Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2007

ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (4)
ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு செய்யத் தவறியது யார்?

பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறை இயக்குநர் எம்.கே.நாராயணன் - தமிழ்நாட்டில், விடுதலைப்புலிகள் ஊடுருவி விட்டதைப் போல், ஒரு பிரச்சாரத்தை உருவாக்கி வருவதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டினோம். அலுமினிய குண்டு, சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் ‘பால்ஸ்’ போன்ற உதிரி பாகங்களைக் கொண்டு எவ்வளவோ பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக இந்தத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எல் லோருமே - ஏதோ விடுதலைப்புலிகளின் ஆயுதத் தயாரிப்புக்காகவே தயாரித்து, கடல் வழியாகக் கடத்தி வருவதுபோல், ஒரு அச்ச உணர்வு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பம்பாயைச் சார்ந்த ஒரு உற்பத்தியாளரை தமிழக உளவுத் துறை கைது செய்தது. “அலுமினிய குண்டுகள் தயாரிப்போர் எல்லோருமே விடுதலைப்புலிகளுக்கு ஆயுதத் தயாரிப்புக்காகவே உதவுகிறார்கள் என்று உளவுத் துறை கூறுவது உண்மை யல்ல; கடந்த பல ஆண்டுகாலமாகவே இவர் இந்தத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்” என்று கைதானவர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம், அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னணி பற்றி, உளவுத்துறை எந்தத் தகவலையும் வெளி யிடாததை ‘தினமணி’ நாளேடு ஆய்வுக் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது (மார்ச் 25, திருச்சி பதிப்பு) கைதான அனைவரையும் ஒரே வழக்கின் கீழ் எப்படி இணைக்கலாம் என்று உளவுத்துறை திட்டமிடுவதே காரணம் என்று, அந்த ஏடு எழுதியுள்ளது. பொய் வழக்குகளே புனையப்படுகின்றன என்ற சந்தேகமே ஏற்படுகிறது.

‘டெகல்கா’ ஆங்கில வார ஏட்டில் அதன் செய்தியாளர் வினோஜ்குமார் எழுதியுள்ள கட்டுரை ஒன்று (ஜுன் 30, 2006) எம்.கே.நாராயணன் பற்றிய கருத்துகளை முன் வைத்துள்ளது. எம்.கே. நாராயணன், விடுதலைபுலிகள் இயக்கத்தைக் கடுமையாக எதிர்ப்பவர். அவரது செயல்பாடுகளில் உள்ளீடாகவே புலிகள் எதிர்ப்பே இருக்கும் என்று அக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. “ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் அல்ல; ஈழத் தமிழர் பிரச்னைக்கு இறுதியான தீர்வு உருவாக வேண்டுமானால், அதற்கு பல்வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்றால்தான் இயலும்” என்பதே எம்.கே.நாராயணன் கருத்து என்பதையும் அக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. ஈழத்தில் - சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் தான். போர் நிறுத்த ஒப்பந்தம், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கும் இடையே தான் உருவானது. இலங்கை அரசே தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்று ஏற்றுக் கொண்ட பிறகும்கூட எம்.கே. நாராயணன் - விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே தமிழர்களின் ஒரே பிரதிநிதியல்ல என்று கூறுவது அவரது விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கண் ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது.

2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இணையதளம் ஒன்றில், எம்.கே.நாரா யணன் எழுதிய கட்டுரையில், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கு மிடையே உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தையே எதிர்த்தார். தனது மேலாண்மை உறுதிப்படுத்தும் நோக்கத் துடனே விடுதலைப்புலிகள் இந்த உடன் பாட்டை ஏற்றுள்ளனர் என்று எம்.கே. நாராயணன் அதில் எழுதியிருந்தார். “விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் நார்வே தூதர்கள் ஈடுபட வில்லை. விடுதலைப்புலிகளின் தற் கொலைப் படையான கரும்புலிப்படையை கலைத்துவிட வேண்டும் என்று அதிபர் சந்திரிகா வலியுறுத்திய நிபந்தனையை புலிகள் நிராகரித்துவிட்டார்கள். அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாகவே செயல்படப் போகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று” என்று எம்.கே.நாரா யணன் அக்கட்டுரையில் விஷம் கக்கி இருந்தார்.

