Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2007

பெரியாரும் - இராமாயண எரிப்பும்: கலைஞர் பேச்சு சரியானதா?
கொளத்தூர் மணி

ஒரு முறை பெரியார் இராமாயண எரிப்பை தள்ளி வைத்தார் என்பதற்காக - பெரியார் இராமாயண எரிப்புப் போராட்டமே நடத்தவில்லை என்று கூற முடியாது என்று, கலைஞர் பேச்சுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பதில் அளித்தார்.

கடந்த சனவரி 8 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் கலைஞர் “பெரியார் சட்டத்தை மீறி நடப்பேன் என்று சொன்னாலும் கூட அப்படி மீறுகின்ற கட்டம் வரையிலே தான் செல்வார். அந்தக் கட்டம் வருகிற நேரத்தில் அதனால் பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்று போராட்டத்தைக் கைவிடுவார்” என்று பேசியுள்ளார். பெரிய புராணம், கம்பராமாயணத்தைக் கொளுத்த பெரியார் நாள் குறித்தபோது, கடைசி நேரத்தில் சர்.ஆர்.கே சண்முகம் செட்டியார் தந்தி கொடுத்துக் கேட்டுக் கொண்டவுடன் பெரியார் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார் என்றும், கலைஞர் தமது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து, 9.1.2006 அன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய - பெரியார் நினைவு நாள் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார். இதுபற்றி அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் கேட்டதற்காக ஒருமுறை பெரியார் தனது கம்பராமாயணம், பெரிய புராண எரிப்புப் போராட்டத்தை நிறுத்தினார். அதற்காக பெரியார் தான் அறிவித்த போராட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டார் என்று கூற முடியாது. இராமாயணத்தையும், இராமனையும் பெரியார் எரித்திருக்கிறார். 1956 ஆம் ஆண்டு பெரியார் இராமன் பட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டத்துக்கான காரணத்தையும் பெரியார் விளக்கியுள்ளார்.

புத்தரின் 2500 ஆம் ஆண்டு விழாவையொட்டி நான்கு நாள் புத்தர் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னை வானொலி, மூன்று நாள் நிகழ்ச்சியை மட்டும் ஒலிபரப்பி விட்டு, நான்காம் நாள் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சியை மட்டும் - நிகழ்ச்சியைப் பதிவு செய்து ஒலிபரப்பாமல் விட்டுவிட்டது. “வானொலி இதை ஏன் ஒலிபரப்பவில்லை, ஒரு வாரத்துக்குள் ஒலி பரப்ப வேண்டும்; அப்படி ஒலிபரப்பாவிட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ‘இராமன்’ படம் எரிக்கப்பட்டு விஷயம் மக்கள் அறியும்படி செய்யப்படும்” என்று பெரியார் அறிவித்தார்.

1.8.1956 அன்று தமிழ்நாடு முழுதும் பொதுக் கூட்டங்கள் போட்டு ராமன் படத்தை எரிக்குமாறு பெரியார் அறிவித்தார். அன்று சென்னை மீரான் சாயபு தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பெரியாரும், குத்தூசி குருசாமியும் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு 1965-ல் பெரியார் ‘ஸ்ரீராம நவமி’ நாளான 9.4.65 அன்று இராமாயணம் எரிப்புப் போராட்டத்தை தமிழகம் முழுதும் நடத்தினார். அதேபோல் 1966 ஆம் ஆண்டு 30.3.1966 முதல் 5.4.1966 வரை ஒரு வார காலம் இராமாயண ஆபாச கண்டன வாரமாக அறிவித்து - இராமாயணத்தை எரிக்கச் சொன்னார். திருச்சி டவுன் ஆல் மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியாரே இராமாயணத்தை எரித்தார். 1971-ல் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் முடிவில், சேலம் போஸ் மைதானத்தில் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராமன் உருவத்துக்கு பெரியார் தீ மூட்டினார்.

