Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2007

ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (4)
மாலத் தீவில் குழப்பம் செய்த ‘ரா’

தாயகத்தின் விடுதலைக்காக போராட முன் வந்துள்ள விடுதலை இயக்கங்களின் தலைவர்களிடம், அரசிடம் ஊதியம் பெறும் அதிகாரிகள், அதிகாரத் திமிருடன், உதிர்த்த வார்த்தைகளே இவர்களின் பார்ப்பனிய அதிகாரத்துவத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. திம்பு பேச்சுவார்த்தையில் போராளிகளை பங்கேற்கச்செய்வதில் பெரும் வெற்றி பெற்றுவிட்டதாகவும், இது மகத்தான சாதனை என்றும் உளவுத் துறை அதிகார வர்க்கம் பீற்றிக் கொண்டது. ஆனால் நடந்தது என்ன? திம்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே (1985-ஆகஸ்டு) ஜெயவர்த்தனா ஆட்சி, தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதலைத் தீவிரப் படுத்தியதோடு, போராளிகளின் மறைவிடங்களிலும், தாக்குதல்களை தொடுத்தது. செய்திகளை அறிந்த போராளிகள், பேச்சு வார்த்தையை பாதியிலேயே முறித்துக் கொண்டு வெளியேறினர்.

வெளியுறவு மற்றும் உளவுத் துறை அதிகார வர்க்கத்தின் முயற்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தன. திம்புப் பேச்சு தோல்வி அடைந்த பிறகும், அதிகார வர்க்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. திம்பு பேச்சு வார்த்தையின் போது போராளிகளுடன் சென்னையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துகளைத் தெரிவித்து வந்தார் பாலசிங்கம்! பேச்சு வார்த்தை முறிந்ததற்கு பாலசிங்கம் தான் காரணம் என்று உளவுத்துறை முடிவு செய்தது. பேச்சு வார்த்தை நடக்கும் போதே - தமிழர்கள் மீது ஜெயவர்த்தனா, தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதைப் பற்றியோ, உருப்படியான திட்டங்களை ஜெயவர்த்தனா ஆட்சி முன் வைக்காதது பற்றியோ கவலைப்படாத உளவுத் துறை, போராளிகளை மிரட்டி, பணிய வைப்பதில் மட்டும் குறியாக இருந்தது. பாலசிங்கம் - திம்புவில் தொடர்பு கொண்டு பேசியதை பதிவு செய்து கண்காணித்து வந்த உளவுத் துறை, பாலசிங்கத்தின் மீது கோபம் கொண்டது. (திம்புவில் தொடர்பு கொண்டு பேசும் இணைப்புகளை உருவாக்கித் தந்ததே உளவுத் துறைதான்) கோபமடைந்த உளவுத் துறை பாலசிங்கத்தை இந்தியாவிலிருந்து நாடு கடத்த உத்தரவிட்டது.

1985 ஆக. 23 ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரில் விடியற்காலை யில் அன்டன் பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டில், அவரை கைது செய்த காவல்துறை அடுத்த நாளே விமானத்தில் ஏற்றி லண்டனுக்கு அனுப்பியது. ஏற்கனவே லண்டனுக்குப் போய்விட்ட ‘டெலோ’ ஆலோசகர்கள் சந்திரகாசன், நடேசன் சத்தியேந்திரா ஆகியோருக்கும் நாடு கடத்தல் தமிழிகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உளவு நிறுவனத்தின் கைபொம்மையாகி, ராஜீவ் ஆட்சி எடுத்த இந்த விபரீத முடிவு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளை உருவாக்கியது. தமிழ்நாடு கொந்தளித்து எழுந்தது. இதனால் அடுத்த ஆறு வாரங்களில் நாடு கடத்தல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜீவ் காந்தி மேற்கொண்ட ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியிலேயே முடிந் திருக்கின்றன. உளவுத் துறையும், அதிகார வர்க்கமும் மேற்கொண்ட ‘திணிப்பு’ நடவடிக்கைகள் வெற்றி பெறாமலே போனது. ஈழத் தமிழ்ப் போராளி குழுக்களுக்கு, இந்தியாவில் - ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதற்கான காரணமே, இலங்கை அரசை மிரட்டி, இந்தியாவின் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வருவதுதான் என்பதை, ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம்.

