Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

முனைவர் வ.அய்.சுப்ரமணியத்துக்கு ‘உலகப் பெருந்தமிழர் விருது’
தமிழர் ஒற்றுமைக்கு குரல் கொடுத்த நாகர்கோயில் மாநாடு



மாநாட்டிலிருந்து...

(நாகர்கோயிலில் ஜூலை 31 ஆம் தேதி நடந்து முடிந்த உலகத் தமிழர் பேரமைப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு மாநாட்டில் உரையாற்றியோர் கருத்துகளிலிருந்து )

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்ட பூர்வமாக அங்கீகரித்துள்ள நாடு டென்மார்க். அதோடு டென்மார்க்கில் வாழும் 63000 தமிழர்களுக்கு, அந்நாடு தமிழ்ப் பள்ளிகளை நடத்துவதற்கு இடங்களை ஒதுக்கித் தந்துள்ளது. இத்தகவலை டென்மார்க்கிலிருந்து வந்து கலந்து கொண்ட பொன்னையா தங்கராசா தெரிவித்தார்.

கோயில் கருவறைக்குள் இப்போதும் - தமிழர்களை அனுமதிக்க மறுத்து வரும் - சாதிவெறியை எதிர்க்க உலகத் தமிழர் பேரமைப்பு முன்வர வேண்டும் என்று பால பிரஜாபதி அடிகளார் வலியுறுத்தினார்.

தமிழ் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது - மதங்கள் தான் என்று குறிப்பிட்ட அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா தமிழை அறிவியல் மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அறிவியலாக வளர்த்தெடுக்கப் படாத எந்த மொழியும் வளர்ச்சி அடையாது என்று வலியுறுத்தினார்.

பழந்தமிழர் மன்னர்கள் பெருமையும், பழம் தமிழர் வாழ்வையும் பெருமையுடன் பேசிக் கொண்டிருப்பதைவிட, இப்போது, தமிழர்களின் முன்னேற்றத்தைப் பற்றியே அதிகம் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய, மாநாட்டுத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழர்கள் முன்னேறுவதில்தான், தமிழ் வளர்ச்சி அடங்கி இருக்கிறது என்றார். உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு - அந்தந்த நாடுகளில் உரிய பாதுகாப்பும், உரிமைகளும் கிடைக்க வேண்டுமானால், தமிழகத்தில் தமிழர்கள் வலிமையான அமைப்பாக வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டது தான் உலகத் தமிழர் பேரமைப்பு. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளை உலகத் தமிழர் பேரமைப்பில் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவில் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த மாசேதுங், உலகம் முழுதும் வாழும் சீனர்களின் பாதுகாப்புக்கு, செஞ்சீனம் குரல் கொடுக்கும் என்று அறிவித்ததை பழ. நெடுமாறன் சுட்டிக் காட்டினார்.

உலக மயமாக்கல் தான் - இப்போது, எழுந்துள்ள மிகப் பெரும் ஆபத்து என்று குறிப்பிட்ட எழுத்தாளர் தோப்பில் முகமதுமீரான், அண்மையில் உலகமயமாக்கலால் நிகழும் ஆபத்தை முன் வைத்து, தான் எழுதிய ஒரு கதையை, ஒரு தமிழ்ப் பத்திரிகை வெளியிட முடியாது என்று திருப்பி அனுப்பியதோடு, கதையை வெளியிடுவதற்கு வழங்கும் பணத்தைவிட - இரண்டு மடங்கு பணத்தையும் அனுப்பி வைத்தது என்றார். இனி தமிழ் இலக்கியப் படைப்புகள், இத்தகைய வாழ்வியல் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழர்களுக்கு ஒரு நாடு அமைய வில்லை என்று பலரும் பேசிய கருத்தை மறுத்தார் மறவன் புலவு க. சச்சிதானந்தம். தமிழ் ஈழத்தில், விடுதலைப் புலிகள் ஒரு அரசைத் தான் நடத்தி வருகிறார்கள் என்றார். இலங்கை அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்குமிடையே உருவாகியுள்ள போர் நிறுத்த உடன்பாட்டில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும், சுனாமி பாதிப்புக் கான சர்வதேச நிதியைப் பங்கிடுவதில், விடுதலைப் புலிகள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை, இலங்கை அரசு அங்கீகரித்துள்ளதையும், இதற்கு இந்தியா ஏற்பு வழங்கியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

90 விழுக்காடு ஆங்கிலச் சொற்களோடு 10 விழுக்காடு தமிழைச் சேர்ந்து, அதைத் “தமிழ்ப்” பேச்சாக்கிடும் போக்கு, தமிழையே வெகுவிரைவில் அழித்துவிடும் என்றார், கவிஞர் காசி. ஆனந்தன். இத்தகைய பேச்சு வழக்கை - பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும், வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டிய கவிஞர் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு அணுகு முறையில் பார்த்தாலும், இந்தத் தமிங்கிலத்தை எதிர்ப்பதே சரி என்றார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

