Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஆகஸ்ட் 2006

தேவை! ஊர் தோறும் பூணூல் சேகரிப்பு அலுவலகம்
குத்தூசி குருசாமி

(அண்மையில் - பார்ப்பனர் ‘புதுப் பூணூல்’ போடும் ஆவணி ஆவிட்டம் என்ற தமிழர் ‘அவமதிப்பு’க்கு பல பார்ப்பன பள்ளிகள் விடுமுறை விட்டன. இது பற்றி, குத்தூசி குருசாமி 5.9.1952-ல் எழுதிய ‘குத்தூசி’ கட்டுரை கீழே.

“ஆவணி அவிட்டம்” என்றால் என்ன? - என்று ‘தினமணி’, ‘பாரததேவி’ ஆசிரியர்களைக் கேட்டு எழுதியிருந்தாராம் வேலூர் ராஜபாதர் என்ற ஒரு தோழர். ஒரு பதிலும் கிடைக்கவில்லையாம். உள்ளூர் பார்ப்பனரில் சிலரைக் கேட்டாராம். ‘பூணூல் போட்டுக் கொள்ளுதல்’ என்று பதில் கூறினார்களாம்.

‘நீங்களாவது இதை விளக்குவீர்களா?’ என்று கேட்கிறார், இத்தோழர்.

இந்தச் சனியெனல்லாம் எனக்கென்னத் தெரியும்? மதுரை ஜில்லா வெங்கட் ரமணன் என்ற ஹைஸ்கூல் (பார்ப்பன்) பையன் ரமணரிஷியாகி, ஊர்க் கொள்ளையடித்து, தம்பி குடும்பத்துக்கு ‘உயில்’ எழுதி வைத்து விட்டுப் போவதைக் காண்பதற்குக் கூடக் கண் தெரியாத கபோதிகள் மலிந்த நாட்டில், ஆவணி அவிட்டமாவது, கொழுக்கட்டையாவது? இதற்கு ஒரு பொருளா வேண்டியிருக்கிறது?

சாணியைப் பிடித்து வைத்து ‘சாமி’ என்கிறான் ஒருவன்! ‘ஆமாம்’ என்கிறான், சர்வமுட்டாள்! கல்லைச் செதுக்கி வைத்து ‘கடவுள்’ என்று சொல்கிறான்! அதன் காலில் விழுகிறான், கீழ்ப்பாக்கத்து ஆஸ்பத்திரி!

ஒரு செந்தேளைப் பிடித்து வைத்து, ‘இதுதான் செந்தாமரைப்பூ!’ என்றால் அதை எடுத்து கண்ணில் ஒத்திக் கொள்வானா, எந்த மடையனாவது?

“கல்லிலும் செம்பிலுமோ இருப்பான் எந்தன் கண்ணுதலே?”

“நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்தியே...

நட்ட கல்லும் பேசுமோ?”

- என்றெல்லாம் கேட்டார்கள், தமிழ் அறிஞர்கள்!

அவர்களையெல்லாம் முட்டாள்கள் என்று கருதிக் கொண்டு, சு.ம.காரர் (சுயமரியாதைக்காரர்) மீது மோதுகிறான், ஆஸ்திக சிகாமணி! கடவுள் சார்பில் விழுந்து கடிக்கின்றான், கடவுள் வக்கீல்!!

மனிதன் பூணூல் போட்டுக் கொள்வதாம்! அதற்கு ஒரு நாளாம்! இனிமேல் இடுப்பில் அரைஞாண் கட்டிக் கொள் வதற்கும்கூட ஒரு தனிப் பண்டிகை நடந்தாலும் நடக்கலாம்! அதற்கும் சர்க்கார் விடுமுறை விட்டாலும், விடலாம்!

“ஆவணி அவிட்டம்” என்பதற்கு நான் கூறக்கூடிய பதில் இதுதான்! “அக்கிரகாரத் திமிர்!”

பணக்காரன் தன் பணத்தின் திமிரை ஏழைகளிடம் காட்டுவதற்காகத் தன் தேவைக்கு மேற்பட்ட ஆடம்பர வசதி களை வைத்துக் கொண்டிருக்கிறானல்லவா?

சென்ற மாதம் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட எகிப்து மன்னரின் அரண்மனைக்குள் 2000 பட்டு சட்டைகளும், 1500 ‘நெக்டை’களும் மேஜை நிறையத் தங்க ஃபவுண்டன் பேனாக்களும், தங்க முலாம் பூசப்பட்ட 2,000 நாற்காலிகளும், “ரோல்ஸ் ராய்ஸ்”, “காடிலாக்” போன்ற 200 விலையுயர்ந்த மோட்டார்கார்களும் இருந்தனவாம்! இதற்குப் பெயர்தான் பணத்திமிர்!

இதைப் போன்றதுதான் பூணூல் அணிவதும்! தேவையில்லாத ஒன்று! அதாவது, ஜாதித் திமிர்!

