Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2008

கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு !

கருத்துரிமையை பறிக்கும் - காங்கிரசாரின் கூக்குரலுக்கு தி.மு.க. ஆட்சி துணை போவது தமிழின உணர்வாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது. காங்கிரசார் வற்புறுத்தலுக்கு தமிழக அரசு பணிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் ஆகியோரை கைது செய்துள்ளது. கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஈரோட்டில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி பெரியார் திராவிடர் கழக ஆதரவோடு ஏற்பாடு செய்திருந்த ஈழத் தமிழர் ஆதரவுப் பொதுக் கூட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், பெ. மணியரசன் ஆகியோர் கலந்து கொண்டு, இந்திய அரசின் துரோகத்தையும், சிங்கள அரசின் இனப் படுகொலையையும் கண்டித்துப் பேசினர். எப்போதுமே அரசு அதிகாரத்தை மட்டும் சார்ந்து, மக்கள் ஆதரவின்றி செயல்பட்டு வரும் தமிழக காங்கிரசார், வழக்கம் போல் தி.மு.க ஆட்சியை மிரட்டி அறிக்கைகள் வெளியிட்டன. குறிப்பாக தமிழக காங்கிர தலைவர் தங்கபாலு, தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அறிக்கை வெளிவந்தவுடனே தி.மு.க. அரசு செயல்படத் தொடங்கியது.

தங்கபாலு அறிக்கை வெளிவந்தவுடன், தமிழக காங்கிரசார் சிலர், இயக்குனர் சீமான் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காருக்கு தீ வைத்துவிட்டு, அருகே காங்கிரஸ் குழுக்கள் ஒன்றுக்கு தலைவரான ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் பிறந்த நாள் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றனர். காங்கிரசார் இப்படி வன்முறையைக் கையில் எடுத்த நிலையில் தமிழகம் முழுதும் கொந்தளிப்பு உருவானது. கார் எரிப்பு செய்தி கிடைத்தவுடனேயே கோவையில் பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் கழகத் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே வத்தலகுண்டுக்கு அருகே ஜி.கல்லுப்பட்டி எனும் ஊரில் படப்பிடிப்பிலிருந்த இயக்குனர் சீமானை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து மேட்டூரில் தனது இல்லத்தில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும், அடுத்த நாள் சென்னையிலிருந்த பெ.மணியரசனையும் காவல்துறை கைது செய்தது. ஈரோடு கருங்கல் பாளையம் காவல் நிலையத்தின் சிறப்பு போலீஸ்படை இக்கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்திய தண்டனை சட்டம் 13-1(பி) மற்றும் 505 வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஈரோடு கூட்டத்தில் இயக்குனர் சீமான் ராஜீவ் காந்திக்கு எதிராக ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தியதாக மொடக்குறிச்சி காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி காவல் நிலையத்தில் தந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் சிறப்புப் புலனாய்வுக்குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் சட்ட நிபுணர்களின் கருத்தைக் கேட்டு, அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், வழக்கு தொடரக்கூடிய முறையில் எந்த உரையும், அக்கூட்டத்தில் நிகழ்த்தப்படவில்லை என்பது மாநாடுபோல் பல்லாயிரக் கணக்கில் திரண்டு நின்ற பொது மக்களுக்கும், சட்டம் படித்த எவருக்கும் நன்றாகவே புரியும். மக்கள் மன்றத்தில் வாதங்களை எதிர்கொள்ள முடியாத காங்கிரசார் சட்டத்தின் உதவியோடு தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதே பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. கைதான இருவரையும் ஈரோடு முதலாவது நீதிமன்ற நீதிபதி பி.அசோகன், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இயக்குனர் சீமான் கடந்த இரண்டு மாதத்துக்குள் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில்...சென்னையில் அடுத்த நாளே டிசம்பர் 20 அன்று தமிழ் நாடு காங்கிரஸ்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. இராயப்பேட்டை மருத்துவமனை அருகே கழகத் தோழர்கள் ஏராளமாகத் திரண்டு, சத்தியமூர்த்தி பவன் நோக்கி புறப்பட்டபோது, காவல்துறை கழகத் தோழர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தது. துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களை காவல்துறை கெடுபிடி செய்து வாகனங்களில் ஏற்றியது. செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது அதற்கு கருத்து தெரிவிக்கக்கூட காவல்துறை அனுமதிக்க மறுத்தது.