உளவுத் துறையின் செயல்பாடுகள், அந்த எல்லை யோடு மட்டும் நின்றுவிடவில்லை. போராளிக் குழுக் களை, வேறு பிரச்சினைகளுக்குப் பயன்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் உண்டு.

தென்கிழக்கு ஆசியாவில், காஷ்மீர், சிக்கிம் நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வந்த பிறகு, நேபாளம், பூட்டான் நாடுகளும், இந்திய ராணுவத் தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன. இலங்கையையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கிய நிலையில் இலங்கைக்கு அருகிலே உள்ள மாலத்தீவு மட்டும் ஒதுங்கியே இருந்தது. மாலத் தீவிலே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருபவர் அப்துல் ஹயூம். இந்தியாவுடன் அதிக நெருக்கமில்லாத அப்துல்ஹயூம், பாகிஸ்தானோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். மாலத்தீவையும், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ‘ரா’ உளவு நிறுவனம் திட்டம் தீட்டியது. அதற்கான ரகசிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அப்துல் ஹயூம், ஏற்கனவே ஆட்சியிலிருந்தவர்களைக் கவிழ்த்து விட்டு அதிகாரத்தைப் பிடித்தவர். அவரால், ஆட்சியி லிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் சிங்கப்பூரிலும், மற்றொருவர் கொழும்பிலும் தஞ்சமடைந் திருந்தனர். இவர்களைப் பயன்படுத்தி மாலத் தீவில் கலகம் ஒன்றை உருவாக்கி, ஆட்சியைக் கவிழ்க்க திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு - ஈழப் போராளி குழு ஒன்றையே பயன்படுத்த இந்தியாவின் உளவு நிறுவனம் ‘ரா’ முடிவு செய்தது.

இந்தியாவிடம் நேரடியாகப் பயிற்சிப் பெற்ற போராளிக் குழுக்களைப் பயன்படுத்தினால், பின்னணியில் இந்தியா நிற்பது புரிந்து விடும் என்பதால், இந்தியாவின் பயிற்சித் திட்டத்திலிருந்து ஒதுங்கி நின்ற உமா மகேசுவரனின் தலைமையில் செயல்பட்ட ‘புளோட்’ என்ற போராளிக் குழுவைப் பயன்படுத்த முடிவு செய்தார்கள். முதலில் - கொழும்புக்கும், சிங்கப்பூருக்கும் சென்று, அப்துல் ஹயூமின் அரசியல் எதிரிகளை சந்தித்துப் பேசி, ஒப்புதல் பெற்றது ‘ரா’ நிறுவனம்.

வவுனியாவில் செட்டிகுளம் என்ற பகுதியில் தங்கி யிருந்தார் உமா மகேசுவரன். அப்போது விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், உமாமகேசுவரன் அமைப்புக்கு மிடையே மோதல்கள் நடந்து கொண்டிருந்தன. 1987 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 22 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் விசேட விமானம் வவுனியா வந்து, உமா மகேசுவரனை சென்னைக்கு அழைத்து வந்தது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் உமாமகேசுவரன் - ரா அதிகாரிகள் ரகசிய சந்திப்பு நடந்தது. மாலத் தீவுப் பிரச்சினையை வெளிப்படையாக சொல்லாமல், தாங்கள் கூறும் பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், அதற்குரிய பணம், ஆயுதம் வழங்குவதாகவும் ‘ரா’ பேரம் பேசியது. புலிகளுக்கு எதிராகவே, தம்மை ‘ரா’ நிறுவனம் பயன்படுத்துவதாக உமாமகேசுவரன் கருதி சம்மதம் தெரிவித்தார். ஒரு தொகை முன் பணமாக வழங்கப் பட்டது. தாக்குதல் நடத்தப்படும் இடம், நாள் ஆகியவற்றை பிறகு தெரிவிப்பதாக, ‘ரா’ அதிகாரிகள் கூறிவிட்டனர். மீண்டும் ராணுவ விமானத்திலேயே உமாமகேசுவரன் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ‘ரா’ நிறுவனம் தந்த பணத்தைக் கொண்டு கற்பிட்டி என்ற பகுதியில் ‘மாசிக்கருவாடு’ (இது இலங்கையில் பிரபலமான உணவு) தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றையும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில், மிகப் பெரிய கோழிப் பண்ணை ஒன்றையும் ஏற்படத்த, உமாமகேசுவரன் முதலீடு செய்து, ‘ரா’வின் அழைப்புக்காகக் காத்திருந்தார்.

