Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2008

ஈழப் பிரச்சினையை குழப்பிய பார்ப்பன அதிகாரிகள்

ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டுக் குழப்பிய இந்திய அதிகாரிகள் பற்றி ‘ஆனந்த விகடன்’ ஏட்டில் அதன் செய்தியாளர் திருமாவளவன் எழுதிய கட்டுரை.

பி.வி. நரசிம்ம ராவ்

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் நரசிம்ம ராவ். ஆந்திர அரசியலில் பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த அனுபவஸ்தர். இலங்கை வெளிக்கடைச் சிறையில் குட்டிமணி உள்ளிட்ட 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஆத்திரமடைந்த பிரதமர் இந்திரா, ‘இதை இந்தியா சும்மா பார்த்துக் கொண்டு இருக்காது’ என்று நரசிம்மராவை அழைத்து, அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவிடம் சொல்லச் சொன்னார். இலங்கை போனார் ராவ். அனைத்துக்கும் ஆரம்பம் இதுதான். ‘இங்கு வாழும் தமிழர்கள் சில லட்சம் இருக்கலாம். எங்கள் நாட்டில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். எனவே, இது உங்கள் உள்நாட்டு அரசியல் விவகாரம் அல்ல!’ என்று அழுத்தமாக ராவ் சொன்னதைக் கோபத்தோடு கேட்டார் ஜெய வர்த்தனே.

‘இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரா கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருபவை. இரண்டுமே இந்தியாவுக்கு எதிரான கட்சிகள். இதை வைத்து நமது வெளிநாட்டுக் கொள்கையை வகுக்க வேண்டும்’ என்று இந்திராவுக்கு இலங்கை அரசியலைத் தெளிவுபடுத்தியவர் ராவ். அதனால் தான், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இந்திரா, ‘இலங்கையில் நடப்பது உள்நாட்டுச் சண்டை அல்ல. இனப்போராட்டம்!’ என்று தெளிவாக அறிவித்தார். இதைக் கவனிக்கச் சரியான ஆளைத் தேடும் வேலை நடந்தது. ஜி. பார்த்தசாரதி அழைத்து வரப்பட்டார்.

ஜி. பார்த்தசாரதி

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர். அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்த கோபாலசாமி அய்யங்காரின் மகன். அவருக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் எஸ்.சி.டி.சேரம், இலங்கை கம்யூனிஸ்ட் தலைவர் கெனமன் ஆகி யோரும் பழக்கம். கொழும்பு போய் சிங்களத் தலைவர்கள் அனைவரையும் பார்த்தார். பலரும் அவரை அவமானப்படுத்தினார்கள். நிற்க வைத்துப் பேசினார்கள். கவலைப்படவில்லை. கடைசியாகத் தான் தமிழ்த் தலைவர்களைப் பார்த்தார். தமிழர் பகுதிகளைத் தன்னாட்சி கொண்ட அமைப்பாக மாற்றினால் தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதை ஜெயவர்த்தனாவிடம் சொன்னார். இந்தத் திட்டத்துக்கு ‘இணைப்பு சி’ என்று பெயர்.

உள்நாட்டுக் குழப்பம், இந்தியாவின் நெருக்கடி இரண்டையும் சமாளிக்க பார்த்தசாரதியின் திட்டத்துக்குத் தலையாட்டினார் ஜெயவர்த்தனா. சிங்களவர்கள் எதிர்த்தார்கள். டெல்லி வந்த ஜெயவர்த்தனே இந்தத் திட்டத்தையே எதிர்க்க ஆரம்பித்தார். சோர்ந்து போனார் பார்த்தசாரதி. இந்திராவின் மரணம் ஜெயவர்த்தனாவுக்கு வசதியானது. ‘பேச்சு வார்த்தை தொடங்க வேண்டுமானால், ஜி.பார்த்தசாரதி வரக் கூடாது’ என்று பிரதமர் ராஜீவ்காந்தியிடம் முதல் நிபந்தனை விதித்தார் ஜெயவர்த்தனே.
அதன் பிறகு வந்தவர் ஏ.பி.வெங்கடேஸ்வரன். தனக்குத் தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றன என்று சொல்லி திடீரென்று ராஜினாமா செய்து விட்டுப் போய்விட்டார் ஏ.பி.வெங்கடேஸ்வரன். அவர் கடைசியாக இப்படிச் சொன்னார், ‘வங்காளிக்காரன், பஞ்சாபி சம்பந்தப்பட்டதாக இலங்கைப் பிரச்சினை இருந்திருந்தால், இந்தியா இந்நேரம் மீண்டும் ஒரு வங்கப் போர் தொடங்கி இருக்கும்!’

