Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
பிப்ரவரி 2008

75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்
விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு கிடைத்த அரசியல் உரிமையை பறித்துக் கொண்டது ஒரு ஒப்பந்தம்! அது - இந்தியாவுக்கும், பிரிட்டிஷ் அரசுக்குமிடையே நடந்த ஒப்பந்தம் அல்ல. காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையே 24.9.1932 இல் உருவான ஒப்பந்தம்! இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னால் - பல முக்கிய வரலாற்று சம்பவங்கள் உண்டு. அதைச் சுருக்கமாகப் பார்ப்போமா?

இதோ, சில வரலாற்றுக் குறிப்புகளைப் பாருங்கள்!

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ‘இந்தியா’ இருந்தபோது இப்போதுள்ளதைப் போன்று மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. சென்னை, பம்பாய், வங்காளம், அசாம், பீகார், ஒரிசா என்று மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. இந்த மாகாணங்கள் தேர்தலை நடத்தி, சட்டமன்றங்கள் அமைக்க பிரிட்டிஷ் ஆட்சி அனுமதித்திருந்தது. ஆனால் ஓட்டுப் போடும் உரிமை எல்லோருக்கும் கிடையாது. சொத்துள்ளோர், நிலம் உள்ளோர், படித்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இந்த சட்டமன்றங்களில் எல்லாம் ‘தீண்டப்படாத’ தலித் மக்கள், அப்போது போட்டியிட்டு, வெற்றி பெற முடியாத நிலைதான் சமூகத்தில் நிலவியது. எனவே ‘தலித்’ பிரதிநிதிகள் - அப்போதெல்லாம் நியமனம் செய்யப்பட்டனர். சட்டசபைகளுக்கு மிகக் குறைந்த அதிகாரங்களே இருந்தன.

தனது கட்டுப்பாட்டிலுள்ள இந்தியாவுக்கு - தனியாக அரசியல் சட்டம் ஒன்றை உருவாக்க பிரிட்டிஷார் நினைத்தனர். அது பற்றி, இந்தியாவில் பல்வேறு கட்சிகளிடமும் கருத்து கேட்க பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் சைமன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தனர். அதுதான் சைமன் குழு. அந்தக் குழு, பல்வேறு கட்சிகள், சமூகங்களின் கருத்துகளைக் கேட்க, இந்தியாவுக்கு வந்தது.

சைமன் குழுவை - காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அரசியல் சட்டத்தை உருவாக்குவது பற்றி ஆராய மோதிலால் நேரு தலைமையில் - காங்கிரஸ் கட்சியே ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு தீண்டப்படாத தலித் மக்களக்கு, தனித் தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று அறிவித்துவிட்டது.

சைமன் குழுவை 18 ‘தீண்டப்படாத’ மக்கள் அமைப்புகள் வரவேற்றன. ‘தீண்டப்படாத’ தலித் மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி உருவாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினர்.

ஏற்கனவே முஸ்லிம், சீக்கியர்களுக்கு, தனி வாக்காளர் தொகுதிகள் இருந்தன. அதே வழியில் தீண்டப்படாத மக்களும் தனித் தொகுதி கேட்டனர்.

இது பற்றி லண்டனில் கூடி விவாதிக்க ‘வட்ட மேஜை மாநாடு’ ஒன்றுக்கு பிரிட்டிஷ் அரசு ஏற்பாடு செய்தது. 1930 ஆம் ஆண்டு நவம்பர் 12 இல் தொடங்கி, 1931 ஜனவரி 19 வரை முதல் சுற்றுப் பேச்சு நடந்தது. இந்த மாநாட்டை காங்கிரஸ் புறக்கணித்தது. ‘தீண்டப்படாத’ மக்களின் பிரதிநிதியாக, டாக்டர் அம்பேத்கர், தமிழ்நாட்டைச் சார்ந்த ரெட்டைமலை சீனிவாசன் கலந்து கொண்டனர். அம்பேத்கர், ‘தலித்’ மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரட்டை வாக்குரிமை’ என்றால் என்ன? இந்த முறையின் கீழ் - தலித் மக்களுக்கு இரண்டு வாக்குகள் போடும் உரிமை உண்டு. அதாவது தலித் மக்கள் அதிகமாக வாழக் கூடிய தொகுதிகளில் தனித் தொகுதி அமைக்கப்படும். அதில் நிறுத்தப்படுகிற ‘தலித்’ வேட்பாளருக்கு, தலித் மக்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். (பிறசாதியினர் வாக்களிக்க முடியாது) அதே நேரத்தில் பொதுத் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கும் வாக்களிக்கும் உரிமை தலித் மக்களுக்கு உண்டு. இதுவே இரட்டை வாக்குரிமை.

முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் - இரண்டாவது சுற்றாக நடந்த வட்டமேசை மாநாட்டில் (1931-செப்.12) கலந்து கொண்டது காந்தி பங்கேற்றார். முஸ்லீம், சீக்கியர்களுக்கு தனித்தொகுதியை ஆதரித்த காந்தியார் தீண்டப்படாதவர்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கினால், இந்து சமூகம் பிளவுபட்டுவிடும் என்று கூறி கடுமையாக எதிர்த்தார்.