இதற்கிடையே தங்கபாலு, இளங்கோவன் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அப்போது எதிரே உள்ள கடைகளில் நின்றிருந்த சத்தியமூர்த்தி பவனைச் சார்ந்த காங்கிரசார் சிலர், கழகத்தினர் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். கழகத் தோழர்களை வாகனங்களில் கட்டாயப்படுத்தி ஏற்றிய காவல்துறை இராயப்பேட்டையிலுள்ள சமூகநலக் கூடத்திற்கு கொண்டு வந்து தங்க வைத்தது. வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோ ஆகியோர் தோழர்களை சந்திக்க வந்தனர். வழக்கறிஞர் துரைசாமி போராட்டத்தைப் பாராட்டிப் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சாரநாத், மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சார்ந்த வெங்கடேசன், இளைஞர் இயக்க சார்பில் மருத்துவர் ந. எழிலன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அன்பு தென்னரசு, மு. மாறன், சிந்தனையாளர் பேரவை ஆயுள் காப்பிட்டுக் கழக கமலக் கண்ணன், தமிழர்முழக்கம் சாகுல் அமீது ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஒரு மணி நேரம் ஈழப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, ராஜீவ் செய்த துரோகம், எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், காங்கிரசின் துரோக வரலாற்றை விளக்கிப் பேசினார்.

இதற்கிடையே சத்திய மூர்த்திபவன் அலுவலகம் தாக்கப் பட்டது என்ற செய்தி தோழர்களுக்கு கிடைத்தது. 6 மணியளவில் காவல்துறை கழகத் தோழர்களை எழும்பூர் நீதிமன்றம் கொண்டு சென்று நேர் நிறுத்தியது. நீதி மன்றத்துக்கு வழக்கறிஞர் இளங்கோ, குமாரதேவன் ஆகியோர் வந்திருந்தனர். இரவு 7 மணியளவில் 62 தோழர்களையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அங்கிருந்து புழல் சிறைக்குக் கொண்டு போகப்பட்டு, கழகப் பொறுப்பாளர்கள் ஆனூர் செகதீசன், விடுதலை இராசேந்திரன், எ.கேசவன், இரா. உமாபதி உள்ளிட்ட 62 தோழர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். சட்ட விரோதமாகக் கூடுதல், பொது இடங்களில் இடையூறு விளைவித்தல், கொடும்பாவி எரித்தல், ஒன்று கூடி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் (தண்டனை சட்டப் பிரிவுகள் 147, 143, 188, 41(ஏ), 7(1)(ஏ) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தோழர்களுக்கான பிணை மனுவை அன்றைய தினமே வழக்கறிஞர் இளங்கோ தாக்கல் செய்தார். பிணை மனு விசாரணை டிசம்பர் 22 திங்கள் கிழமை பிற்பகல் 3 மணியளவில் எழும்பூர் 13வது பெருநகர் நீதிமன்ற நீதிபதி பாக்யவதி முன் விசாரணைக்கு வந்தது. கழகத்தினருக்காக மூத்த வழக்கறிஞர் செ. துரைசாமி அவர்களே பெருநகர நீதிமன்றம் வந்து வாதாடியது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்க ஆணையிட்டது.

