Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2009

காங்கிரசை விமர்சிக்கக்கூடாது என்று கூற காவல்துறைக்கு உரிமை இல்லை: தபசி. குமரன்

பெரியார் திராவிடர் கழகம் காங்கிரசை தோற்கடிக்கக் கோரி வெளியிட்டுள்ள பிரச்சாரக் குறுந்தகடு நாட்டில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குறுந்தகட்டை தடை செய்யக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் மனு தந்தார். தேர்தல் ஆணையம் - இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று கூறி, காவல் துறைக்கு அனுப்பிவிட்டது. இந்த நிலையில் குறுந்தகடு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, பெரியார் திராவிடர் கழகம் காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்தது.

சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி குமரனுக்கு பதில் அனுப்பிய காவல்துறை - அனுமதி மறுத்திருந்தது. காவல்துறையின் கடிதத்துக்கு கழக சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. இரு கடிதங்களும் இங்கே வெளியிடப்படுகின்றன. கழக சார்பில் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் முயற்சிகளில் வழக்கறிஞர் செ. துரைசாமி இறங்கியுள்ளார்.

சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி. குமரனுக்கு காவல்துறை அனுப்பிய மறுப்புக் கடிதம்:

உமது மனுவினை தீவிரமாக பரிசிலனை செய்யப்பட்டது. நீர் வெளியிடும் குறுந்தகட்டினை சென்னை மாநகர காவல் துறையில் உள்ள நுண்ணறிவு பிரிவில் தணிக்கை உட்படுத்தவும். மேலும் என்னுடைய ஆய்வுக்கும் ஒரு குறுந்தகட்டினை சமர்ப்பிக்கும்படி பார்வை இரண்டில் உள்ள குறிப்பாணையை உமக்கு சார்பு செய்ய, அதனை நீர் 8.1.2009 ஆம் தேதி பெற்றுக் கொண்டு அன்றைய தினமே மாலை 5 மணிக்கு எம்மிடம் நேரில் ஆஜராகி நீர் வெளியிட போகும் குறுந்தகடு ஒன்றினை என்னிடம் ஆய்வுக்கு சமர்ப்பித்தீர்.

அந்த குறுந்தகட்டினை ஆய்வு செய்ததில், முறைப்படி தணிக்கைத் துறையிடமிருந்தோ அல்லது தேர்தல் ஆணையத்திடமிருந்தோ அனுமதி பெறப்படவில்லை. மேலும் நீர் சமர்ப்பித்துள்ள குறுந்தகட்டில் விடுதலைப்புலிகளை பற்றியும், காங்கிரஸ் கட்சியினரை தாக்கியும் இன உணர்வைத் தூண்டுகின்ற வகையில் விவரங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. உமது மனுவில் குறிப்பிட்டுள்ள திரு. கொளத்தூர் மணி என்பவர் தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவாகவும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு வழக்கை சந்தித்து வருகிறார். மேலும் விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசக் கூடியவர்கள். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்ற சூழ்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசக்கூடிய நபர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கும் முறையான அனுமதி இல்லாத குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் அனுமதி அளித்தால் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது. ஆகவே ஏன் உமது கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்படக் கூடாது என்பதற்கான உமது விளக்கத்தினை 9.4.2009 ஆம் தேதி காலை 10 மணிக்குள் எழுத்து மூலமாக பதில் அளிக்கும்படி உமக்கு அறிவிக்கப்படுகிறது.