கல் - செம்பு - பித்தளை உருவங்களுக் கெல்லாம் (கடவுள்கள்) மாட்டி வைத்திருக்கிறானே, இந்த பூணூலை! இவைகளும் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவைகளாம்!

படமெடுக்கின்ற பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர் வைத்திருப்பதுபோல, பூணூல் போட்டிருக்கின்ற பேர்வழி ‘மேல்சாதிக்காரன்!’

அவனைப் பார்த்து, திராவிடர்களிலும் சிலர் பூணூலைப் போட்டு மேல் ஜாதியாகிவிடலாம் என்றுதான் பார்த்தார்கள், பார்க்கிறார்கள் முடியவில்லையே!

7.8.50-ல் கும்பகோணம் கும்பேஸ்வர ஸ்வாமி கோவிலுக்குள்ளிருந்த பெரிய நந்தியை (கல் காளை மாட்டை)த் தொட்டு விட்டதற்காக, கடலங்குடித் தெரு பெரிய சாமிப் பத்தர் (பூணூல் தரித்த விஸ்வகர்ம பிராமணர்) என்பவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தார்களே! இதற்குள்ளாக மறந்து விடுவேனா?

பூணூலை மாட்டினால் ‘பெரிய ஜாதி’யாகி விடலாம் என்றால், மகமது இஸ்மெயில் சாயபுக்குப் பூணூலை மாட்டி ஒரே நிமிஷத்தில் பூதேவராக்கிவிடலாம் - அதெல்லாம் முடியாதப்பா!

நான் நினைத்தால் நாளைக்கே முஸ்லிம் ஆகலாம்! கிருஸ்தவர் ஆகலாம்! ஆனால் அக்கிரகாரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பேரன், பேத்தியோடிருக்கின்ற டாக்டர் சுப்பராயன்கூடப் பார்ப்பானாக முடியாதே! அவர் ஒரு டஜன் பூணூலை வேண்டுமானாலும் மாட்டிக் கொள்ளட்டுமே! பார்ப்பானாக முடியுமா?

ஆரியஸ்தானில் (அக்கிரகாரம்) பிறந்தால்தான் பிராமணனாக முடியும்!

இது வெறும் ஜாதித்திமிரய்யா. ஜாதித் திமிர். வேறொன்றுமில்லை! 100க்கு 99 பேருக்கு இதன் கருத்தோ, தத்துவமோ (?) எதுவும் தெரியாது. ஏதோ, குளிக்கும்போது முதுகு தேய்த்துக் கொள்ளலாம். சாவி மாட்டிக் கொள்ளலாம். வாழை இலையை நறுக்கலாம். (தஞ்சை மாவட்ட காஃபி ஓட்டல்களில் அல்வாத்துண்டுக்குச் சிறு இலை தேவைப்படும்போது, பெரிய ஏட்டைப் பூணூலுக்குக் குறுக்கே கொடுத்து சரக்கென்று இரண்டாக அறுப்பதைக் கண்டிருக்கிறேன்!) இந்தக் காரியங்களைத் தவிர இந்தப் பூணூல் வேறெதற்காக இருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை.

“பூணூல் போட்டிருப்பவர்கள் எல்லோரும் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள்ளாக அந்தந்த ஊர் பூணூல் சேகரிப்பு அலுவலகத்தில் தங்கள் பூணூலைக் கழற்றிக் கொடுத்துவிட்டு ரசீது வாங்கிக் கொண்டு வராத வரையில், அவர்களுக்கோ, அவர்களைச் சேர்ந்த சுற்றத்தாருக்கோ எந்தவிதமான உத்தியோகமும் தரப்படாது; படிப்பற்கும் இடமளிக்கப்பட மாட்டாது” என்ற ஒரு சிறு உத்தரவு பிறப்பித்தாலே போதுமே!

சென்ற மாதம் சீனாவில் எலிகளைக் கொல்வதற்காக எலி வால்கள் கொண்டு வருபவருக்குப் பரிசளிக்கப்படும் என்று கூறி, லட்சக்கணக்கான எலிவால்களைக் குவித்தார்களாமே! அதுபோல மூட்டை மூட்டையாகப் பூணூல்கள் குவிந்து விடுமே!

ஏமாறுகின்ற சோணகிரி இருக்கின்ற வரையில் ஏமாற்றுகின்ற பித்தலாட்டக்காரனும் இருந்துதான் தீருவான். பூணூல் என்பது, சாணிப் பிள்ளையார் என்பதைப் போல! இன்றைக்கு இருப்பது ‘சுயராஜ்யம்’ என்பதைப் போல!

(‘குத்தூசி’ கட்டுரைக் களஞ்சியத்திலிருந்து)

(குறிப்பு: டாக்டர் சுப்பராயன் சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தாத்தா)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com