Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2008

இந்திய அரசியலின் அதிசயம் வி.பி.சிங்

இந்திய அரசியலில் அதிசய மாமனிதராக வந்துதித்தவர் வி.பி.சிங் என்று பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.

24.12.2008 அன்று ‘கீற்று இணைய தளம்’ சார்பில் சென்னை அண்ணா சாலையிலுள்ள ‘புக் பாயின்ட்’ அரங்கில் நிகழ்ந்த வி.பி.சிங் இரங்கல் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

‘கீற்று இணையதளம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவிக்கிறோம். தகவல் தொழில் நுட்பத் துறையில் கால் பதிந்து நிற்கும். தமிழின உணர்வுள்ள இளம் தலை முறை சமுதாயப் பார்வையோடு ஒரு இணையதளத்தை உருவாக்கி அந்தப் பணியின் எல்லையை மேலும் விரி வாக்கி, ஒரு இயக்கமாக நடத்தி வரும் அவர்களின் சமுதாய உணர்வு எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.

வடநாட்டில் எத்தனையோ தலை வர்கள் உண்டு. இங்கே சகோதரி ஓவியா குறிப்பிட்டதைப்போல் பெரியாரியல் வாதிகளான எங்களுக்கு எந்த வட நாட்டுத் தலைவர் மீதும் அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. அம்பேத்கர் ஒருவரைத் தவிர; எல்லைகளைக் கடந்து தமிழர்களின் இதயத்தோடு ஒன்றிவிட்ட ஒரு தலைவராக வி.பி.சிங் அவர்கள் மட்டுமே தெரிகிறார். இந்திய அரசியலில் இவரைப்போல் ஒரு அதிசயமான மனிதரை நாம் கண்டதில்லை. பார்ப்பன ஊடகங்கள் அவர் மீது கக்கிய கசப்பு ஒன்றே போதும். அவரது பெருமையை அடையாளப்படுத்துவதற்கு இங்கே ‘இந்தியா டுடே’ என்ற பத்திரிகை வி.பி.சிங் மறைவுக்குப் பிறகும் அவரை சிறுமைப்படுத்தி எழுதியிருந்ததைப் பலரும் ஆத்திரத்தோடு கண்டித்தார்கள். அந்தப் பத்திரிகைகள் இப்படி எழுதுவது தான் வி.பி.சிங் மிகச் சரியான மனிதர் என்பதை மீண்டும் உறுதியாக்குகிறது. என்றைக்குமே ஊடகங்களின் வளையத்துக்குள் அவர் வீழ்ந்தது கிடையாது. இந்த நாட்டின் ஊடகங்கள் பற்றிய தெளிவான புரிதல் தந்தை பெரியார் அவர்களைப் போல் வி.பி.சிங்குக்கு இருந்தது. அதை வி.பி.சிங் தனக்கே உரிய மொழியில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததற்காக அவர் பதவியை இழந்தது நமக்குத் தெரியும். நாடாளுமன்றத்தில் அவர் நம்பிக்கை ஓட்டு கிடைக்காமல் பதவியை விட்டு விலகினார். பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான். (2.12.89 இல் பிரதமராகப் பதவி ஏற்று 10.11.1990-ல் பதவி இழந்தார்) இரவு வரை ஓட்டெடுப்பு நீண்டு, நள்ளிரவுச் செய்தியில் ‘தூர்தர்ஷன்’ ஆங்கிலச் செய்தியின் பெண் செய்தி அறிவிப் பாளர் ஒருவர் அந்தச் செய்தியை
‘ஏஞ ளுiபோ எடிவநன டிரவ டிக ஞடிறநச’ என்று கூறியபோது அவரின் நா தழுதழுத்து, துயரத்தோடு, அடுத்த வரி செய்தியைத் தொடர முடியாமல் தவித்ததை நாடு முழுதும் லட்சோபலட்சம் மக்கள் பார்த்தனர். வி.பி.சிங் ஒழிந்தார் என்று பார்ப்பன வட்டாரங்களும், இந்துத்துவ சக்திகளும் மகிழ்ச்சிக் கூத்தாடின. அப்போது, ஒரு செய்தியாளர் வி.பி.சிங் கிடம் கேட்டார்.

“பதவியை இழந்து விட்டீர்கள்; பிரதமர் பதவியை இழக்கப் போவது உங்களுக்கு தெரியும். அந்த பதவியிலிருந்த கடைசி நாளில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?” என்று விஷமத்தோடு அந்தக் கேள்வி இருந்தது. அதற்கு வி.பி.சிங் பதில் சொன்னார்: “நண்பரே, அரசியல் நாட்காட்டியில் கடைசி தேதி என்று எதுவும் கிடையாது.”

