Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2008

தடைச் சுவர்

தமிழ்நாட்டு கிராமங்களில் தலைவிரித்தாடும் இரட்டைக் குவளை தீண்டாமைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் களமிறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மதுரைக்கு அருகே உள்ள உத்தபுரம் எனும் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பகுதிக்குள் நுழைந்து விடாமல், உள்ளூர் ஆதிக்கசாதியினர் 600 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச் சுவர் எழுப்பி வைத்துள்ளனர். 1990 ஆம் ஆண்டு இந்தத் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. இதில் கடந்த 10 நாட்களாக கம்பிகளின் வழியாக மின்சாரத்தையும் பாய்ச்சி வைத்துள்ளார்கள்.

ஆங்கில நாளேடு ஒன்று இந்த செய்தியை அம்பலப்படுத்தியவுடன், தமிழக அரசு விரைந்து, கம்பிவேலிகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாலஸ்தீனர்களை தனிமைப்படுத்திட இஸ்ரேல் - பாலஸ்தினர் வாழும் பகுதியைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பியதை உலகமே கண்டிக்கிறது. இது நியாயமாக கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், 'சுதந்திரம்' பெற்றதாகக் கூறப்படும் ஒரு நாட்டில், ஒரு சமூகத்தைத் தனியே பிரித்து வைக்க சுவர் எழுப்பப்பட்டு, அந்த சுவர், சாதித் திமிருடன், 18 ஆண்டுகள் அசைக்கப்படாமல் நின்று கொண்டிருக்கிறது என்றால் - அது வெட்கக்கேடு அல்லவா? தமிழ்நாடு கிராமங்களில் 'இரட்டைக் குவளைகளே' கிடையாது என்ற, பொய்அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் காவல்துறையின் மனித உரிமைப் பிரிவு, இதற்கு என்ன பதிலைத் தரப் போகிறது?

மதுரையை மய்யமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம், கிராமங்களில் ஆய்வுகள் நடத்தி 47 வடிவங்களில், இன்றும் தீண்டாமை பின்பற்றப்பட்டு வருவதை வெளிக் கொண்டு வந்துள்ளது. பொதுக் கிணறுகளில், பொதுக் குழாய்களில் நீர் எடுக்கத் தடை; பிணங்களை - சாதி ஆதிக்கவாதிகள் வாழும் வீதி வழியாக கொண்டு செல்லத் தடை; கோயிலில் நுழைய தடை; இரட்டைக் குவளை என்று பல்வேறு வடிவங்களில் தீண்டாமை நிலவிக் கொண்டிருக்கிறது. சில கிராமங்களில் தலித் மக்களின் சேரிப் பகுதிக்கு தபால்களே போய்ச் சேருவது இல்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது. செங்கல்லாலும், சிமெண்டாலும் உருவாக்கப்பட்ட இந்தத் தடைச் சுவரை உடைப்பது மட்டும் போதாது. மனித உள்ளத்தில் காலம் காலமாக பார்ப்பன வர்ணாஸ்ரமம் கட்டி எழுப்பி வைத்திருக்கும் சாதியம் என்ற தடைச் சுவரை தகர்த்து உடைக்க வேண்டும்.

ஒவ்வொரு பார்ப்பான் முதுகிலும் தொங்கிக் கொண்டிருக்கும் பூணூல்கூட தடைச் சுவரின் பிரதிபலிப்புதான். பார்ப்பனரல்லாத ஒவ்வொருவரையும் 'நீ சூத்திரன் இழிமகன்' என்பதை அந்த பூணூல் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஒதுங்கிக் கொண்டும், ஒதுக்கி வைத்துக் கொண்டும் வாழும் பார்ப்பனிய கலாச்சாரத்தை பார்ப்பான் மட்டுமல்ல, சாதி ஆதிக்க வாதிகளும் தங்களது உள்ளத்தில் ஏந்தியிருப்பதைத் தான், இந்தத் தடுப்புச் சுவர்கள் உணர்த்துகின்றன. வானத்துக்கும், காற்றுக்கும் இவர்களால் தடுப்புச் சுவரை ஏற்படுத்திவிட முடியுமா? தலித் மக்கள் வாழும் நாட்டில் தங்களுக்கு வாழ்க்கையே இல்லை என்று, இவர்கள், நாட்டை விட்டு வெளியேறி விடுவார்களா? அட, மானமும், அறிவையும் இழந்து நிற்கும், சாதி வெறியர்களே, நீங்கள் எல்லாம் மனிதர்களாகத்தான் இருக்கிறீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடாமல் தடுக்க மின்சார வேலி போட்டு வந்த நிலை மாறி, சக மனிதனுக்கு எதிராக வேலிகளையும், சுவர்களையும் எழுப்பிடும் நிலை தோன்றியிருப்பதற்கு, ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனியவேண்டும்.

ஆனால், எந்த அரசியல் கட்சியும், பரபரப்பு ஏடுகளும், ஊடகங்களும், இதுபற்றி வாயே திறக்கவில்லையே! ஏன்? இந்த மவுனத்தின் அர்த்தம் என்ன?

இந்த நாட்டில் - இது ஒரு பிரச்சினையே இல்லையா? நடிகர் நடிகைகள் - அரசியல் தலைவர்களின் அசைவுகளும், நகர்வுகளும் தான் இந்த நாட்டின் உயிர் பிரச்சினையா?

சொரணையும், சுயமரியாதையும் கொண்ட ஒவ்வொரு தமிழன் உள்ளத்திலும் இந்தக் கேள்விகள் வெடித்தெழ வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com