Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam

அரசு பாட நூலில் பெரியாருக்கு சாதிப் பட்டமா?

தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள ‘சமூக அறிவியல்’ பாட நூலில் வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புக்காக உழைத்த தந்தை பெரியார் பெயரை சாதிப் பெயரோடு இணைத்து இழிவுபடுத்தியிருக்கிறது தமிழக அரசு!

‘விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு’ என்ற பாடத்தில் (பக்.51, 52) ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ என்றே திருப்பித் திருப்பிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் பெரியார் ‘நாய்க்கர்’ என்றே அறியப்பட்டார் என்று சமாதானம் கூறுவது ஏற்க இயலாது. அதே பாடத்தில் - சத்தியமூர்த்தியை ‘சத்திய மூர்த்தி அய்யர்’ என்றோ, திரு.வி.க.வை கல்யாண சுந்தர முதலியார் என்றோ, குறிப்பிடாமல், சாதிப் பெயர் இல்லாமலே குறிப்பிட்டிருக்கிறார்கள். ராஜகோபாலாச்சாரியை ராஜாஜி என்றே எழுதியுள்ளனர். ஆனால் பெரியாரை மட்டும் ‘ராமசாமி நாயக்கர்’ என்று எழுதி அவமதித்திருக்கிறார்கள்.

பாடத் தயாரிப்புக் குழுவில் நுழைந்துள்ள பார்ப்பனியத்தின் ‘திருவிளையாடல்’ களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழர்களின் உரிமைப் போருக்கு முரசுகொட்டி, சாதி இழிவை ஒழிக்க, இறுதி வரை களத்தில் நின்று போரிட்ட வரலாற்றுத் தலைவரை, சாதிப் பெயரோடு சேர்த்து எழுதி கொச்சைப்படுத்தும் ‘பார்ப்பனியத்தை’ தமிழர்களால் சகிக்க முடியாது!

அரசு என்ன செய்யப் போகிறது?

தனியார் துறை ஒதுக்கீடு: 20 தலித் அமைப்புகள் உரிமைக் குரல்

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு செய்வது குறித்து, புதுடில்லியில் இரண்டு நாள் கருத்தங்கம் நடைபெற்றது. 20 தலித் அமைப்புகள் கூட்டாக சேர்ந்து, இந்தக் கருத்தரங்கை நடத்தினர். கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங், தனியார் துறைகளில், இடஒதுக்கீட்டை உறுதி செய்யும், சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கான மசோதாவை நடப்புக் கூட்டத் தொடரிலே அறிமுகம் செய்து விட்டால், அடுத்தத் தொடரில் சட்டமாக்கிடலாம் என்றும் அரசுக்கு யோசனை தெரிவித்தார்.

“தனியார் நிறுவனங்கள் தாமாகவே முன் வந்து தலித் மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த 60 ஆண்டு அனுபவத்தில் நாம் அவர்களிடமிருந்து கற்றுள்ள பாடம் இது. சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே இடஒதுக்கீட்டை உறுதி செய்ய முடியும்” என்றார் வி.பி.சிங். நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் எச்சூரி, “இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு நாங்கள் அழுத்தம் தந்து, ஆக்கபூர்வ நடவடிக்கைக்கு வழி வகுப்போம்” என்று உறுதி அளித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசுகையில், “இடஒதுக்கீடு, கருணையில் தரப்படுவது அல்ல; அது உரிமை” என்றார். இந்தப் பிரச்சினையில் அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாக, கருத்தரங்கில் பேசிய பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.