மற்றொரு முறை - ஒரு பார்ப்பன செய்தியாளர் விரக்தியின் உச்சிக்குப் போய், அவரிடம் கேட்டார், “நீங்கள் எங்கே சென்றாலும், எங்கே பேசினாலும் - சமூக நீதி - சமூக நீதி என்பதை மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறீர்களே; வேறு எந்தப் பிரச்சினையுமே உங்களுக்கு தெரியவில்லையா?” என்று கேட்டார். வி.பி.சிங் பதில் சொன்னார், “நண்பரே, நான் பயணிக்கும் இடங்களுக்கெல்லாம் நீங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லையே” (கை தட்டல்) என்றார். தங்களுக்கு சாதகமான கருத்துக்களை கேள்வியாக்கி, தலைவர்களிடமிருந்து சாதகமான பதிலைப் பெறுவது பார்ப்பன செய்தியாளர்களின் வழக்கமான தந்திரம். அற்பப் பிரச்சினையில் கூட ‘அவாள் நலன்’ அடங்கி இருந்தால், அதை ஏதோ சர்வதேசப் பிரச்சினை போல கேள்வி கேட்பது உண்டு. அத்தகைய தருணங்களில் வி.பி.சிங் தெளிவாக சொல்லியிருக்கிறார், “உங்கள் கருத்துக்களை எனது வாய்க்குள் திணித்து பதில் பெற முயலாதீர்கள்.”

ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம் ஈழத்திலே தமிழினப் படுகொலைகளை நடத்தியபோது, சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான் இந்திய ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டது. செய்தியாளர்கள் கேட்டனர், “விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீங்கள் பயங்கரவாத இயக்கமாகக் கருதவில்லையா?” என்று. வி.பி.சிங் சொன்னார், “எந்த ஒரு இயக்கத்துக்கும் முத்திரைக் குத்துவதற்கான ‘ரப்பர் ஸ்டாம்ப்’ எதுவும் எனது சட்டைப் பைக்குள் இல்லை”. இலக்கிய மொழியிலேயே பதில்கள் தெறித்து வந்தன.

இங்கே நண்பர் ஞானி பேசும் போது, அவரது சிறுநீரகம் பாதிக்கப் பட்டது. மதவெறிக்கு எதிராக பம்பா யில் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் தான் என்ற வரலாற்றை நினைவுபடுத்தி மதவெறிக்கு பலியானதுதான் வி.பி.சிங் உயிர் என்று, மிகச் சரியாகக் குறிப் பிட்டார். இது பற்றி மேலும் ஒரு செய்தியை நான் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக் குப் பிறகு முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை , ‘இந்துத்துவா’ சக்திகள் திட்டமிட்டு தொடங்கின. அப்போது மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து கொண் டிருந்தது. ஆட்சியின் ஆதரவோடு இந்தக் கலவரங்கள் நடந்தன. சிவ சேனைத் தலைவர் பால்தாக்கரே தனது வீட்டிலிருந்து கலவரங்களுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்ததையும், சாட்சி சொல்வதற்கு ஒரு முஸ்லீம் கூட உயிருடன் இருக்கக் கூடாது என்று உத்தரவு போட்டதையும் கலவரங்கள் பற்றி விசாரித்த ‘ஸ்ரீ கிருஷ்ணா விசாரணை’ ஆணையத்தின் பரிந்துரை கூறியுள்ளது.

அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் வி.பி.சிங். 1993 ஜனவரி முதல் வாரத்தில் கலவரம் தீவிரமான வுடன் சென்னையிலிருந்து பெங்களூர் போய் அங்கே தமது கட்சித்தலைவர் களுடன் கலந்து பேசிவிட்டு, கலவரத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற பதைப்பில் நேராக பம்பாய் போகிறார். கலவரத்தை ஆட்சி யாளர்களும், மதவெறி வன்முறையாளர் களும் நிறுத்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். பா.ஜ.க. - சிவசேனா ஆட்சி வி.பி.சிங் போராட் டத்தை புறக்கணித்தது. வி.பி.சிங் உண்ணாவிரதமும் தொடர்ந்தது. வி.பி.சிங் உடல் நிலையும் பாதிக்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் ‘இந்துத்துவா’ சக்திகள் வி.பி.சிங் உண்ணா விரதத்தைக் கேலி செய்யும் நோக்கத்தோடு, அவரது போராட்ட இடத் துக்கு அருகே ஒரு பந்தலைப் போட்டுக் கொண்டு ‘உண்ணும் விரதம்’ என்று கூறி சாப்பிடும் போராட்டத்தை தொடங்கினர். இதற்கு அரசும் அனுமதித்தது. இந்த நிலையில் தான் வி.பி.சிங், ‘இதற்கு என்னுடைய பதில் - இனி தண்ணீரும் நான் குடிக்கப் போவதில்லை’ என்று அறிவித்து, தண்ணீரும் குடிக்காமல் உண்ணாவிரதத்தைத் தொடந்தார். தண்ணீர் குடிக்காமலே வி.பி.சிங் உண்ணாவிரதம் தொடர்ந்தது. அவரது உடல் நிலை மிக மோசமாகி விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை தந்த நிலையிலும், பா.ஜ.க. ஆட்சி, வி.பி.சிங் அப்படியே மரணத்தை சந்திக் கட்டும் என்று முடிவு செய்து விட்டது.

அப்போதுதான் வி.பி.சிங்கின் நம்பிக்கைக்குரிய நண்பராக எப்போதும் அவருடன் இருக்கும் சுதர்சன் லோயல்கா என்பவர் பதைபதைத்து, மகாராஷ்டிரா அரசு - வி.பி. சிங்கை கைது செய்து, மருத்துவ மனையில் உடனே அனுமதிக்கா விட்டால், ஆட்சியின் மீது கொலை முயற்சி வழக்கு தொடருவேன் என்று அறிக்கை விடுத்தார். அதைக் கண்டு பயந்த நிலையில் தான், ஆட்சி யாளர்கள், வி.பி.சிங்கை கைது செய்தனர். அவரது சிறுநீரகம், அப் போதிருந்து செயலிழக்கத் தொடங்கியது தான். அவர் வாழ்நாள் முழுதும் சிறு நீரகத்துடன் போராட வேண்டியிருந்தது. மதவெறிக் குண்டுகள் காந்தி யார் மீது நேரடியாகவே பாய்ந்தது என்றால், அதே இந்துத்துவா மதவெறி வேறு வகையில் வி.பி.சிங், உயிரைப் பறித்தது.

அவர் வாழ்க்கை முழுதும் இலட்சிய உறுதி கொண்டவராகவே திகழ்ந்தார். பதவி அதிகாரங்களை கொள்கைக்காக உதறி எறிவதே அவரது வாழ்க்கையாக இருந்திருக்கிறது. பதவிக்காக - எல்லாவற்றையும் துறக்கக்கூடிய இன்றைய அரசியல் பொது வாழ்க்கையில் வி.பி.சிங் ஒரு மாறுபட்ட அதிசயமாகவே விளங்கினார். “அரசியலில் எல்லாம் கெட்டுவிட்டது; நேர்மையில்லை; லஞ்சம் தலைவிரித்தாடுகிறது; ஒழுக்கம் போய்விட்டது” என்றெல்லாம் கூக்குரல் போடும் பார்ப்பனர்களும், பார்ப்பன தலைவர்களும் இந்த நேர்மையான மனிதரை எப்போதாவது பாராட்டியிருக்கிறார்களா? இல்லை. இழிவு செய்தார்கள்; ஏளனம் செய்தார்கள்.

கல்லூரி பருவத்திலே அரசியல் ஈடுபாடு கொண்டவர் வி.பி.சிங். 1969 ஆம் ஆண்டு உ.பி.யில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது முதல் அவரது பொது வாழ்க்கை தொடங்குகிறது. 1971 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை துணை அமைச்சரானார். அப்போது அவருக்கு வயது 38. அவரது திறமை, நேர்மை, ஆழமான பார்வை, அவரது தனிப் பண்புகளை வெளிச்சப்படுத்தின. 1980 ஆம் ஆண்டில் 49 வயதில் - உ.பி. முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். உ.பி. மக்களை அச்சுறுத்தி வந்த சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களின் கொள்ளைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக மக்களிடம் உறுதி தந்தார். பதவிக்கு வந்தவுடன் கொள்ளையர்களை சமாதான வழியில் சரணடையச் செய்யும் முயற்சிகளில் ஜெயப் பிரகாஷ் நாராயணன் மூலம் இறங்கினார். ஜெயப் பிரகாஷ் நாராயணன் வழியாக கொள்ளையர்கள் ஆயுதங்களைக் கீழே போட முன் வந்தனர். அவர்களுக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கியது. ஆனால் சரணடைய மறுத்த ஒரு பிரிவினர், முதல்வர் வி.பி.சிங்கை பழி வாங்கிட அவரது சொந்த சகோதரனையே படுகொலை செய்து, வி.பி.சிங் வீட்டின் முன் கொண்டு வந்து பிணமாக வீசிப் போட்டனர். மக்களிடம் தந்த உறுதி மொழியைத் தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்று கூறி, 1983 இல் முதல்வர் பதவியைத் தூக்கி எறிந்தார் வி.பி.சிங்.