ஜே.என்.தீட்சித்

இந்தியப் பிரதமரை தவிர யார் முன்னாலும் கால் மேல் கால் போட்டு பைப் பிடித்தபடியே பேசக் கூடிய தைரியசாலி, தீட்சித், ஜெயவர்த்தனா மீதே புகைவிட்டவர். இந்தியா மீது ஜெயவர்த்தனா அதிகக் கோபமாக இருந்த காலம் அது. யாழ்ப்பாணத்துக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெங்களூரு விமான தளத்தில் இருந்து 5 விமானங்களில் உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டன. ‘ஆபரேஷன் பூமாலை’ என்ற இந்தத் திட்டத்தில் தீட்சித்தின் பங்கு முக்கியமானது. அதன் பிறகுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டது.

ஜெயவர்த்தனாவை வளைத்ததும் புலிகள் பக்கமா வந்தார் தீட்சித். பிரபாகரன், பாலசிங்கம் இருவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ‘ஒப்பந்தத்தை ஏற்க முடியாது’ என்றார் பிரபாகரன். ‘அப்படியானால், இந்த ஓட்டலைவிட்டு நீங்கள் வெளியேற முடியாது’ என்ற மிரட்டினார் தீட்சித். ஒப்பந்தம் கையெழுத்தானது. புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க ஆரம்பித்தார்கள். தங்களின் சென்னை அலுவலகத்தைப் புலிகள் காலி செய்து, குமரப்பா, புலேந்திரன் தலைமையில் 17 பேர் இலங்கை போனார்கள். அவர்களை சிங்கள ராணுவம் கைது செய்தது. ஒப்பந்தப்படி, அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று புலிகள் கேட்டார்கள். ஆனால், கொழும்பு கொண்டுவரச் சொன்னார் ஜெயவர்த்தனே. அதை தீட்சித்தால் தடுக்க முடியவில்லை. எனவே, ஆயுதத்தைப் புலிகள் தூக்கினார்கள். ‘இரண்டாயிரம் பேரை நான்கே நாட்களில் வழிக்குக் கொண்டு வரலாம்’ என்று சொல்லி, அதற்கான பொறுப்பை மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் ஒப்படைத்தார் தீட்சித்!

ஹர்கிரத் சிங்

இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையின் முதல் தளபதி இவர். டெல்லியிருந்து போனதும் பிரபாகரனை நேரடியாகப் போய் பார்த்தவர். 5 மணி நேரம் இருவரும் பேசினார்கள். இவரது வாக்குறுதிப்படிதான் ஆயுதத்தை ஒப்படைக்க பிரபாகரன் சம்மதித்தார். இதை எழுதிக் கொடுக்கச் சொன்னார் சிங். சிரித்துக் கொண்டே எழுதியும் கொடுத்தார் பிரபாகரன். அதன் அடையாளமாக ஒரு துப்பாக்கி இவரிடம் கொடுக்கப்பட்டது. வரிசையாக வந்து ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தார்கள். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப். குழு ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. அதைத் தட்டிக் கேட்டார் ஹர்கிரத் சிங். ஆனால், அதைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று அவருக்கு மேல் இருந்த ஒரு அதிகாரி சொல்லிவிட்டார்.

அதன் பிறகு திலீபனின் உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதம் வேண்டாம் என்று புலிகளைச் சந்தித்துக் கேட்டார் சிங். அவர்கள் சம்மதிக்கவில்லை. தீட்சித்தைச் சந்தித்து, ‘நீங்கள் திலீபனை வந்து சந்தியுங்கள்’ என்றார். ஆனால், தீட்சித் இதை ஏற்கவில்லை. அதன் பிறகு புலிகளை எதிர்த்தே போர் செய்ய வேண்டிய நெருக்கடி ஹர்கிரத் சிங்குக்கு ஏற்பட்டது. பல மாதங்கள் ஆகியும் புலிகளை இந்திய ராணுவத்தால் முழுமையாக அடக்க முடியவில்லை. அப்போது தான் இதில் ஏதோ வேறு கோளாறு இருக்கிறது என்று பிரதமர் ராஜீவ் நினைத்தார். ராஜீவின் தூதராக கார்த்திகேயன் போனார்.