காவல்துறைக்கு கழக சார்பில் தபசி. குமரன் அனுப்பிய பதில் கடிதம்

தங்களின் 8.4.2009 தேதியிட்ட காவல் நோட்டீஸ் கிடைக்கப் பெற்றேன். என்னுடைய 5.4.2009 தேதியிட்ட கடிதத்தில் வரும் 10.4.2009 அன்று முத்துரங்கன் சாலையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், “இலங்கையில் தமிழர்கள் தினம் தினம் படுகொலை - இனி என்ன செய்யப் போகிறோம்” என்ற குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டிருந்தேன் அதன் தொடர்பாக 6.4.2009 தேதியன்று வெளியிடவிருக்கும் ஒரு குறுந்தகடு ஆய்வுக்காக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டீர்கள். அதன்படி ஒரு குறுந்தகடு தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிறகு 8.4.2009 தேதியிட்ட கடிதத்தில் மேற்படி குறுந் தகட்டினை ஆய்வு செய்கையில் அது முறைப்படி தணிக்கை துறையிடமிருந்து தணிக்கை செய்யப்படவோ, தேர்தல் ஆணையத்திடமிருந்தோ அனுமதி பெறவோ இல்லை என்பதாலும் மேற்படி குறுந்தகட்டில் விடுதலைப்புலிகளைப் பற்றியும் காங்கிரஸ் கட்சியை தாக்கியும் இன உணர்வைத் தூண்டும் வகையிலும் விவரங்கள் இருப்பதாக தெரிய வருவதாலும் மற்றும் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் மற்றும் கோவை இராமகிருஷ்ணன் ஆகியோர் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுபவர்கள் என்பதாலும் நிகழ்ச்சிக்கு அனுமதி ஏன் மறுக்கப்படக் கூடாது என விளக்கம் கேட்கப்பட்டதற்கிணங்க கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது:

உங்களது விளக்கம் கோரல் கடிதத்தைப் படித்தால் நீங்கள் எங்களது குறுந்தகட்டினை பார்க்கவில்லை என்பது புலனாகிறது.

உங்கள் கடிதத்திலேயே “எனத் தெரிய வருகிறது” எனக் குறிப்பிட்டதிலிருந்து நீங்கள் அந்த குறுந்தகட்டினை பார்வையிடவில்லை. யாரோ அதனை ஆய்வு செய்து, தங்களிடம் கூற அதனை செவி வழியாகக் கேட்டு பொத்தாம் பொதுவாக தெரிய வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

முதலாவதாக குறுந்தகடு தயாரிப்புக்கு தணிக்கை துறையிடமிருந்தோ அல்லது தேர்தல் ஆணையத்திடமிருந்தோ எந்த அனுமதியும் தேவையில்லை. சினிமா படத்திற்கு மட்டும்தான் தணிக்கைத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். குறுந்தகடு வெளியிட எந்தச் சட்டத்திலும் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை. அந்த குறுந்தகட்டில் சட்டத்திற்கு புறம்பாக சங்கதிகள் இருந்தால் மட்டுமே காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம். மேற்படி குறுந்தகடு வெளியிடுவதற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் என்ன சம்பந்தம்? எந்தச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் நான் அனுமதி வாங்குவது, எதற்காக நான் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரவேண்டும்?

சட்டத்தை சரிவர ஆராயாமல் நீங்கள் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளீர்கள். தந்தை பெரியார் தான் சொல்வார், “வழியில் ஒரு மொட்டைத் தலையன் சென்று கொண்டிருந்தான், அந்த வழியில் ஒரு சுங்கச்சாவடி இருந்தது. மொட்டைத் தலையனுக்கு சந்தேகம் வந்தது. மொட்டைத் தலைக்கு சுங்கம் கட்ட வேண்டுமோ என்று, சுங்கம் வசூலிப்பவனிடம் சென்று மொட்டைத் தலைக்கு சுங்கம் உண்டா என்று கேட்டான். அவனோ கிடைப்பதை ஏன் விட வேண்டும் என்று வெய்யடா கால்ப்பணம் என்றான்” என்பார். அதுபோல் உள்ளது உங்கள் கூற்று.

தணிக்கை துறைக்கோ, தேர்தல் ஆணையத்திற்கோ குறுந்தகடு வெளியிட அனுமதி தர அதிகாரம் இல்லை. அதனால் அவர்களிடத்தில் நான் அனுமதி வாங்க வேண்டியதில்லை.

குறுந்தகட்டில் விடுதலைப்புலிகள் பற்றியும் காங்கிரஸ் கட்சியினரை தாக்கியும் இன உணர்வைத் தூண்டுகின்ற வகையிலும் விவரங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். குறுந்தகட்டில் விடுதலைப்புலிகள் பற்றி எதுவும் கிடையாது. அத்துணையும் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் செய்யும் அட்டூழியங்கள் மட்டுமே உள்ளது.

