Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
பிப்ரவரி 2009

போரை நடத்துவது இந்தியாவே; சிங்களம் அல்ல!

ஈழத்தில் இனப் படுகொலைப் போரை நடத்துவது இந்தியாவே; இலங்கை பொம்மை தான். இனி சர்வதேச சமூகம் - அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் தொடர்ந்து போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆய்வாளர் வழுதி. 'புதினம்' இணையதளத்தில் வெளியிட்டள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

"புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விவரங்களின்படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர் களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதே வேளை - இந்த ஒவ்வொரு நாளும் - போர்க்களத்தில் வீழ்ந்து போன, விழுப்புண்பட்ட புலிப் போராளிகளின் எண்ணிக்கை இங்கே சேர்க்கப்படவில்லை. இறந்துபோன, போர்க் காயமடைந்த அவர்களும் தமிழர்களே. இது தவிர, வன்னியில் இருந்து வெளியேறிய 160 வரையான தமிழ் இளம் பெண்களும், இளைஞர் களும், இரகசியமான சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு - வதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக வெளியில் சொல்ல முடியாத ஆதாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் உண்டு.

தெளிவாக - இது ஓர் இனப் படுகொலைப் போரே அன்றி வேறொன்றும் அல்ல. ஆனால், இந்த இனப் படுகொலைப் போரை நடத்துவது யார் என்பதிலும், அதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதிலும் தான் எமக்கு தெளிவு தேவை. "அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை".

இது இந்தியாவின் போர்; சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே. இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை; அதாவது, சிறிலங்கா விரும்பினாலும்கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை. இந்தியப் படை அதிகாரிகள் - வன்னிப் போர் முனையில் - வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமின்றி - நேரடியான போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.

இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன. இந்திய கடற்கண்காணிப்பு (ரேடார்) கருவிகள் வங்காள விரிகுடாவை 24 மணி நேரமும் கண்காணித்த வண்ணம் உள்ளன. இந்தியாவின் கண்களுக்கு தப்பி ஒரு மீன்பிடிப் படகுகூட அங்கு நீந்த முடியாது.

இந்தத் தகவல்கள் எல்லாமே விடுதலைப் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பினும்கூட - அரசியல் இராஜ தந்திர நோக்கங்கள் கருதி, சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர். ஒரு புறத்தில் போரை நடத்திக் கொண்டு, மறுபுறத்தில் அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா.

பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந் தாலும், அதனை முட்டுக் கொடுத்து தூக்கிவிட்டு - இந்தியா இந்தப் போரை நடத்தும். ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும். பிணமலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக 'சாஸ்திரி பவன்' முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி - அன்னை சோனியாவின் 'ஆன்மா' கரையப் போவதில்லை.

தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை - காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப் போவதில்லை. பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை - சோனியா காந்தி நிம்மதியாக தூங்கப் போவதில்லை. என்றோ இறந்து போன ராஜீவ் காந்திக்காக - நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக் கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா.

சிவசங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி, மற்ற நாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா. நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் - மிக அண்மையில் புலிகளிடம் நேரிடையாகவே சொல்லி விட்டார், "இப்போது எம் கையில் எதுவுமே இல்லை" என்று.

உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம். இதுவே தான் எமக்கான நேரம்! எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து - உலகத் தமிழர்கள் நாம் - எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும். ஊரில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளைப் பார்த்து, கொதிப்படைந்து - ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வுப் பெருக்கோடு எதையாவது செய்து கொண்டிருக்கின்றோம்.

உலகு எங்கும் - கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக் கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து, எங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக் கொண்டிருக்கிறோம். சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் போட்டு தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நாம் வேண்டுகின்றோம். ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும்.

சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும். இப்போதுள்ள சூழலில் - தென்னாசியாவில், இந்தியாவை மீறி எதுவுமே நடக்கப் போவதில்லை. மேற்குலக நாடுகள் என்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபை என்றாலும் சரி - ஆகவும் மிஞ்சிப் போனால் ஒரு அறிக்கையை விடுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள். அன்னிய நாடுகளில் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குச் சங்கடங்களையே ஏற்படுத்தும்.