டி.ஆர். கார்த்திகேயன்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தென் பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரலாக அப்போது கார்த்திகேயன் இருந்தார். அவர் கொழும்புவுக்குப் போய்விட்டு திரும்பி வந்ததும் ராஜீவ் காந்திக்கு அறிக்கை கொடுத்தார். ‘புலிகள் தான் மக்கள் மத்தியில் அதிகாரம் பெற்றுள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டில்தான் வடகிழக்கு உள்ளது. இந்திய அமைதிப்படை அதிகாரிகளுக்கு மனபலம் இல்லை. எதற்காக இந்தச் சண்டை என்று நினைக்கிறார்கள். பிரச்சினையை இலங்கை அரசாங்கமும் தமிழர்களும் தீர்த்துக் கொள்ளட்டும் என்று சொல்லி விட்டு, இந்திய அமைதிப் படை திரும்ப வேண்டும். வேறு பாதுகாப்புக் காரணத்துக்காக, அங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தால், புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை வெளி விவகாரத் துறை, ராணுவ மட்டத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையான நிலவரத்தை யாரும் அதுவரை சொல்லாமல் போனது ராஜீவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. இலங்கையின் இந்தியத் தூதரகத்துக்கு கார்த்திகேயனை நியமிக்கும் வேலைகளும் பரபரப்பாக நடந்தன. ஆனால், அது ஏனோ நடக்கவில்லை. அவர் சென்றிருந்தால், வேறு வகையான மாற்றம் நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், துரதிருஷ்டம்... ராஜீவ் படுகொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக அவர் பின்னர் ஆகும் சோக சூழல் தான் ஏற்பட்டது.

எம்.கே. நாராயணன்

23 ஆண்டுகளுக்கு முன்னால் காசியில் பிரபாகரனைச் சந்தித்தவர் எம்.கே.நாராயணன். அப்போது அவர் மத்திய புலனாய்வு அதிகாரி. இப்போது அவர் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர். திம்பு பேச்சு வார்த்தைக்கு புலிகளைச் சம்மதிக்க வைத்து அழைத்து வந்தவர். ‘தனிநாடு கேட்கக் கூடாது’ என்பதை அனைத்துப் போராளி குழுக்களுக்கும் ஆரம்பக் காலத்தில் இருந்து அறிவுரை சொல்லி வருபவர். இலங்கைக்கு அமைதிப்படை அனுப்ப வேண்டும் என்று தீட்சித்துடன் இணைந்து ராஜீவைச் சம்மதிக்க வைத்தவர். போதைப் பொருள் கடத்தித்தான் புலிகள் சம்பாதிக்கிறார்கள் என்று சொல்லிப் பரபரப்பு கிளப்பியவர். ‘கரும் புலிகள் அமைப்பைக் கலைக்காதவரை, அவர்களுடன் பேச்சு நடத்துவது வீண் என்று சொல்லுபவர். இன்று இலங்கை விவகாரத்தின் சிறு துரும்புகூட நாராயணன் சொல்லாமல் நகர்வதில்லை.

சீனா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கைக்குத் தொடர்ந்து ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. அந்த நாடுகளிடம் உதவிகள் வாங்கக் கூடாது என்று நாராயணன் சொன்னார். இலங்கை கேட்கவில்லை. நாங்கள் தருகிறோம் என்று சொன்னார். இலங்கை வாங்கிக் கொண்டது. ‘பக்கத்து நாடான இலங்கையில் நமது எதிரி நாடு நுழைய அனுமதிக்கக் கூடாது’ என்பதுதான் நாராயணன் முன்மொழியும் ஒரு வரிக் கொள்கை. ஆனால், சீனா செய்துள்ள உதவியில் பத்தில ஒரு பங்குகூட இந்தியா செய்யவில்லை. அந்த அளவுக்குச் செய்யவும் முடியாது. இப்படிப்பட்ட ஒப்பந்தம் போடப்படும்போது மட்டும். ‘தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய தீர்வுத் திட்டம் வைக்காமல், பிரச்சினையைத் தீர்க்க முடியாது’ என்று சொல்வார். இலங்கை கோபமாகிப் பதில் சொல்லும். உடனே இவர் புது நிபந்தனைகளைச் சேர்த்து ஓர் ஒப்பந்தத்தைத் தயாரித்து தருவார்.

மேலும், “இந்தியா நம்முடைய வளங்களைச் சுரண்டுவதற்காக வருகிறது’ என்று ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறது. சமீபத்தில் சார்க் மாநாட்டுக்கு நாராயணன் இலங்கை போனபோது, கார் கொடுக்காமல், வாடகை கார் பிடித்து தனது ஓட்டலுக்கு வந்தாராம். புலிகள் வளர்வது இந்தியாவுக்கு ஆபத்து என்று நினைக்கிறார் நாராயணன். ஆனால், இந்தியாவா சீனாவா என்றால், சீனா பக்கம் தான் அங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கை தூக்குகின்றன. புலிகளை ஒடுக்குவது வரை இந்தியாவை அனுசரித்துப் போய், அதன் பிறகு சீனா பக்கம் போய்விடுவோம் என்று சிங்களக் கட்சிகள் சொல்ல ஆரம்பித்துள்ளன.

புலிக்குப் பயந்து சிங்கத்தின் பக்கம் உட்கார்கிறார் எம்.கே. நாராயணன். சிங்கமும் சைவமில்லையே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com