Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2006

உண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்

பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 6 தோழர்களை ‘தேச விரோதிகள் - சமூக விரோதிகள்’ என்று அறிவித்து, தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது, கலைஞரின் ஆட்சி.

ஸ்ரீரங்கத்தில் - இந்துமதவெறி சக்திகள் பார்ப்பனியம் உருவாக்கித் தந்த சதித் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத் தோடு - தந்தை பெரியார் சிலையை உடைத்தனர். தொடர்ந்து பெரியார் சிலைகளை தமிழ்நாட்டில் சேதப்படுத்தி வரும் நிலையில், பல இடங்களில் தன்னெழுச்சியாக எதிர்த் தாக்குதல்கள் நடந்தன. சில இடங்களில் பார்ப்பனர் களின் இறுமாப்பு சின்னமான பூணூல் அறுப்புகளும், பார்ப்பன மடங்கள் மீது தாக்குதலும் நடந்தன. இதனைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த 33 தோழர்களும், கழகத்தைச் சாராத நான்கு தோழர்களும் கைது செய்யப்பட்டுக் கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில், மேலும் கழகத் தோழர்கள் உமாபதி, குமரன், விஜி, சுரேஷ், கபாலி, தமிழரசு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது தமிழகம் முழுதும் 38 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கலைஞர் ஆட்சி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் இராம. இளங்கோவன், மாவட்டக் கழக அமைப்பாளர் குமரகுருபரன், கழகத் தோழர்கள் முருகானந்தம், அர்ஜுனன் ஆகியோரையும், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்டக் கழக அமைப்பாளர் இலக்குமணன், மாவட்டக் கழகத் தலைவர் தாமோதரன் ஆகியோர் மீதும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது. விசாரணை ஏதுமின்றி ஓராண்டு வரை சிறையில் வைக்கக்கூடிய ஒடுக்குமுறை சட்டமே தேசப் பாதுகாப்பு சட்டமாகும். 1980 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது இந்தச் சட்டம். கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா ‘பொடா’ சட்டத்தைப் பயன்படுத்தி, தமிழின உணர்வாளர்களை அடக்கி வந்தார். தமிழக முதல்வர் கலைஞரும் அப்போது ‘பொடா’ சட்டம் - மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும், ஜெயலலிதா தமிழின உணர்வாளர்களை நசுக்குகிறார் என்றும் கூறி, ஜெயலலிதா ஆட்சியைக் கடுமையாக எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுதும் எழுந்த கடும் எதிர்ப்பினால் இப்போது ‘பொடா’ சட்டம் திரும்பப் பெறப்பட்டு விட்டது. ‘பொடா’வை எதிர்த்து வந்த கலைஞர் - இப்போது தனது ஆட்சியில், அதற்கு பதிலாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார். முறையான சட்டங்களைப் பயன்படுத்தாது, ‘ஆள் தூக்கி’ச் சட்டங்களைப் பயன்படுத்துவதை, பெரியார் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இத்தகைய சட்டங்கள், பழிவாங்கும் நோக்கத்தோடு, அரசுகளால் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை அகற்றியே தீர வேண்டும் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சிங், சுதந்திரமாக நடமாடுகிறார். ‘ஜெயா’ தொலைக்காட்சியில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று பேட்டி அளிக்கிறார். அதேபோல் பெரியார் சிலை வைப்பதை எதிர்த்து வந்த பார்ப்பனர் தயானந்த சரசுவதி மீது வழக்கு எதுவும் தொடரப் போவதில்லை என்று காவல்துறை அறிவித்துவிட்டது. இந்த நிலையில் சென்னை மாநகரக் காவல்துறை - பெரியார் திராவிடர் கழகத்தையே முடக்கிப் போடும் நோக்கத்தோடு தொடர்ந்து கழகத் தோழர்களை தேடுதல், சோதனை என்ற பெயரில், கடும் அவமதிப்புக்கும் அலைக் கழிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது.

