அவர்களுடைய ஒரு நாடகமும் சரி என்று புகழ்ந்து பேசிய அண்ணாவை, பெரியாரிடமிருந்து மாறுபட்டுப் போனவுடன், ‘அண்ணாவின் அவசரம்’ என்று ஒரு புத்தகம் உடனே எழுதுகிறார். எழுதியது மட்டுமல்ல அதை அச்சிட்டு அண்ணாவிடமே கொண்டு போய் கொடுக்கிறார். கொடுத்தபோது அண்ணா கேட்டாராம், நீங்க எழுதினதா? என்று. எனக்கு எங்கே எழுத தெரியும். எழுதத் தெரிந்தவனிடம் சொல்லி எழுதச் சொன்னேன். கருத்து என்னுடையது என்று சொல்லி நூலைக் கொடுக்கிறார்.

குத்தூசி குருசாமியிடம் சொல்லி நாடகம் எழுதச் சொன்னவர். குத்தூசி குருசாமி பெரியாரை விட்டுப் போனவுடன், ‘குத்தூசி குருசாமியின் துரோகம்’ என்று எழுதி அவரிடம் கொண்டு போய் கொடுக்கிறார். நீங்கள் எல்லாம் எப்படி பெரியாரை விட்டுப் போகிறீர்கள் என்று கோபப்படுகிறார். ஒவ்வொரு பெரியார் பிறந்த நாள் ஆண்டு மலரிலும் பெரியாரைப் பற்றி எழுதுகிற போதெல்லாம் கோபப்பட்டு எழுதுகிறார். பெரியாரை எதிர்த்தத் தலைவர்களையெல்லாம் கடுமையாக அவர் பாணியில் அவர்களை விமர்சித்தார்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com