Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2007

அவமதிக்கிறது, உச்சநீதிமன்றம்!

மீண்டும் உச்சநீதிமன்றம் தனது கொடுவாளை வீசி விட்டது. உரிமை கோரும் பிற்படுத்தப்பட்டோரை அவமதித்துவிட்டது.

உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கு மாணவர் சேர்க்கை நிகழ இருக்கும் நேரத்தில் உச்சநீதி மன்றம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி இடைக்கால தடை விதித்து விட்டது. அஜீத் பசாயத், லோகீஸ்வர்சிங்பட்னா ஆகிய இரு நீதிபதிகள், இந்தத் தடையை விதித்துள்ளனர். நீதி மன்றம் தடைக்கு தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்கவியலாதவை!

1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரியாக நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு சாதிவாரியாக கணக்கெடுப்பு நடக்கவில்லை. எனவே பிற்படுத்தப்பட்டோரை - 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்து தீர்மானிப்பதை ஏற்க முடியாது என்று கூறுகிறது, உச்சநீதிமன்றம். இந்தியாவில் வாழும் மக்களில் பிற்படுத்தப்பட்டோர் 52 சதவீதம் பேர் என்று மண்டல் குழு பரிந் துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மண்டல் குழு அடிப்படையாக ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை வேறு நான்கு கோணத்திலும் பரிசீலித்தது. மாநில அரசுகள் தயாரித்திருந்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்கள் பரிசீலிக்கப்பட்டன. மண்டல்குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களோடு, அவை ஒப்பு நோக்கப்பட்டன.

இந்தியா முழுதும் மண்டல்குழு சுற்றுப் பயணம் செய்து, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, மனுக்களைப் பெற்று ஆய்வு செய்தது. மாதிரி கணக்கெடுப்புகளும் நடத்தப்பட்டன. அதன் பிறகுதான் பிற்படுத்தப்பட் டோர் எண்ணிக்கை 52 சதவீதம் என்ற முடிவுக்கு வந்தது. சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, காகாகலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் குழு பரிந்துரைத்தது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் உள்துறை அமைச்ச ராக இருந்த வல்லபாய் பட்டேல் தான் 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது சாதி வாரியான கணக்கெடுப்பை எடுக்க தடைவிதித்தார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டவர் அவர்தான். அப்படிக் கணக்கெடுப்பு நடத்தினால், சமூகம் பிளவுபட்டுவிடும் என்று அவர் கருதினார்.

மண்டல் தலைவராக பொறுப்பு ஏற்றப் பிறகு 1978-79-ல் உள்துறை அமைச்சராக இருந்த எச்.எம். பட்டேல், 1979-ல் உள்துறை அமைச்சராக இருந்த ஒய்.பி.சவான், 1980-ல் உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில்சிங் ஆகிய மூவருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். ஆனால், பட்டேல் உத்தரவை காரணம் காட்டி, மண்டலின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனாலும்கூட மாதிரி சர்வேக்கள் பல தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் ஜூலை 2004 முதல் ஜூன் 2005 வரை கணக்கெடுப்பு நடத்தி இந்தியாவில் 41 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்கள் இருப்பதாகக் கூறியது. இது பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையைத் திட்டமிட்டு குறைத்துக் காட்டும் உள்நோக்கம் கொண்டது என்று, பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வந்தன. 7999 கிராமங்கள், 4602 நகரப் பகுதிகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 680 வீடுகளில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பு அடிப்படையில், இந்த முடிவுக்கு வந்ததாக அந்த நிறுவனம் கூறியது.

மக்கள் தொகை எண்ணிக்கையில் கருத்து மாறுபாடு இருந்தாலும்கூட - எந்த ஒரு ‘மாதிரி கணக்கெடுப்பும்’, பிற்படுத்தப் பட்டோர் 27 சதவீதத்துக்குக் கீழே இருப்ப தாகக் கூறவில்லை. மண்டல் குழு பிற் படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவீதமாக இருக்கிறது என்று கூறினாலும், 27 சதவீத இடஒதுக்கீட்டைத் தான் பரிந்துரைத்தது. இப்போது தரப்பட்டிருப்பதும் 27 சதவீத இடஒதுக்கீடு தான். 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் 2004 முதல் 2005 வரை தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் கூறிய அடிப்படையை ஏற்றிருக்கலாமே!

