Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

ஆபாச வசவுகள் - சிகரெட் புகையோடு ‘அருளாசி’ விற்பனை

(சிகரெட் சாமியார் பற்றி ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 14.7.05 வார ஏட்டில் அதன் செய்தியாளர் கதிரவன் தந்துள்ள படப்பிடிப்பு)

கோயிலுக்குள்ளேயே சிகரெட் பிடித்து பக்தர்களின் மேல் ஊதி ஆசி தரும் வித்தியாசமான சாமியார் இவர். ஆண், பெண் பாகுபாடின்றி பக்தர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ஆசி வழங்குவது இந்தச் சாமியாரின் ஸ்பெஷல் ஸ்டைல். புண்பட்ட மனதை மட்டுமல்ல; வலிக்கும் இடங்களையும் சிகரெட் புகை கொண்டு ஆற்றி வருவதாகக் கூறப்படும் சிகரெட் சாமியாருக்கு அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் என ஏகப்பட்ட உயர்மட்ட பக்தர்கள். பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மட்டும் பக்தர்களைச் சந்தித்து ஆசி வழங்கி வரும் சிகரெட் சாமியாரை நேரில் சந்திக்க அமாவாசை தினமான ஆறாந் தேதியன்று பாளையம் கிராமத்துக்கு நேரில் சென்றோம். இது தருமபுரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரிக்கு அருகிலுள்ளது.

சங்கரலிங்கம் என்ற நிஜப் பெயரைக் கொண்ட சிகரெட் சாமியார், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்துக்கு அருகேயுள்ள நீப்பத்துறையைச் சேர்ந்தவர். குணா திரைப்பட கமல் கணக்காக இருக்கும் சாமியாருக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேல் மதிக்க முடியாது. பார்ப்பதற்கு சற்றே மனநிலை சரியில்லாதவரைப் போன்ற தோற்றம். பக்குவமற்ற ஆபாச வார்த்தைகள். இவை தான் சங்கரலிங்கம் சாமியார். நீப்புத் துறையிலிருந்து சாமி யாரை தருமபுரிக்கு அழைத்து வந்தவர்கள் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார் - வாசுகி தம்பதியர். தங்களது நெடுநாள் மனக் குறை தீர்ந்து போக சிகரெட் சாமியாரே காரணம் என்று சொல்லும் இத்தம்பதியினர், சாமியாரை பாளையத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

“சாமியார்னு நினைச்சு சாதாரணமாப் பார்த்துடா தீங்க. சாமி தனியா கார் வச்சிருக்கார். அவரோட கார்ல ஒரு முறை சென்னையில் இருந்து தருமபுரி வந்தோம். 140 கிலோ மீட்டர் ஸ்பீடுல சர்வ சாதாரணமா கார் போச்சு. ஆனா சாமியார் ஸ்டிரிங்குல கை வைக்கல. எங்களால் நம்பவே முடியலை. ஆனா இது நடந்தது” என்று நம்ப முடியாத ஒரு புனை கதையைப் புளகாங்கிதத் துடன் கூறுகிறார் அசோக்குமார்.

இந்தச் சாமியாரின் புகழ், சுற்று வட்டாரங்களுக்கு வேகமாகப் பரவ, பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகரித்திருக் கிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமானதும் சாமியாரைத் தரிசிப்பதற்கென தனியே ஒரு குடிலும் அமைக்கப்பட்டு விட்டது. அரை குறையாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்தக் குடிலுக்குள் சிவலிங்கத்தை முதன்மையானதாக வைத்து வழிபடுகிறார் சாமியார். குடிலுக்குள்ளே பாம்புப் புற்று ஒன்றும் காணப்படுகிறது. இந்தப் பாம்புப் புற்றுக்கு பூஜை நடத்தி, சிவலிங்கத்தை வழிபட்ட பின்னரே சாமியாரை பக்தர்கள் சந்தித்து ஆசி வாங்க முடியும். குடிலுக்குள் சுரங்கம் போன்ற நிலவறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களுக்கு, சாமியார் பேயோட்டுவது இங்கு தானாம். சில சமயம் மூன்று நாட்கள் கூட இந்த நில வறைக்குள் தனிமையில் இருப்பதுண்டாம்.

