Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2009

காங்கிரசுக்கு எதிரான குறுந்தகடு சட்டவிரோதமானதல்ல: விடுதலை இராசேந்திரன்

கழகம் வெளியிட்ட குறுந்தகடு தமிழகம் முழுதும் உருவாக்கி வரும் தாக்கத்தைக் கண்டு பதறிப்போன காங்கிரசு - தேர்தல் ஆணையத்திடம் தடை செய்யக் கோரி மனு கொடுத்தது. இதைக் கண்டித்து கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் ஈழத் தமிழர்கள் சராசரியாக ஒரு நாளில் 100 பேர் வரை படுகொலை செய்யப்படுகிறார்கள். கடந்த ஜனவரிக்குப் பிறகு 98000 அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலைக்கு உள்ளாகியிருப்பதை அய்.நா.வின் மனித உரிமை ஆணையமே அறிவித்துள்ளது. நேற்றும் - இன்றுமாக ஒவ்வொரு நாளும் கொத்து கொத்தாக ‘போரில்லாத பகுதி’ என்று ராணுவத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியிலும், மருத்துவமனைகளிலும்கூட அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை அமெரிக்கா, பிரிட்டன், நார்வே போன்ற சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டித்த பிறகும்கூட இந்தியா எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. மாறாக இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, நிதி உதவி போர்ப்பயிற்சிகளையும் வழங்கிக் கொண்டு இப்போது தமிழர்களிடம் ஆளும் காங்கிரஸ் கட்சி வாக்கு கேட்க வருகிறது. இந்த இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாத காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதற்கும் அவர்களைத் தோற்கடிக்கக்கூடிய எதிரணிக்கு வாக்களிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கும் உள்ள கருத்து உரிமையை உரிமையை காங்கிரஸ் பறிக்க துடிக்கிறது.

பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட குறுந்தகட்டையும், பெரியார் திராவிடர் கழகத்தையும் தடை செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு புகார் மனு அளித்துள்ளார். இந்தக் குறுந்தகட்டில் வெளியிட்டுள்ள ஈழத் தமிழர் அவலக் காட்சிகள் ஏற்கனவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டவைதான். தமிழ்நாட்டில் இந்த இனப் படுகொலைக்கு எதிராக மாணவ மாணவிகள் நடத்திய ஊர்வலக் காட்சிகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. வேறு எந்த சட்ட விரோத கருத்தும் இடம் பெறவில்லை. தங்களுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் மக்களிடம் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்று அதிகாரத்தின் துணையோடு காங்கிரசார் மிரட்ட முயல்வது அவர்களுக்கு எழுந்துள்ள தோல்வியின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் களத்தில் ஆதரவு - எதிர்ப்பு கருத்துகளை வெளியிடும் உரிமை ஒவ்வொரு கட்சிக்கும் இயக்கத்துக்கும் உண்டு.

கொழும்பில் இலங்கை ராணுவத்துக்காக ராடார் கருவியை இயக்கிய இந்திய பொறியாளர்கள் குப்தா, ராவுத் என்ற இரண்டு பேர் விடுதலைப்புலிகள் தாக்குதலில் காயமடைந்ததும் கோவை, சென்னை விமானப் படைத் தளங்களுக்கு பயிற்சி பெற வந்த இலங்கை விமானப் படையினர், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டதும் உண்மையா, இல்லையா? கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தமிழ்நாட்டில் போரை நிறுத்தக் கோரி ஒருமித்து அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், இந்திய அரசு, அப்படி ஒரு கோரிக்கையை இதுவரை இலங்கை அரசிடம் வற்புறுத்தியதா? இந்திய அரசின் ராணுவ உதவியால்தான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று இலங்கை அமைச்சரே அண்மையில் கொழும்பு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளாரே! - இதை எல்லாம் காங்கிரஸ் மறுக்க முடியுமா?

இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைத்த அணுசக்தி உடன்பாட்டை விமர்சிக்கும் உரிமை உள்ளதுபோல் இலங்கைப் பிரச்சினையிலும் இந்தியாவின் தமிழின விரோத, வெளிநாட்டுக் கொள்கையை விமர்சிக்கும் உரிமை உண்டு. கருத்துகளை கருத்துகளால் மக்கள் மன்றத்தில் சந்திக்க காங்கிரசார் ஏன் அஞ்சுகிறார்கள்? அவர்கள் பக்கம் நியாயங்கள் ஏதாவது இருந்தால் எடுத்துச் சொல்லட்டுமே!

தமிழர்களின் உரிமைகளுக்கும், சமத்துவத்துக்கும் பெரியார் விட்டுச் சென்ற அறிவார்ந்த லட்சியங்களை ஏற்றுக் கொண்டு கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பெரியார் திராவிடர் கழகம் தன்னல மற்ற சமுதாயத் தொண்டாற்றி வருவதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அய்ந்தாண்டு காலத்துக்கு ஒரு முறை தேர்தல் வரும்போது மட்டும் மக்களை சந்திக்க வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரியார் விட்டுச் சென்ற தமிழர்களின் சுயமரியாதைக்கான உரிமைகள் பற்றிய கவலையோ, அக்கறையோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அதனால் தான், பெரியார் திராவிடர் கழகத்தையே தடை செய்ய வேண்டும் என்று மனு தருகிறார்கள்.

காங்கிரசாரின் இத்தகைய செயல்பாடுகள் தமிழர்களிடையே அவர்களின் உண்மையான சுயரூபத்தை மேலும் அம்பலப்படுத்தி வருகிறது. விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தி - தமிழினப் படுகொலைகளை நியாயப்படுத்தும் காங்கிரசாரின் தமிழின துரோகத்தை தமிழக மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

மிகப் பெரும் ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் ஒரு நாட்டில் - நடத்தப்படும் தேர்தலில் ஆளும் கட்சிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கருத்துகளை நசுக்க முயலுவது நாட்டுக்கே அவமானமாகும். பெரியார் திராவிடர் கழகம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com