இரண்டு சுற்று வட்ட மேஜை மாநாடுகளும் முடிந்தவுடன் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தொகுதி வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு இரட்டை வாக்குரிமை தரப்படும் என்றும், பிரிட்டிஷ் அரசு அறிவித்தது (1932-ஆகஸ்டு 17).

முதலில் - தனித் தொகுதி முறையைத் தீவிரமாக ஆதரித்து வந்த - தாழ்த்தப்பட்ட தலைவர்களில் ஒருவரான எம்.சி.ராஜா, வட்டமேசை மாநாட்டுக்கு தன்னை அழைக்கவில்லை என்பதால் திடீரென்று தனது குரலை மாற்றிக் கொண்டு காந்தியின் பக்கம் சேர்த்துக் கொண்டார். அப்போது மராட்டிய மாநிலத்தில் எரவாடா எனும் ஊரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தி, பிரிட்டிஷ் அரசு தலித் மக்களுக்கு வழங்கிய உரிமையை எதிர்த்து ‘சாகும் வரை’ உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.

பிரிட்டிஷ் அரசு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற முடியாது என்ற நிலையில் அம்பேத்கருக்கு அழுத்தம் தந்து, அவர் மூலம், காந்தி கோரிக்கையை நிறைவேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்து மகாசபைத் தலைவர்கள் - இந்த முயற்சியில் இறங்கினர். காந்தியின் உயிரை மய்யமாக வைத்து ஒரு மகத்தான உரிமை பிரச்சினை பேரம் பேசப்பட்டது. அம்பேத்கர் காந்தியை சிறையில் சந்தித்துப் பேசினார். காந்தி பிடிவாதம் தளரவில்லை.

அப்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார், அம்பேத்கருக்கு ஒரு அவசர தந்தியை அனுப்பினார். அதில் "ஒரு காந்தியின் உயிருக்காக பல கோடிக்கணக்கான மக்களின் உரிமைகளை இழந்துவிட வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.. மேலும் தந்தை பெரியாரின் "குடியரசு" இதழில் இரட்டை வாக்குரிமையை உறுதியாக ஆதரித்து தலையங்கங்கள் எழுதப்பட்டன. இறுதியில் காந்தியின் உயிரைக் காக்க, அம்பேத்கர், இரட்டை வாக்குரிமையை விட்டுத்தர முன் வந்தார். அப்போது ஏற்பட்ட ஒப்பந்தமே ‘புனா ஒப்பந்தம்’.

புனா ஒப்பந்தம் என்ன கூறியது? தலித் மக்களுக்கு தனித் தொகுதிகள் உண்டு. அதில் போட்டியிடும் வேட்பாளர்களை, தலித் மக்களோடு, ஏனைய சாதி வாக்காளர்களும் சேர்ந்து வாக்களிப்பர். ஆனால், தேர்தலில் போட்டியிடும் தலித் வேட்பாளர்கள் யார் என்பதை மட்டும், தலித் மக்களே வாக்களித்து முடிவு செய்வார்கள். இதுவே புனா ஒப்பந்தம். இதன்படி, இந்தியா முழுமைக்கும் 148 தனித் தொகுதிகள் வழங்கப்பட்டன. (இரட்டை வாக்குரிமையின் அடிப்படையில் வழங்கப்பட்ட இடங்கள் 71 ஆகும்.

இப்போது தனித் தொகுதி இடங்களை அதிகரித்து இரட்டை வாக்குரிமை பறிக்கப்பட்டது). பிரிட்டிஷ் அரசு அறிவித்த இரட்டை வாக்குரிமையினால், தலித் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். அத்துடன் பொதுத் தொகுதியில் சாதி இந்துக்களின் பிரதிநிதிகளையும் தேர்வு செய்யும் உரிமையும் தலித் மக்களுக்கு இருந்தது. புனா ஒப்பந்தத்தினால் தலித் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் வாக்குரிமை அதிகாரம் - சாதி இந்துக்களுக்கும் தரப்பட்டது.

சுதந்திர இயந்தியாவில் 18 சதவீத தலித்துக்களுக்கான தனித் தொகுதி இட ஒதுக்கீடு வந்தது. அப்போது ஒரே நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தும் இரட்டை உறுப்பினர் முறை இருந்தது. தலித், தலித் அல்லாத வேட்பாளர்கள் இதில் போட்டியிடுவார்கள். அடுத்தடுத்து அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். 1952, 57 பொதுத்தேர்தல் வரை, இந்த முறை அமுலில் இருந்தது. 1957 தேர்தலில் பல இரட்டை உறுப்பினர் தொகுதிகளில் வெற்றி பெற்ற இரண்டுபேருமே தலித்துகளாக இருந்தனர். இதனால் தலித் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 18 சதவீதத்தையும்விட அதிகரிக்கிறது என்று கூறி வி.வி.கிரி எனும் ஆந்திரப் பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இரட்டை உறுப்பினர் முறையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் சின்னத்தோடு, வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். இவர்கள் தலித் அல்லாத பெரும்பான்மை மக்களின் ஓட்டுகளை நம்பி இருக்க வேண்டியிருப்பதால் தலித் பிரதிநிதிகள் என்பதைவிட கட்சிகளின் பிரதிநிதிகளாகவே செயல்பட விரும்புகிறார்கள். புனா ஒப்பந்தத்தில் இழந்த இரட்டை வாக்குரிமையை மீட்டெடுப்பது பற்றி தலித் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com