Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2008

காலத்தை வென்று நிற்கும் மாமனிதர்

பார்ப்பன ஊடகங்களால் முழுமையாக வெறுக்கப்பட்ட ஒரு தலைவர் என்பது தான், வி.பி.சிங் உண்மையான தொண்டுக்கு கிடைத்த மகுடம். பார்ப்பன ஆதிக்கக் கொடுமை களுக்கு எதிராக - பார்ப்பன ஊடகங்களின் வெறுப்புகளை சுமந்து அவதூறுகளை புறந்தள்ளி பொது வாழ்க்கையில் பயணப்பட்ட ஒரே புரட்சித் தலைவர் பெரியார்; அதேபோல் இந்திய அரசியலின் பார்ப்பன அதிகார மய்யத்துக்கு எதிராக வரலாற்றுப் போக்கைத் திரும்பி அதிகார மய்யத்தை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை நோக்கித் திருப்பிய ஒரே தலைவர் விசுவநாத் பிரதாப் சிங் தான்! கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும் தான் அதிகாரம்; பதவி என்பதை - இந்திய அரசியலில் செயல்படுத்தி பதவிகளைத் துச்சமென தூக்கி எறிந்த வரலாற்றுப் பெருமை இந்த மாமனிதருக்கு மட்டுமே உண்டு. பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் வெளியிலிருந்து தந்த ஆதரவோடு, அவர் பிரதமர் பதவியில் நீடித்தாலும், ‘அயோத்தி ராமனுக்காக’ அத்வானி நடத்திய ‘ரத யாத்திரையை’ அவர் அனுமதிக்க தயாராக இல்லை. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசுப் பணிகளில் உறுதி செய்யும் மண்டல் பரிந்துரையை ஏற்கும் ஆணையையும் பிறப்பித்தார் (7.8.1990). பா.ஜ.க.வின் ஆதரவோடு ஆட்சியைத் தக்க வைப்பதைவிட, அதிகாரத்தை சமூக நீதிக்காக இழக்கலாம் என்ற உறுதியான கொள்கை முடிவை எடுத்தார்.

ஆட்சிக்கான ஆதரவை எதிர்பார்த்ததுபோல் பா.ஜ.க. விலக்கியது. நாடாளுமன்றத் திலே நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்து பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதி வழங்கிய தமது அரசின் முடிவை முன்வைத்து நியாயம் கேட்டார். வி.பி.சிங் அப்போது, சமூகநீதிக்கு எதிராக, அணி திரண்ட சக்திகள் எவை என்பதை நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். மண்டல் பரிந்துரையை கடுமையாக எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி 10 மணி நேரம் தண்ணீர் குடித்துக் கொண்டே பேசினார். இந்த சமூகநீதி எதிர்ப்பு அணியில் காங்கிரஸ்-பா.ஜ.க.வோடு கைகோர்த்து, வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. (இவருக்குத்தான் - பிறகு, கி.வீரமணியின், திராவிடர் கழகம் ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ பட்டத்தை வழங்கி மகிழ்ந்தது)

ராஜீவ்காந்தியும், ஜெயலலிதாவும் இப்போதும் அவர்கள் கட்சியின் தலைவர்கள் தான். ஆனால், கொள்கைக்காக பதவியை த் தூக்கி எறிந்த வி.பி.சிங், மக்கள் தலைவராக, வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். அவர் பிறப்பித்த இடஒதுக்கீடு ஆணையை ரத்து செய்யும் துணிவு, அதற்குப் பின் ஆட்சி சிம்மாசனத்துக்கு வந்த பா.ஜ.க.வினருக்கோ, காங்கிரசுக்கோ கூட வரவில்லை.
உ.பி.யின் முதல்வராக வி.பி.சிங் பதவி ஏற்றபோது, சம்பல் கொள்ளைக்காரர்களை மனித நேயத்துடன் அணுகி சரணடைய வைத்தார். அதிலும் ஒரு பிரிவினர் சரணடைய மறுத்து, வி.பி.சிங்கின் சொந்த சகோதரரையே படுகொலை செய்து, முதலமைச்சர் இல்லத்தின் முன்பே வீசினார்கள். சொந்த சகோதரனையே கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற முடியாத நான், உ.பி. மக்களை எப்படி காப்பாற்ற முடியும்? என்று தனக்குத் தானே நீதிக் கேட்டு முதல்வர் பதவியை தூக்கி எறிந்தார்.

