Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2008

மன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்

தமிழர்களின் பாரம்பர்யப் பிரதேசம் மன்னார்! இங்கே கடலோர வாணிகம் செழித்திருந்த காலம் ஒன்று உண்டு. மன்னார் கடல் பரப்பில் அரபுக் கப்பல்கள் குதிரைகளைக் கொண்டு வந்து, மன்னார் சந்தையில் விற்பதும், மன்னார் கடல்பரப்பில் கிடைக்கும் விலை மதிப்புள்ள முத்துக்களை வாங்கிச் சென்றதும் உண்டு. அந்த மன்னார் பகுதியில்தான் - இப்போது ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்களப் படைகள் மன்னாரை தம் வசமாக்கிட அங்கே குவியத் தொடங்கின. அதற்கு முன் 1999 இல் இதே மன்னார் பகுதியை ஆக்கிரமிக்க ‘ரணகோச’ என்று (போர் முழக்கம்) பெயர் சூட்டி, பெரும் தாக்குதலைத் தொடர்ந்தது சிங்கள ராணுவம். அதை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். அதே மன்னாரில் இன்று ஒவ்வொரு நாளும் தொடர் யுத்தம். மன்னார், ஒரு சதுப்பு வெளி, மண்ணைத் தோண்டுவதற்கு மண்வெட்டியைப் போட்டு வெட்டினால், மண் தெறிக்காது. மண் வெட்டிதான் உடையும். அத்தகைய சதுப்பு நிலப் பகுதியானாலும், எதிரியின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட முடியுமா?

மன்னார் பிரதேசத்தைக் காப்பாற்ற, காவல் அரண்களை அமைத்தனர் விடுதலைப் புலிகள். அகழிகளை வெட்டி, எல்லைப் பகுதி முழுதும் காப்பரண்களை அமைத்தனர். (காப்பரண் என்றால் எல்லைப் பகுதி நெடுக பல மைல் தூரத்துக்கு 10 அடிக்கு ஒரு அரண் அமைத்து, அதில், 24 மணி நேரமும் துப்பாக்கியோடு கண்விழித்து எதிரிகளின் ஊடுருவல் நிகழ்ந்து விடாமல் காப்பது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கே குவிந்த சிங்களப் படை 6 மாதம் முழுமையாக தன்னை தயார்படுததிக் கொண்டு, செப்டம்பர் மாதத்தில் (24.9.2007) தனது முதல் தாக்குதலை காப்பரண்கள் மீது தொடங்கியது. இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் அமைத்தது ஒற்றைக் காப்பரண்தான். பெரும்படையாக குவிந்திருக்க மாட்டார்கள்.

ஒவ்வொருவராக எல்லைப் பாதை நெடுக காவல் காப்பார்கள். 75 மைல் தூரம் விரிந்து நிற்கும் இந்த ஒற்றைக் காப்பரண் மீது சிங்கள ராணுவத்தின் பெரும் படை தாக்குதல் தொடுத்து வருகிறது. ஆனால் - ஒரு அங்குலம்கூட காப்பரணைத் தகர்த்து, சிங்கள ராணுவத்தால், ஊடுருவ முடியவில்லை என்பதுதான் முக்கியம். 2007 செப்டம்பர் 24 ஆம் தேதி, ராணுவத்தின் முதல் தாக்குதல் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. பெண் புலி லெப். அருமலர் காப்பரண் தாக்கப்பட்டது. காப்பரணில் அப்போது இருந்த பெண் புலிகள் 5 பேர் மட்டுமே. பெரும் படையுடன் தாக்க வந்த சிங்களத்தை - இந்த 5 பெண் புலிகளும் எதிர் கொண்டனர். மாலை 5.30 மணி வரை தாக்குதல் நீடித்தது. துப்பாக்கிச் சூட்டில் காயப்படுவதும், பிறகு காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து, மீண்டும் திருப்பி சுடுவதுமாக அந்தப் புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர். ஊடுருவ முயன்ற சிங்களப் படை திரும்பி ஓட்டமெடுத்த நிலையில், அந்த 5 பெண் புலிகளும் உடல் முழுதும் ஏந்திய குண்டு காயங்களோடு வீர மரணத்தைத் தழுவினர். இந்த வீர காவியம் படைத்த போர் நடந்த பகுதி ‘கட்டுக்கரை குளக்கட்டு’.

தோற்றோடிய சிங்களப் படை மீண்டும் அதே காப்பரணைத் தாக்கி ஊடுருவ - தாக்குதலைத் தொடங்கியது. இப்போது பெண் புலி காப்டன் கோதை தலைமையிலான புலிகள் தாக்குதலை எதிர் கொண்டனர். முதற் சண்டையில் விதையாகிய தோழியரின் ரத்தமும், சதையும் ஊறி வீரத்தோடு எழுந்து நின்று, கடுமையாக மோதியது. சிங்களப் படையினரிடம் பலியாகாமல், வெளியேறுவதற்கு வாய்ப்பிருந்த நிலையிலுங் கூட, பெண்புலி கோதை, படையை எதிர்த்துப் போரிட்டு, வீரமரணத்தைத் தழுவி, ஊடுருவலைத் தடுத்தார்.

