Tamil | Puratchiperiyar | Ealam | congress | periyarthiravidar
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
பிப்ரவரி 2008

டில்லியில் பேரெழுச்சி

இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் கழக சார்பில் நேரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் துரைசாமி, பொதுச்செயலாளர்கள் கோவை இராம கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

கோரிக்கைக்கு ஆதரவாக - தமிழ்நாட்டில் பெறப்பட்ட 10 லட்சம் தமிழர்களின் கையெழுத்துப் படிவங்களின் ஒரு பகுதியும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

பெரியார் திராவிடர் கழகம் அதன் குறுகிய கால வரலாற்றில் மற்றொரு புதிய சிறப்பைப் பதிவு செய்திருக்கிறது. கழகத்தின் தோழர்கள் - தோழியர்கள் - குழந்தைகள் உள்ளிட்ட பெரியார் குடும்பம், டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஈழத் தமிழர் உரிமைப் பிரச்சினையில் - டில்லிக்கு தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

“இந்திய அரசே; இலங்கைக்கு ராணுவ உதவி செய்யாதே” என்பதே இந்த டெல்லி ஆர்ப்பாட்டத்தின் முதன்மையான முழக்கம். இந்தக் கோரிக்கையை முன் வைத்து, தமிழகம் முழுதும் கழகத் தோழர்கள் மக்களிடம் திரட்டிய 10 லட்சம் கையெழுத்துகளுடன், 400 கழகத் தோழர்கள் டெல்லி பயணமாயினர். இதில் பெண்கள் 90 பேர்; குழந்தைகள், சிறுவர்கள் 50 பேர்.

பிப்ரவரி மூன்றாம் தேதி இரவு சென்னை ‘தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி’ வழியாக டெல்லி பயணம் தொடங்கியது. பயணத்தில் பங்கேற்போர், வழியனுப்ப வந்தோர் என சென்ட்ரல் தொடர் வண்டி நிலையம் முழுதும் கருஞ்சட்டை மயமாகக் காட்சியளித்தது. பெரியார் திராவிடர் கழகக் கொடிகள், பதாகைகளுடன், தோழர்கள் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் நோக்கி இரவு 9 மணி முதல் குவியத் தொடங்கினர்.

டெல்லி ஆர்ப்பாட்டத்துக்கு பயணமான கழகத் தோழர்களை வாழ்த்தி வழியனுப்ப, ஈழத் தமிழர்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தலைவர்கள், தொடர் வண்டி நிலையத்துக்கு வந்து, கழகத் தலைவர், பொறுப்பாளர்களுக்கு ஆடை அணிவித்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தி.மு.க. வெளியீட்டு பிரிவு செயலாளர் திருச்சி செல்வேந்திரன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி அமைப்புச் செயலாளர் வே. ஆனைமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், கவிஞர் தாமரை, கவிஞர் அறிவுமதி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஆகியோர், தோழர்களைப் பாராட்டி ஆடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர்.

‘இந்திய அரசே, இலங்கைக்கு ஆயுதம் அனுப்பாதே’ என்ற ஒலி முழக்கம் - தொடர்வண்டி நிலையத்தை அதிரச் செய்தது. பிப்ரவரி 3 ஆம் தேதி இரவு, பிப். 4 ஆம் தேதி பகல் - இரவுப் பயணம். மராட்டியத்தைத் தாண்டி, வட மாநிலங்களை நெருங்கிய போது - கடுமையான குளிர் வாட்டத் தொடங்கிவிட்டது. பகிர்ந்து உண்டு கலந்து விவாதித்து, கூடிப் பேசி மகிழ்ந்து, கழகத் தோழர்கள் பயணத்தை இனிமையாக்கி மகிழ்ந்தனர். பல்வேறு மாவட்ட கழகத் தோழர்கள் உறவாடி - கொள்கை நட்பையும், தோழமையையும் வலிமையாக்கிக் கொண்டனர். பிப். 5 ஆம் தேதி காலை 7 மணியளவில் நடுங்கும் குளிரில் புதுடில்லி தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்தனர். இரு நாட்கள் முன்னதாகவே டெல்லி சென்று, பயண ஏற்பாடுகளைத் திட்டமிட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர் அன்பு தனசேகர், இலக்குமணன் ஆகியோர் தோழர்களை வரவேற்க டெல்லி தொடர்வண்டி நிலையம் வந்திருந்தனர்.