பெரம்பலூரில் கைது செய்யப்பட்ட கழகத் தோழர்கள் இலக்குமணன், தாமோதரன் ஆகியோர் மீது, பார்ப்பனர் பூணூலை அறுத்ததாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது தேசப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தும் ‘பூணுல்’ - தேசத்தின் மரியாதையாகவும் கவுரவமாகவும், இதன் மூலம் கலைஞர் ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்ப்பவர்கள் அறுப்பவர்கள் ‘தேச விரோதிகள்’ என்று நாட்டுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தோழர்களையும் “சமூக விரோதிகள்” என்று அரசின் தடுப்புக் காவல் சட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே போல் கோவை சிறையில் வைக்கப்பட்டுள்ள நான்கு கழகத் தோழர்கள் கடந்த காலங்களில் தேச விரோத ‘கேடான நடவடிக்கைகளில்’ ஈடுபட்டு வந்தார்கள் என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

(விவரம் கீழே வெளியிடப்பட்டுள்ளது)

கலைஞர் அரசின் பார்வையில் இவைகள் “தேச விரோதம்”

ஈரோட்டில் நான்கு கழகத் தோழர்கள் மீது தேச விரோதச் சட்டத்தைப் பாய்ச்சியுள்ள கலைஞர் அரசு - ஈரோட்டிலுள்ள ராகவேந்திரா பிருந்தாவனம் - ஈரோடு கருங்கல் பாளையத்திலுள்ள ஆதிசங்கரர் பாதுகை பீடம் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் - தடுப்புக் காவலில் வைப்பதற்குக் காரணம் தேடிய அரசு கடந்த காலங்களிலேயே “தேச விரோத” நடவடிக்கைகளில் இந்தத் தோழர்கள் ஈடுபட்டு வந்ததைக் “கண்டறிந்துள்ளதாகக்” கூறியுள்ளது.

அந்த தேச விரோதமான கடந்தகால “கேடான” நடவடிக்கைகளாக கீழ்க்கண்ட நிகழ்வுகள் அரசு அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மார்ச் 13 ஆம் தேதி - ஈரோட்டில் நடந்த விசுவ இந்து பரிசத் மாநாட்டை எதிர்த்து 152 தோழர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் - இது முதல் “தேச விரோத” நடவடிக்கை.

மே 26 ஆம் தேதி - மற்றொரு “பயங்கரமான தேச விரோத” நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அது பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லியில் வேலை நிறுத்தம் செய்து வந்த உயர்சாதி பார்ப்பன மாணவர்களுக்கு எதிராக 38 தோழர்களுடன் நடத்திய போராட்டம். அப்போது இவர்கள் கைது செய்யப்பட்டு - பின்னர் விடுதலை செய்யப்பட்டனர் - இது இரண்டாவது “தேச விரோத” நடவடிக்கை.

கடந்த நவம்பர் 21 ஆம் தேதி - 32 தோழர்கள் சேர்ந்து கொண்டு மற்றொரு “பயங்கர” போராட்டத்தை நடத்தினார்கள். அதாவது 27 சதவீத இடஒதுக்கீட்டை முடக்கும் வீரப்ப மொய்லி அறிக்கையை எரிக்க முயன்றார்கள். அது காவல்துறையால் தடுக்கப்பட்டு, அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் அன்றே விடுதலை செய்யப்பட்டனர் - இது மூன்றாவது “தேச விரோத நடவடிக்கை” என்று “தேசவிரோத” நடவடிக்கைகளை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.

ஆக கலைஞர் ஆட்சியில்...

பூணூல் - தேசியச் சின்னம்;

உயர்சாதிப் பார்ப்பன மாணவர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது - தேச விரோதம், கேடான நடவடிக்கை!

27 சதவீத இடஒதுக்கீட்டை குழிபறிக்கும் வீரப்ப மொய்லி அறிக்கையை எரிக்க முயலுவது - தேச விரோதம், கேடான நடவடிக்கை!

பெரியார் தொண்டர்கள் - தேச விரோதிகள்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com