சிறீலங்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதற்கும், விடுதலைப்புலிகளின் “வன்முறை” நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும், எத்தகைய வழி முறைகளைப் பின்பற்றலாம் என்பது பற்றி இந்தியா மிகவும் கவலையுடன் பரிசீலிக்க வேண்டும்” என்று அந்தக் கட்டுரையை அவர் முடித்திருந்தார். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும்கூட, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும் என்று எழுதும் அளவுக்கு, எம்.கே.நாராயணன், விடுதலைப்புலிகளின் மீதான பகைமை கொண்டுள்ள அதிகாரி. மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிற ஆண்டறிக்கையில் விடுதலைப்புலிகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம் பெறுவது இல்லை. எம்.கே.நாராயணன், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு, 2004-2005 ஆம் ஆண்டுக்கான உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், “விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆபத்தானதாகும்” என்ற குறிப்பு சேர்க்கப்பட்டது. தமிழ் ஈழத்தில் சுனாமி பேரழிவு உருவான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர் வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுடன் உள்ள பகையை ஒதுக்கி, விடுதலைப் புலிகள், மனிதாபிமான அரசுடன் இணைந்து புனர்வாழ்வுப் பணி களில் செயல்பட நேசக்கரம் நீட்டியபோது, அதைக் குலைக்கச் செய்வதில், இந்திய உளவுத் துறைக்கு பெரும் பங்கு உண்டு என்று, ‘வின்’ தொலைக்காட்சியில் செய்தி விமர்சனம் வழங்கி வரும் டி.எஸ்.எஸ்.மணி ‘டெகல்கா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார்.

‘டெகல்கா’வின் இணையதளம் வெளியிட்டுள்ள மற்றொரு கட்டுரையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களிலிருந்து இலங்கை ராணுவத்துக்கு உதவும் தமிழ்க் குழுக் களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள். அதற்காக நல்ல தொகை மாத ஊதியமாக அவர்களுக்கு தரப்படுகிறது. என்று இந்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை, ‘டெகல்கா’ சுட்டிக் காட்டியுள்ளது.

“இப்படி ஆட்கள் தேர்வு நடத்தியது, ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு தெரியும். ‘ஈ.என்.டி.எல்.எப்.’ என்ற இலங்கை அரசு ஆதரவு தமிழ்க் குழுவின் தலைவரான பரந்தன்ராஜன் என்பவர் தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலிருந்து, கருணா குழுவுக்காக ஆட்களை தேர்வு செய்து வருகிறார்” என்றும் அக்கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.

1987 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய ராணுவம் இருந்த போது - ‘ரா’ உளவு நிறுவன அதிகாரிகள் பரந்தன்ராஜன் தலைமையில் உருவாக் கியதுதான் ‘ஈ.என்.டி.எல்.எப்.’ என்ற குழுவாகும். இந்தியாவின் பினாமியாக செயல்பட்டது இந்தக் குழு. சென்னை யிலும், பெங்களூரிலும் தங்கி செயல்படும் பரந்தன் ராஜன், அண்மையில் விடுதலை புலிகளுக்கு எதிராக செயல்படும் கருணா குழுவோடு இணைந்துள்ளார். ‘தமிழ் ஈழ அய்க்கிய விடுதலை முன்னணி’ என்ற அரசியல் பிரிவையும் அவர் தொடங்கி யுள்ளார். இவை அனைத்தும் ‘ரா’ உளவு நிறுவனத்தின் ஏற்பாடாகவே இருக்கலாம் என்று, ‘டெகல்கா’வின் அந்தக் கட்டுரை கூறுகிறது.

‘வழக்கத்துக்கு விரோதமாக ராஜன் 1990 ஆம் ஆண்டிலிருந்து நீண்ட காலமாக இந்தியாவில் தங்கி சுதந்தரமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறார். அவர் ‘ரா’வின் ஏஜென்ட் என்பதற்கு, இது அசைக்க முடியாத ஆதாரம்; விடுதலைப் புலிகளை எதிர்க்கும் சக்திகளை ஒருங் கிணைக்கும் தளமாக ‘ஈ.என்.டி.எல்.எப்’வை ‘ரா’ உளவு நிறுவனம் பயன்படுத்தி வருகிறது என்றும் அக்கட்டுரை கூறுகிறது. விடுதலைப்புலிகள் மட்டுமே ஈழத் தமிழர் பிரதிநிதிகள் அல்ல என்று எம்.கே. நாராயணன்கள் வலியுறுத்துவதற்கு காரணமே, இதுதான். இத்தகைய பினாமி துரோகக் குழுக்களை பேச்சு வார்த்தை களில் பங்கெடுக்கச் செய்து தமிழர்களின் பிரச்சினையைக் குழப்புவதிலேயே இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஈழத் தமிழ்ப் போராளிகளை தமிழ்நாட்டிலோ, இந்தியாவின் வேறு மாநிலங்களிலோ அனுமதிக்க முடியாது என்று ஒருபுறம் கூறிக் கொண்டு, மறுபுறம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்படும் குழுக் களை உளவு நிறுவனங்கள், சுதந்திரமாக செயல்பட அனுமதித்துவரும், ‘இரட்டை வேடத்தை’ தமிழ்நாட்டு மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவற்றை எல்லாம் நன்றாக அறிந்து வைத்திருக்கும் அதிகார அமைப்பில் உள்ளவர்தான் எம்.கே. நாராயணன்.

