Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
தலையங்கம்
தூக்கு தண்டனையும் நீதிமன்றங்களும்!

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி தாக்குதல் நடத்த வந்த “தீவிரவாதிகள்” - நாடாளுமன்ற வாயிலிலேயே பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி ‘பொடா’ சிறப்பு நீதி மன்றம் முகம்மது அப்சல், சவுகத் உசேன், ஜீலானி ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான திருமதி குரு (இவர் சவுகத் உசேனின் மனைவி)க்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் அப்சல், சவுகத் உசேன் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, மற்ற இருவரையும் விடுதலை செய்தது.

மேல் முறையீட்டில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி அளித்த தீர்ப்பில், முகம்மது அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. சவுகத் உசேனின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்து 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொடா நீதிமன்றத்தால் மூன்று பேருக்கு வழங்கிய தூக்கு தண்டனை உச்சநீதிமன்றத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தூக்குத்தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக்குரல் - உலகம் முழுதும் வலிமை பெற்றுவரும் சூழலில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தூக்குத் தண்டனையை வரவேற்க முடியாது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜிலானி, டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். வழக்கில குற்றம் சாட்டப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு அவர் உள்ளாக்கப்பட்டார். ‘பொடா’ நீதிமன்றம் இவருக்கு தூக்குத் தண்டனை விதித்தாலும், மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம் இவர் மீது குற்றம் சாட்டுவதற்கான மிகக் குறைந்தபட்ச அடிப்படை முகாந்திரம்கூட இல்லை என்று கூறி விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றம் இப்படி கூறியிருந்தாலும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் - ஜிலானிக்கு எதிராக சாட்சிகள் - ஆதாரங்கள் இல்லை என்றாலும், நீதிமன்றம், இவருக்கு குற்றத்தோடு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது என்று குறிப்பிட்டிருப்பது, சட்டத்துக்குட்பட்ட பார்வையாக இருக்க முடியாது என்பதே நமது உறுதியான கருத்து.

குற்றச்சாட்டுக்கு சாட்சியமோ, சான்றுகளோ இல்லாத போது, உச்சநீதிமன்றத்துக்கு தனியாக ‘சந்தேகம்’ எப்படி எழுகிறது? இதற்கான அடிப்படை என்ன என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் - இப்படி எல்லாம் ‘கிசுகிசு’ பத்திரிகைகளைப் போல் கருத்துகளைக் கூறத் துவங்கினால், நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவே செய்வார்கள்.

இப்போது தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முகம்மது அப்சலுக்கு கூட ‘பொடா’ சட்டத்தின் கீழ் அவரிடம் “பெறப்பட்ட” வாக்கு மூலம் ஒன்றுதான் ஒரே சாட்சி. வேறு சாட்சிகள் எதுவும் கிடையாது. அது மட்டுமல்ல, பொடா நீதிமன்றத்திலே, அவருக்கு வழக்கறிஞர் கூட கிடையாது. விசாரணையில் இருக்கும் போது ஒருவரிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தையே - அவருக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தலாம் என்ற ‘பொடா’ சட்டத்தின் கொடூரமான பிரிவைப் பயன்படுத்தி, அவருக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபித்துக் கொள்ளும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கப் பெறாமலே, அவர் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.

ஜிலானிக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி தூக்குத் தண்டனை விதித்த ‘பொடா’ நீதிமன்றம் பற்றி, உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் எந்தக் கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. ஜிலானிக்கு எதிராக, திருத்தப்பட்ட, மோசடி ஆவணங்களை போலீஸ் அதிகாரிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனாலும் காவல் துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தன் மீது காவல்துறை திணித்த பொய்க் குற்றச்சாட்டுக்கு பெருமளவு அரணாக நின்றவை ஊடகங்கள் தான் என்று, ஜிலானி வேதனையோடு கூறியிருக்கிறார்.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்சல், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியை, காவல்துறையினருக்காக, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், தவறாகத் திருத்தி ஒளிபரப்பானது. தனக்கு குற்றத்திலே தொடர்பே கிடையாது என்று அவர் கூறியிருந்ததை, குற்றத்தை ஒப்புக்கொண்டதாக திருத்தியது அந்த தொலைக்காட்சி நிறுவனம், இந்த மோசடியை, அந்தத் தொலைக்காட்சி செய்தியார் நீதிமன்ற சாட்சியத்தில் ஒப்புக் கொண்டும் உள்ளார். இந்தப் பின்னணியில்தான், அப்சல் மீதான தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்திருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது, அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தவிர, அவர்களை அழித்து விடுவதற்கு அல்ல.

முறையான விசாரணைகள் - குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதோடு, உச்சநீதிமன்றம், தனது சட்டத்தின் எல்லைகளைத் தாண்டி கருத்துகளைப் பதிவு செய்திருப்பது, கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது என்பதில் சந்தேகமே இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com