ஈழத் தமிழர்கள் பற்றி பேசினாலே அது விடுதலைப்புலிகள் பற்றியதாகுமா? கொஞ்சம்கூட அதை ஊன்றிப் பார்க்க மாட்டீர்களா? The Unlawful Activities (Prevention) Act 1967 என்ற சட்டத்தின்படி விடுதலைப்புலிகளை பேச்சளவில் ஆதரிப்பதாலோ அவர்கள் புகழ் பாடினாலோ குற்றம் கிடையாது. விடுதலைப்புலிகள் ஏதாவது சட்டவிரோதமான காரியத்தை இந்தியாவில் செய்தால் அந்த சட்ட விரோத செயலுக்கு துணை போனால் மட்டும் தான் குற்றம். அதனால் விடுதலைப்புலிகள் பற்றி செய்திகள் அந்த குறுந்தகட்டில் இருந்தாலும் அது சட்டப்படி குற்றம் அல்ல. ஏனென்றால் இந்த குறுந்தகட்டில் விடுதலைப்புலிகளின் சட்டவிரோத செயலுக்கு ஆதரவு தருவதாக எங்கும் கிடையாது.

இரண்டாவதாக “காங்கிரஸ் கட்சியை தாக்கியும்” எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆமாம். இந்த குறுந் தகடே காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்காகத்தான் வெளியிடப்படுகிறது. காங்கிரஸ் கட்சிதான் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடத்துகிறார்கள். ஈழத்தில் தமிழர்கள் செத்து மடிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சிதான் என்பதை விளக்குவதற்கே இந்த குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியை விமர்சித்து ஏன் குறுந்தகடு வெளியிடக் கூடாது? காங்கிரஸ் கட்சியை தாக்கிப் பேசக் கூடாது என்றோ, குறுந்தகடு வெளியிடக் கூடாது என்றோ சட்டமேதுமில்லை. அப்படி இருந்தால் எங்களுக்கு சுட்டிக் காட்டுங்கள். நாங்கள் குறுந்தகடு வெளியிடுவதை தவிர்த்து விடுகிறோம். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கக் கூடாது என்று கூற தங்களுக்கு அதிகாரமில்லை. எனவே காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தாக்கி வெளிவரும் குறுந் தகட்டை வெளியிடக் கூடாது என கூறுவதற்கு தங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

அடுத்து இன உணர்வைத் தூண்டுகிற வகையில் உள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் அதில் எந்த இன உணர்வை தூண்டிவிடுகிறோம். அது எந்த சட்டப்படி தவறானது என்று எந்த விளக்கமும் இல்லை. அந்த குறுந்தகடு தமிழ் இன உணர்வை ஒற்றுமையைத் தூண்டுவதாகத்தான் உள்ளது. அது எந்த சட்டப்படியும் குற்றமாகாது.

அடுத்து திருவாளர்கள் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுபவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆமாம் அது உண்மைதான், ஆனால் அதில் என்ன தப்பு? விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவது சட்டப்படி குற்றமாகாது. விடுதலைப்புலிகள் இந்தியாவில் ஏதேனும் சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபடும்போது அந்த சட்டவிரோதமான காரியத்திற்கு துணை புரிந்தால் மட்டுமே குற்றமாகும். சட்டத்தை சரி வர ஆராய்ந்து எனது மனுவின் மீது உத்திரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது The Unlawful Activities (Prevention) Act 1967 படி குற்றமாகாது என உச்சநீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளதையும் தங்களின் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

மேற்படி நபர்கள் பொதுவாக விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவார்கள் என்றும், அதனால் பொதுத் தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் எனவும் கூறியுள்ளீர்கள். அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி மேற்படி காரணத்திற்காக பேச்சுரிமையை தடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டப்படி தாங்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டுமே தவிர கூட்டம் நடத்தக்கூடாது என அறிவிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை.

எனவே என்னுடைய இந்த விளக்கத்தினை ஏற்றுக் கொண்டு, 10.04.2009 நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com