இந்த நிலையில் கோழி இறைச்சி ஏற்றுமதி வியாபாரி என்று கூறிக் கொண்டு, தனது பெயர் அப்துல்லா என்று கூறிக் கொண்டு, ஒருவர், உமாமகேசுவரனை சந்தித்தார். உமாமகேசுவரனும், ஒரு கோழி வியாபாரி என்ற முறையிலேயே பேசினார். சந்திக்க வந்தவர் - “உங்களை எனக்குத் தெரியும்; நீங்கள்தான் புளோட் தலைவர் உமாமகேசுவரன்; நான் மாலத் தீவின் குடிமகன்; மாலத் தீவில் அப்துல் ஹயூம், இஸ்லாமிய நெறிகளுக்கு எதிராக ஆட்சி நடத்துகிறார். மக்களுக்கு உரிமை இல்லை. அவரது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். ‘ரா’ அதிகாரிகள் தான், என்னிடம் உங்களை சந்திக்கச் சொன்னார்கள்” என்று கூறியவுடன், உமாமகேசுவரன் அதிர்ச்சியடைந்தார். “மாலத் தீவு பற்றி என்னிடம் ‘ரா’ அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லையே; அங்கே ஆட்சிக் கவிழ்ப்புக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். “உங்களிடம் இது பற்றி பேசியிருப்பதாக ‘ரா’ அதிகாரிகள் என்னிடம் கூறினார்களே, உங்களிடம் ஏதும் கூறவில்லையா? அவர்கள் உங்களிடம் திட்டங்களை விரிவாகக் கூறுவார்கள். நீங்கள் அவர்களுடன் பேசி, உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். நம்முடைய சந்திப்பின் நினைவாக, இந்தப் பரிசை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி, புத்தம் புதிய ‘மெஸ்டா’ கார் ஒன்றை பரிசாக வழங்கிவிட்டு அப்துல்லா விடைபெற்றார். இடையில் ஒருவார காலம் ஓடியது. மற்றொரு ‘ரா’ அதிகாரி, உமாமகேசுவரனை சந்தித்தார். கேரளாவின் துறைமுக நகரமான கொச்சினில் அடுத்து சந்திக்க வேண்டும்; இது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறிச் சென்று விட்டார்.

இந்த முறை =-இந்திய ராணுவ விமானத்தில் உமாமகேசுவரன் செல்லவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து திருவனந்தபுரம் வந்தார். ‘ரா’ அதிகாரிகள் அவரை அங்கிருந்து காரில் கொச்சினுக்கு அழைத்துச் சென்றனர். கொச்சின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் இந்த முக்கிய சந்திப்பு 1987 அக்டோபர் 14 ஆம் தேதி நடந்தது. மாலத் தீவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று ‘ரா’ அதிகாரிகளிடம் உமாமகேசுவரன் கேட்டார். அதற்கு ‘ரா’ அதிகாரிகள் இவ்வாறு பதிலளித்தனர்:

“இந்தியா மிகப் பெரிய நாடு; ராஜீவ் ஆசியாவிலேயே பெரும் தலைவராக வளர்ந்து வருகிறார். ஆனால், இது ஜெயவர்த்தனாவுக்கோ, சிங்கள அரசியல்வாதி களுக்கோ தெரியவில்லை. நாங்கள் அவர்களுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு பெற்று, எல்லா இடங்களிலும் ஊடுருவி விட்டார்கள். இந்த நிலையில் ஜெயவர்த்தனா - ஜெ.வி.பி. - விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் பாடம் கற்பிக்க விரும்புகிறோம்; அதற்கு ஒரு தளம் வேண்டும்; எனவே தான் மாலத் தீவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்; ஏற்கனவே, ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்ட தற்போதைய அதிபரின் அரசியல் எதிரிகளை முன்னிறுத்தி இதை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டால், மாலத் தீவிலுள்ள இரண்டு தீவுகளை நீங்கள் தளமாகப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்கிறோம். அந்தத் தீவிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் நீங்களே எடுத்துக் கொள்ளலாம்” என்று உமாமகேசு வரனுக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். மூன்று மணி நேரப் பேச்சு வார்த்தைக்குப் பின்பு உமாமகேசுவரன் மாலத் தீவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு சம்மதித்தார். “பாலத்தீன மக்கள் விடுதலை முன்னணியிடம் பயிற்சி பெற்றவர்கள் என்னிடம் இருக்கிறார்கள்; எனக்குத் தேவை ஆயுதமும், பணமும் தான்” என்று உமாமகேசுவரன் கூறினார்.

