Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஆகஸ்ட் 2008

பெரியாரை வியாபாரமாக்குவது யார்?


உலக மயமாக்கல் கொள்கை வந்த பிறகு பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் காப்புரிமை எனும் பெயரில் ‘அறிவு சார் சொத்துரிமை’ கோரி பல பொருள்களை தங்கள் வசமாக்கிக் கொள்கின்றன. தமிழ்நாட்டின் வேப்பிலையும், இந்தியாவின் பாசுமதி அரிசிக்கும் கூட இப்படி சில வெளிநாட்டு நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை கோரின. பிறகு நீதி மன்றங்களின் வழியாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் அறிவு சார் சொத்துரிமை கோருவது, தங்களின் வர்த்தக நலனுக்காகத்தான். கி.வீரமணியும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களைப்போல் பெரியார் சிந்தனைகளுக்கும், அறிவுசார் சொத்துரிமை கோருகிறார். பெரியார் சொத்துக்களுக்கு மட்டுமே உரிமை கோரிய கி.வீரமணி, இப்போது பெரியார் சிந்தனைகளுக்கும் தமக்கே உரிமை கோரும் நிலைக்கு வந்துவிட்டதைப் பார்த்து, நாடே கைகொட்டி சிரிக்கிறது.

பெரியார் பேசியதும், எழுதியதும் மக்களுக்குத்தான். ஆனால், கி.வீரமணியோ, பெரியார் பேச்சும்-எழுத்தும் மக்களுக்கு சொந்தமல்ல; எங்களுடைய நிறுவனத்துக்கே சொந்தம் என்கிறார்! என்ன வெட்கக் கேடு! மக்களுக்காகவே உழைத்து - மக்களிடமே பேசி - மக்களுக்காகவே போராடி, மக்களோடு வாழ்ந்த தலைவர் பெரியார்! “நாதசுரக் குழாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவிலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பதுபோல் எனக்கு தொண்டை, குரல் உள்ள வரையில் பேசியாக வேண்டும், பிரசங்கம் செய்தாக வேண்டும்” என்றார் பெரியார். பகுத்தறிவாளர்கள் - நாத்திகர்களின் உழைப்பு எப்போதுமே மக்களுக்குத் தான். ஆத்திகர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படாத சுயநல நோக்கம் கொண்டவர்கள், என்கிறார் பெரியார்.

பெரியார் மொழியில் கூறுவது என்றால் கி.வீரமணி ‘ஆத்திகம்’ பேசுவோர் மனநிலைக்கு வந்து விட்டார். மக்களிடம் கொண்டு போக வேண்டிய பெரியாரியலை நிறுவனத்துக்குள் முடக்கப் பார்க்கிறார். பெரியாரை உலகமயமாக்குகிறோம் என்று கி.வீரமணி பேசி வந்ததன் உண்மையான பொருள், இப்போது தான் நமக்கும் புரிகிறது. உலகமயத்தின் திணிப்புகளில் ஒன்றான காப்புரிமைக்குள் பெரியாரைக் கொண்டு போவதைத் தான் அவர் இப்படிக் கூறி வந்திருக்கிறார் போலும்!

பெரியாரின் அறிவுச் சிந்தனைகள் - அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிமைகளாக வேண்டுமே தவிர, ஆயுள் செயலாளர்களின் அதிகார நிறுவனத்துக்குள் முடக்கிவிடக் கூடாது. அடி மட்டத்து மனிதனின் உரிமைகளுக்காகப் பேசிய பெரியாரின் கருத்துகளை அறிவுசார் உடைமைகளாக்கி, மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் மகத்தான பெரியாரியல் துரோகம் இது! பொதுவுடைமைக்கே - பொதுவுரிமையை முன் நிபந்தனையாக்கினார் பெரியார். பொதுவுடைமையையும் மறந்து, பொது உரிமையையும் கை விட்டு, தனியுடைமையிலேயே மூழ்கிப் போனவர்கள் பெரியாரையும், அந்த சிமிழுக்குள் அடைக்க முயற்சிக்கிறார்கள்.

• பெரியாரின் எழுத்தும் பேச்சும் எங்களின் மூச்சு; அதுவே எங்கள் உரிமைகளுக்கான வீச்சு;
• அறிவை உடைமையாக்கியது ஆரியம்! அந்த உடைமையைத் தகர்த்து மக்கள் உரிமைக்கு கொடி உயர்த்தியது பெரியாரியம்! பெரியாரின் சிந்தனைகள் -நிறுவனத்தின் உடைமைகள் அல்ல; அல்லவே அல்ல.அவை அடிமைப்பட்ட எமது இனத்துக்கான உரிமைகள்!

சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பாராம், கி. வீரமணி

“பெரியார் ஏடுகளில் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்தனையும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளும் - சொத்துகளாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளரான கி.வீரமணி, “இவைகளை அச்சில் வெளியிட்டு விளம்பரமும், வருவாயும் தேட தனிப்பட்ட சிலரும், சில இயக்கங்களும், பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரிய வருகிறது. அப்படிச் செய்வது சட்டவிரோதம்” என்று கூறியுள்ள கி.வீரமணி, “மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலி நாடாகவோ, குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மிரட்டியிருக்கிறார்.

பெரியார் கருத்துகளைப் பரப்ப தடை போடும் கி.வீரமணியின் அறிக்கை, பெரியார் தொடங்கிய ‘விடுதலை’ நாளேட்டிலேயே 2008 ஆகஸ்டு 10 ஆம் தேதி முதல் பக்கத்தில் வெளிவந்திருக்கிறது. சட்டப்படி தவறா சரியா என்பதுகூட, ஒருபுறம் இருக்கட்டும், நியாயப்படி, நாம் செய்வது சரிதான் என்பதில், பெரியார் திராவிடர் கழகம் உறுதியாக நிற்கிறது. பெரியாரின் புரட்சிகர ‘குடிஅரசை’ மக்களிடம் கொண்டு சேர்ப்பது - சட்டப்படி குற்றம் என்றால், அந்தக் குற்றத்தை மீண்டும் மீண்டும் இழைக்க - பெரியார் திராவிடர் கழகம் தயார்! தயார்!! கொள்கை துரோகம் - என்ற குற்றக் கூண்டில் நிற்கப் போவது யார் என்பதை காலம் தீர்ப்பளிக்கும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com