1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர் ‘பாண்டிபசாரில்’ இரவு 9.45 மணிக்கு, ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஈழ விடுதலைக்கான போராளிக் குழுக்கள் எதுவுமே வளர்ச்சிப் பெறாத காலம். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பிரபாகரன், சிவக்குமார் ஆகியோரும், புளோட் அமைப்பைச் சார்ந்த உமாமகேசு வரனும், நேருக்கு நேர் சந்தித்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். உமாமகேசுவரன் காயமடைந்தார். பிரபா கரனும், சிவக்குமாரும் கைது செய்யப் பட்டனர். அடுத்த சில நாட்களில் உமா மகேசுவரனும் கைது செய்யப்பட்டார். தமிழ் நாட்டில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவின் பேரில் அன்றைய காவல்துறை தலைமை இயக்குநர் மோகன்தாஸ் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது இந்திய உளவுத் துறையில் கூடுதல் இயக்குனராக இருந்தவர் எம்.கே.நாராயணன்.

சென்னை யில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே டெல்லியி லிருந்து சென்னைக்கு பறந்து வந்தார் எம்.கே.நாராயணன். காவல்துறை இயக்குனர் மோகன்தாசை சந்தித்து - பிரபாகரன், உமாமகேசுவரன் மீது நட வடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டா தீர்கள்; நடவடிக்கைகளைத் தள்ளிப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். பிறகு முதலமைச்சர் எம்.ஜி.ஆரையும் சந்தித்து, இதையே வலியுறுத்தினார். ஆனால் முதல்வர் எம்.ஜி.ஆரோ, இது எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை. இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று நேருக்கு நேராக கண்டிப்பாகக் கூறிவிட்டார். ராஜிவ் கொலைப் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணைய விசாரணையின் போது காவல்துறை இயக்குநர் மோகன்தாஸ் அளித்த வாக்குமூலத்தில் (2.1.1996) இதைப் பதிவு செய்துள்ளார்.

பிரபாகரனும், உமாமகேசுவரனும் சென்னையில் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், சிறீலங்காவின் காவல்துறை தலைமை அதிகாரி (அய்.ஜி.) ருத்ரா ராஜசிங்கம் உடனடியாக சென்னைக்கு பறந்து வந்தார். மத்திய அரசின் அனுமதியின்றி, இலங் கைக் காவல்துறை அதிகாரி தமிழ்நாடு வந்திருக்க முடியாது. பிரபாகரன், உமா மகேசுவரனைப் பிடித்துக் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது.

உளவுத் துறை அதிகாரி எம்.கே. நாராயணன், தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டிய அவசியமென்ன? உடனடியாக - இலங்கை காவல்துறை தலைமை அதிகாரி, ஏன், தமிழகத்துக்கு வர வேண்டும்? இந்த நிகழ்வுகளுக்கு இடையே தொடர்புகள் உண்டு. கைது செய்யப்பட்ட பிரபாகரன், உமாமகேசுவரன் உட்பட நான்கு ஈழப் போராளிகளையும், தமிழ்நாட்டில் காவலில் வைக்காமல், சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்க, உளவுத்துறை திட்டமிட்டதே இதற்குக் காரணம். இப்படி ஒரு சதி நடக்கிறது என்ற நிலையில், அன்று காமராசர் காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த பழ. நெடுமாறன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி யது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிரதி நிதியை அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை மரியாதையுடன் நடத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார். இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டமில்லை என்று காவல்துறை இயக்குநர் மோகன்தாஸ் அறிவித்தார். எதிர்கட்சியிலிருந்த கலைஞரும், போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் பேசிய தோடு, உடனடியாக பிரதமர் இந்திரா காந்திக்கு தனது தூதர் ஒருவரை அனுப்பி, உளவுத் துறையின் நாடு கடத்தும் முயற்சிகளை நிறுத்தக் கூறினார். உளவுத் துறையின் சதித் திட்டம் தோல்வியில் முடிந்தது.