எம் மீது ஒரு வகையான சினத்தைக்கூட - அந்தந்த நாட்டு அரசுகளினதும், அந்தந்த நாட்டு மக்களினதும் மனங்களில் உருவாக்கப் பார்க்கும். ஒரு வகையில் - தேவையற்ற பகை உணர்வைக்கூட, அது தமிழர்களுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஏற்படுத்தும். மேற்குலக அரசுகளின் ஆதரவு பின்னால் எமக்குத் தேவை. இப்போது, எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர்கள் இருக்கும்போது, அவர்களைச் சங்கடப்படுத்துவது நமக்கு நன்மையைச் செய்யாது; அது அழகும் அல்ல. எனவே - அளவுக்கு அதிகமான தொந்தரவைக் கொடுக்காமல், ஒரு தூர நோக்கப் பார்வையோடு மேற்குலகை நாம் விட்டு வைக்க வேண்டும்.

இப்போது - எமது துடிப்பு, சக்தி, கவனம் எதனையும் வேறு இடங்கள் நோக்கிச் சிதறவிடாமல் - எல்லாவற்றையும் இந்தியாவை நோக்கியே நாம் செலுத்த வேண்டும். உலகத் தமிழர்களின் பொங்கும் உணர்வு எழுச்சியைப் பல திசைகளிலும் பரவ விட்டு, எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்காமல், அதை ஒருங்கே குவித்து, சரியான இலக்கை நோக்கி நகர வைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ் செயற் பாட்டாளர்களின் கைகளிலேயே இப்போது உள்ளது. அந்த சரியான இலக்கு - இந்தியா.

என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணி திரள வேண்டும். எமக்காகப் போராடும் அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும். விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம். எதுவுமே நடக்கவில்லை; நடக்க இந்தியா விடவில்லை. இப்போது - காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான ஒரு வீழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் காத்திருக்க எமக்கு அவகாசம் எதுவும் இல்லை; அதன் பிறகு கூட ஏதாவது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களை நாம் இப்போதே முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும். தொடர்ச்சியாக - இடைவிடாமல் ஒருங்கு திரட்டப்பட்ட செயல் வீச்சோடு - அதை நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு செய்ய வேண்டும். லண்டன் நகர வீதிகளில், ஒரு லட்சம் பேர், ஒரே நாளில் திரண்டு பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வுக்குச் சிரமங்கள் தருவதைத் தவிர்த்துவிட்டு, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை 5 ஆயிரம் பேராக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.

அதேபோல - கனடாவின் டொராண்டோ வீதிகளில் 80 ஆயிரம் பேர், ஒரே நாளில் திரண்டு கூடிய மக்களின் அன்றாட வாழ்வுக்கு அலுப்புத் தருவதைத் தவிர்த்துவிட்டு, கனடாவுக்கான இந்தியத் தூதரகத்தை 4 ஆயிரமாக ஒரு சுழற்சி முறையில 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும். இதேபோல ஒவ்வொரு நாடுகளிலும் செய்ய வேண்டும்.

தமிழர் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க முடியாத - நாளாந்த அலுவல்களில் சிரத்தை காட்ட முடியாத செயலிழப்பு நிலைமைக்கு வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களை நாம் உள்ளாக்க வேண்டும். எமது இடைவிடாத முற்றுகைகள் மூலம் - தூதரக அதிகாரிகளையும், தூதுவர்களையும் செயற்பட முடியாத அளவு எரிச்சலுக்கும், சினத்திற்கும் உள்ளாக்க வேண்டும். தமது தூதரகங்களுக்கே சென்றுவர முடியாதுள்ள - தமது பணிகளை ஆற்ற முடியாதுள்ள தமது கையாலாகத்தனத்தை அவர்கள் டெல்லித் தலைமைக்கு முறையிட வைக்க வேண்டும்.

தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும். இந்தியா நடத்தும் இந்தப் படுகொலைப் போரின் பழியை இந்தியாவின் தலையிலேயே நாம் சுமத்த வேண்டும். ஒரு பழம் பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும். அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் யாவும் அமைய வேண்டும். இந்தியாவை நோக்கிய எமது செய்தி - உலகம் முழுவதிலும் ஒன்றாகவே இருக்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

சிறீலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

ஒவ்வொரு நாளும் 15 தமிழர்கள் சாகின்றனர். ஓய்ந்திருந்து யோசிக்க எமக்கு நேரமில்லை. அவர்களையும், எம் தேசத்தையும் காக்கும் வழியும் எமக்குத் தெரிகின்றது.

செயற்படுவோம், இப்போதே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com