Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
பிப்ரவரி 2009

‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன?

ஈழத்தில் - சிங்கள ராணுவம்தான் இந்தியாவின் பேருதவியோடு போரை நடத்துகிறது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குthத் தயார் என்று அறிவித்து விட்டார்கள். போரை நிறுத்த மாட்டோம் என்கிறது சிங்களம். புலிகள் ராணுவத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று சிங்களர் விதிக்கும் நிபந்தனையை தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க.வும் ஏற்று ‘இருதரப்பு போர் நிறுத்தம்’ என்ற கருத்தை முன் வைத்து மனித சங்கிலியை நடத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலும் ஈழத் தமிழின உரிமைப் போராட்டத்தை நசுக்கிடும் இந்திய அரசை எதிர்க்காமல் சமரசம் செய்து கொள்ளத் துடிக்கிறது. ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று முதல்வர் அறிக்கைகளை விடுகிறார்.

இதே கலைஞர் 1985 ஆம் ஆண்டுகளில், ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்தியவர்தான். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்த வில்லை என்று கலைஞர் குற்றம் சாட்டினார். தாங்கள், இப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்றார். தமிழனுக்கு என்று நாடு வேண்டும் என்றார். தமிழக இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடும் காலம் வரும் என்றார். அதே கருத்தினை இப்போது சீமான் பேசினால், மற்றவர்கள் பேசினால், ஒருமைபாட்டுக்கு எதிராக பேசியதாக வழக்குப் போட்டு அதே கலைஞர் சிறையில் தள்ளுகிறார். ஆனால், அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியோ, இத்தகைய நடவடிக்கைகளை கலைஞர் மேல் எடுத்ததில்லை என்பதே உண்மை. கடந்த காலங்களில் கலைஞர் எதிர்கட்சியாக இருந்தபோது மக்களிடம் பேசிய கருத்துகளையே இப்போது தமிழின உணர்வாளர்கள் பேசினால் - கலைஞர் ஆட்சியில் சட்டம் பாய்கிறது. இப்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு, புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்று கலைஞர் பேசிய “வீர முழக்கத்தில்” கால்பங்கைக் கூட பேசிடாத சீமான் - இப்போது சிறையில்!

இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் அந்த உரைகளை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஈழத் தமிழர்களுக்காக தமது கடந்தகால தியாகங்களை கலைஞர் பட்டியலிடும்போது நாம் அவரது கடந்த கால உரைகளையும் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

1985 அக்டோபர் 3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கலைஞர் ஆற்றிய உரையைத் தொகுத்து தி.மு.க. தலைமையகமே ஒரு நூலை 1985 ஆம் ஆண்டில் வெளியிட்டது. ‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’ எனும் தலைப்பில் தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் மறைந்த சி.டி.தண்டபாணி முன்னுரையோடு வெளியிடப்பட்ட அந்த சிறு வெளியீட்டிலிருந்து கலைஞர் உரையின் சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்:

தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு குற்றமென்ன?

மொராக்கோ நாட்டில் நடைபெறும் கொரில்லாப் போராட்டத்திற்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. இதனால் மொராக்கோ கோபம் கொண்டு இந்திய அரசுடன் தனது உறவுகளை துண்டித்துக் கொண்டது. அதேபோல பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. பாலஸ்தீன இயக்கத்தின் விடுதலை முகாமை இஸ்ரேல் விமானங்கள் டுனீஷியா நாட்டில் தாக்கின; அராபத்தைக் கொல்ல முயன்றது - நல்லவேளை அராபத் காப்பாற்றப்பட்டு விட்டார் - அந்த விடுதலை முகாம் அழிக்கப்பட்டது.

உடனடியாக இந்திய அரசு “இது மனித நாகரிக வளர்ச்சிக்கு விடப்பட்ட சவால். இதை இந்தியா கண்டிக்கிறது” என்று அழுத்தம் திருத்தமாக - ஆவேசமாக தன்னுடைய மனப்பாதிப்பை வெளியிடுகிறது.

நான் கேட்பதெல்லாம், மொராக்கோவில் போராடுகின்ற கொரில்லாக்களுக்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - இலங்கையிலே போராடுகின்ற தமிழர்களுக்கு ஏன் தரவில்லை? நாங்கள் தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தோம்? தமிழனாகப் பிறந்தது குற்றமா? கேவலமா? அப்படியென்றால் தமிழ்நாட்டை இணைத்து ஆள்வது உங்களுக்குக் கேவலமல்லவா? அனுப்பி விடுங்களேன் வெளியே எங்களை என்று கேட்க மாட்டோமா? இப்படிக் கேட்பதால் கருணாநிதி பிரிவினைவாதம் பேசுகிறார் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால் நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

இன்றைக்கு பிரிவினைக் கொடியை - பிரிவினை கீதத்தை காஷ்மீரில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் மத்தியிலே உள்ள உள்துறை அமைச்சகத் திற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் “காஷ்மீரில் நடைபெறுகின்ற ஷா அரசு (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணையோடு நடைபெறுகின்ற அரசு) பிரிவினைவாதத்திற்கு துணை போகிறது; உதாரணம் தேவை என்றால், ஆகஸ்டு 14 ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாள்!

ஆகஸ்டு 14 ஆம் நாள் காஷ்மீர் மாநிலத்தில் 50 இடங்களில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததை காஷ்மீரில் உள்ளவர்கள் கொண்டாடினார்கள். இது மாநிலத்தில் உள்ள ஷா அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எழுதியுள்ளார். அப்படிப்பட்ட அரசை அங்கே முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தி பரூக் அப்துல்லாவுக்கு எதிராக அதை உருவாக்கியவர்கள் யார்?”

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மத்தியிலே உள்ள இந்திரா காங்கிரஸ் தலைமையும்தான். இவர்களுக்கு பிரிவினையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது? காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றுவதைத் தடுக்க வகையில்லை, வக்கு இல்லை; தெம்பில்லை; திராணியில்லை. முன்கூட்டி தெரிந்திருந்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதுபற்றி கவர்னர் மத்திய அரசுக்கு எழுதியிருந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இவர்களுடைய தேசியம், வேறு யார் எதிர்த்தாலும் அங்கெல்லாம் விசுவரூபம் எடுக்காது. இந்தப் பாவப்பட்ட தமிழன் இருக்கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன்னால் - அங்கே தான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலைநாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத்திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற நானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ, பாடுபடுவது ராஜ துரோகம் என்று சொன்னால், நாங்கள் அந்தக் குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நாங்கள் மாத்திரம் அல்ல - தமிழ்ச் சமுதாயமே தயாராயிருக்கிறது என்பதை தெரிவிக்கத்தான் நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- இப்படி அன்று ஒருமைப் பாட்டுக்கு தேசியத்துக்கு சவால்விட்ட கலைஞர், அதே உணர்வை இப்போது வெளிப்படுத்தும் சீமான்களை சிறையில் அடைப்பது ஏன்?

(கலைஞர் போர் முழக்கம் தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com