Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஆகஸ்ட் 2006

அர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துவிட்டது. இதன் மூலம் உச்சநீதிமன்றம் பார்ப்பன நீதிமன்றமே என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய அர்ச்சகர்கள் பரிபாலன சபையைச் சார்ந்த பார்ப்பனர்கள், இந்த வழக்கை நேரடியாக உச்சநீதி மன்றத்துக்கே கொண்டு போய் விட்டனர். 1971-ல் கலைஞர் ஆட்சி, சட்டசபையில் நிறைவேற்றிய, இதே போன்ற சட்டத்தை எதிர்த்து, அப்போதும் பார்ப்பனர்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் தான் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அவசரச் சட்டம், கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு, ஜூலை 16 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துவிட்டது. அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து சட்டமன்றத் தீர்மானம் வழியாக, சட்ட வடிவம் தருவதற்கான மசோதா கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு - தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தீர்மானம் அமுலாவதற்கு முன்பாக ஆகஸ்டு 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, இடைக்காலத் தடை விதித்து விட்டது. 2002 ஆம் ஆண்டு அக்டோபரில், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்ற கருத்தை ஏற்க முடியாது என்று, இதே உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் எஸ்.இராசேந்திரபாபு, டி.இராசு ஆகியோரடங்கிய அமர்வுதான் தீர்ப்பளித்தது. “மனித உரிமைக்கு எதிரான நடைமுறைகள் எதுவாக இருந்தாலும், அவை அரசியல் சட்டம் அமுலுக்கு வந்ததற்கு முன்பே இருந்து வந்தன என்பதற்காக அவற்றை அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகும் ஏற்க முடியாது” என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

கேரளத்தில் கொங்காரப்பிள்ளி என்ற இடத்திலுள்ள சிவன் கோயிலுக்கு, ராஜேஷ் என்ற ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவரை, கேரள அரசு (தேவாஸ்வம்போர்டு) அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, ஆதித்யன் என்ற பார்ப்பன அர்ச்சகர் தொடர்ந்த, புகழ் பெற்ற வழக்கு இது.

இப்போது, கலைஞர் ஆட்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அவசரச் சட்டத்தைக்கூட அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் பிறப்பித்தது. அதே உச்சநீதிமன்றம், இப்போது பார்ப்பனர்களின் கோரிக்கையை ஏற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியின் ஒருமித்த தீர்மானத்துக்கு எதிராக, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ஒரு வழக்கை விசாரணைக்கு ஏற்று, இடைக்காலத் தடையும் வழங்கிவிட்டது.

எனவேதான் - ஆகமக் கோயிலில் ஒரு பார்ப்பன அர்ச்சகருக்கு பதிலாக, பார்ப்பனரல்லாத ஒருவர் அர்ச்சகராக வந்து, பூசை நடத்துகிற நாள் வருகிற போதுதான், இந்த கோரிக்கை வெற்றி பெற்றதாக உறதியாக நம்ப முடியும் என்று நாம் இடைவிடாது சுட்டிக்காட்டி வருகிறோம். காரணம் பார்ப்பனர்களின் அதிகாரச் செல்வாக்கு, அவ்வளவு வலிமையாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு செய்யும் பிரச்சினைகூட, இதே நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பார்ப்பன ஆதிக்க சக்திகள் அதிகார மய்யங்களில், தங்களை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான “வேணுகோபாலன்கள்” உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் பெற்று, பதவியில் தொடர முடிகிறது.

ஆக, அர்ச்சகர் சட்டமானாலும், உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு சட்டமானாலும், அவை ‘குறியீடுகளாக’ முடங்கிப் போய்விடாமல் நடைமுறையில் அமுலாக்கப்படும் வரை தொடர்ந்து, தீவிரமான போராட்டங்களை நடத்தியாக வேண்டும். அது பார்ப்பன மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டமாக வெளிப்படையாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால், “சட்டங்கள் அமுலுக்கு வந்துவிட்டன, ஆனால் செயலாக்கம் பெறவில்லை” என்ற நிலைதான் நீடிக்கும்.

இதைத்தான் உச்சநீதிமன்றத்தின் இந்த ‘இடைக் காலத் தடை’ உணர்த்திக் கொண்டிருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com