1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, அவரது மகன் என்ற ஒரே தகுதியில் அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு, பிரதமர் பதவி ஏற்றார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு பெற்றனர். காங்கிரஸ் சரித்திரத்திலேயே இவ்வளவு எண்ணிக்கையில் வெற்றிப் பெற்ற வரலாறு அப்போது தான். மிகப் பெரும்பான்மையோடு ராஜீவ் ஆட்சி அமைத்த போது, அவரது அமைச்சரவையிலே முதலில் தொழில் துறை அமைச்சர் வி.பி.சிங். பிறகு அவரது திறமையினால் நிதித்துறை அமைச்சராகிறார். நிதித் துறையை திறம்பட நிர்வகிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

நிதிநிலை அறிக்கையில் வரி வருவாய்க்கான இலக்குகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். ஆனால், இலக்குகள் எப்போதும் எட்டப்படுவது இல்லை. வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுகளே உடந்தையாக செயல்படும். ஆனால், வி.பி.சிங் நிர்ணயித்த இலக்கை எட்டிக் காட்டினார். பெரும் தொழில் நிறுவனங்களின் வரி ஏய்ப்புகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார், வி.பி.சிங்கின் இந்த நடவடிக்கைகளுக்கு வருவாய்த் துறை செயலாளராக இருந்த நேர்மையான அதிகாரி பூரேலால் என்பவர் மிகவும் துணையாக நின்றார். அம்பானி - கிரிலோஸ்கர் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் நடந்தன. பெரும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு குற்றத்துக்காக கைது செயயப்பட்டு கைவிலங்கு போட்டபோது, தொழிலதிபர்கள் கலங்கிப் போனார்கள். பார்ப்பன தேசிய ஊடகங்கள், வி.பி.சிங் ‘சோதனை ராஜ்யம்’ நடத்துவதாக அலறின.

பெரும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய வரியை முறையாக வசூலித்தாலே போதும் என்று கூறிய வி.பி.சிங், வருமான வரித்துறை என்ற துறையே தேவை இல்லை. அது நடுத்தர மக்களை வதைப்பதாகும் என்று கூறினார். இந்தத் துறையிலிருந்து பெறப்படும் வருவாய் - அந்தத் துறையின் நிர்வாகத்துக்கு மட்டுமே பயன்படுகிறது. எனவே அத்துறையை இழுத்து மூடிவிட்டு, அதன் ஊழியர் அதிகாரிகளை வேறு துறைக்கு மாற்றலாம் என்பதே வி.பி.சிங்கின் கருத்தாக இருந்தது. ஆனால், பணத் திமிலங்களை பகைத்துக் கொண்டு பதவியில் நீடிக்க முடியுமா? பெரும் தொழிலதிபர்கள் தங்கள் செல் வாக்கைப் பயன்படுத்தி, ராஜீவ்காந்தியுடன் பேரம் பேசி, வி.பி.சிங் துறையை மாற்றச் செய்து விட்டனர்.

அதன் பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்ச ரானார் வி.பி.சிங். அப்போதும் அவரது நேர்மையை முடக்கிட முடியவில்லை. இந்தியாவின் ராணுவ செலவுகளை தணிக்கை செய்வதற்கு அன்னிய நாட்டு நிறுவனமான ‘ஃபேர்பாக்ஸ்’ என்ற நிறுவனத்தை பிரதமர் ராஜீவ் நியமித்தபோது, வி.பி.சிங் எதிர்த்தார். இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் - வெளிநாட்டு நிறுவனங்களின் தணிக்கைக்கு உட்படுத்துவது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது. நாட்டின் பாதுகாப்பை அடகு வைக்கக் கூடாது என்றார். அதைத் தொடர்ந்து போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து முறைகேடாக தரமில்லாத பீரங்கி வாங்கிய பிரச்சினை எழுந்தது. போஃபோர்ஸ் நிறுவன பீரங்கியைவிட ‘சோஃமா’ பீரங்கி தரமானவை என்று பாதுகாப்புத் துறை முடிவு செய்ததற்கு மாறாக, சுவீடன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கி வாங்கும் முடிவை ராஜீவ் காந்தி எடுத்தார். இந்த முடிவுக்கு வருவதில் முக்கிய நபராக செயல்பட்டவர் இத்தாலியைச் சார்ந்த குத்ரோச்சி.

ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கும்போது, கமிஷன் பெறக் கூடாது. இடைத் தரகர்கள் தலையிடக் கூடாது என்பது அரசின் கொள்கை. இந்தக் கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டு இடைத்தரகர் மூலம் இந்த பீரங்கி வாங்குவதில் கமிஷன் பெறப்பட்டது. இடைத்தரகர்களாக செயல்பட்ட பெரும் தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் கமிஷன் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் 3 பெயர்களில் போட்டனர். கமிஷனாகப் பெற்ற பணம் ரூ.64 கோடி (1990களில் இதன் மதிப்பு மிக அதிகம்). இதில் 40 கோடி ரூபாய் லோட்டஸ் என்ற பெயரில் போடப்பட்டது. ராஜீவ்காந்திக்குரியது தான் என்பது ஆவணங்களுடன் நிரூபணமானது. சுவீடன் நாட்டு பிரதமர் ஓலஃப் பாம் என்பவர் மிகவும் நேர்மையானவர். தமது நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் முறைகேடாக நடத்திய பேரத்தை அவர் ஏற்க மறுத்தார். முறையான விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என்று கூறிய அவர், அது தொடர்பான ஆவணங்களை வழங்கவும் முன் வந்தார்.

இந்த நிலையில் நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்த சுவீடன் பிரதமர், ஒரு நாள் விடியற் காலை சுட்டுக் கொல்லப்பட்டார். போபோர்ஸ் ஊழல் பற்றி விசாரித்த மத்திய புலனாய்வுத் துறை, குற்றவாளிகளைக் காப்பாற்ற முறைகேடாக முயற்சித்தது. சுவிடன் அரசு போபோர்ஸ் நிறுவனம் நடத்திய பேரங்கள் - விற்பனை தொடர்பான மூல ஆவணங்களை தருவதற்கு முன்வந்தபோது, நகல் பிரதியே போதும் என்று சி.பி.அய். கூறியது.காரணம், நகல் பிரதியை நீதிமன்றம் ஆவணமாக ஏற்காது. தப்பித்துக் கொள்ளலாம் என்பதால்தான். நாட்டையே உலுக்கி எடுத்த ஊழல் இது. இந்த ஊழல் பேரத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங், உடன்பட மறுத்தார். ராஜீவும், வி.பி.சிங்கும் சந்திக்காமலே இருந்தனர்.

1987 ஆம் ஆண்டு ஏப். 4 ஆம் தேதி ராஜீவ் - வி.பி.சிங்கை சந்தித்து, நமக்குள் இடைவெளி வந்துவிட்டது, இனி இணைந்து செயல்பட இயலாது என்று கூறியவுடன் வி.பி.சிங், அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார். “நாட்டின் பாதுகாப்பையும், கவுர வத்தையும் ஒரு குடும்பம், தனது விருப்பத்துக்கேற்ப ஆட்டிப் படைப்பதை ஏற்க முடியாது” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
காங்கிரசிலிருந்து வி.பி.சிங் நீக்கப்பட்டார். நாடாளுமன்ற பதவியிலிருந்தும் விலகிய வி.பி.சிங், தனது நியாயத்தை மக்கள் மன்றத்தில் கேட்கப் போகிறேன் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து, தனது அலகாபாத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியை வேட்பாளராக நிறுத்தியது. தனக்காக சுவரொட்டிகூட அச்சடிக்காமல், தலையில், ஒரு கைக் குட்டையைக் கட்டிக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து தொகுதி முழுதும் மக்களை சந்தித்துப் பேசினார். 1 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

போபோர்ஸ் பேரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று முதலில் கூறிய ராஜீவ், பிறகு கமிஷன் வாங்கப்பட்டது உண்மைதான் என்றார். அதன் பிறகு, கமிஷன் வாங்கப்பட்டிருந்தாலும், வாங்கியது நான் அல்ல என்றார். வி.பி.சிங் முன் வைத்த வாதங்களும், ஆவணங்களும் ராஜீவ் காந்திக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கின. தொடர்ந்து, 1988 இல் ஊழல் ஒழிப்பை முன் வைத்து ‘சன்மோர்ச்சா’ இயக்கத்தை வி.பி.சிங் தொடங்கினார்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com