Tamil | Literature | Puratchiperiyar | Kosava | Srilanka
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
பிப்ரவரி 2008

கொசாவா விடுதலை: அலறுகிறது இலங்கை

பூமிப் பந்தில் மற்றொரு புதிய நாடு உதயமாகியுள்ளது. அதுதான் கொசாவா. செர்பியாவோடு இணைந்திருந்த கொசாவா, பிப்.17, 2008 அன்று தனது நாடாளுமன்றத்தைக் கூட்டி, தனி நாடாக, தன்னை அறிவித்துக் கொண்டது. நாடாளுமன்றத்தின் சபாநாயகர், பிரதமர், அதிபர் ஆகியோர் இந்த பிரகடனத்தை அறிவித்தனர். கொசாவின் தனிநாடு பிரகடனம் அறிவிக்கப்பட்ட உடனேயே, சிறீலங்கா அரசு அதிர்ச்சியடைந்து, தனது கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. இலங்கைப் பிரச்சினையும், கொசாவா பிரச்சினையும் ஒன்றே போல் இருப்பது தான் இதற்குக் காரணம்.

செர்பியா - ஒன்றுபட்ட யூகோஸ்லேவியாவில் இருந்த நாடாகும். சோவியத் ஒன்றியம் சிதைந்ததைத் தொடர்ந்து சோஷலிச நாடான யூகோஸ்லேவியாவில் இருந்த 5 நாடுகளான சோல்வினியா, குரோஷியா, மேசிடோனியா, போஸ்னியா, மான்டிநிகோரோ ஆகியவை தனித்தனியாகப் பிரிந்தன. செர்பியா மட்டும் தனியாக இருந்தது. செர்பியாவில் கொசாவும் இருந்தது. தனிநாடாக இருந்த கொசாவா, 1913 இல் செர்பியாவுடன் இணைக்கப்பட்டது. செர்பியர்கள் - செர்பியன் மொழியைப் பேசுகிறவர்கள். மதத்தால் கிறிஸ்தவர்கள். கொசாவாவில் வாழும் கொசாவர்கள் அல்பேனியன் மொழி பேசுகிறவர்கள். மதத்தால் முஸ்லிம்கள்.

செர்பியர்களுக்கும், தற்போது தனி நாடாகியுள்ள கொசோவாவில் வாழும் அல்பேனிய மொழி பேசுவோருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தது. செர்பியாவில் கொசாவா சுயாட்சி அதிகாரம் படைத்த மாநிலமாக இருந்தது. அந்த சுயாட்சி அதிகாரத்தை செர்பியா ரத்து செய்தது. உரிமை மறுக்கப்பட்ட கொசாவா மக்கள் போராட்டம் வெடித்தது. செர்பியா, ராணுவத்தின் மூலம் கொசாவில் வாழ்ந்த செர்பியர்களை படுகொலை செய்தது. நிலைமை எல்லை மீறவே,1999 இல் சர்வதேச நாடுகள் தலையிட்டன. கொசாவா, செர்பிய ஆட்சி நிர்வாகத்தின் கீழிருந்து விடுவிக்கப்பட்டு, அய்.நா.வின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அய்.நா.வின் சிறப்பு தூதராக கொசாவாவுக்கு ஆத்திசாரி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் கொசாவா வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டங்களை உருவாக்கினார். அய்.நா. சிறப்பு தூதுவர் வகுத்துத் தந்த வளர்ச்சித் திட்டங்களை முன் வைத்து, அய்ரோப்பிய ஒன்றியம் உருவாக்கியுள்ள மனித உரிமைக் கோட்பாடுகளை முழுமையாக ஏற்று, ஜனநாயக மதச்சார்பற்ற பல்வேறு இனங்களின் பன்முகக் கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் குடியரசாக கொசாவா செயல்படும் என்று, தனிநாடு பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச பிரதிநிதிகள், தங்கள் நாட்டுக்கு வந்து, திட்டங்களை கண்காணிக்கலாம் என்றும், அய்ரோப்பிய ஒன்றிய சட்ட வல்லுனர்கள், மனித உரிமை செயல்பாடுகளைப் பார்வையிடலாம் என்றும், சர்வதேச ராணுவம் கொசாவாவில் முகாமிட்டிருப்பதை ‘அய்.நா.’ அமைப்பு கண்காணிக்கலாம் என்றும், கொசாவா தனது தனிநாடு பிரகடனத்தில், அழைப்பு விடுத்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான அய்.நா.வின் சர்வதேச உடன்பாட்டின் பிரிவு 1(1), “அனைத்து மக்களுக்கும் தேசிய சுயநிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையைப் பயன்படுத்தி தேசிய இனங்கள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கலாம். தங்களுக்கான பொருளாதார, சமுதாய, கலாச்சார வளர்ச்சியை சுதந்திரமாக செயல்படுத்தலாம்” என்று கூறுகிறது. இந்த பிரிவைப் பயன்படுத்தியே - கொசாவா தனது தனி நாடு பிரகடனத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் நடத்தும் போராட்டத்துக்கும் - கொசாவா போராட்டத்துக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 1945 இல் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒன்றுபட்ட யூகோஸ்லேவியாவை உருவாக்கியது. 1833 இல் பிரிட்டிஷ்காரர்கள் தமிழர் சிங்களர்களின் தனித்தனி நாடுகளை சேர்த்து ஒன்றுபட்ட சிறீலங்காவை உருவாக்கினர். 10 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட ஒன்றுபட்ட யூகோஸ்லேவியாவில் 8 மில்லியன் செர்பியர்களும் (செர்பிய மொழி பேசும் கிறிஸ்தவர்கள்) 2 மில்லியன் கொசாவர்களும் (அல்பேனி மொழி பேசும் முஸ்லீம்கள்) இருந்தனர்.

