Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2008

கட்டுரையை நிகழ்வாக்கிய கதை!
திரிபுவாத திம்மன்கள் - யார்? (11)

பெரியார் ஒரு திறந்த புத்தகமாகவே செயல்பட்ட தலைவர். அதுவே அவரது வலிமையாகவும் இருந்தது. அவரது எழுத்தும் பேச்சுமே அதற்கு கல்வெட்டு சான்றுகளாக நிற் கின்றன. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு உடைமைகளை சேர்த்தவர் பெரியார். அதே சொத்துகள் பற்றியும், அதன் மதிப்பு பற்றியும் பொதுக் கூட்டங்களில் மக்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய தலைவராக பெரியார் திகழ்ந்தார்.

தி.மு.க.வின் வெளியீட்டு செயலாளர் சகோதரர் திருச்சி செல்வேந்திரன் நடத்தி வரும் ‘எங்களுக்கு மகிழ்ச்சி’ மாத இதழில் (செப்.2008) ஒரு கேள்விக்கு இவ்வாறு விடை அளித்திருந்தார்.

“நாட்டுடைமை பற்றி பெரியாரின் கருத்து என்னவாக இருந்தது” என்பது கேள்வி.

“ஒருவனுடைய வீடு கடைசிவரை அவனுடையதாகவே (அவன் பெயர் விளங்கும்படி) இருக்க வேண்டுமானால், அதை பொதுவுக்கு ஆக்க வேண்டும்” என்று பெரியார், ஒரு வீடு திறப்பு விழாவில் பேசியுள்ளார். அதனால் தன்னுடைய சொத்துக்களையே பொதுவிற்காக சொசைட்டி சட்டத்தின் கீழ் (பப்ளிக் சொசைட்டி) கொண்டு வந்து, அப்படியே வருமான வரி அதிகாரிகள் முன் வாக்கு மூலம் செய்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் வீரமணியோ, இதற்கு நேர்மாறானவர். சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் மூத்த உறுப் பினர்களுக்கேக்கூட தெரியாமல் புதிய அறக் கட்டளையைப் பதிவு செய்தார். மறைந்த விடுதலை நிர்வாகியும், பெரியார் நம்பிக்கைக்கு உரியவரும், சுயமரியாதைப் பிரச்சார நிறுவன உறுப்பினருமான என்.எஸ்.சம்பந்தம், இந்த ரகசிய செயல்பாட்டை கேள்வி கேட்டதால் தான், அவருக்கு ‘துரோகி’ பட்டம் தந்து, வீரமணி வெளியேற்றினார்.

இப்போது திரைப்படத் தயாரிப்பு தொழிலிலும் கி.வீரமணி இறங்கியிருக்கிறார். இதற்காக அவர் உருவாக்கிய அமைப்பு ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’. தி.க. பொருளாளர் சாமிதுரை, கி.வீரமணியின் மகன் அன்புராஜ் போன்றவர்கள் - இந்த ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’இல் முக்கிய பொறுப்பாளர்களாக இருப்பதாக ‘விடுதலை’யில் வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த லிபர்ட்டி கிரியேஷன்ஸ் தான் பெரியார் திரைப்படத்தை தயாரித்தது. திரைப்படத் தயாரிப்புக்காக தமிழக அரசு ரூ.95 லட்சம் ரூபாயை வழங்கியது. தமிழக அரசு, இப்படி, பெரும் தொகையைப் படத் தயாரிப்புக்காக வழங்கியதற்கான காரணம், பெரியார் இயக்கம், பெரியாரைப் பற்றிய படத்தைத் தயாரிப்பதற்கு முன் வந்திருக்கிறது என்பதால் தான். தமிழக முதல்வர் கலைஞரும் இந்த படத் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ என்பது, கி.வீரமணி, தனக்கு வேண்டிய நபர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம்.

தயாரிப்பு செலவில் பெரும் பகுதியை தமிழக அரசே வழங்கிவிட்ட பிறகு, படத்தின் வினியோகம் இதன் மூலம் கிடைத்த வருமானம் எல்லாம் படத் தயாரிப்பு நிறுவனத் துக்கே போய்ச் சேர்ந்திருக்கும். அதுதான் உண்மை. ஆனால் கி.வீரமணியோ இது பற்றி எந்த வெளிப் படையான அறிக்கையையும் முன் வைக்கவில்லை. இது தவிர திரைப்படத் துறைக்காக பங்குத் தொகை யாக பலரிடம் பண வசூலும் நடந்தது. இதுவும் அவர்களின் ‘விடுதலை’ ஏட்டிலே வெளி வந்தது. பங்குத் தொகையாக பணம் தந்தோருக்கும் லாபத் தொகை பகிரப்பட்டதாவும், ‘விடுதலை’யில் செய்திகள் ஏதும் கிடையாது.

‘திறந்த புத்தகத்தின் கதை’ இப்படி என்றால், படத்தில் பல வரலாறுகளே திரிக்கப்பட்டது இன்னும் கொடுமையானது! பெரியாரின் வாரிசுக்கும், பெரியாரின் இயக்கத்துக்கும், அவரது நூல்களுக்கும் உரிமை கொண்டாடும் கி.வீரமணி தயாரிக்கும் பெரியார் திரைப்படத்தில் இப்படி வரலாறுகள் திரிக்கப்படலாமா? இதற்கு ஏராளமான உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும். உதாரணமாக பெரியார் கடவுள் மறுப்பு தத்துவமான, ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை’ என்ற தத்துவத்தை முதன்முதல் அறிவித்தது 1967 ஆம் ஆண்டு, திருவாரூருக்கு அருகே உள்ள விடையபுரம் எனும் கிராமத்தில் நடந்த பயிற்சி முகாமில் தான். இதை கி.வீரமணியே தனது ‘பெரியாரியல்’ நூலிலும் குறிப்பிடுகிறார்.

