Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2008

5 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை எதிர்க்காதது ஏன்?
‘ஆலய அன்ன’தானத்துக்கு ‘ஜே’ போட்டது ஏன்?
திரிபுவாத திம்மன்கள் - யார்? (12)

2001 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் பார்ப்பன ஆட்சி நடந்தபோது, அந்த ஆட்சியின் பிரச்சார பீரங்கியாய் மாறி, ஒவ்வொரு நாளும் ‘அம்மாவுக்கு’ ‘நாமவாளி’ பாடுவதையே பெரியார் தொண்டாகக் கருதி செயல்பட்டவர்தான் கி.வீரமணி. பெரியார் கொள்கைக்கு எதிராக எத்தனையோ நடவடிக்கைகளில் ஜெயலலிதா ஈடுபட்டபோது பல நேரங்களில் வாய் மூடி மவுனம் சாதித்தே வந்திருக்கிறார். சில நேரங்களில் பெரியார் கொள்கைக்கு எதிராக ஜெயலலிதாவைப் பாராட்டும் நிலைக்கும் போயிருக்கிறார். ஜெயலலிதா, பா.ஜ.க.வில் நேரடி உறுப்பினராக இல்லாவிட்டாலும், அவர் இந்துத்துவாக் கொள்கையில் ஊறிப்போய் நிற்பவர் என்பதே அவரது கடந்தகால வரலாறு. ஜெயலலிதா - மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது, பார்ப்பன இந்துத்துவா சக்திகள் மகிழ்ச்சிக் கூத்தாடி வரவேற்ற நிலையிலும் வீரமணி - ஜெயலலிதாவின் - அந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கவில்லை. மாறாக, திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டங்களில் அந்தச் சட்டத்தை நியாயப்படுத்தி, துரை சக்கரவர்த்தி போன்றவர்கள் கழகத் தலைமையின் ஆணையை ஏற்று பேசியதையும், மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து நீதிபதி வேணுகோபால் ‘விடுதலை’யில் கட்டுரை எழுதியதையும் ஏற்கனவே நாம் இத் தொடரில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இதே போல் ஜெயலலிதா கொண்டு வந்த மற்றொரு திட்டம் தான் ‘ஆலய அன்னதானம்’. கோயிலில், மதியத்தில் இலவச உணவு போடப்பட்டு, கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு வாரம்தோறும் ‘ஆன்மீக வகுப்பு’ நடத்தப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்தை தனது சொந்த திட்டமாகக் கருதி, நிதி திரட்டத் தொடங்கினார் ஜெயலலிதா. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி, திருக்குறள் வகுப்புகளை நடத்த ஆணையிட்டார். ஆனால், ஜெயலலிதாவோ அதற்கு நேர்மாறாக ஆலய அன்னதானத்தை அறிவித்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும், சுயமரியாதைக்காரருமான எம்.பி.சுப்ரமணியம், அத் திட்டத்தை எதிர்த்து 22.3.2002 இல் ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

“கோயில்களுக்கு பக்தர்கள் வருவது இல்லை. இதை ஊக்குவிக்கவே, தமிழக அரசு இத் திட்டத்தை வகுத்து செயல்படுத்துகிறது. சமய சார்பற்ற அரசாக செயல்பட வேண்டிய அ.இ.அ.தி.மு.க. அரசே இதை முன்னின்று நடத்துவதையும் செயல்படுவதையும் எப்படி நியாயப்படுத்த முடியும்? ஆண்டிப்பட்டி தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை மதம் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று தமிழக முதல்வர் கூறி வந்தார். இந்தப் பேச்சு என்னவாயிற்று? அ.இ.அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமய சார்பின்மைக்கு துரோகமாகும்.” - இப்படி சுயமரியாதை உணர்வோடு பெரியார் கொள்கைக் கண்ணோட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலுள்ள ஒரு தலைவரே அறிக்கை வெளியிட்டபோது, வீரமணி ‘விடுதலை’யில் -
“ஏழை மக்கள், பட்டினி கிடப்போரின் பசித் தீர்க்க, இத் திட்டம் உதவும் என்பதால், இலவச பகல் உணவு திட்டம் என்ற அளவில், இதை வரவேற்கலாம். வறுமை ஒழிப்புப் பணிதான் என்கிற வகையில்” (23.3.2008 ‘விடுதலை’) என்று தூக்கிப் பிடித்தார்.

