Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2008

காயப்படுத்திவிட்ட கலைஞரின் ‘அவதூறு’ மொழி

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தள்ளி வைக்கப்படுவதாக கலைஞர் அறிவிப்பு குறித்து, பல்வேறு கருத்துகள் எதிர் வினைகளாக வந்து கொண்டிருக்கின்றன. அரசியலில் இவை எதிர்பார்க்கப்பட வேண்டியவைதான். அதேபோல் பழ.நெடுமாறன் அவர்களும் கலைஞரின் அறிவிப்பு ‘தமிழர்களுக்கு துரோகம்’ என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு முதல்வர் கலைஞர் பதிலளித்துள்ளார் - இது கலைஞருக்கு உள்ள உரிமை தான். ஆனால் கலைஞர், பழ.நெடுமாறன் அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் வீசியுள்ள அவதூறும், இழி சொற்களும் கவலையையும், வேதனையையும் தருவதாக அமைந்துள்ளது.

கலைஞரைப் போல், பழ.நெடுமாறன் அவர்களும் தமிழகத்தின் மதிப்புக்குரிய மூத்த தலைவர்களில் ஒருவர். தேர்தல் அரசியலை உதறிவிட்டு, தமிழர்களின் மொழி, இன உரிமைகளுக்காக தொண்டாற்றி வரும், வெகு அபூர்வமான தலைவர். தமிழகத்தின் பொது வாழ்க்கையில் அரிதாகிவிட்ட பொது ஒழுக்கத்தையும், நேர்மையையும் வழுவாது பின்பற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர். அவர் மீது கலைஞர், “புலிகள் பெயர் சொல்லி பல வழிகளில் பொருளீட்டும் காகிதப்புலி’ என்ற வசைமாரி பொழிந்திருப்பது, கிஞ்சித்தும் கலைஞருக்கு பொருத்தமற்ற, அவர் பயன்படுத்தக்கூடாத மலிவான சொற்கள் என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுவது நமது கடமை.

பழ. நெடுமாறன் அவர்கள் கட்சிகளுக்கும் அப்பால் தமிழர்களால் மதிக்கப்படும் மூத்தத் தலைவர். ஈழத் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போரும், தமிழின உரிமையை வேண்டி நிற்போரும் அனைத்துக் கட்சிகளிலும், இயக்கங்களிலும் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த உணர்வின் குறியீடாகவே பழ. நெடுமாறன் இருக்கிறார் என்பதே உண்மை. அவரை ‘புலிகளின் பெயரால் பொருளீட்டுபவர்’ என்று கலைஞர் சித்தரித்துள்ளது, தமிழின உணர்வாளர்களின் உணர்வைக் கடுமையாக புண்படுத்திவிட்டது. பொருளீட்ட வேண்டும் என்று அரசியலுக்கும், பொது வாழ்க்கைக்கும் வருவோர் - புலிகள் பெயரைச் சொல்ல எப்படி முன்வருவார்கள்? அந்தப் பெயரைச் சொன்னால் கடும் அடக்குமுறைகளையும், தியாகங்களையும் அல்லவா ஏற்றாக வேண்டும்? அந்தத் தியாகத் தழும்புகளை ஏற்றுக் கொண்டிருப்பவர் தானே பழ. நெடுமாறன்.

மூத்த தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை விமர்சிக்க இத்தகைய அவதூறு மொழிகளைத் தேடி பிடித்திருக்க வேண்டாம். கலைஞரின் இந்த அவதூறு மொழிகள் பழ நெடுமாறன் அவர்களை மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் இயக்கத்தைக்கூட மறைமுகமாக களங்கப்படுத்தியே நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எழுச்சியான “வாபஸ்!”