“விடையபுரத்திலே இருந்து கொண்டுதான், தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தையே சொன்னார்கள். எனவே அந்த விடையபுரம் என்பது, ஒரு வரலாற்றுக் குறிப்புக்குரிய இடம். எனவே அந்த விடையபுரத்திலே இந்த வரலாற்றுக் குறிப்புக்காக, ஒரு பெரிய நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு நமது இயக்கம் பூர்வாங்கமாக துவக்கப் பணிகளை, வேலையைத் தொடங்கி இருக்கின்றது. நிலத்தை வாங்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். (‘பெரியாரியல்’ நூல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு - பக்.54). ஆனால் பெரியார் படத்தில் 1944 இல் பெரியார் கடலூருக்கு கூட்டம் பேச வந்தபோது, அவர் மீது செருப்பையும், பாம்பையும் காலிகள் வீசியபோது, பெரியார் கடவுள் மறுப்பைக் கூறுவதாக காட்சியமைக்கப்பட்டிருந்தது.

1944 இல் சேலத்தில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது திராவிடர் கழகக் கொடியே உருவாக்கப்படவில்லை. ஆனால் சேலத்தில் நடந்த தொடக்க விழாவிலே திராவிடர் கழகக் கொடியை பெரியார் படத்தில் காட்டினார்கள். பெரியார் சிந்தனையையும், வரலாற்றையும் துளிகூட சிதைக்காமல் காப்பாற்று வதற்கு தங்களால் தான் முடியும் என்று கூறுகிறவர்கள், நீதிமன்றத்துக்கு ஓடுகிறவர்கள், இப்படி திரிப்பையும், புரட்டையும் செய்யலாமா?

பெரியார் வாழ்க்கையில் நிகழ்ந்திடாத ஒரு சம்பவத்தை, ஒரு கட்டுரையில் பெரியார் எழுதிய கருத்தை, அவரது வாழ்க்கை நிகழ்வாகவே பெரியார் படத்தில் திரித்து விட்டார்கள். பெரியார், ஈரோட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு கங்கையிலிருந்து நீர் இறைப்பதுபோல ஒரு காட்சி, பெரியார் படத்தில் இடம் பெற்றிருந்தது.

உண்மையில் - பெரியார் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை. குடிஅரசு வார ஏட்டில் 1925 ஆம் ஆண்டு ‘தெய்வ வரி’ என்ற தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரையில், பெரியார், இந்தக் கதையை குறிப்பிட்டிருந்தார். அதுதான் உண்மை. கடவுளுக்கும், பார்ப்பன புரோகிதர்களுக்கும் ‘தட்சணை’ என்ற பெயரில் கொட்டி அழும் மூடத்தனத்தைக் கண்டித்து பெரியார் எழுதிய கட்டுரையில் பார்ப்பனர்கள் ஏமாற்றுவதை கதை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியிருந்தார். அதை அப்படியே கீழே தருகிறோம்:

பெரியார் கட்டுரையில் எழுதியதை வாழ்க்கை நிகழ்ச்சியாக திரிக்கலாமா?

“ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீக கர்மம் செய்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது, தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஒரு பெரியார், தன் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.

புரோகிதர் : ஐயா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர்?

பெரியார் : நீங்கள் கிழக்கு முகமாய்ப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்?

புரோகிதர் : இது, மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும்.

பெரியார் : நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.

புரோகிதர் : இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச் சேரும்? பயித்தியமாய் இருக்கிறீர்களே!

பெரியார் : நீர்! இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தை விட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும்?

புரோகிதர் : (வெட்கத்துடன்) இந்த வார்த் தையை இவ்வளவுடன் விட்டு விடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள்.

இஃதல்லாமல் குருமார்களென்று எத்தனையோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.

- ‘குடிஅரசு’ 16.7.2925
-
இப்படி பெரியார் தனது கட்டுரையில் கூறிய கதையை அவரது வாழ்க்கையின் நிகழ்ச்சியாகவே மாற்றி பெரியார் படத்தை எடுத்தவர்கள்தான், பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து, ‘வரலாற்று புரட்டர்கள்’ என்கிறார்கள். இப்படி, பெரியார் வாழக்கையில் நடைபெற்ற தாகக் கூறப்பட்டது - உண்மையல்ல என்பதை, எப்படி அறிய முடிந்தது என்பது முக்கியமான கேள்வி. பெரியார் திராவிடர் கழகம், 1925 ஆம் ஆண்டு, பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியாரின் எழுத்துப் பேச்சைத் தொகுத்து 2003 ஆம் ஆண்டு முதல் தொகுதியாக வெளியிட்டிருந்தது. அந்தத் தொகுதி வெளிவந்த காரணத்தால்தான் இந்த புரட்டையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முடிந்தது.

இப்படி உண்மையான பெரியார் எழுத்தும் பேச்சும் முழுமையாக வெளிவந்து விட்டால், தங்களின் புரட்டுகளும், திரிபுகளும் நார்நாராய் கிழிந்து தொங்கும் என்பதால் தான் பெரியார் திராவிடர் கழகம் முழுமையாக குடிஅரசு தொகுப்புகளை வெளிக்கொணருவதை எதிர்த்து, வீரமணிகள் நீதிமன்றங்களை நோக்கி ஓடுகிறார்கள்.

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com