Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2008

அம்பலப்படுத்துகிறது, நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்

நாட்டின் உயர்பதவிகளுக்கு வேட்பாளர்களாக தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது மத்திய தேர்வாணையம். இந்தத் தேர்வாணையத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்டோரின் நியாயமான உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கான தேர்வுகளிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான உரிமைகளை இந்த ஆணையம் தொடர்ந்து பறித்து வருகிறது. திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை, இடஒதுக்கீடு கோட்டாவின் கீழ் தொடர்ந்து நிரப்பி வருகிறது இந்த ஆணையம். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் - இந்த முறைகேட்டைக் கண்டித்ததோடு, 2004 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய சர்வீசுகளுக்கான தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்து பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் மத்திய தேர்வாணையத்தின் அதிர்ச்சியான பார்ப்பன மோசடிகள் மேலும் வெளிவந்துள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் - அதிகார வலிமை கொண்டது என்றும், தங்களது செயல்பாடுகளை எவரும் கேள்வி கேட்க முடியாது என்றும் ‘பூணுலை’ இழுத்து விட்டுக் கொண்டிருந்த இந்த ஆணையத்தின் ‘சிண்டை’ இப்போது நாடாளுமன்ற நிலைக்குழு (31 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது), அழுத்தமாகப் பிடித்து உலுக்கத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் நிலைக்குழுத் தலைவர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன். வேலைவாய்ப்பு, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகங்களுக்கான இந்த நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய தேர்வாணையத்தின் செயல்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து, விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த ஆணையத்தின் பார்ப்பன மோசடிகள் தொடராமல் இருக்க, சில புரட்சிகரமான சீர்திருத்தங்களையும், நாடாளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அய்.ஏ.எஸ். தேர்வுகளுக்கு முதலில் தொடக்க நிலை தேர்வு எழுதி, அதில் தேர்ச்சிப் பெற்றால்தான் முதன்மை தேர்வு எழுத முடியும். தொடக்க நிலை தேர்வின் முடிவுகள் வெளிவர ஆறுமாத காலத்தை தேர்வாணையம் எடுத்துக் கொள்கிறது. தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் போகிறவர்கள் இந்த 6 மாத காலத்தில் அடுத்த கட்ட பயிற்சிக்குப் போக முடிவதில்லை. தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைத்து, ‘ஆன்லைன்’ முறையில் மாணவர்கள் தொடக்க நிலை தேர்வு எழுதலாம். ஒரு சில வாரங்களிலே முடிவு தெரிந்துவிடும் என்ற பரிந்துரையை நாடாளுமன்றக் குழு முன் வைத்துள்ளது. இதன் மூலம் தேர்வாணையத்தின் தில்லுமுல்லுகளுக்கு கடிவாளம் போடப்படும்.

மத்திய தேர்வாணையம் வெளிப்படையாக செயல்படுவதில்லை. தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண், நேர்முகப் பேட்டிக்குப் பிறகு அவர்கள் பெறும் ‘கட்-ஆப்’ மதிப்பெண் ஆகிய விவரங்களை தேர்வாணையம் தெரிவிக்க மறுத்து வருவது ஏன்? இதில் என்ன ரகசியம் இருக்கிறது” என்று கேள்வி எழுப்புகிறார், சுதர்சன நாச்சியப்பன். அதே போல் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், தேர்வுக்குரிய பாடங்கள் - எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது? இதற்கான அளவுகோல் என்ன என்பதும் ‘மர்மமாக’வே உள்ளது. 2006 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மாணவர்கள், தொடக்க நிலை தேர்வில் தங்களுக்கான மதிப்பெண் விவரத்தைக் கேட்டபோது, ஆணையம் தகவல் தர மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் ‘உண்மை வேண்டுவோர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, தேர்வாணையத்தின் பார்ப்பன அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். தகவல்

உரிமை சட்டத்தின் கீழ், தங்களின் தொடக்க தேர்வு மதிப்பெண், ‘கட்-ஆப்’ மதிப்பெண்களைத் தெரிவிக்குமாறு தேர்வாணையத்திடம் மனு செய்தனர். ஆணையம், தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு மனு செய்தனர். உடனே மத்திய தகவல் ஆணையம் - மூன்று வாரத்துக்குள் மாணவர்களுக்கு தொடக்க தேர்வு மதிப்பெண் மற்றும் ‘கட்-ஆப்’ மதிப்பெண்களைத் தெரிவிக்குமாறு தேர்வாணயத்திற்கு 13.11.2006 இல் பணித்தது. தாங்கள் பின்பற்றும் தேர்வு முறை விஞ்ஞான பூர்வமானது என்றும், அந்த ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய தேர்வாணையம் பதில் தர, அதை ஏற்க மத்திய தகவல் ஆணையம் மறுத்து விட்டது. உடனே தேர்வாணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் ரகசியத்தை வெளியிட்டு விட்டால், தனியார் பயிற்சி நிறுவனங்கள் அதை முறைகேடாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதால், மதிப்பெண்ணை வெளியிட முடியாது. எனவே மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய தேர்வாணையம் வழக்கு தொடர்ந்தது.