நீதிமன்றம் பிணை வழங்கியவுடன், வழக்கறிஞர்கள் செ.துரைசாமி, இளங்கோ, ராஜா ஆகியோர், உடனே புழல் சிறைச்சாலைக்கு விரைந்து மாலை 5 மணியளவில் கழகத்தினரை சந்தித்து, பிணை கிடைத்த விவரத்தைத் தெரிவித்தனர். தோழர்கள் பிணை விடுதலைக்கான உறுதியளிப்பு ஆவணங்களைத் திரட்டி, தயாராக வைத்திருந்த கழகச் செயல்வீரர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினர். பிணை ஆணையைப் பெற்று விரைந்து சிறைச்சாலைக்கு அனுப்பினர். இரவு 8 மணியளவில் தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான தோழர்களுக்கு இராயப்பேட்டை மார்க்கெட் பகுதியிலிருந்து மேளதாளங்களுடன் எழுச்சி வரவேற்பு தரப்பட்டது. ஏராளமான தோழர்களும், பொது மக்களும் திரண்டிருந்தனர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இராயப்பேட்டை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தோழர்கள் அனைவருக்கும் தோழர்கள் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். இராயப்பேட்டை வி.எம்.சாலைப் பகுதி முழுவதுமே எழுச்சி கோலம் பூண்டது. தர்மபுரியில்20.12.2008 சனி காலை 11 மணிக்கு தர்மபுரியில் ராசகோபால் பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட செயலாளர் முனி. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கொ.வேடியப்பன், பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் வணங்காமுடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்ஜித், தமிழ்மான மீட்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எஸ்.சம்பத், ஒன்றிய செயலாளர் வெல்டிங் சின்னசாமி, தகடூர் செல்வம், வஜ்ஜிரவேல், பெரியார் தி.க. ஒன்றிய அமைப்பாளர் செந்தில்குமார், இளங்கோவன், மா.பரமசிவம், ஆ. அம்பிகாவதி, ஆ. நெடுமான் அஞ்சி உட்பட 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில்

19.12.08 அன்று மாலை 4 மணியளவில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று, இளங்கோவன், தங்கபாலுக்கு எதிரான முழக்கங்களையும் கழகத் தலைவர்கொளத்தூர் மணி, இயக்குநர் சீமானையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கழகத் தோழர்கள் முழக்கமிட்டு வந்து ஈ.வெ.கி. எஸ். இளங்கோவன், தங்கபாலு உருவ பொம்மைகளை எரித்தனர்.நகரத் துணைச் செயலாளர் முகிலன் தலைமையில், நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகரச் செயலாளர் ஏகலைவன் அன்பு, மாவட்ட அமைப்பாளர் நா.இளையராஜா, மாவட்ட செயலாளர் தெ.மகேசு, ரமேசு, குத்தாலம், ஒன்றிய செயலாளர் இயற்கை, வா.வினோத், வேலங்குடி இராஜா, ஈழம் சுந்தா, முத்தழகன் உள்ளிட்ட 25 தோழர்களை காவல்துறை கைது செய்தது. இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.அதற்கு முன்பாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, 25.11.08 அன்று மறியல் நடந்தது. காலை 11 மணியளவில் அனைத்து கட்சிகளின் சார்பில் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பாக நடந்த மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இர. இடும்பையன் தலைமை தாங்கினார். கொட்டும் மழையிலும் நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர்.அனைத்து கட்சியைச் சார்ந்த 51 தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கலந்து கொண்ட கழகத் தோழர்கள், மாவட்ட செயலாளர் தெ.மகேசு, மாவட்ட அமைப்பாளர் நா. இளையராஜா, நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகரச் செயலாளர் அன்பு, நகரத் துணைத் தலைவர் இராஜராஜன், முகிலன், வா.வினோத், ம.ஸ்ரீதர், இயற்கை, கார்த்திக், இராஜா, வீ.முரளி, உ.ஜீவா, முத்தழகன், இரமேசு.

(சிறைப்படுத்தப்பட்ட 62 தோழர்களின் பட்டியல் அடுத்த வாரம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com