சிகரெட் சாமியார் பக்தர்களுக்கு சிகரெட்டை ஊதித் தள்ளியபடிதான் குறி சொல்லுகிறார். பக்தர்கள் காணிக்கையாகக் கொண்டு வரும் சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பாதி புகைத்து விட்டு, மீதியை அந்த பக்தரிடமே பிரசாதமாகத் தந்து விடுவாராம் சங்கரலிங்கம் சாமியார். சிகரெட் பாக்கெட்டை பிரசாதமாக வாங்கிய பக்தர்கள், சாமியார் படத்தின் முன் ஊதுவத்தியைப் போல் அந்த சிகரெட்டைக் கொளுத்தி வணங்கினால்தான் சாமியாரின் அருளாசி பலிக்குமாம்!

“நான் சாமியாரே இல்லேடா. என்னை ஏண்டா கும்புடறீங்க?” என்று தன்னை வணங்குபவர்களைப் பார்த்து சத்தம் போடும் சாமியாரைப் பார்த்து யாரேனும் “சாமி!” என்று கூப்பிட்டு விட்டால் அவர்களுக்கு சரமாரி வசவுகள வந்து விழுகின்றன. “ஐயா” என்று கூப்பிடுபவர்களைச் சற்று நிதானத்துடன் திட்டுகிறார் சாமியார் சங்கரலிங்கம்.

நம் முன்பாக, சாமியாரை விழுந்து வணங்கிய இளைஞர் ஒருவரை, “எழுந்திருடா, குருமட்டைத் தே... மவனே” என்றார் சாமியார் வெகு கேசுவலாக. நாம் அதிர்ந்து போய் சாமியாரைக் குழப்பத்துடன் பார்த்தோம். “அப்படினா கெட்ட வார்த்தைனு நீ நினைச்சிக்காதே. கூர்மையான தேவனின் மவனேனு இதுக்கு அர்த்தம்!” என்றபடி சிரிக்கிறார் சாமியார். ‘பரதேசி’, ‘நாயே’ இவையெல்லாம் சாமியாரின் நல்ல வார்த்தைகள் என்றால் கெட்ட வார்த்தைகளை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறோம்.

பெண்கள் என்றால் சாமியாரின் அதிகப்படியான மரியாதையே, “வாடி, போடி” என்று அழைப்பது தான். திருமண மாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை என்று வரும் பெண்களுக்கு சாமியார் சொல்லும் பரிகாரம் என்ன தெரியுமா? ‘ஆளை மாத்திக்கடி, குழந்தை பிறக்கும்’ என்பதுதான்.

அதே போல பெண்களுக்கு அவர் தோஷம் கழிக்கும் விதமே அலாதி. அவர்களைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு தடவிக் கொடுத்தே அவர்களது தோஷத்தைக் கழித்து விடுகிறார் என்று பக்திப் பரவசத்துடன் சாமியாரின் சீடர்கள் கூறிக் கொள்கிறார்கள்.

சர்க்கரை வியாதி என வருபவர்களுக்கு சாமியார் குடித்து வைத்த எச்சில் பால்தான் பிரசாதமாகத் தரப்படுகிறது. அந்த எச்சில் பாலைக் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் குணமாகி விடுகிறதாம். எல்லாவற்றையும்விடக் கொடுமை, தீராத கைகால் வலி என்று வருபவர்களின் மேல் சிகரெட் புகையை தம் கட்டி ஊதுகிறார். வலிக்கும் இடத்தில் சிகரெட் புகை படர்ந்த மாத்திரத்தில் வலி பறந்தே போய் விடுகிறதாம். நம் முன்பாக வயதான மூதாட்டி ஒருவரின் மரத்துப் போன கால்களின் மேல் சிகரெட் புகையை சாமியார் ஊத, “முன்னைக்கு இப்போ பரவாயில்லை” என்று ஒருவித நிறைவுடன் அவர் எழுந்து சென்றார்.