இந்திரா மறைவுக்குப் பிறகு, ராஜீவ் அமைச்சரவையில் அவர்தான் நிதியமைச்சர். பெரும் தொழிலதிபர்கள் பணத் திமிங்கிலங்களின் வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்து துணிந்து நடவடிக்கைகளை எடுத்தார். தொழிலதிபர்களின் செல்வாக்குக்கு பணிந்த ராஜிவ், துறையை மாற்றி வி.பி.சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார். அப்போதுதான் ‘போபோர்ஸ் பீரங்கி’ பேரத்தில், ராஜீவ் ‘கையூட்டு’ பெற்ற லஞ்ச ஊழல் வெளிச்சமானது. குத்ரோச்சி எனும் இத்தாலி, தரகர் மூலம் ராஜீவ்காந்திக்கு ‘கமிஷன்’ பணம் கைமாறியது. சுவீடன் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் அம்பலமானது. போபோர்ஸ் ஊழல் விசாரணைக்கு நடவடிக்கை மேற்கொண்டதால், வி.பி.சிங், மீண்டும் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. தொடர்ந்து ஊழல் ஒழிப்புக்கு ‘ஜன்மோட்சா’ இயக்கத்தைத் தொடங்கிய வி.பி.சிங், பின்னர் தேசிய முன்னணியை உருவாக்கி, தேர்தலில் போட்டியிட்டு, பிரதமராகி, இந்திய அரசியலின் போக்கை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து திருப்பினார்.

ஈழத்திலே - ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம், பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கண்டு ராஜீவ் காந்தி பூரித்து மகிழ்ந்தார். அந்த ராணுவத்தை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அழைத்த பெருமை, அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்குக்குத்தான் உண்டு. விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக நீங்கள் கருதவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எந்த ஒரு இயக்கத்துக்கும் முத்திரை குத்தக்கூடிய ரப்பர் ஸ்டாம்ப் எனது சட்டைப் பையில் இல்லை என்று பதிலடி தந்தார்.

பம்பாயில், இந்து பார்ப்பன சக்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தைக் கண்டித்து, தண்ணீர்கூட அருந்தாமல், அவர் உண்ணாவிரதத்தை சில நாட்கள் தொடர்ந்தபோதுதான் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்புடன் 17 ஆண்டுகாலம் ஒவ்வொரு நாளும் அவர் போராடினார். மதவெறிக்கு எதிரான தளபதியாக, சமூக நீதியின் காவலராக வரலாற்றுப் புகழோடு இந்த மண்ணிலிருந்து 27.11.2008 அன்று விடைபெற்றுக் கொண்டுள்ளார்.

நேர்மை - தூய்மை - கொள்கை எல்லாம் அரசியலில் அற்றுப் போய்விட்டதாக கூச்சல் போடும் பார்ப்பன தலைவர்களும், பார்ப்பன ஊடகங்களும், களங்கமில்லாத இந்த மாமனிதனை அங்கீகரித்ததா? இல்லை. இழிவுபடுத்தினார்கள். சேறுவாரி இரைத்தார்கள். இவர்களின் கோபமும், வெறுப்பும், அவரது மரணச் செய்தியில்கூட பிரதிபலிக்கவே செய்தன. அந்த மாமனிதனின் மரணம், ஒற்றைக்காலச் செய்தியானது. அவரது இறுதி நிகழ்ச்சிகூட இந்த பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிப்புக்கு உள்ளாகிவிட்டது.

வி.பி.சிங் என்ற வரலாற்று நாயகர், காலத்தை வென்று நிற்கும் மாமனிதர் என்பதற்கு பார்ப்பன ஏடுகளின் இந்த வெறுப்பும் கசப்புகளுமே சான்றாக நிற்கின்றன. நன்றியுள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குடிமகனும், இந்த மனிதனின் நன்றி பாராட்டாத தொண்டுக்கு தலை வணங்குவான். சமூகநீதி சரித்திரத்தில் அழியாத அத்தியாயமாகிவிட்ட அந்த மனிதகுல மேதைக்கு பெரியார் திராவிடர் கழகம் தலைவணங்கி, வீர வணக்கத்தை செலுத்துகிறது.

வி.பி.சிங் முடிவெய்தினார்; வி.பி.சிங் வாழ்க! வாழ்க!!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com