இந்தியாவில் பட்டம் பெற்றோர் - மேல்பட்டப் படிப்பில் பட்டம் பெற்றோர் பற்றி ‘தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம்’ (என்.எஸ்.எஸ்.ஓ) 1999-2000 ஆம் ஆண்டில் இந்தியா முழுமைக்கும் மாதிரி கணக்கெடுப்பு நடத்தியது. அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை இது நடத்தப்படுகிறது. என்றாலும் இந்தக் கணக்கெடுப்புதான் அவற்றில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். அதாவது 2.24 லட்சம் பேரிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நகர்ப்புறப் பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி - பார்ப்பன உயர் சாதியினர், 37 சதவீதம் பேர். தொழில் நுட்பம் சாராத பட்டப் படிப்பில் - பார்ப்பன உயர்சாதியினர் 66 சதவீதம். மருத்துவப் பட்டதாரிகளில் 65 சதவீதம். பொறியியல் மற்றும் தொழில் நுட்ப பட்டதாரிகளில் 67 சதவீதம். விவசாயப் பட்டப் படிப்பில் 62 சதவீதம். அதாவது, தங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக பட்டப்படிப்பிலும், உயர் பட்டப் படிப்பிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மாதிரி கணக்கெடுப்பில் மேலும் அதிர்ச்சியான தகவல்களும் வெளி வந்தன.

1.51 லட்சம் பேரிடம் எடுத்த கணக் கெடுப்பில் 1359 பேர் பொறியியல் பட்டதாரிகள். இதில் 908 பேர் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் 202 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர். 535 டாக்டர்களில் பார்ப்பன உயர்சாதியினர் 350 பேர். பிற்படுத்தப்பட்டோர் 56 பேர். 17,501 தொழில் நுட்பம் சாராத பட்டதாரிகளிடம் எடுத்தக் கணக்கெடுப்பில், 11,529 பேர் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் (இது, அவர்கள் எண்ணிக்கையைவிட 4 மடங்கு). பிற்படுத்தப்பட்டோர் 2402. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் எல்லோரையும்விட, பார்ப்பன உயர்சாதி யினர், பட்டம் மற்றும் உயர் பட்டப் படிப்புகளில் அவர்களின் எண்ணிக்கையை விட குறைந்தது இரண்டு மடங்குக்கு அதிகமாகவே உள்ளார்கள். (ஆதாரம் - ‘எக்னாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’, ஜன.17, 2006)

1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தவிர வேறு ஏதாவது புள்ளி விவரங்கள் இருக்கிறதா என்று நீதிமன்றம் கேட்டதா என்பதும் தெரியவில்லை. ஆனாலும், இடஒதுக்கீட்டை நிறுத்தி வைப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டப் பிறகு, இதை எல்லாம் எப்படி பரிசீலிப் பார்கள்? ஆனால், எத்தனையோ நூற்றாண்டு பழமையான ஆகமங்களை - அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்று கூறும் உச்சநீதி மன்றங்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மட்டும் வேறு பார்வையை முன் வைக்கின்றன.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கூட நடத்தத் தேவையில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் தற்போது படிக்கும் மாணவர்களின் சாதிவாரியான கணக் கெடுப்பை எடுக்கட்டும்! அறிவிக்கப்படாத பார்ப்பன, உயர்சாதியினருக்கான 70 சதவீதத்துக்கும் மேலான இட ஒதுக்கீடு, அங்கே நீடிக்கிறது என்ற உண்மையும், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் பாதியளவுக்குக்கூட பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் அப்போது வெளிச்சத்துக்கு வரும். இப்படி ஒரு கணக்கெடுப்பை - மத்திய மனித வளத்துறை அமைச்சகம் எடுத்ததாக - சில மாதங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. அப்படி எடுக்கவில்லையானால், கணக்கெடுப்பை நடத்தி மத்திய மனித வளத் துறை அமைச்சகம் அதை மக்கள் மன்றத்தில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

