Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2008

பெரியாரின் எழுத்துச் சிதைப்பாளர்கள் - யார்?

'குடிஅரசு' காலவரிசைத் தொகுப்புப் பற்றி 'ஆனந்த விகடன்' ஏட்டுக்கு அளித்த பேட்டியில் காலவரிசைப்படி மொத்தமாகத் தொகுப்பதால் கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும் என்று வீரமணி பதில் அளித்தார். அது மட்டுமல்ல, பிறர் பெரியார் எழுத்துக்களைப் பதிப்பித்தால் அதில் மாற்றங்களை செய்துவிடக் கூடும் என்றும் கூறினார்.

"பெரியார் எழுத்துக்களைப் பதிப்பிக்கிறோம் என்ற போர்வையில், அவரது எழுத்துக்களைச் சிலர் மாற்றிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. தவிர மொத்தமாகப் பதிப்பிக்கும்போது, கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும்." கி.வீரமணி பேட்டி, 'ஆனந்த விகடன்' 27.8.2008

மொத்தமாகப் பதிப்பித்தல் என்று கி.வீரமணி கூறுவது, காலவரிசைப் படியான தொகுப்பைத்தான். அதற்கு மாறாக கடவுள், மதம், சாதி, பெண்ணுரிமை என்று தலைப்பு வாரியாக, வெவ்வேறு காலகட்டங்களில் பெரியார் பேசியதைத்தான் திராவிடர் கழகம் வெளியிட்டு வருகிறது. இப்போது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நூல் ஒன்றை அவசரம் அவசரமாக தமிழ்நாடு முழுதும் பரப்பும் வேலையை அக்கட்சித் தொண்டர்களுக்கு வழங்கியுள்ளார் கி. வீரமணி. நூலின் தலைப்பு : "பகுத்தறிவு ஏன்? எதற்காக?" என்பதாகும். 'குடிஅரசு' ஏட்டில் பெரியார் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அதன் பதிப்புரையில் கி. வீரமணி, "அய்யா அவர்களது அரிய எழுத்துக்கள், உரைகளைப் பல்வேறு தலைப்புகளில் கால வரிசை அடிப்படையில் களஞ்சியங்களாகத் தொகுத்து அவர்கள் உருவாக்கிய அறக்கட்டளையான பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் மூலம் வெளியிட்டு வருவதை பெரிய பேறாகக் கருதியே உழைத்து வருகிறேன்" - என்று எழுதியுள்ளார்.

காலவரிசைப்படி மொத்தமாகத் தொகுப்பது - குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பேட்டி அளித்தவர்-காலவரிசைப்படி தொகுக்காமல் - தலைப்பு வாரியாக தொகுத்தே நூல்களை வெளியிடுபவர்-இப்போது காலவரிசைப்படி தொகுத்து வெளியிடுவதாக - தம்பட்டம் அடிப்பது அப்பட்டமான பொய் அல்லவா?இது அறிவு நாணயமா என்று கேட்க விரும்புகிறோம்?பெரியார் திராவிடர் கழகம் - காலவரிசைப்படி 'குடிஅரசு' தொகுப்பை வெளிக் கொண்டு வந்த காரணத்தால் தாங்களும் அப்படி வெளியிடுவதாக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே வாதங்களைத் தேடுவதால்தான் கி.வீரமணி முன்னுக்குப் பின் முரணாக எழுதியும் பேசியும் வருகிறார்கள் என்ற முடிவுக்குத் தானே இதிலிருந்து வர முடிகிறது?அது மட்டுமல்ல,

பெரியாரின் "எழுத்துக்களை சிலர் மாற்றிவிடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது" என்றும், 'ஆனந்தவிகடன்' பேட்டியில் கி.வீரமணி கூறியிருக்கிறார்.

அத்தகைய 'ஆபத்துகளை' பெரியாருக்கு உருவாக்கியிருப்பவர் 'சாட்சாத்' இதே கி.வீரமணிதான் என்று நாம் குற்றம்சாட்டுகிறோம். அதற்கான ஆதாரங்களை யும் முன் வைக்கிறோம்.

பெரியார் எழுதிய 'குடிஅரசு' தலையங்கங்கள் மிகவும் ஆழமானவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் காணப்படுகின்றன. கருத்துகளை தலையங்கங்களில் வார்த்தைகளால் பெரியார் செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு தலையங்கத்துக்கும் அதில் எத்தகைய தலைப்பு இடம் பெறவேண்டும் என்பதை முடிவு செய்து பெரியார் தலைப்பிட்டிருக்கிறார். தலையங்கத்துக்கு தலைப்பிடுவது, அத்தலையங்கத்தின் முதன்மையான கருத்தை வாசகர்களுக்கு வெளிச்சப்படுத்துவதேயாகும். எனவே தலையங்கம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போல் அதன் தலைப்பும் முக்கியமாகிறது. அது ஆசிரியரின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், இப்போது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள பகுத்தறிவு ஏன்? எதற்காக? என்ற நூலில் என்ன நடந்துள்ளது?