தேர்வாணையத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.அகமது நிராகரித்து, ஏப்.17, 2007 இல் தீர்ப்பளித்தார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை உடனே வெளியிடுவதோடு, மாதிரி விடைத்தாளையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போதும் தேர்வாணையம் விடவில்லை. மே 3, 2007 இல் வழக்கை மேல் முறையீடு செய்து, ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்ணையும், ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணையும் வெளியிட்டு விட்டால், ஆணையத்தின் ரகசியமான தேர்வு முறை மிக மோசமாக பாதித்துவிடும், கடுமையான விளைவுகளை உருவாக்கி விடும்” என்று மேல் முறையீட்டு மனுவில் கூறியது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் - நீதிபதிகள் எம்.கே.சர்மா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது மே 22, 2007 இல் - நீதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதித்ததோடு, தேர்வாணையம் தன்னிடமுள்ள இது தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் போட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணையிட்டனர். மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு - அது முதல் கிடப்பில் உள்ளது. மத்திய தேர்வாணையமும் மதிப்பெண்களை வெளியிடாமல் இருந்து வருகிறது.

தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டுமல்ல, மத்திய வேலை வாய்ப்பு அமைச்சகமே, இதை பற்றிய தகவலைக் கேட்டபோதும், தேர்வாணையம் தகவல் தர மறுத்து வந்திருக்கிறது. தேர்வாணையம் நடத்தும் நேர்முகத் தேர்வில், விருப்பு வெறுப்பு பாகுபாடுகள் காட்டப்படுவதாக, பிரதமர் அலுவலகத்துக்கு புகார் வரவே, பிரதமர் அலுவலகம் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்தின் வழியாக, இடஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்கள் ‘கட்-ஆப்’, பொதுப் போட்டியில் இடம் பெற்ற மாணவர்கள் ‘கட்-ஆப்’ மதிப் பெண்களைக் கேட்டது. பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதியும், இதுவரை, தேர்வாணையம் அசைந்து கொடுக்கவில்லை.

கடந்த காலங்களிலும் நாடாளுமன்றக் குழுவினரை, தேர்வாணையம் புறக்கணித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குழு கருத்து கேட்க அழைத்தபோது, மத்திய தேர்வாணையம் கருத்து தெரிவிக்கவே வர மறுத்துவிட்டது. குழு தனது பரிந்துரையில் இதை குறிப்பிட்டு தேர்வாணையத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துமாறு பரிந்துரைத்திருந்தது. “அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட ஆணையம் என்று கூறிக் கொண்டு இந்த ஆணையம் தன்னுடைய மோசமான நிர்வாகத்தை மறைக்க முயலுகிறது. இந்தத் தேர்வாணையத்திலேயே செயலாளர் என்ற தலைமைப் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது. பல அரசு நிறுவனங்களிலும் ஆணையத்தின் அலட்சியத்தால் தலைமைப் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாகவே கிடக்கின்றன. ஆணையத்தின் செயலற்ற போக்கே இதற்குக் காரணம். தேர்வாணையம், சில நேரங்களில், சிலரின் பெயர்களைப் பரிந்துரைக்க, அவர்களுக்கான நியமனம் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, பரிந்துரையை ஆணையம் திரும்பப் பெற்றதும் உண்டு.

“சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த நிறுவனமும் செயல்பட முடியாது. ஆணையத்தின் இந்த செயல்பாடுகள், நாடாளுன்றத்தின் உரிமை மீறல்களுக்கு உட்பட்டதாகும்.” என்றும் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற குழு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது. “நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்; மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த நிறுவனத்தையும், நாங்கள் அனுமதிக்க முடியாது; நாங்கள் அரசுக்கு சமர்பித்துள்ள பரிந்துரைகளை செயல்பட வைப்போம்” என்று உறுதியாகக் கூறுகிறார், சுதர்சன நாச்சியப்பன். பரிந்துரை மீது உரிய நேரத்தில், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, மத்திய வேலை வாய்ப்புத் துறை செயலாளரும் உறுதி கூறியுள்ளார். பார்ப்பன ஆதிக்கம் - எப்படி, நாட்டை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இது அசைக்க முடியாத சான்று.

(ஆதாரம்: மார்ச் 28, ‘பிரன்ட்லைன்’ வெளியிட்ட கட்டுரை)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com