டில்லி ராஜேந்தர் நகரிலுள்ள ‘சனாதன் தர்மந்திர்’ கரோல்பாக்கில் உள்ள ‘குரு ரவிதாஸ் வைஸ்ராம் தம்மந்திர்’ என்ற இரண்டு இடங்களில் தோழர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு ‘மந்திரி’லும் 200 தோழர்கள் வரை தங்க வைக்கப்பட்டனர். தோழர்களை தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏழு பேருந்துகளும், புதுடில்லி தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தன.

தோழர்கள் தங்குமிடங்களுக்குச் சென்று காலைக்கடமைகளை முடித்து, தனிப் பேருந்துகளில் டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளைப் பார்வையிட்டனர். தோழர்கள் தங்குமிடத்திலேயே தமிழ்நாட்டு உணவுகளைத் தயாரிக்கும் சமையல் கலைஞர்களை நியமித்து, உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

அய்ந்தாம் தேதி இரவு 9.30 மணியளவில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் மாணவர்கள் - ஈழத் தமிழர் போராட்ட வரலாறு, சமாதான உடன்பாட்டை சீறிலங்கா ரத்து செய்தது தொடர்பான சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பேராசிரியர் சரசுவதி ஆகியோர்சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உரையை பேராசிரியர் சரசுவதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறியதோடு, ஈழப் போராட்ட வரலாறுகளை விளக்கி ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பேராசிரியர் சரசுவதி விளக்கமளித்தார்.

ஈழப் பிரச்சினையை வெளிமாநில மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளும் நல்ல நிகழ்வாக இது அமைந்தது என்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழக மாணவர் தோழர் கலையரசன் தெரிவித்தார். நள்ளிரவு 1 மணி வரை - இந்த நிகழ்ச்சியும், கலந்துரையாடலும் நடந்தது. அய்ந்தாம் தேதி மாலை - கோவையிலிருந்து விமானம் மூலம், டெல்லி வந்து சேர்ந்த பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், கழகத் தோழர்களுடன் இணைந்து கொண்டார். கழக மூத்த வழக்கறிஞர் துரைசாமியும், விமானம் வழியாக டெல்லி வந்தடைந்தனர்.

‘சனாதன தர்மந்திரில்’ - கழகத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள், கழகத் தோழர்கள், அடுத்த நாள் 6 ஆம் தேதி காலை ஆர்ப்பாட்டத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைத் திட்டமிட்டனர். ஆர்ப்பாட்ட முழக்கங்கள், கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகள் தயாரிக்கப் பட்டன. ஈழத்தில் சிங்கள விமானத்தின் குண்டு வீச்சில் படுகாயமடைந்து நிற்கும் ஈழத் தமிழர்களின் துயரங்களை எடுத்துக் காட்டும் குறியீடாக ‘காயக்கட்டுகளுடன்’ ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் தோழர்கள் இறங்கினர். நள்ளிரவு ஒரு மணி வரை ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. காவல்துறை அதிகாரிகள் நேரில் மண்டபம் வந்து, ஆர்ப்பாட்டத் திட்டம் பற்றி கேட்டறிந்தனர்.

ஆறாம் தேதி அதிகாலையிலிருந்து உறைய வைக்கும் குளிரில் தோழர்கள் ஆர்ப்பாட்டத்துக்குத் தயாரானார்கள். எட்டு மணியளவில் காலை உணவு முடிந்தவுடன், ‘சனாதன தர்மந்திரில்’ தோழர்களுக்கு காயக்கட்டுகள் போடும் பணிகள் தொடங்கின. தோழர்கள் மட்டுமின்றி, சிறுவர்கள், பெண்கள், ஆர்வத்துடன் முன் வந்து காயக்கட்டுகளைப் போட்டுக் கொண்டனர்.

இரண்டு மண்டபங்களிலும் தங்கியிருந்த தோழர்களை ஏற்றிக் கொண்டு தனிப் பேருந்துகள் 10.30 மணியளவில் ‘ஜந்தர் மந்திர்’ பகுதியை வந்தடைந்தன. அதுதான் ஆர்ப்பாட்டம் தொடங்கும் இடம், அருகே நாடாளுமன்ற வீதி. கை, கால், தலைகளில் காயக்கட்டுகள், கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகள், கார்ட்டூன் படங்கள், செஞ்சோலைக் கொடுமையை சித்தரிக்கும் படங்கள், பெரியார் திராவிடர் கழகத்தின் கொடிகள் - ஆங்கிலம், இந்தி மொழிகளில் எழுதப்பட்ட பதாகைகள் ஆகியவற்றுடன் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக ‘ஜந்தர் மந்திரில்’ குவிந்தனர். ஜந்தர் மந்திர் பகுதி முழுதும் கருஞ்சட்டைத் தோழர்களின் கடலாகவே காட்சியளித்தது.

தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. டெல்லி பத்திரிகையாளர்களுக்கும், தொலைக்காட்சியினருக்கும், இந்த நிகழ்வுகள் வியப்பாகவும், வித்தியாசமாகவும் இருந்தன. ஊடகவியலாளர்கள் பெருமளவில் திரண்டனர். ஆர்ப்பாட்டம் பற்றி கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் கருத்துகளைப் பதிவு செய்தனர். 30 நிமிடம் வரை தொடர்ந்து, “இந்திய அரசே, இலங்கைக்கு ஆயுதம் அனுப்பாதே, புத்த தேசம் தமிழனைக் கொல்லுது, காந்தி தேசம் ஆயுதம் வழங்குது” என்ற முழக்கங்கள் - விண்ணைப் பிளந்தன. உறைய வைக்கும் குளிரில் பெரியார் தொண்டர்களின் லட்சியச் சீருடையான கருப்பு சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் முழக்கமிட்டனர்.

தொடர்ந்து - ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து, கழகத்தின் மூத்த வழக்கறிஞர் துரைசாமி உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஒவ்வொரு நாளும் - ஈழத் தமிழர்கள் உயிர் பாதுகாப்பு தேடி, இந்தியாவுக்கு வருகிறார்கள். அடிபடுகிற தமிழனுக்காக அழும் உரிமைகூட தமிழ்நாட்டில் இல்லை. கென்யாவில் குஜராத்திகள் தாக்கப்பட்டால், குஜராத் கொந்தளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு - ஈழத் தமிழ்மக்கள் அகதிகளாகக்கூட வரமுடியவில்லை. தமிழக அரசு அகதிகளையும், பயங்கரவாதிகளாகவே நடத்துகிறது. கடலுக்குள் சிங்கள ராணுவம் கண்ணி வெடிகளைப் புதைத்து, தமிழக மீனவர்களின் உயிருக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது.

தமிழக காங்கிரசாரை கேட்கிறோம் - ராஜீவ் கொலை நடந்து 17 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதற்காக, இன்றும் நீங்கள் சோகத்தைத் தான் கடைபிடிக்கிறீர்களா? மகிழ்ச்சிக் கொண்டாடவே இல்லையா? செஞ்சோலை மாணவிகளும், அப்பாவி மக்களும் கொல்லப்படுகிறார்கள். அதற்காகவாவது, நீங்கள் வருத்தம் தெரிவித்தது உண்டா?” என்று கேட்டார்.

“தமிழ்நாட்டிலே காங்கிரசார் ஈழத் தமிழர் பற்றிப் பேசுவதே பயங்கரவாதம்; தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் போடுகிறார்கள். அதே காங்கிரஸ் கட்சி ஆளும் டெல்லியில் தான், இப்போது நாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டு போராடிக் கொண்டிருக்கிறோம். தமிழக காங்கிரஸ் கட்சிக்காரர்களே, தி.மு.க. ஆட்சியை மிரட்டும் காங்கிரஸ்காரர்களே, இதற்கு, என்ன பதில் சொல்கிறீர்கள்?” என்று, கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சுட்டிக்காட்டியபோது, கூட்டத்தினர் ‘வெட்கம் வெட்கம்’ என்று குரல் கொடுத்தனர்.

“இலங்கை சுதந்திர தின விழா நிகழ்ச்சியை ரத்து செய்த பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டுகிறோம். ஆனால், இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்று கூறிக் கொண்டு, இதற்கு நேர்மாறாக, ராணுவத்தால் அடக்க முயலும் சிறீலங்காவுக்கு ராணுவ உதவி செய்வது ஏன்?” என்று பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கேட்டார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகையில், “இந்திய அரசு, இலங்கைக்கு ராணுவ உதவி செய்யக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்து நாங்கள் கையெழுத்துப் பெறச் சென்றபோது, அனைத்துக் கட்சியினரும், பொது மக்களும் பேராதரவு காட்டினர். இது தான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும். தமிழ் ஈழத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள், பெரியார் திராவிடர் கழகத்துக்கு உண்டு என்றாலும், இந்த ஆர்ப்பாட்டத்தை இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்யக் கூடாது என்ற ஒரே கோரிக்கையை மட்டும் முன் வைத்து நடத்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் சரசுவதி - ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கியும், ஈழத் தமிழர்களின் போராட்டம், சர்வதேச சட்டங்கள் அங்கீகரித்துள்ள ‘தேசிய சுயநிர்ணய உரிமை’யின் அடிப்படையில் நடக்கும் நியாயமான போராட்டம் என்பதை விளக்கியும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

உரையினைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை நோக்கி, ஆர்ப்பாட்ட ஊர்வலம் புறப்பட்டது.