“பார்த்தீங்களா சாமியாரோட சக்தியை, இதப் பத்தித் தெரியாம அவரைத் தப்பாச் சொல்றவங்களும் இருக்காங்க” என்றார் அருகிலிருந்த ஒரு பக்த கோடி! கால் வலி சரியாகிப் போன பெண்கள் தங்கள் காலில் இருக்கும் வெள்ளிக் கொலுசுகளைக் காணிக்கையாகத் தருகிறார்கள். அப்படிச் சேர்ந்த கொலுசுகளை உருக்கிச் செய்யப்பட்ட ஒரு வெள்ளி நாகமும் குடிலுக்குள் இருக்கிறது.

சாமியாரது ‘வி.ஐ.பி. பக்தர்களுள் ஒருவர் செல்போனை வாங்கித் தந்து, அதற்கான பில்லை மாதாமாதம் அவரே கட்டி வருகிறார். சாமியாருக்கு அரசியல் வி.ஐ.பி.க்கள் அதுவும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அதிகம். நேரில் வர வாய்ப்பில்லாத வி.ஐ.பி.க்கள் செல்போன் மூலமாகவே சாமியாரின் வசவு ஆசிகளை வாங்கிக் கொள்கின்றனர். சேலத்தைச் சேர்ந்த சாமியாரின் பக்தரான உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், மாதத்திற்கு இருமுறையேனும் வசவுகளை செல்போன் வழியே வாங்கித் தன்னை சார்ஜ் செய்து கொள்கிறார். கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் தசராஜூ தன் குடும்பத்துடன் வந்திருந்து சாமியாரிடம் வசவுகளை வாங்கிக் கொண்டு கிளம்பினார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தொழிற் சங்கப் பிரமுகரான கோட்டை அசோகனும் சாமியாரின் மிக முக்கியமான பக்தர்.

காணிக்கையாக செக் அல்லது டி.டி.யை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் சாமியார், பணத்தைத் தந்தால் அதைக் கிழித்துப் போட்டு விடுகிறார். “இதுவரைக்கும் கோடி ருபாய்க்கும் மேல் இப்படி கிழிச்சிப் போட்டிருக் கேண்டா” என்று சிரித்தபடி சொல்கிறார் சாமியார். “கரன்சியைக் கிழிப்பது தண்டனைக்குரிய குற்றம்” என்றோம் நாம். “தப்பா? என்னை எந்த கூமுட்டை ஜெயில்ல போடப் போறான்? அதெல்லாம் நடக்காது. இங்க எல்லாக் கட்சி கூமுட்டையும் தான் வர்றானுங்க. போடச் சொல்லேன் பார்ப்போம்” என்றார் சிகரெட் சாமியார். அவரை ஒரு சில படங்களுக்கு மேல் நம்மை எடுக்கவிடாமல் தடுத்து வெளியே அனுப்பி வைத்தனர் அவரது சீடர்கள்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

சாமியாருடைய குடிலுக்கு வெளியே நின்று, அங்கு வருவோர் போவோருக்கெல்லாம், சாமியாரைப் பற்றிக் கடுமையாக விமர்சித்து அச்சிட்ட நோட்டீசை விநியோகித்துக் கொண்டிருந்தனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். தருமபுரி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பாளரான வேடியப்பன் நம்மிடம் “ஆபாசச் சாமியார் சங்கரலிங்கத்தை வைத்து ஒரு கூட்டம் காசு பார்த்துக் கொண்டிருக்கிறது. மாதத்தின் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் எங்கேயிருக்கிறார்? என்ன செய்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. இந்தச் சாமியார் ஏற்கனவே ஒரு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய பழங் குற்றவாளி என்று ஒரு தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அது உண்மையா என்று நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.

மன்மதனாகத் தன்னை பாவித்துக் கொள்ளும் இந்த சிகரெட் சாமியார், வாலிபப் பெண்களை மடியில் படுக்க வைத்துக் கொள்வதும், போடி, வாடி என்பதுடன் ஆபாசமாக அவர்களைப் பேசுவதும், ஆளை மாற்று என்று தவறான வழிக்குத் தூண்டும் கொடுமையும் இங்கே தொடர்கதை. ஆபாசச் சாமியார் சங்கரலிங்கத்தைக் கைது செய்து சிறையிலடைக்குமபடி தொடர் போராட்டங்களை நடத்த இருக்கிறோம். மனநிலை பாதிக்கப்பட்ட நிலைமையில் இருக்கும் இந்தச் சாமியாரை மனநலக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றார்.

ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அங்கே பக்தர்கள் வந்து சென்றபடிதான் இருக்கிறார்கள்.

சிகரெட் சாமியாருக்கு எதிராக களமிறங்கியது கழகம்

தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை அருகே உள்ள பாளையம் எனும் கிராமத்தில், ஒரு சாமியார் சிகரெட்டைக் குடித்து, பக்தர்கள் முகத்தில் ஊதுகிறார். சாமியார் ஊதி விடுகிற சிகரெட் புகையால், தங்களுக்கு புண்ணியம் கிடைக்கிறது என்று நம்பும் மூட பக்தர்கள், படை எடுத்து வருகின்றனர். இவருக்காக, இங்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இவர் ஆசி வழங்குவாராம். இவரிடம் ‘சிகரெட் புகை’யை வாங்கி ஆசி பெறுவதற்காக அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் வருகிறார்களாம்.

பக்தர்கள் தரும் ரூபாய் நோட்டுகளை, அங்கேயே சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு விடுகிறார். இது சட்ட விரோதமான செயலாகும். இந்த சாமியார் மோசடியை எதிர்த்து, தர்மபுரி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் களமிறங்கியுள்ளது. மாவட்டக் கழக அமைப்பாளர் வேடியப்பன், இது பற்றி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “பொது இடத்தில் புகை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அதை இந்த சாமியார் மீறி வருகிறார். ரூபாய் நோட்டுகளை இவர் கிழித்துப் போடுகிறார். இது சட்டப்படி குற்றம். எனவே இந்த சிகரெட் ஆசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவர் யார்? எந்த ஊரைச் சார்ந்தவர்? இவரது பூர்வீகம் என்ன? இவை எல்லாம் மர்மமாகவே உள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டுள்ள இவரை வைத்து, ஒரு கும்பல், பொது மக்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூல் செய்து வருகிறது என்றும், கழக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது.

துண்டறிக்கைகள்

‘சிகரெட் புகையை சுவாசிப்பதால் அருளாசி கிடைக்குமா? ஆபத்தான நோய்கள் வருமா?’ என்ற தலைப்பில், பல்லாயிரக்கணக்கில் துண்டறிக்கைகளை அச்சடித்து, கழகத் தோழர்கள் பொது மக்களிடம் வழங்கி வருகின்றனர்.

“சுகாதார கேட்டை விளைவிக்கும் வகையில் நீண்ட நாட்களாக குளிக்காமல் நடமாடும் சிகரெட் சாமியார் சங்கரலிங்கத்தைக் கைது செய்து மனநல மருத்துவமனையில் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச சாமியாரை ஈவ்டீசிங் வழக்கு மற்றும் விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்! என்று துண்டு பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் துண்டுப் பிரச்சாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பொதுக் கூட்டம்

இதற்கிடையே சிகரெட் சாமியாரின் மோசடிகளை அம்பலப்படுத்தி 19.7.05 அன்று அரூரில் கழக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கழகத்தலைவர் கொளத்தூர் மணி, கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தோழர்கள் அரங்கநாதன், ஆதிமூலம், து.பி.குமரன், மு. ஆறுமுகம், சி.க. காக்கன் திருமா (விடுதலை சிறுத்தைகள்), இனியவன் (அய்க்கிய பொதுவுடைமை கட்சி), தொ.கண்ணன் (தமிழ்நாடு கூலி விவசாயிகள் சங்கம்), விந்தை வேந்தன், பிளவங்கன் (இந்திய குடியரசு கட்சி), வழக்குரைஞர் அண்ணாத்துரை, வழக்கறிஞர் இராசு. நெடுங்கிள்ளி(தமிழர் தேசிய இயக்கம்) ஆகியோர் உரையாற்றினர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com