Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2008

காக்காய் பிடிக்கும் கலை!

ஆங்கிலத்தில் 'சைக்கோபேன்சி' (Sychophancy) என்று ஒரு சொல் உண்டு. அது 'Sukophantes' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. தமிழில் இந்த சொல்லின் அர்த்தத்தை விளக்கும் ஒரு பழமொழியே உண்டு. அது தான் 'காக்காய் பிடிப்பது' என்பதாகும். செந்தமிழில் கூற வேண்டுமானால், 'புகழ் பாடுதல்' என்று கூறலாம். புகழைப் பாடுதல் என்பதற்கும், புகழை உருவாக்கப் பாடுபடுவதற்கும் வேறுபாடு உண்டு. தங்களைப் புகழ்ந்து பேசுவதை பெரிதும் விரும்பக் கூடியவர்களைச் சுற்றி அப்படி புகழ் பாடுவதற்கு ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இதை எல்லாம் நாம் சொல்லித்தான் தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியுமா என்ன? இப்போது ஏன் இந்தப் பீடிகை என்று கேட்கக் கூடும். அதற்கு காரணம் இருக்கிறது.

ராகுல்காந்தி தான் - அடுத்த பிரதமர். அவர் பிரதமராவதற்கு எல்லா தகுதிகளும் உண்டு' என்று காங்கிரஸ் தலைவர்களில் சிலர் பேசக் கிளம்பியவுடன், சோனியாவிடமிருந்து கடுமையான மறுப்பு வந்துவிட்டது. "போதும் நிறுத்துங்கள்; இந்தியாவில் பிரதமர் பதவி ஒன்றும் காலியாக இல்லை. எங்கள் குடும்பத்துக்கு புகழ் பாடுவதற்கு எவரும் தேவையில்லை" என்று கண்டிப்பாகக் கூறி, அத்துடன், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். சோனியாவின் இந்தக் கண்டிப்பு மிகவும் உண்மையானது என்பது காங்கிரசாருக்குப் புரியும்; எனவே எல்லோரும் வாயை மூடிக் கொண்டு விட்டார்கள்.

இதுவே - தமிழ்நாட்டில் ஒரு தலைவர் இப்படியெல்லாம் கூறியிருந்தால், நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். "எங்கள் தலைவர் எப்போதுமே புகழை விரும்பாதவர்; புகழ்ச்சிகள் அவரிடம் நெருங்க முடியாது; புகழையே விரும்பாத உன்னத தலைவர், புகழ் போதை தலைக்கேறிடாத புனிதத் தலைவர்; அவர் புகழ் பெற விரும்பியிருந்தால் எத்தனையோ புகழ் மாலைகளை சூட்டிக் கொண்டிருக்க முடியும். அத்தனை புகழையும் துச்சமென வெறுத்து ஒதுக்கியவர்" என்று மற்றொரு புகழ் புராணத்தைத் தொடங்கியிருப்பார்கள்.

"எங்கள் தலைவருக்கு பிறந்த நாள் விழா எடுப்பதே பிடிக்காது. அவ்வளவு அடக்கமானவர். பிறந்த நாள் வரும் நாளில் அவர் தலைமறைவாகி விடுவார். யாரையும் சந்திக்க மாட்டார். காரணம் - அவர் புகழை விரும்பாதவர்" இப்படி தொண்டர்களால் புகழப்படுகிற தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தலைவர் இல்லாமலேயே - தொண்டர்கள் தலைவருக்கு பிறந்த நாள் விழா எடுத்து புகழ் மாலைகளை சுமக்க முடியாத அளவுக்கு சூட்டுவார்கள். அத்தனை செய்திகளும் உடனுக்குடன், தலைவரின் காதுக்கு போய்க் கொண்டே இருக்கும். அதற்காக - தலைவர் - இது கட்சி விரோத நடவடிக்கை என்று கருத மாட்டார்.

மாறாக, உண்மை விசுவாசிகளை அதை வைத்தே கணக்கிடுவார். "தலைவரே; உங்களுடைய புகழின் வெறுப்புக்கு - தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லையா? இனியும் நீங்கள் பிறந்த நாளில் பதுங்கக் கூடாது. வெளியே வர வேண்டும்" என்று ஒரு கட்டத்தில் அறிவிப்பார்கள். அதுவும் புகழ் ஏணியின் உச்சியில் இருக்கும் ஒருவரின் வாயாலே அறிவிக்கச் செய்து, தலைவரின் 'புகழ் விரும்பா' தியாகத்தைப் பறைசாற்றுவார்கள்.

காலையில் கைது செய்து மாலையிலே விடுதலை செய்யும் போராட்டமாக இருந்தாலும், அது தலைவரின் தியாகச் சிறைப் பட்டியல் எண்ணிக்கையில் ஏற்றப்படும். 400-வது முறையாக தலைவர் கைது என்று 'வரலாற்றைப் பதிவு' செய்வார்கள். வரலாற்றுப் பதிவு என்பது முக்கியம் அல்லவா? "புகழை விரும்பாத தலைவருக்கு பிறந்த நாள்" என்ற புகழ்ச்சி உரையுடன் தலைவரின் வண்ண வண்ணப் படங்களோடு பதாகைகள் ஊர் முழுதும் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும். இப்படி எல்லாம் புகழ் விரும்பாத தலைவர்கள் நிறைந்த தமிழகத்தில் சோனியாவின் புகழ் மறுப்பு எம்மாத்திரம் என்று கேட்கலாம். அதனால் தான் சோனியாவின் இந்த அறிக்கையைக்கூட இந்தத் தலைவர்கள் தங்கள் ஏடுகளில் வெளியிடாமல் நிறுத்தி விட்டார்கள் போலும்.

ஆனாலும், காக்காய் பிடிக்கும் ஆசாமிகளை உண்மையிலே ஓரம் கட்டும் சோனியாவின் உறுதியான நடவடிக்கை, தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரை சங்கடத்துக்குள்ளாக்கியிருக்கும் என்பது மட்டும் உண்மை. அதற்காக - தமிழகத்தில் தலைவர்களை சுற்றி நிற்கும் 'புகழ் பாடும் புலவர்கள்' மனம் சோர்ந்துவிட வேண்டாம். தடைகளைத் தகர்த்து, புகழ் போதை நோக்கி முன்னேறிச் செல்லும் 'வாய்மை' நிறைந்தவர்களாயிற்றே, நீங்கள்! சோனியா கிடக்கட்டும்; விட்டுத் தள்ளுங்கள்! பிழைக்கத் தெரியாதவர் போலிருக்கிறது!

கலையிலே சிறந்தது, காக்காய் பிடிப்பது!

- கோடங்குடி மாரிமுத்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com