உலகத் தமிழர் பேரமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோயில் நகரில் ஜூலை 31 ஆம் தேதி எழுச்சியுடன் கூடி - தமிழர் ஒற்றுமையை பறைசாற்றியது. காலை 11 மணியளவில் தொடங்கிய மாநாடு இரவு 11 மணி வரை, இடைவெளியின்றி தொடர்ந்து நடந்தது. அரங்கம் நிரம்பி அரங்கத்துக்கு வெளியேயும், தமிழர்கள் திரண்டிருந்தனர். கருத்தரங்கம், ஆய்வரங்கம், கவிதை அரங்கம் என்று பல்வேறு சிந்தனை அரங்கங்களில் தமிழறிஞர்கள் பங்கேற்று, கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர். உலகத் தமிழர்களின் பிரதிநிதி யாக, பொன். சத்திய நாதன் (ஆஸ்திரேலியா), டாக்டர் இந்திரகுமார் (பிரிட்டன்), சிவாஜி லிங்கம் (இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்), பொன்னையா தங்கராசா (டென்மார்க்), அலன் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

புலவர் சுப்ரமணியம், ஐ.இராசன், பேராசிரியர் விநாயகப் பெருமாள், நாடோடித் தமிழன், கதிரவன், மு.க.தமிழரசு, புலவர் தமிழ் மாறன், நா.ப. இராமசாமி, மணவை முஸ்தாபா, க. சச்சிதானந்தன், புலவர் வே. செல்வம், சி.கபிலன், முனைவர் கோமதி நாயகம், அல்போன்ஸ் நந்தானியல், கவிஞர்கள் அறிவுமதி, அறிவரசன், மதுரா, குமரேசன், தமித லட்சுமி, முனைவர் க.ப. அறவாணன், புலவர் அறிவுடைநம்பி, முனை வர் பத்மநாபன், பொன் னீலன், முனைவர் ச.வே. சுப்ரமணியன், முனைவர் அழகப்பன், சுப.வீர பாண்டியன், தோப்பில் முகமது மீரான், தமிழப் பன், சந்திரேசன், மெல் கியோர், பால பிரஜாபதி அடிகளார், மணியரசன், இளமுருகன், வி.சி.குக நாதன், கொளத்தூர் மணி, தொல். திருமா வளவன், பழ.நெடுமாறன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்து, தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக செயல்பட்டு வரும், திராவிடன் பல்கலைக் கழக துணைவேந்தர் தமிழறிஞர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியத்துக்கு, “உலகப் பெருந்தமிழர் விருது” வழங்கப்பட்டது. எந்த விருதையும் பாராட்டையும் ஏற்க மறுத்து வருபவரான முனைவர் வ.அய்.சுப்பிர மணியம், உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டுத் தீர்மானங்கள்:

1. திருவள்ளுவர் பொதுவான உலகச் சான்றோர். அவருக்காக குமரித் தீவில் எடுக்கப் பெற்றுள்ள சிலை பொதுவானது. அது காலங்கடந்து நிற்கும் வண்ணம் காக்கும் பொறுப்பு நம்முடையது. எனவே அச்சிலையை நிலையாக பராமரிக்கும் வண்ணம் தன்னாட்சி உள்ள பெருமக்கள் குழு ஒன்றைத் தமிழ்நாட்டு அரசு உடனே அமைத்தல் வேண்டும்.

2. திருக்குறள் உலகப் பொது நூல். அதனை இந்திய தேசிய இலக்கியமாக அறிவித்தல் வேண்டும் என்பது தமிழருடைய நெடுங்கால வேண்டுகோள். இதனை உடனடியாகச் செய்தல் வேண்டும் என நடுவணரசை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

3. தமிழைச் செம்மொழியாக அறிவித்த இந்திய அரசையும் அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து தலைவர்களையும் இம்மாநாடு பாராட்டுகிறது. அத்துடன் தமிழ், கி.மு.வைச் சேர்ந்த செம்மொழி என்பதை இந்திய அரசாணையாகச் சேர்த்துப் புதிய ஆணை ஒன்றை இந்திய அரசு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள் கிறது.

4. சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களுக்கு வந்து, புறப்பட்டுச் செல்லும் விமானங்களில் அறிவிப்புகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே செய்யப் பெறுகின்றன. தமிழ்நாட்டு நகரங்களுக்குள் இறங்கும் போதும், ஏறும் போதும், அறிவிப்புகளைத் தமிழில் அறிவிக்க நடுவணரசு விமான போக்குவரத்துத் துறை உடனடி ஏற்பாடு செய்தல் வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்துகிறது.