தமிழ்நாட்டின் எல்லைக்குள் - தமிழ்நாட்டுக்குரிய பங்கீட்டில் தருமபுரி கிருட்டினகிரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான திட்டம் தான் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம். இது நீர் மின் திட்டமோ, நீர்ப்பாசனத் திட்டமோகூட அல்ல. கருநாடக எல்லைப் பகுதிக்குள் தமிழ்நாடு அணை எதையும் கட்டவும் இல்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1998 ஜுன் 29 ஆம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் செயலாளர் அருண்குமார் தலைமையில், டெல்லியில் கூட்டப்பட்ட கூட்டத்தில், கருநாடக அரசின் தலைமைச் செயலாளர், தமிழக அரசின் சிறப்புச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூடி விவாதித்து, “கருநாடகத்தின் பெங்களூர் குடிநீர்த் திட்டமும், தமிழகத்தின் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டமும், மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கைத் திட்டமாக அங்கீகரிக்கப்படுகிறது” என்று எழுதி, இரு தரப்பும் கையெழுத்திட்டு ஒப்புக் கொண்ட திட்டம், 1998 செப்டம்பர் 21 ஆம் தேதி, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதிக்கான ஆணையை வழங்கி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் துறைகளின் அனுமதியும், ஏற்கனவே பெறப்பட்டுவிட்டது. இத் தகவல்களையெல்லாம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதியே தெரிவித்திருக்கிறார்.

பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் ஏற்பு வழங்கப்பட்ட திட்டத்தை, பாரதிய ஜனதாவின் சார்பில் 24 மணி நேர முலமைச்சராக இருந்து பதவி விலகிய கருநாடகத்து எடியூரப்பா பிரச்சினையாக்கினார். தமிழக எல்லைப் பகுதிக்குள் நுழைந்து, ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘குஜராத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது; குஜராத் மீது பாகிஸ்தான் தாக்குதல் தொடுக்கிறது’ என்று குஜராத் மோடி - குஜராத் தேசிய உணர்வை வெறியுணர்வாக்கி, தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல், கன்னட வெறியை அரசியலாக்கி ஓட்டுகளைப் பெறுவதற்கான நப்பாசைதான் இந்த எடியூரப்பாவின் ‘விளையாட்டுக்கு’ காரணம்!

அத்துமீறும் இன வெறிக்கு எதிராக தமிழர்களிடையே இயல்பான, நேர்மையான, எழுச்சிகளும், எதிர்வினைகளும் எழவே செய்தன. ‘எங்கள் எலும்புகளை உடைத்தாலும் சரி; இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன்’ என்று தமிழக முதல்வர் கலைஞரே பேசினார். தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும், கலை உலகமும் ஒன்று சேர்ந்து, தமிழக உரிமைக்கு குரல்கொடுத்த காட்சியை நாடு கண்டது. இந்தச் சூழலிலும்கூட, பார்ப்பனர் ஜெயலலிதா மட்டும் வாய்திறக்கவே இல்லை. பாரதிய ஜனதாவின் தேர்தல் கூட்டணிக்கு தயாராக கதவு திறந்து வைத்துள்ள அக்கட்சி, தமிழர்கள் பேரெழுச்சியில் நீண்ட மவுனமே சாதித்தது.

இந்த நிலையில் கருநாடகத்தில் வரவிருக்கும் தேர்தல் முடிந்து, புதிய ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைப்போம் என்று, தமிழக முதல்வர் கலைஞர் திடீரென்று அறிவித்த பிறகுதான், ஜெயலலிதாவின் மவுனமும் கலைந்தது. கலைஞர், தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டார். பெங்களூரில் தமிழ்ச் சங்கத்தை கன்னட வெறியர்கள் தாக்கியபோதுகூட, பார்ப்பன அம்மையாரின் கண்டனம் வரவில்லை. பா.ஜ.க. தொடங்கி வைத்த சண்டித்தனத்தையும் கண்டிக்க முன்வரவில்லை. வழக்கம்போல், தனது பார்ப்பனியத்தின் அடையாளத்தையே மீண்டும் பதிவு செய்துள்ளார், அந்த அம்மையார்.

