Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஆகஸ்ட் 2006

பெண் பத்திரிகையாளருக்கு அவமதிப்பு

பத்திரிகையாளர்களுக்கு ஏதேனும் சிறு ‘அவமதிப்பு’ என்றால்கூட பத்திரிகையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி விடுவார்கள். உடனே பத்திரிகையாளர் பிரச்சினை தேசியப் பிரச்சினையாக்கப்பட்டு விடும். ஆனால் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஒரு இந்து சாமியார் பெண் பத்திரிகையாளர்களை அவமதித்துள்ள பிரச்சினையில் பத்திரிகையாளர்கள் வாய் மூடி மவுனம் சாதிக்கிறார்கள். அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்து ‘சாது’க்களைக் கொண்ட ‘சுவாமி நாராயண் சன்ஸ்த்தா’ என்ற தொண்டு நிறுவனம் - காஞ்சி மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்துள்ளதாம். இதற்காக, சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. முதல் வரிசையிலிருந்த பெண் செய்தியாளர்கள் எல்லாம், பின் வரிசைக்குப் போகுமாறு உத்தரவிட்டதோடு, பெண் செய்தியாளர்கள், நேரடியாக கேள்விகள் கேட்பதற்கும், தடை போட்டுவிட்டார்கள். சக பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பை ஆண் பத்திரிகையாளர்களும் கண்டிக்கவில்லை. அலுவலகத்திலிருந்து, ஒரு பெண் பத்திரிகையாளர் தொலைபேசியில் பேட்டி பற்றிய செய்திகளில் சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டபோது, அதற்கு பதிலளித்த சாமியாரின் செயலாளர், பெண்கள் தொலைபேசி அழைப்பையும், எங்கள் சுவாமிஜி பிரமமவிகாரிதாஸ் ஏற்க மாட்டார் என்று பதிலளித்தாராம். பத்திரிகையாளர் அமைப்புகள், குறைந்தபட்சம், ஒரு கண்டன அறிக்கையைக் கூடத் தரக் கூடாதா? (‘இந்து’ ஏடு இந்த செய்தியை 25 ஆம் தேதியிட்ட இதழில் 2 ஆம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.)

கெட்டது, போதுமடா சாமி!

மந்திரவாதியின் சிகிச்சையை நம்பி மனிதர்கள் - வீணாய் போவது மட்டுமின்றி, இப்போது கால்நடைகளையும், மந்திரவாதிகளிடம் அழைத்துப் போக ஆரம்பித்துவிட்டார்கள். ஆடு, மாடு, பன்றி, கழுதை உட்பட எல்லாப் பிராணிகளுமே மதம், கடவுள், நம்பிக்கையற்றவைகள். கழுதை பன்றிகளுக்கு மனிதனைப் போல் சாதி கிடையாது. ஆனால் மனிதப் ‘பிராணி’கள் இந்த மேன்மைக்குரிய கால்நடைகளையும், விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது. திருவள்ளூருக்கு அருகே உள்ள பெரியார்குப்பம் எனும் கிராமத்தில், மர்ம நோய் தாக்கி, நூற்றுக்கணக்கான ஆடுகள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. இதற்கு, அக்கிராமவாசிகள், மருத்துவர்களை அணுகாமல் மந்திரவாதியை அழைத்துப் பூசை நடத்தினார்களாம். சாவு எண்ணிக்கை தொடர்வதுதான் மிச்சம். கால்நடை மருத்துவத்துறையும், இதில் அக்கறை காட்டாமல் அலட்சியமே காட்டி வருகிறது என்கிறது, அந்த வட்டார மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள்.

‘விநாயகன்’ வேடிக்கைகள்

விநாயகனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - மிகச் சிறந்த கேளிக்கை விழாக்களாகிவிட்டன. மருத்துவ விநாயகன் கழுத்தில் ‘ஸ்டெத்தாஸ்கோப்’ அணிந்திருக்கிறார். கார்கில் விநாயகர் கையில் துப்பாக்கி வைத்திருக்கிறார். ரயில் விநாயகர், ரயில் என்ஜின் மீது உட்கார்ந்திருக்கிறார் (எலி வாகனம் காணாமல் போய்விட்டது). சென்னையில் வீதி தோறும் விநாயகன் விழாக்கள் துணை நடிகைகளின் நடனங்கள், திரைப்படப் பாடல் இசை நிகழ்ச்சிகள் என்று ‘பக்திமணம்’ கமழ, களை கட்டி வருகிறது. கட்சி பேதமின்றி, ஒவ்வொரு பகுதியிலும் ‘வசூல் கூட்டணிகள்’ வேறு; கடைகள் தோறும் நல்ல வசூல் வேட்டைகளை கட்டுகிறது. ‘டாஸ்மார்க்’ கடைகளிலோ விநாயகன் பிறந்த நாளில் கூட்டம் அலை மோதுகிறது. நெரிசல். விழா கொண்டாடுகிறவர்கள் இப்படி கும்மாளமடித்துக் கொண்டிருக்கும்போது, காவல்துறையினர் மட்டும் கடும் பதட்டத்தோடு இருக்கிறார்கள். எப்போது இது முடியுமோ என்பதே அவர்களின் கவலையாகி விட்டது. சங்கராச்சாரிகள், தாந்திரீகள் எல்லாம் ‘ஆன்மீகத்தை’ உல்லாசமாகக் கொண்டாடும் போது, அப்பாவி பக்தர்கள் மட்டும் கொண்டாடக் கூடாதா என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். அப்படிப் போடுங்க!

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளாட்சித் தொகுதி சீரமைப்பில் - பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார் மங்கலப் பஞ்சாயத்துகள், ரிசர்வ் தொகுதியிலிருந்து விடுவிக்கப்பட்டு விடும் என்று எண்ணியிருந்த சாதி வெறியர்களின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது. இந்த பஞ்சாயத்துகள் ரிசர்வ் தொகுதியாகவே நீடிக்கும் என்று முதல்வர் கலைஞர் பாராட்டத்தக்க முடிவை எடுத்து விட்டார். விடுதலை சிறுத்தைகள் உட்பட அனைத்துக் கட்சியினரும் பாராட்டி வரவேற்று உள்ளனர். இந்த பஞ்சாயத்துகளிலே தேர்தல் நடந்து வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையிலே அனைத்துக் கட்சியினர் சேர்ந்து பாராட்டுக் கூட்டம் நடத்தும் நிலை வரவேண்டும் என்று கலைஞர், சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் இந்தப் பஞ்சாயத்துகளில் வேட்பாளர்களை நிறுத்தினாலே போதும், பிரச்சினை முடிந்து விடும்.
உள்ளூரில் ரிசர்வ் தொகுதியை எதிர்க்கும் சாதி வெறிக் கூட்டத்தில், இந்தக் கட்சிக்காரர்களே இருக்கிறார்கள் என்பதே வேதனையான உண்மை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com