காவல்துறை அனுமதித்திருந்த ‘தடுப்பரண்’ முன் ஊர்வலம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆயுதம் அனுப்புவதை நிறுத்தக் கோரி கண்டன முழக்கங்கள் இந்தியில் எழுப்பப்பட்டன. ‘தடுப்பரண்’ முன் தோழர்கள் அனைவரும் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் பயணத்துக்கு பொறுப்பேற்ற தோழர்கள் வழியனுப்பிய தலைவர்களுக்கு நன்றி கூறி, ஆர்ப்பாட்டம் நிறைவு செய்யப்பட்டது.

தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்குவதற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் துரைசாமி, கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர், காவல்துறை ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். பிரதமர் அலுவலக அதிகாரி, கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டார்.

டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடந்த செய்தி, அடுத்த சில நிமிடங்களிலேயே சர்வதேச ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும், வலம்வரத் தொடங்கிவிட்டன. இணையத் தளங்கள் ஒரு மணி நேரத்துக்குள் வெளியிட்ட ஆர்ப்பாட்ட செய்திகளையும், படங்களையும் சர்வதேச சமூகத்தைச் சென்றடைந்தது.

பிப். 6 ஆம் தேதி அன்றைக்கே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி - மாலை 4.30 மணியளவில் நேரில் சந்திக்க ஏற்பு வழங்கியிருந்தார். அன்று பிரதமர் கூட்டியிருந்த அவசரக் கூட்டத்தின் காரணமாக 7 ஆம் தேதி காலை பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லத்தில் சந்திக்க இயலுமா என்று அதிகாரிகள் கேட்டதற்கு, கழக சார்பில் ஏற்பு வழங்கப்பட்டது.

7 ஆம் தேதி காலை 10 மணியளவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் துரைசாமி, பொதுச் செயலாளர்கள் கோவை. இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் அமைச்சரின் இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவையும், தமிழகத்தில் பெறப்பட்ட 10 லட்சம் கையெழுத்துகளின் ஒரு பகுதியையும் வழங்கினர்.

7 ஆம் தேதி காலை கழகத் தோழர்கள் தனிப் பேருந்துகளில் ஆக்ரா பயணமானார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்துவிட்டு, கழகத் தலைவர், பொதுச் செயலாளர்கள், தொடர்வண்டி வழியாக ஆக்ரா வந்தடைந்து, கழகத் தோழர்களுடன் இணைந்து கொண்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கழகத்தினர், ஆக்ரா தொடர் வண்டி நிலையத்திலிருந்து, இரவு 10 மணிக்கு ‘கிராண்ட் டிரங்க் விரைவு தொடர்வண்டி’ வழியாக ஆக்ராவிலிருந்து சென்னைப புறப்பட்டனர்.

தொடர்ச்சியான பயணம், கடுமையான குளிருக்கிடையே ஆர்ப்பாட்டத்தின் வெற்றியில் உற்சாகம் பெற்ற கழகத் தோழர்கள் பயணம் முழுதும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இணைந்து எழுச்சிப் பாடல்களைப் பாடினர். தோழர்களைச் சந்தித்து, தலைவரும், பொதுச்செயலாளர்களும் கலந்துரையாடினர். தலைவர்கள், தொண்டர்கள் என்ற எல்லைக் கோடுகளுக்கு இடமின்றி தோழமையை வளர்த்துப் போற்றி வரும் பெரியார் திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்களும், செயல் வீரர்களும், தோழர்களாய் இணைந்து உணர்வுகளைப் பகிர்ந்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். கழகத்தின் அடுத்த செயல் திட்டங்களை அசைப் போட்டனர்.

9 ஆம் தேதி காலை 8 மணியளவில் சென்னை தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி, அடுத்த களப்பணிகளைத் தொடங்கிடும் உற்சாகத்தோடு, பிரியா விடை பெற்றனர் கழகத் தோழர்கள்.
- நமது செய்தியாளர்

பெருமிதம் கொள்கிறோம் -
அன்பார்ந்த தோழர்களே!

இந்திய அரசே! இலங்கைக்கு இராணுவ உதவிகளைச் செய்யாதே! என்ற கட்சி, சாதி, மதம் கடந்த தமிழர்களின் கோரிக்கை, பத்து இலட்சம் கையெழுத்துகளாக பதியப் பெற்று புது தில்லியில் 6.2.2008 அன்று பேரணி - ஆர்ப்பாட்ட முடிவில் மைய அரசின் தலைமை அமைச்சர் அலுவலகத்திலும், பாதுகாப்பு அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்தும் கையளித்து திரும்பியுள்ளோம்.