பெரியார் மறைவுக்குப் பிறகு 25.12.1974 அன்று மணியம்மையார் ‘இராவண லீலா’ நடத்தி இராமன், இலட்சுமணன், சீதை உருவங்களுக்கு தீ வைத்தார். அப்போது கலைஞர் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. காவல்துறை அதிகாரிகள் - மணியம்மையாரை சந்தித்துப் போராட்டத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர். மணியம்மையார் உறுதியாக மறுத்துப் போராட்டத்தை நடத்தினார். சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் கேட்டுக் கொண்டதற்காக, ஒரு முறை போராட்டத்தை பெரியார் நிறுத்தினார். ஆனால், அவரது ராமன் எரிப்பு - ராமாயண எரிப்புப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது; இதுதான் வரலாறு.

மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். பெரியார் காலத்தில் பின்பற்றப்பட்ட அணுகுமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. பார்ப்பனப் பிள்ளைகளோடு நமது சமுதாயத்துப் பிள்ளைகளும் போட்டியிட வேண்டுமானால் ஆங்கிலம் பயில வேண்டும்; ஆங்கில மொழியில் பயிற்சி பெற வேண்டும் என்று பெரியார் சொன்னார். 1980 களிலே இதை நாம் மாற்றிக் கொண்டு விட்டோம். தமிழ் வழிக் கல்விதான் சிறந்தது என்று முடிவு செய்துவிட்டோம். பெரியார் - 3 ஆம் வகுப்புப் பெட்டியில் தான் இரயில் பயணம் செய்தார். இப்போது பெரியார் இயக்கத் தலைவர்கள் எல்லாம் குளிர்சாதன வசதியில் தான் பயணம் செய்கிறார்கள்.

எனவே பெரியார் பின்பற்றிய அணுகு முறைகள் அதற்குப் பின்னால் மாற்றப்பட்டுள்ளன. ஒரு குழந்தையை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு பத்தாண்டுகள் கழித்து திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்றால் - குழந்தையை எப்படிக் கொடுத்தோமோ, அப்படியேதான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? குழந்தை அப்படியே இருந்தால், அந்தக் குழந்தையை சரியாக வளர்க்கவில்லை என்பதுதான் பொருள். ஒரு செடியை ஒருவரிடம் கொடுத்துவிட்டு சில காலம் கழித்து, செடியைக் கேட்டால், அது அப்படியே தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. செடி வளர்ந்திருக்கும். அப்படி வளராவிட்டால், செடியை சரியாகக் காப்பாற்றவில்லை என்றுதான் அர்த்தம். 1953-களில் சென்னையில் லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பனர்கள் சங்கத்தில் பெரியார் பேசினார் - அப்போது பெரியார், என்னைப் போல் என்னுடைய வருங்கால சந்ததிகள் பொறுமையாக இருப்பார்கள் என்று கூற முடியாது என்று சொன்னார்.

ஆதரிக்கும் ஆட்சியில் போராடக் கூடாதா?

ஒரு ஆட்சியை ஆதரிப்பது என்பது வேறு; பெரியார் கொள்கையைப் பரப்புவது என்பது வேறு. ஆட்சியிலிருப்பவர்களே - பெரியார் கொள்கையைப் பரப்பவும் முடியாது; பெரியார் இயக்கம் தான் அதைச் செய்ய முடியும்.

1954 இல் காமராசர் ஆட்சியைப் பெரியார் ஆதரித்தார். பச்சைத் தமிழன் ஆட்சி என்றார். ஆட்சியை ஆதரித்த பெரியார் காமராசர் ஆட்சியில் தான் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். ‘ராமன் படத்தை எரித்தார். ‘பிராமணாள்’ பெயர்ப் பலகை அழிப்புக் கிளர்ச்சியை நடத்தினார். சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார். தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசியப் படத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார்.

ஆட்சியை ஆதரிக்கிறோம்; எனவே இந்த ஆட்சியில் போராட்டமே நடத்தக் கூடாது; போராட்டம் நடத்தினால் அது ஆட்சியாளர்களுக்கு சங்கடம் என்று பெரியார் கூறவில்லை.

இவ்வாறு கொளத்தூர் மணி குறிப்பிட்டார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com