5. உலகெங்கும் இயங்கும் தமிழ் / தமிழர் சங்கக் கையேடு ஒன்றை உருவாக்குதல் வேண்டும். அதனை உருவாக்கும் பொறுப்பைத் தன்னாட்சி கொண்ட ஓர் அமைப் பிடம் தமிழக அரசு வழங்கி, உரிய நட வடிக்கையையும் மேற் கொள்ள வேண்டும் என்று தமிழ் நாட்டு, புதுவை அரசுகளை இம் மாநாடு வேண்டிக் கொள்கிறது.

6. இலங்கையில் மூன்று ஆண்டு காலமாக நிலவி வரும் போர் நிறுத்தத்தையும் அமைதியான சூழலையும் சீர்குலைக்க சிங்கள பேரினவாத சக்திகள் இடைவிடாமல் முயற்சி செய்து வருகின்றன. போரினாலும் ஆழிப் பேரலையினாலும் பெரும் பாதிப்பிற்கு ஆளான தமிழின மக்களுக்கு உதவி செய்ய உலக நாடுகள் முன்வந்த போதும் அந்த உதவி கிடைக்க விடாமல் திட்டமிட்டு தடுக்கப்படுகிறது.

இலங்கையில் அமைதியான சூழ்நிலை தொடரவும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் புனர் வாழ்வு பெறவும் இந்திய அரசு முன் நின்று முயற்சிகளை மேற்கொள்வதுடன் உலகநாடுகளையும் அவ்வாறே செய்ய வைக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவியை செய்யக் கூடாது என்றும், அவ்வாறு செய்வது தமிழர்களை கொன்று குவிக்க உதவுவதாகும் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது.

கொளத்தூர் மணி பேச்சு
நகர்த்த வேண்டிய இலக்கு எது?


மாநாட்டின் வாழ்த்தரங்கத்தில் பங்கேற்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார். அவரது உரையின் சுருக்கம்:

தமிழர்களின் வாழ்வுரிமையைப் பெற்றிடவும் அவர்களின் வறுமை நிலையையும் இழிவையும் ஒழித்து, சமத்துவத்தை நிலை நாட்டவும், சுயமரியாதை வாழ்வுக்கும், உலகத் தமிழர்களாக நாம் ஒன்றிணைந்து நிற்க விரும்புகிறோம். அப்படி தமிழர்கள் ஒன்றிணையும்போது தமிழர்களின் ஒற்றுமைக்குத் தடையாக நிற்கும் சாதியையும், மதத்தையும் நாம் எதிர்க்க வேண்டியது அவசியமாகிறது. எனவே அந்த இலக்கை நோக்கி, இந்த இயக்கத்தை நாம் நகர்த்த வேண்டியது அவசியம். உலகத் தமிழராக ஒருங்கிணைய வேண்டும் என்ற முழக்கத்தில் நம்மோடு இணைந்து நிற்பவர்கள் கறுப்புத் தமிழர்கள்தான். அதைத்தான் இந்த அரங்கில் பார்க்கிறோம். உள்நாட்டு ‘வெள்ளைத் தோல்’காரர்கள் எவரும் இங்கே வரவில்லை.

கோயில் கருவறைக்குள் இன்னும் தமிழர்கள் நுழைய உரிமை இல்லை என்பதை இங்கே பேசிய பாலபிரஜாபதி அடிகளார் குறிப்பிட்டார்., தமிழர் நுழைய எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், நீதிபதி மகராஜன் குழு பரிந்துரை வழங்கிய பிறகும் தடை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழர்கள் மீது தொடரும் இந்த இழிவை, நான் இந்த தமிழர் அரங்கில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த இழிவு ஒழிக்கப் பட வேண்டும்.

நாம் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறோம். இதில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு, ஆண்கள் விரும்பினாலும், பெண்கள் விரும்பவில்லை என்பதால், பலரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்க்க முடியாமல் போய் விடுகிறது என்று கள ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. எனவே இத்தகைய தமிழர் அமைப்புகளில் பெண்களும் பங்கெடுப்பது அவசியம். பெண்கள் உரிமைக்கும் நாம் குரல் கொடுத்து, அவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்க வேண்டியிருக்கிறது.

அதே போல் தமிழ் வழிக் கல்விக்கு அறிவியல் அடிப்படையில் பாடத் திட்டத்தை உருவாக்கவும், குழந்தைகள் விரும்பிக் கற்கக் கூடிய கல்விப் பயிற்றுவிப்பு முறைகளை அறிவியல் அடிப்படையில் உருவாக்கவும், கல்வியாளர் குழு ஒன்றை, இந்த அமைப்பு உருவாக்க வேண்டும். தமிழ் வழிக் கல்வியில் தேர்ச்சி பெறுவோருக்கு, உயர் கல்வியில் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அரசிடம் வலியுறுத்திப் போராட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com