அதே போல் - உச்சநீதிமன்ற உயர்நீதி மன்ற நீதிபதிகளிலும், சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட வேண்டிய தும் அவசியமாகும். பொதுப் போட்டியில் இடங்கள் பாதிக்கப்படாத அளவுக்கு, அதிகரிக்கப்பட்டுள்ளன என்ற அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இடஒதுக்கீடே இல்லாமல், இடங்கள் அதிகரிக்கப்பட்டிருக்குமானால், பொதுப் போட்டியில் இன்னும் கூடுதல் இடங்கள் கிடைக்குமே என்று, நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்து நீதிபதிகள், பொதுப்போட்டியில் இடம் பிடிக்கும் பார்ப்பன உயர்சாதியினர் நலன் சார்ந்தே, இந்தப் பிரச்சினையை அணுகியிருப்பது உறுதியாகிறது. காலம் காலமாக உயர் கல்வியில் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைகள் பற்றி இவர்களுக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை!

1950-ல் வகுப்புவாரி பிரதிநிதித்து வத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான விசுவ நாத சாஸ்திரி என்ற பார்ப்பன நீதிபதி, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அமுல் படுத்துவதால், பார்ப்பன உயர்சாதி மாணவர்களுக்கு கிடைக்காமல் போன இடங்களைப் புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டு, வகுப்புவாரி பிரதிநிதித்து வத்தை ரத்து செய்தார். அதே கண்ணோட்டத்தில் தான், இப்போது உச்சநீதி மன்றமும், பொதுப் போட்டி இடங்கள் குறைவதற்காக கண்ணீர் வடிக்கிறது. உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள மற்றொரு கருத்து, பிற்படுத்தப்பட்டோரை கிரிமிலேயர் வைத்து ஏன் வடிகட்டக் கூடாது என்பதாகும்! மத்திய அமைச்சரவை கொள்கை ரீதியாக எடுத்த முடிவை கேள்விக் குள்ளாக்குகிறது உச்ச நீதிமன்றம்.

உயர்கல்வி நிறுவனங்களில் தற்போது - தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு மட்டுமே இடஒதுக் கீடு இருக்கிறது. ஏனைய பொதுப் போட்டிகளில் வசதிப் படைத்த பிற்படுத்தப்பட்டவர்கள் (கிரிமிலேயர்) அதிக அளவில் இடம் பிடித்துள்ளார்கள் என்பதற்கு, நீதிமன்றம் ஏதாவது புள்ளி விவரம் வைத்திருக்கிறதா?

பிற்படுத்தப்பட்டோர் எவரும் நுழையவே முடியாத ‘அக்கிரகாரங் களாக’வே உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் ‘வடிகட்டி’ எடுக்கக்கூடிய ‘கிரிமிலேயர்’ பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே! பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கு சரியான புள்ளி விவரம் இருக்கிறதா என்று கேட்கும் உச்சநீதி மன்றம், கிரிமிலேயர்கள் பிரிவினர் அதிகம் இடம் பிடிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் புள்ளி விவரம், தகவல்கள் ஏதுமில்லாமலே, ‘கிரிமிலேயரை’ கொண்டுவர வேண்டும் என்று கோருவது என்ன நியாயம்? ‘கிரிமிலேயர்’ பிரிவினர் திறந்த போட்டியில் - முன்னேறிய சாதியினரின் இடங்களையும் பறித்துக் கொள்கிறார்கள் என்று, ஒரு பார்ப்பனர் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் (‘இந்து’ ஏப்.4) புலம்பியுள்ளனார். ‘கிரிமிலேயர்’ எனும் பார்ப்பனக் கூப்பாட்டுக்குக் காரணம் பிற்படுத்தப்பட்டோர் நலன் அல்ல என்பது இப்போது புரிகிறதா!