• நூலின் பக்கம் 36-ல் வெளியிடப்பட்ட கட்டுரையின் தலைப்பு 'பகுத்தறிவும் நாத்திகமும்' என்பதாகும். ஆனால் 'குடிஅரசில்' அக்கட்டுரைக்கு தந்துள்ள தலைப்பு 'நாத்திகம்' என்பது மட்டுமே! இவர்கள் தலைப்பு வாரியாக பகுத்தறிவு என்ற தலைப்பின் கீழ் தொகுத்ததால் - 'பகுத்தறிவு' என்பதையும் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். 28.9.1930-ல் 'குடிஅரசில்' எழுதப்பட்ட அத்தலையங்கம் 'நாத்திகம்' பற்றி மட்டுமே பேசுகிறது. பகுத்தறிவுக்கான எல்லையைத் தாண்டி நிற்பது நாத்திகம்! எனவே பெரியார் சூட்டிய சரியான தலைப்பை இவர்கள் ஏன் மாற்ற வேண்டும்? இந்த அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார்? இது வீரமணியாரின் வாதப்படியே எழுத்துகளை மாற்றிய ஆபத்து அல்லவா?

• பக். 44-ல் - நூலில் இடம் பெற்றுள்ள பெரியார் தலையங்கத்துக்காக தரப்பட்டுள்ள தலைப்பு, "பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொடுமைகள்" என்பதாகும். 5.10.1930 'குடிஅரசு' ஏட்டில், பெரியார் அந்தத் தலையங்கத்துக்கு தந்துள்ள தலைப்பு அதுவல்ல. பெரியார் எழுத்தில் இவர்கள் கை வைத்துள்ளார்கள். அதற்கு பெரியார் 'இனியாவது புத்தி வருமா?", "பெண்களுக்கு சொத்துரிமை" என்ற இரண்டு தலைப்புகளைத் தந்துள்ளார். ஒரு தலையங்கத்துக்கு இரு வேறுபட்ட தலைப்புகளை பெரியார் தருவதிலிருந்தே தலைப்பு வழியாக அவர் முதன்மைப்படுத்தும் கருத்துகளை உணர்த்த விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏன் இதை மாற்றுகிறார்கள்? இப்படி பெரியார் எழுத்தில் கை வைத்து மாற்றுவதைத்தான், "பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொடுமை" என்று கூற வேண்டியிருக்கிறது!

• பக்கம் 58-ல் வெளிவந்த கட்டுரைக்கு இவர்கள் தந்துள்ள தலைப்பு - 'பகுத்தறிவை அடிமைப் படுத்தும் மதம்' என்பதாகும். 9.9.1934 'பகுத்தறிவு' ஏட்டில் பெரியார் எழுதிய இத்தலையங்கத்துக்கு அவர் தந்துள்ள தலைப்பு, "மதம் ஏன் ஒழிய வேண்டும்?" என்பதுதான். மதமே ஒழிய வேண்டும் என்று பெரியார் தந்த மத எதிர்ப்புக்கான அழுத்தத்தை இத் தலைப்பு வழியாக சிதைத்துள்ளார்கள்.

• இன்னும் துல்லியமாகக் கூட நம்மால் பல செய்திகளை எடுத்துக் காட்ட முடியும். உதாரணமாக பச்சையப்பன் மண்டபத்தில் 1927 அக்டோபர் 21 ஆம் நாளில் ஆற்றிய உரை - நூலில் அக்.22 என்று தவறாக இடம் பெற்றுள்ளது. 2.8.1931 'குடிஅரசில்' பெரியார் எழுதிய கட்டுரையை 9.8.1931 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

• 115 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறு நூலிலே பெரியார் எழுத்துகளை மாற்றி தவறான தகவல்களைத் தருகிறவர்கள்தான், மற்றவர்கள் வெளியிட்டால், 'திருத்தி விடுவார்கள்; எங்களைப் போன்ற பொறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு இருக்காது' என்றெல்லாம் தங்களுக்குத் தாங்களே மார்தட்டிக் கொள்கிறார்கள்.

ஒன்றை கூற விரும்புகிறோம்; 'குடிஅரசு', 'புரட்சி', 'பகுத்தறிவு' என்று பெரியார் ஏடுகளை நுணுகிப் படித்து, ஆய்ந்து, தேய்ந்து அலசக்கூடிய ஆற்றல் திறமை மிக்கவர்கள் பலரும் இப்போது வந்து வந்துவிட்டார்கள் என்பதை வீரமணியார்களும், அவரது விளக்க உரையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்!பெரியாரைப் பெரியாராகக் காட்டாமல், பெரியாரை தங்களது பார்வைக்கேற்ப சுருக்கிக் கொள்வது பெரியாரியலுக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமாகும்.இவர்களுக்கு பெரியார் திராவிடர் கழகத்தினரை - திரிபுவாத திம்மன்கள் என்று கூற தகுதியுண்டா என்று கேட்கிறோம்?(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com