Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2008

பெரியார் சிலைக்கு தடைபோட்ட மாயாவதிக்கு எதிராக உ.பி. தலித் அமைப்பு போர்க்கொடி!

உ.பி.யில் முதல்வர் மாயாவதி - பார்ப்பன மிரட்டலுக்கு பணிந்து, பெரியார் படம், சிலைகளை உ.பி.யில் எந்தப் பகுதியிலும் வைப்பதற்குத் தடை விதித்துள்ளார். கடந்த ஏப். 15 ஆம் தேதி ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாயாவதி இதை அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் - பார்ப்பன எதிர்ப்புகளை மீறி பெரியார் மேளாவை நடத்திய அதே மாயாவதி, இப்போது பதவி அதிகாரத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ள பார்ப்பனீயத்துக்கு பணிந்து நிற்கும் அவலத்தை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

மாயாவதியின் இந்தப் பார்ப்பனியத்தை எதிர்த்து, மற்றொரு செல்வாக்குள்ள தலித் அமைப்பான நீதிக் கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது. நீதிக்கட்சியின் தலைவரான உதித்ராஜ், நடந்த சம்பவங்களை விளக்கி கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணனுக்கு கடிதம் எழுதியுள்ளதோடு தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நீதிக்கட்சி அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்தை, பா.ஜ.க.வினர் சிதைத்து அவமதித்தனர். எதிர்த்துப் போராடிய நீதிக்கட்சித் தலைவர் உதித்ராஜன் மற்றும் அவரது அமைப்பைச் சார்ந்த தோழர்கள் போலீஸ் காவலில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் பெரியார் கொள்கைகளுக்காக தனது போராட்டம் தொடரும் என்று உதித்ராஜ் கூறியுள்ளதோடு, தனக்கும், தங்களது கட்சியினருக்கும் உயிருக்கு உத்திரவாதமில்லாத சூழல் - உ.பி.யில் மாயாவதி ஆட்சியில் தோன்றியுள்ளது என்று கூறி, உரிய பாதுகாப்பைக் கோரியுள்ளார். தமிழக முதல்வர் கலைஞர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கும் அவர் கடிதங்களை எழுதியுள்ளார். இது பற்றி - ஜுனியர் விகடன் வார ஏடு - மேலும் சில செய்திகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

மாயாவதி பெரும்பான்மை பலத்துடன் கடந்த வருடம் முதல்வரான பின் சென்ற நவம்பர் மாதம் மீண்டும் பெரியார் சிலை விவகாரம் உ.பி. சட்டசபையில் எழுந்தது. இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் மாயாவதி, 'பெரியார் சிலை உ.பி.யில் வைக்கப்படாது' என அறிவிக்க, இதை எதிர்த்து, 'இந்திய நீதிக்கட்சி'யின் தலைவர் உதித்ராஜ் போராட ஆரம்பித்தார். மத்திய வருவாய்த் துறையில் இணை கமிஷனராகப் பணியாற்றி வந்த உதித்ராஜ், ஏற்கெனவே பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தவர். பிறகு, இந்திய நீதிக்கட்சி ஆரம்பித்தார்.

முதல் கட்டமாகப் பெரியார் சிலையை உ.பி. முழுவதும் வைக்கப் போவதாக அறிவித்து, அதற்காக மாயாவதியிடமே இடம் தர அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினார் உதித்ராஜ். ஆனால், அதிகாரிகள் இடம் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த தினத்தன்று உ.பி. சட்டசபைக் கட்டடம் முன்பு இருக்கும் தாரூல் ஷஃபா மைதானத்தில் பெரியார் சிலை நிறுவ வலியுறுத்திப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் உதித்ராஜ். இதற்கும் போலீஸ் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் சுமார் இருநூறு பேர் உதித்ராஜ் தலைமையில் பெரியாரின் படங்கள் தாங்கிய தட்டிகளுடன் ஊர்வலமாகக் கிளம்பினர். இவர்களை வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்த, அங்கேயே தனது போராட்ட உரையைப் பேசி முடித்தார்.

உதித்ராஜின் போராட்டத்துக்கு எதிராக உடனே பா.ஜ.க., இளைஞர் பிரிவான பாரதிய யுவ மோர்ச்சாவினர் கிளம்பிவிட்டனர். லக்னோவில் இருக்கும் இந்திய நீதிக்கட்சியின் அலுவலகத்தின் முன்பு குவிந்த அவர்கள், அங்கு ஒட்டப்பட்டிருந்த பெரியாரின் படங்களைக் கிழித்து எறிந்ததோடு, அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கினர். அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த லக்னோவின் துணை கலெக்டர் அனில் பாதக்கிடம் இந்திய நீதிக்கட்சியினர், 'தாக்குதல் நடத்தும் பா.ஜ.க.,வினர் மீது நடவடிக்கை எடுங்கள்' என வலியுறுத்த, துணை கலெக்டருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் வெடித்தது.

ஒரு கட்டத்தில் இந்திய நீதிக் கட்சியை சேர்ந்த ஒரு பெண், கோபத்துடன் துணை கலெக்டர் அனிலின் கன்னத்தில் அறைந்துவிட, டென்ஷனான போலீசார் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாகத் தடியடி நடத்த ஆரம்பித்தனர். இதில் காயமடைந்த உதித்ராஜ், அவருடைய தொண்டர்கள் மற்றும் முன்னாள் உ.பி. மாநில அமைச்சர் ஆர்.டி.கௌதம் உட்பட நூறு பேர் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடப்பட்டனர்.

சிகிச்சையில் இருந்த உதித்ராஜை சந்தித்தோம். "துணை கலெக்டரை எங்கள் கட்சியினர் அறைந்தது தவறு தான். ஆனால், பெரியார் படத்தின் மீது கரியைப் பூசி அவமதித்த பா.ஜ.க.வினர் செய்ததும் தவறல்லவா? அவர்களைக் கண்டிக்காமல் அமைதியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதற்காக முன்கூட்டியே என்னுடைய பாதுகாப்பு காவலரையும் மிரட்டி, விரட்டி விட்டனர். இதற்கெல்லாம் இடம் கொடுத்தது முதல்வர் மாயாவதி தான். எப்படி ராமரை தெய்வம் என வணங்க உரிமை உள்ளதோ - அதுபோல், பெரியார் போன்ற சமூக நீதித் தலைவர்களை போற்றுவதற்கு எங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு" எனக் கொந்தளித்தார்.

பா.ஜ.க.,வின் உத்தரப்பிரதேச மாநிலத் தலைவர் ரமாபதிராம் திரிபாதியிடம் பேசினோம். "இந்து கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரானவர் பெரியார் என்பதால் அவரை எதிர்க்கிறோம். அவருடைய பெயரால் அரசியலுக்கு வந்தவர்களும் தங்கள் பாதைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய வற்புறுத்தலின் பேரில்தான் பெரியாருக்கு சிலை வைக்கமாட்டோம் என மாயாவதி சட்டசபையில் கூறினார். மாநில அரசு இந்த விஷயத்தில் உறுதியோடு இருக்குமா என்ற சந்தேகம் எழவேதான் இந்திய நீதிக்கட்சியினரின் போராட்டத்துக்கு எதிராக நாங்களும் களம் இறங்க வேண்டியதாகிவிட்டது" என்றார். - இவ்வாறு 'ஜூனியர் விகடன்' செய்தி வெளியிட்டுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com