Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2008

கருத்துரிமைக்கு தடையா?

முதலீடு இல்லாத தலைசிறந்த வர்த்தகமாக அதிகார அரசியல் மாறி நிற்கிறது என்பது, எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த அதிகார அரசியலுக்குள் இடம் பிடித்து, செல்வாக்குப் பெற்று, அதை மூலதனமாக்குவதே ‘கவுரவமான பிழைப்பு’ என்ற கலாச்சாரம் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இந்தச் சூழலில், சமூக அக்கறையோடு, தங்களுக்கான லட்சியங்கள், குறிக்கோள்களோடு ஆர்ப்பாட்ட வர்த்தக அதிகார அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாமல், செயல்பட முன்வருவது என்பது மிகவும் அபூர்வமாகும். இத்தகைய ஆரோக்கியமான அரசியல் புரிதலோடு, சுயநலமற்று செயல்படுகிற அமைப்புகளும், இயக்கங்களும் தான் தமிழகத்தின் வலிமையான கருத்துருவாக்க சக்திகள், பொது வாழ்க்கையின் ஆரோக்கியத்துக்கு முழுமையான சமாதி கட்டிவிடாமல் தடுத்து வரும், மக்களின் உண்மையான பிரதிநிதிகள்.

ஆனால், இத்தகைய அமைப்புகளும், குழுக்களும், தமிழகத்தில் காவல்துறையினரால் குறி வைத்து நசுக்கப்படுகின்றன. இந்த அமைப்புகளின் கருத்துரிமை முற்றாக தடைப்படுத்தப்படுகிறது. காவல்துறை தங்குதடையற்ற அதிகாரத்தை தன்வசம் எடுத்துக் கொண்டு, இந்த அமைப்புகளும், இயக்கங்களும் மக்களிடம் கருத்துக்களைச் சொல்வதற்கான கூட்டங்களுக்கு தடை போட்டு வருகின்றன.

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம், கடந்த வாரம் சென்னை மாநகரில், மூடநம்பிக்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற துடிப்போடு தன்னை அர்ப்பணித்து, அரும் தொண்டு ஆற்றி வரும் தோழர் சிற்பிராசன், தனது ‘மாஜிக் கலை’யின் வழியாக, மக்களிடம் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தக் கூட்டங்களுக்கே கூட, சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம் பகுதியில் காவல்துறை தடைவிதித்துவிட்டது. கடும் போராட்டம் நடத்திய பிறகே, அனுமதி பெற வேண்டியிருந்தது. குறிப்பாக - வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் எழுத்து மூலமாக கடந்த மார்ச் 26 ஆம் தேதி பிறப்பித்த தடை ஆணையில், “தோழர் சிற்பிராசன் அவர்கள் நடத்தும் ‘மந்திரமா தந்திரமா’ என்ற நிகழ்ச்சி மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருக்கும் என்று நம்பகரமான தகவல் உள்ளதால் அந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மக்களிடையே மூடநம்பிக்கைகள் வேகமாகப் பரவி வருவதைப் பற்றி முதல்வர் கலைஞர் அவ்வப்போது பேசியும் எழுதியும் வருகிறார். ஆனால், அவரது ஆட்சியின் காவல்துறை, பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையில் நியாயம்?

‘புரட்சிகர பெண்கள் விடுதலை மய்யம்’ என்ற பெண்கள் அமைப்பு சென்னையில் காமராசர் அரங்கில் சர்வதேச மகளிர் நாள் கூட்டத்தை நடத்தி, அதில் புரட்சிப் பாடகர் கத்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ‘நக்சலைட் தத்துவங்கள் வளர்ந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும்’ என்று கூறி காவல்துறை, அதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது. தத்துவங்களுக்கே தமிழ்நாட்டில் தடை போடப்பட்டு விட்டதா!? என்று கேட்கிறோம்.

அதேபோல் - தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பில் அரசியல் காரணங்களுக்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் பொழிலன் விடுதலை கோரி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும், காவல்துறை தடை விதித்துள்ளது. இவைகளை எல்லாம் பார்க்கும்போது இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள கருத்துரிமைகள் - தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாதா என்ற கேள்வியைத்தான் வேதனையுடன் கேட்க வேண்டியிருக்கிறது.

தேர்தல் அரசியலில் - கூட்டணி அரசியலில் உள்ள கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் செயல்படலாம்; கூட்டம் போடலாம்; ஆனால் கொள்கைகளையும், லட்சியங்களையும் ஏற்றுள்ள இயக்கங்களுக்கு தமிழகத்தில் அடிப்படை உரிமைகளே கிடையாது என்ற முடிவுக்கு தமிழக காவல்துறை வந்து விட்டதா? இதற்கு தமிழக அரசும் பச்சைக் கொடி காட்டி விட்டதா என்று கேட்க விரும்புகிறோம். தொடக்க காலத்தில், தத்துவத் தளங்களில் ஆழமாக தடம் பதித்து நின்ற கழகம் தான் தி.மு.க. அன்றைக்கே இப்படி முடக்கப்பட்டிருந்தால், மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்க முடியுமா? இந்தியாவிலேயே தமிழ் மண் சிந்தனைகளும், தத்துவங்களும் விதைக்கப்பட்ட மண் அல்லவா?

பெரியார் இயக்கங்களும், பொதுவுடைமை அமைப்புகளும் தங்கள் கருத்துகளையும், தத்துவங்களையும், விவாதங்களையும் மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து சேர்த்தது இந்த மண்ணில் தான். அந்த வரலாற்றுப் பெருமைகளுக்குரிய மேடைச் சிந்தனைகளையும், மக்கள் சந்திப்பையும், பிரிட்டிஷ்காரன் 1886 ஆம் ஆண்டு கொண்டு வந்த 120 ஆண்டு காலத்துக்கு முந்தைய சட்டங்களைக் காட்டி காவல்துறையின் ஆய்வாளர்களும், துணை ஆய்வாளர்களும் முடக்குவதற்கு இடம் அளிக்கலாமா? கூட்டங்களில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று, காவல்துறையினரே கருத்தாளர்களாக அவதாரம் எடுக்கும் நிலை தமிழகத்தில் வந்துவிட்டது, மிகப் பெரும் சோகம்!

வாதங்கள் - விவாதங்கள் - தடைபடுத்தப்படும்போதுதான் அது ‘தீவிரவாதமாக’ உருவெடுக்கிறது என்ற அடிப்படை உண்மையை நினைவூட்டுவது நமது கடமையாகிறது. தமிழக முதல்வர் கலைஞர் இதில் அவசரமாக தலையிட்டு காவல்துறைக்கு கடிவாளம் போட வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

அதிகார மோகத்தில் சிக்கி விடாமல் தமிழகத்தில் இன்னும் எஞ்சி நிற்கும் ஆரோக்கியமான இலக்கு நோக்கிய மக்களுக்கான இயக்கங்களை செயல்பட அனுமதியுங்கள்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com