மதக் கண்ணோட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை வறுமை ஒழிப்புக்கண்ணோட்டமாக பெரியார் இயக்கத் தலைவர் வீரமணி பார்த்தபோது, தேசிய இயக்கத்தலைவரோ பெரியார் பார்வையில் மதச்சார்பற்ற கொள்கைக்கு துரோகம் இழைக்கும் திட்டம் என்று மிகச் சரியாகவே பார்த்தார். இது பெரியார் கொள்கைப் புரட்டு அல்லவா? இந்த அன்னதான திட்டம் உட்பட ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு இந்துத்துவா ஆதரவுத் திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதாவை கோட்டையில் நேரில் சந்தித்து தமிழக ஆர்.எஸ்.எஸ். தூதுக் குழு 25.7.2002 அன்று பாராட்டுகளைத் தெரிவித்ததையும் சுட்டிக் காட்ட வேண்டும். இதேபோல் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு முழுதும் ஆரம்பப் பள்ளிகளில் 5 ஆம் வகுப்புப் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் 10 ஆம் வகுப்புக்கு நடத்தப்படுவதுபோல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற மிக மோசமான திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த தம்பித்துரை இத் திட்டத்தை அறிவித்தவுடன், தமிழகமே வெகுண்டெழுந்தது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தபோது வீரமணி மட்டும் அம்மா கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக கையைச் கட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டுவிட்டார். எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. கல்விக் கொள்கையில் தனது பார்வையை கூர்மையாக செலுத்தி வருவதுதான் பெரியார் இயக்கத்தின் தனித் தன்மையாகும். ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட காலத்திலிருந்தே - இது தொடருகிறது; பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமைக்கு எதிரான திட்டங்களோ, கொள்கைகளோ வந்தபோதெல்லாம் பெரியார் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். உடனடியாக இத் திட்டத்தை எதிர்த்து திரும்பப் பெறுவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டிய கடமையைச் செய்திருக்க வேண்டிய கி.வீரமணி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட குழந்தைகளின் தலையில் சுமையை ஏற்றி, 5 ஆம் வகுப்பிலேயே ‘வடிகட்டி’ விடும் சமூகநீதியின் கழுத்தை நெறிக்கும் இந்தக் கொள்கையை எதிர்க்காமல் பெரியார் கொள்கைக்கு துரோகமிழைத்தார்.

“அம்மாவை ஆதரித்து அறிக்கை விடவில்லையே! அம்மா ஆட்சியின் ஒரு திட்டத்தை ஆதரிக்காமல் இருந்ததே மிகப் பெரும் வீரம் அல்லவா?” என்றுகூட - திராவிடர் கழக ‘எழுத்து வீரர்கள்’ வாதிட்டாலும் வியப்பதற்கு இல்லை. ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்காத கி.வீரமணி அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் ஆட்சி கைவிட்டபோது, அதற்குப் பிறகு அம்மாவைப் பாராட்டி அறிக்கை விட்டார். திட்டம் திரும்பப் பெற்றதால், பாராட்டு அறிக்கை வந்தது. திரும்பப் பெறாமலே போயிருந்தால் வீரமணியும் மவுனமாகவே பச்சைக்கொடி காட்டியிருப்பார். பிறகு ஆட்சி மாற்றம் ஏதேனும் நடந்தால், அப்போது வேண்டுமானால் கடுமையாக எதிர்த்திருப்பார்.

பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து ‘திரிபுவாதிகள்’, ‘புரட்டர்கள்’, ‘திம்மன்கள்’ என்று பேனா பிடிக்கும் முன்பு தங்களது சொந்தக் கதைகளை இவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டாமா?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com