உச்சநீதி மன்றம் தெரி வித்துள்ள வேறு சில கருத்துகள் பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிப்பதாகவே உள்ளது. “உலகில் எந்த ஒரு பகுதியிலாவது, தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உறுதி செய்வதற்குப் போட்டி போடும் கூட்டம் இருக்கிறதா? அல்லது - உன்னைவிட நான் மிகவும் பின்தங்கியவன் என்று உரிமை கோருகிறார்களா? என்று தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

“உன்னைவிட - பிறப்பில் நான் உயர்ந்தவன், பிறக்கும் போதே எனது உயர்வு நிலைநாட்டப்பட்டுவிட்டது. உயர் கல்வியைப் பெறுவதற்கு உன்னைவிட நானே தகுதியுள்ளவன்” என்று இறுமாப்போடு கூறிக் கொள்ளும் கூட்டம் உலகில் வேறு எங்கேயாவது உண்டா? இந்தக் கூற்றுக்கு நீதிமன்றத்தின் பாதுகாப்பும் உண்டு என்று நீதி வழங்கக்கூடிய நீதிபதிகள் உலகில் எந்த நாட்டிலாவது இருப்பார்களா என்ற கேள்வியைத்தான் நாம் இந்த நீதிபதிகளை நோக்கி எழுப்ப வேண்டியிருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான வரையறையையும், அவர்களுக்கு 27 சதவீத அளவிலான இடஒதுக்கீடு வழங்க லாம் என்பதையும் மண்டல் பரிந்தரை வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்’ ஏற்றுக் கொண்டப் பிறகு, 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், அதையே இப்போது கேள்விக்குள்ளாக்குகிறது!

இந்த நிலையில் தமிழ்நாடு மட்டுமே இது ‘பெரியார் மண்’ என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது! - தமிழகம் காட்டிய வழியில் ஆந்திராவும் முழு அடைப்பு செய்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். மார்ச் 29 ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன், 31 ஆம் தேதி முழு அடைப்பு நடத்தி, உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு தமிழகம் பதிலடி கொடுத்திருக்கிறது. உடனடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக முதல்வரையும் அனைத்துக் கட்சியினரையும் ஒடுக்கப்பட்ட மக்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் - சி.என்.என். தொலைக்காட்சியின் ஒரு செய்தியாளர் - ‘தமிழ்நாட்டிலிருந்து இன்னும் கருத்துகள் வரவில்லை. ஆனாலும் ஆபத்து வந்துவிட்டதற்காக புலி கண்ணீர் சிந்தாது’ என்று அழகாகக் கூறினார். ஆம்! புலியின் உறுமல், தமிழ்நாடு முழுவதும் 31 ஆம் தேதி எதிரொலித்தது.

அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் - தகுதியின் அடையாளங்களாம். திறமைகளின் மய்யங்களாம். எனவே, அங்கே இடஒதுக்கீடு வரக்கூடாது என்று ‘இந்து’ ஏடு (ஏப்.3) தலையங்கம் தீட்டி தனது பார்ப்பன புத்தியை காட்டிவிட்டது. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எல்லோருமே தகுதியற்றவர்கள் என்று, அவமானப்படுத்துகிறார்கள். இந்த உயர்க் கல்வி நிறுவனங்களில் அரசு செலவில் கல்வி பயின்ற “தகுதி திறமையானவர்கள்” வெளிநாட்டுக்கு சேவை செய்ய ஓடுகிறார்கள். இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு 88,000 கோடி அன்னியச் செலாவணி இழப்பு ஏற்படுவதாக என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பார்ப்பனர்கள் ஆதிக்கம் எங்கே இருக்கிறது என்று பேசுவோர் இப்போதாவது கண் திறந்து பார்க்கட்டும்!

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தங்களின் உயர் கல்வி ஆதிக்கத்தை அவ்வளவு எளிதில் விட்டுத்தர மாட்டார்கள். ஒடுக்கப்பட்டோர் போராட்டம் மேலும் தீவிரமாக வேண்டும். திறக்கப்படாத கதவுகளை உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com