பார்ப்பனியம் இப்படி, பச்சையாக தன்னை அடையாளம் காட்டி, மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில், அவ்வப்போது, இயல்பாக எழும், பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழின உணர்வு எழுச்சிகள், கொதி நிலைக்கு வரும்போது, அதில் தண்ணீரை ஊற்றி, அடக்கிடும் முயற்சிகளையே கலைஞரும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பார்ப்பனிய ராமாயணத்தை முன் வைத்து சேது சமுத்திரத் திட்டத்தை - பார்ப்பன சக்திகள் எதிர்த்தபோதும், கலைஞரின் தலைக்கு, விசுவ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் விலை நிர்ணயித்தபோதும், பார்ப்பன இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக, தமிழகமே கொதித்தெழுந்தது. அந்த எழுச்சியை அடுத்த சில நாட்களிலே தி.மு.க. தலைமை அணைபோட்டு அடைத்தது. தி.மு.க. தோழர்கள் தன்னெழுச்சியுடன் நடத்திய, பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள், அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

முல்லைப் பெரியார் அணை நீர்மட்டத்தை உயர்த்துவதில், உச்சநீதிமன்ற ஆணையை செயல்படுத்துவதற்குக்கூட, கேரள அரசு முட்டுக்கட்டைப் போட்டு, கலவரத்தில் இறங்கியபோது, தமிழகத்தில் மூண்டெழுந்த பேரெழுச்சியும், தமிழக அரசால் உடனடியாக அடக்கப்பட்டது. தமிழ் ஈழத்தில் செஞ்சோலையில் மாணவிகள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசிக் கொல்லப்பட்டபோதும் சரி, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரும், சமாதான பேச்சு வார்த்தைக் குழுவுக்கு தலைமை தாங்கியவருமான தமிழ்ச்செல்வன், சிங்கள ராணுவத்தால் குண்டுவீசிப் படுகொலை செய்யப்பட்டபோதும் தமிழகத்தில் உருவான இயல்பான எழுச்சியை மத்திய அரசின் மிரட்டலுக்கு பணிந்து, அடக்குமுறை சட்டங்களைக் காட்டி, கலைஞர் ஆட்சி அச்சுறுத்தி அடக்கியது. அதே போன்ற “எழுச்சியான வாபஸ்”களைத்தான் இப்போதும் கலைஞர் மேற்கொண்டிருக்கிறார்.

சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஊட்டிய உணர்வுகளும், எழுச்சிகளும் தமிழர்களிடையே குறிப்பாக, இளம் தலைமுறையினரிடையே மங்கவும், மழுங்கவும் செய்யப்பட்டுவிட்டதால், பார்ப்பன, தமிழின விரோத சக்திகள், தலைதூக்கி நிற்கும் அவலத்துக்கு தமிழ்நாடு வந்துவிட்டது. இவைகளையும் மீறி, இயல்பான உணர்வுகள் பீறிடும்போது, பார்ப்பனர்களும், தமிழின எதிர்ப்பு சக்திகளும் பதறுகின்றன. இந்த தமிழின உரிமைகளுக்கான எழுச்சிகளே பெரியார்-அண்ணாவின் கொள்கைகளுக்கும், அந்த கொள்கைகளுக்கான கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் பாதுகாப்பு அரண். இந்த அப்பட்டமான உண்மையைப் புறந்தள்ளிவிட்டு, எழுந்து வரும் எழுச்சியை அடக்க, கலைஞரே முன் வருவது இன எதிரிகள் இலகுவாக முன்னேறப் பாதை அமைப்பதாகி விடாதா என்று கேட்க விரும்புகிறோம்.

கருநாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் தமிழர் உரிமைகளைத் தடுக்கத்தான் முயற்சிப்பார்கள் என்பது யாருக்குத் தான் தெரியாது?

‘தமிழ்நாட்டில் காட்டிய எழுச்சிகளை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்’ என்ற வேண்டுகோளுடனாவது கலைஞர் நிறுத்தியிருக்கலாம்.அதையும் தாண்டி, திட்டத்தையே தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்க வேண்டாமே! ‘விவேகமான முடிவு’ என்று ‘இந்து’ போன்ற பார்ப்பன ஏடுகளும், கன்னடத்து கிருஷ்ணாக்களும் பாராட்டும் நிலை வந்துவிட்டதே, நமது பின்னடைவைக் காட்டுகிறதே! உண்மைகள் கசந்தாலும், அதை சுட்டிக் காட்டுவது நமது கடமை என்றே கருதுகிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com