கட்டுக்கரையில் தொடங்கிய தாக்குதலை எல்லைப்பகுதி முழுதும் ஒரே நேரத்தில் ராணுவம் விரிவாக்கியது. அந்த யுத்தம் ஒவ்வொரு நாளும், இப்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மாதம் ஒரு முறை யுத்தம் என்ற நிலை மாறி, ஒவ்வொரு நாளும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெருமளவில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுவதாக சிங்களம் பொய்ச் செய்திகளைப் பரப்புகிறது. பிரபாகரன் மீதும் குண்டு வீசப்பட்டு, படுகாயமடைந்ததாக பொய்ச் செய்திகளைப் பரப்பியது. பொய் முகத்திரை கிழிந்து போனது. இப்போது மன்னாரில் என்னதான் நடக்கிறது?

‘வீட்டுக்கு ஒரு போர் வீரன்’ என்ற முழக்கத்தோடு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போர் வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். நேருக்கு நேர் மோதும் மரபு வழி யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. உலக வல்லரசுகள் வழங்கியுள்ள ராணுவ பலத்துடன் சிங்களம் படை முகாமை நிறுத்தியிருக்கிறது. புலிகளின் ஒற்றைக் காப்பரணை ஊடுருவி நகர முடியாமல் சிங்களத்தின் பெரும்படை ஒவ்வொரு நாளும் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. எல்லைப் பகுதியில் காப்பரணில் சண்டையில் நிற்கும் பெண் புலிகளை நேரில் சந்தித்து அளவளாவி படம் எடுத்து வரலாம் என்ற நோக்கத்தோடு போர் மேகம் சூழ்ந்த நிலையிலும், சாரதா என்ற பெண் புலி தலைமையிலான அணி மன்னார் பகுதிக்குச் சென்றது.

ஒவ்வொரு காப்பரணாகச் சென்று பெண் புலிகளிடம் உசாவி விட்டு வரும் நிலையில் சிங்களப் படை திடீர்த் தாக்குதலைத் தொடங்கியது. மிகவும் சக்தி வாய்ந்த பீரங்கியால் (50 கலிபர்) ராணுவம் சுட்டுத் தள்ளுகிறது. 50 அடி தூரத்திலுள்ள காப்பரண் மீது தாக்குதல் நடக்கும் போது, சாரதாவின் அணி, அடுத்த காப்பரணில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தது. அந்த நிலையிலும் அரணில் இருந்த பெண் புலிகள், “வாங்கோ, வாங்கோ அக்கா” என்று அன்புடன் உபசரித்து, அடுப்பை மூட்டி, உணவு தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தேனீர் பரிமாறப்பட்டது. ‘என்னடா இது? முன்னுக்குச் சண்டை நடக்கிறது? இவர்களை நோக்கி, எந்த நேரத்திலும் திரும்பலாம்; ஆனாலும், அதை வழமையாக எதிர்க் கொண்டு, அன்பான உபசரிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தது கண்டு சாரதா அணி வியந்தது.

மன்னார் போர் அரங்கில் நிற்கும் படை அணியினர் அனைவருக்கும் உணவு வேளைகளுக்கு இடையே சாப்பிடக் கூடிய சத்தான உணவுப் பொருள்களை வாங்கித் தருமாறு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பெண் புலி கேணல் யாழினியிடம், ஒரு தொகைப் பணத்தைத் தந்திருந்தார். காப்பரண் முழுதும் படைவீரர்கள் அனைவருக்கும் இதை வழங்க 10 நாட்கள் ஆகிவிடும். அதற்குள் உணவு கெட்டுப் போக வாய்ப்புண்டு. எனவே யாழினி ஒவ்வொருவருக்கும் ‘சோன் பப்ளி’ எனும் இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக் கொடுத்து விட்டார். அப்போது - ஒரு புதிய பெண் போராளி கேணல் யாழினியிடம் கேட்டார், “அக்கா, எங்களுக்குத்தான் மூன்றுவேளை சாப்பாடும் வந்து கொண்டிருக்கே, அதுவே போதும்; எதற்கு அண்ணன், இதை எல்லாம் தர வேண்டும்?” என்று கேட்டார்.

“சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பெட்டிகளையும், பல்விளக்கும் தூரிகைகளையும் (பிரஷ்) தலைவர் தந்துவிடுவார்” என்று சிரித்துக் கொண்டே கூறினார், யாழினி.

‘எங்க வீட்டிலேயே ஒரு பெட்டி இனிப்பு வாங்கி எல்லோரும் சாப்பிடுவோம்; நாங்கள் வசதியான குடும்பம் தான். ஆனால், அண்ணன், ஆளுக்கு ஒரு இனிப்பு பெட்டி கொடுத்துள்ளாரே!” என்றார், அந்தப் பெண் புலி.

“அக்கா அண்ணனை நாங்கள் சந்திக்க வேண்டும்; கேட்டுச் சொல்லுங்க” என்று புதிய பெண் புலிகள் மரணத்தை எந்நேரமும் எதிர்கொள்ளக் கூடிய அந்த சூழலிலும் இதையே கோரிக்கையாக வைத்தனர்.

போராட்டமே வாழ்க்கை; வாழ்க்கையே போராட்டமாய் - மன்னார் போர் அரங்கு மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மோதி மோதிப் பார்க்கும் சிங்களம் - பெண் புலிகளின் வீரத்தாலும், தியாகத்தாலும், தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com