100 பெண்கள், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள்.

பழக்கப்படாத உறைபனிக் குளிரிலும், கருப்புடை வெளியே தெரியவேண்டும் என்பதற்காக குளிர்ப்பாதுகாப்பு உடைகள் இன்றி பேரணி, ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் கலந்து கொண்டனர்.

காயக்கட்டுகள், கோரிக்கை அட்டைகள், ஈழத் தமிழர் படுகொலைப் படங்கள், கழகக் கொடிகள் என ஏறத்தாழ அனைவரும் ஏதாவது ஒன்றைக் கையில் ஏந்தி நின்ற பாங்கு.

மூன்று நாள் விறைக்க வைக்கும் குளிரிலும் எவர் ஒருவரும் உடல்நலக் குறைவுபடாமல் இருந்த மன, உடல் வலிமை, அச்சு, காட்சி ஊடகங்களால் வியப்போடு எடுத்துக் கூறப்பட்டன.

தோழர்களின் பொருளாதார, குடும்ப சூழல்களை அறிந்தமை யால், போராட்டம் திட்டமிட்ட போது நாங்கள் எதிர்பார்த்ததோ 150 பேரளவுக்கு மட்டுமே. ஆனால் திரண்டதோ மும்மடங்கு.

அண்டை நாட்டில் இனப்படுகொலைக்கு ஆளாகி அல்லலுறும் தமிழருக்காய் திரண்டு வந்து, அயல்நாடு போல நமக்கு தொலைவால், தட்ப வெப்பத்தால், உணவால், உடையால், பண்பாட் டால் அன்னியப்பட்டுள்ள புதுதில்லியில் நாம் எழுப்பிய குரலுக்கு மைய அரசு செவி சாய்க் கிறதோ இல்லையோ, நமது தமிழர்களையாவது எழுச்சிப் பெறச் செய்யும் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் மன நிறைவு கொள்கிறோம்.

பயணம் புறப்படும் நேரம் வரைகூட முழுத் தொகையையும் செலுத்த முடியாமல் திரும்பிய பின்னர் கொடுக்கும் குடும்பங்கள்; நம்பி நிற்கும் வருமானத்தையும் இழந்து, மேலும் செலவு செய்து, டெல்லி வரவேண்டிய பொருளாதார நிலை. ஆனாலும்கூட, குழந்தைகளும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டு ஒலி முழக்கங்களை உணர்வு பொங்க எழுப்பியும், சங்கடங் களையும் மகிழ்வோடு பொறுத்துக் கொண்டும் பங்கேற்ற கொள்கை நிலை; இது நமது கடமை தானே என்பதால் நன்றி கூறுவதைத் தவிர்த்தாலும், பெருமிதம் கொள்கிறோம் என்பதை கூறத்தான் வேண்டும்.

அதோடு தோழர்களே!

அண்டை நாட்டுத் தமிழர்கள் சுயமரியாதையுடன், அமைதி யாக வாழ தடையாய் நிற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராக, துணை நிற்கும் இந்திய அரசுக்கு எதிராக நாம் எடுத்தப் போராட்டத்தை மேலும் கூடுதல் சக்தியைத் திரட்டிக் கொண்டு, வலுவாகவும், பரவலாகவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டியுள்ள அதே வேளை...

உள்நாட்டுத் தமிழர்களில் கால்பங்கினை ஒதுக்கி வைத்து, சாதி, மத, சா°திரங்களின் பேரால் தனிக்குவளை, தனி சுடுகாடு, பொது இடங்களில் அனுமதி மறுப்பு என்றெல்லாம் ஒடுக்கி, நசுக்கி, சுயமரியாதையுடன் அமைதியாக வாழவிடாமல் அடக்கிச் சுகம் காணும் ஆதிக்கவாதிகளின் கொடுமைகளைக் களைய அடுத்த கட்டப் போராட்டத்தை உடனே முன்னெடுக்க வேண்டிய கடமையும் எதிரே நிற்கிறது.

விரைவில் அது குறித்து கழகம் எடுக்கவுள்ள போராட்டத் திலும் முன்னிலும் கூடுதல் சக்தியோடு, பரவலாக நடத்த...

தோழர்களே! இப்போதிருந்தே அணியமாகுங்கள்!

தோழமையுடன்
(தா.செ. மணி)
தலைவர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com