20 மில்லியன் மக்களைக் கொண்ட சிறீலங்காவில் 16 மில்லியன் சிங்களர்களும் (புத்தர்கள், கிறிஸ்தவர்கள்), 4 மில்லியன் தமிழர்களும் (தமிழ்ப் பேசுவோர், இந்துக்கள், கிறிஸ்தவர், முஸ்லிம்கள்) உள்ளனர். செர்பியாவில் 1990 இல், 1998 இல், இனக்கலவரம் வெடித்தது. 1999 இல் அய்.நா. தலையிட்டு - சமாதான ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதற்கிடையே 2006 இல் செர்பியாவிலிருந்து மான்டி நிகரோ என்ற மாநிலம் பிரிந்து தனி நாடானது.

சிறீலங்காவில் 1948 இல் தமிழ் மொழி உரிமையும், தமிழர்கள் ஓட்டுரிமையும் பறிக்கப்பட்டது. 1976 இல் வட்டுக்கோட்டையில், தமிழர்கள், தனிநாடு கோரும் தீர்மானத்தை அறிவித்தனர். 1983 இல் இனப்படுகொலை வெடித்து, புதிய திருப்பம் உருவானது. 1987 இல் தமிழர்களின் வடக்கு-கிழக்கு பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. 2002 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது.

1999 இல் கொசாவா நிர்வாகம் அய்.நா.வின். நேரடி தலையீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கொசாவா மக்களை கொசாவா விடுதலை ராணுவம் பாதுகாத்தது. கொசாவா தனக்காக தனி ராணுவம் வைத்துள்ளது. அய்ரோப்பிய ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட காவல்துறையை வைத்துள்ளது.

அதேபோல் 2002 இல் தமிழ் ஈழப் பகுதி தனியான நிர்வாகக் கட்டமைப்புக்குள் வந்தது. தமிழ் பிரதேசத்துக்கு எல்லைகள் உண்டு. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கு மிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டன. விடுதலைப்புலிகளிடம் காவல் துறை, ராணுவம், கப்பல் படை, விமானப்படை இருக்கிறது, நீதித்துறையும் செயல்படுகிறது.

2008 பிப்ரவரியில் கொசாவா, தனிநாடு பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவும், அய்ரோப்பிய ஒன்றியமும், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ரஷ்யாவும், செர்பியாவும் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், தமிழ் ஈழப் போராட்டத்துக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அய்ரோப்பிய ஒன்றியங்கள், சதி செய்கின்றன. இந்தியாவோ, தமிழ் ஈழப் போராட்டத்தைக் கடுமையாக கடுமையாக எதிர்க்கிறது.

கொசாவாவில் ராணுவம், அப்பாவி மக்களான 10000 அல்பேனியம் பேசுவோரைக் கொன்றது. இலங்கையில் தமிழ் பேசும் 80000 மக்களை சிங்கள ராணுவம் கொன்றது.

கொசாவாவின் பரப்பளவு 4200 சதுர மைல், மக்கள் தொகை 2 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) இலங்கையின் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாநிலத்தைவிட சிறியது (இதன் பரப்பளவு 7500 சதுர மைல்) தமிழர்களின் மக்கள் தொகையும் செர்பியர்களைவிட அதிகம் (4 மில்லியன்).

“மெஜாரிட்டி செர்பியன் மக்களின் ஒப்புதலைப் பெறாமல் தன்னிச்சையாக கொசாவா, சுதந்திரத்தை அறிவித்திருப்பது, சர்வதேச உறவுகளைப் பாதிக்கக்கூடிய ஆபத்தான முடிவு; சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை உருவாக்குவதாகும்” என்று இலங்கை அரசு அலறியிருக்கிறது. கொசாவா உலகின் 193 வது நாடாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com