எம்.கே.நாராயணன் தொடர்பான மற்றொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் கொலை செய்யப்பட்டார். அப்போது இறந்து போன ஹரிபாபுவின் கேமிராவுக்குள் சிக்கிய புகைப்படம் தான், கொலை காரர்களை அடையாளம் காட்டும் ஒரே ஆதாரமாக இருந்தது என்று சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியது. ஆனால், சம்பவம் நடந்த அடுத்த நாளே - அதாவது 22.5.91-ல் அன்றைய உளவுத் துறை இயக்குனராக இருந்த நாராயணன், பிரதமர் அலுவலகத்தில் சில வீடியோ காட்சிகளை ஆவணமாக சமர்ப்பித்துள் ளார். ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தின் வீடியோ படத்தை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது என்றும், ராஜீவுக்கு மாலை அணிவித்த அந்தப் பெண் யார் என்பதை கண்டறிய முயற்சிக்கப்பட்டது என்றும், உளவுத் துறை குறிப்பை எழுதியிருந்தது. ஆனால், ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அந்த வீடியோ படத்தை உளவுத் துறை சமர்ப் பிக்கவே இல்லை. சிறப்புப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டி.ஆர். கார்த்தி கேயன், ராஜீவ் கொலையில் வெளிநாட்டு சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வர்மா ஆணையத்தின் முன் அளித்த வாக்கு மூலத்தில் இதைப் பதிவு செய்துள்ளார். (வர்மா ஆணையம் அறிக்கை 11வது அத்தியாயம் - 53வது பக்கம்)

உளவுத் துறை இயக்குனராக இருந்த எம்.கே.நாராயணன், ராஜீவ் பாதுகாப்புப் பிரச்சினையில் தனது கடமையை ஒழுங்காக செய்யவில்லை என்று வர்மா ஆணையம் சுட்டிக் காட்டியது. அப்போது ராஜீவ்காந்தி, இந்தியாவின் பிரதமர் அல்ல. எதிர்க்கட்சித் தலைவர். தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வருகிறார். அன்று பிரதமர் பதவியில் இருந்தவர் - சந்திரசேகர். “உளவுத் துறை இயக்குனராக இருந்த நாராயணன், ராஜீவுக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்தார். ஆனால் வெளியில் சொல்ல முடியாத சில காரணங்களால், அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. எனவே ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இதுவரை அவர் மவுனம் சாதிக்கிறார்” என்று வர்மா ஆணையம் எம்.கே.நாராயணன் பற்றி குறிப்பிட்டது.

அதுமட்டுமல்ல =- “ஆணையம் இப்படிக் கருதுவது உண்மை என்றால், உயர்ந்த பதவியில் உள்ள ஒருவருக்கு அத்தகைய இயலாமை ஏன் ஏற்பட்டது. இது மோசமான கவலைக்குரிய பிரச்சினை. இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். அதை அகற்ற வேண்டும். அதுவே ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது” - என்றும் வர்மா ஆணையம் இடித்துக் காட்டியது.

ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரப்படாமல் தடுத்தது யார்? அந்த சக்திகளுக்கு எம்.கே. நாராயணன் உடந்தையாக இருந்தது ஏன்? அந்த ரகசியங்களை, எம்.கே.நாராயணன் வெளியிடாதது ஏன்? ஸ்ரீபெரும்புதூர் கூட்டத் தின் ‘வீடியோ’வை உளவுத் துறை எடுத் திருந்தும், அதை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்காமல் போனதற்கு பின்னணி என்ன? இவை இன்னும் விடை தெரியாத கேள்விகள்.

வர்மா ஆணையத்தின் முன் இப்படி சந்தேகக் கூண்டில் நிறுத்தப்பட்டவர்தான் எம்.கே.நாராயணன். அவர் தான், இப்போது, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர். அதுவும் ராஜீவ் துணைவியார் சோனியாவின் தலைமையில் செயல்படும் கூட்டணி ஆட்சியில்! அதே நாராயணன் தான் இப்போது விடுதலைப்புலிகளின் தளமாக தமிழகம் மாறிவிட்டதைப்போல் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, திரைமறைவில் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்.

ஆட்சிகள் மாறினாலும் - இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சியின் அதிகாரங் களை ஆட்டிப் படைக்கும் சக்திகள் தங்களது பார்ப்பன மேலாதிக்கப் பார்வை யுடனே திட்டங்களைத் தீட்டி செயல் படுத்துகின்றன. உளவுத்துறை நடத்திய திரைமறைவு திட்டங்களை ஏராளமாக எழுதிக் கொண்டே போகலாம்.

ஆனாலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் உண்மையான ஈடுபாட்டோடு களத்தில் நிற்கும் ஒரு இயக்கம் - இந்த உளவுத் துறைகளால் களங்கப்படுத்தும் அவலங்களை தமிழர்களுக்கு உணர்த்திட வேண்டும் என்ற நோக்கத்துடனே இத் தொடரை எழுதினோம். தமிழர்கள் இந்த சூழ்ச்சிகளை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து இத் தொடரை நிறைவு செய்கிறோம்

- விடுதலை இராசேந்திரன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com