“அது பிரச்சினையல்ல, கொழும்பில், உங்களுக்கு முதல் கட்டமாக அப்துல்லா (அவரும் அப்போது உடனிருந்தார்) ஒரு கோடி ரூபாய் இலங்கைக் காசு தருவார். எல்லாம் முடிந்த பிறகு ரூ.10 கோடி இலங்கைக் காசு தருகிறோம். அடுத்த வாரம் ஆயுதங்கள் உங்கள் கைகளில் கிடைக்கும்” என்று ‘ரா’ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுதங்களை எங்கே வைப்பீர்கள் என்ற கேள்வியை ‘ரா’ அதிகாரிகள் கேட்டனர். மன்னார் மாவட்டத்தில் எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்துக் கொள்கிறோம் என்றார், உமாமகேசுவரன். விடுதலைப் புலிகள் உங்கள் பகுதியில் ஊடுருவி, தாக்குதல் நடத்தினால் என்ன செய்வீர்கள் என்று ‘ரா’ அதிகாரிகள் கேட்டனர். சற்று நேரம் அவர்களே யோசித்துவிட்டு, “உங்கள் கட்டுப் பாட்டுப் பகுதிகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றாமல் இருக்க இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் அதைக் கொண்டு வந்து விடுகிறோம்” என்று கூறினர். அந்தப் பகுதி அப்போது அமைதிப் படையின் கட்டுப் பாட்டின் கீழ் வராமல் இருந்தது. அதன்படி கொச்சின் சந்திப்புக்குப் பிறகு, புளோட் முகாம்கள் இருந்த முள்ளி குளம், செட்டிகுளம், முருங்கன் ஆகிய பகுதிகள், புளோட் ஒப்புதலோடு இந்திய ‘அமைதி’ப்படையின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அப் பகுதிகளை இணைக்கும் முக்கிய தரை வழிப் பகுதிகளில் இந்திய இராணுவத் தடை அரண்கள் உருவாக்கப்பட்டன. மாலத் தீவு ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஆயுதங்களைப் பாதுகாத்து வைப்பதற் காகவே, தமிழ் ஈழ மண்ணில் ‘ரா’ உளவுத் துறை இந்த நடவடிக்கைகளில் இறங்கி யது. அதே நேரத்தில் - தமிழ்நாட்டில் மண்டபத்துக்கு அருகே உள்ள தீவு ஒன்றில் வைத்து ‘ரா’ - ‘புளோட்’டுக்கு ஆயுதங்கள் வழங்கியது. மண்டபத்துக்கு அருகே உள்ள ஒரு தீவிலேயே மூன்று பிரிவுகளுக்கு பயிற்சிகளும் தரப்பட்டன.

மாலத் தீவுக்குப் புறப்படுவதற்கான சமிக்ஞை கிடைத்தவுடன் மண்டபம் தீவிலிருந்து ஆயுதங்களும், ஆட்களும், தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வரப்பட்டனர். ‘அல் அகமத்’ என்ற போலிப் பெயர் ஒட்டப்பட்டிருந்த கப்பல் - 1988 நவம்பர் 2 ஆம் தேதி இரவு 11 மணிக்கு 72 பேருடனும் - ஆயுதங்களுடனும் புறப்பட்டது. இந்திய இலங்கை கடல் எல்லைகளைத் தாண்டி, சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் வரை, ‘ரா’வின் ஏற்பாட்டின்படி, இந்திய கப்பல் படை கப்பல்கள் பாதுகாப்பு தந்தன. சர்வதேச கடற்பரப்பில் வேறு ஒரு விசைப்படகு களுக்கு ஆட்களும், ஆயுதங்களும் மாற்றப் பட்டன. தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட கப்பல், மீண்டும் தூத்துக்குடி துறைமுகம் திரும்பியது.

தாக்குதல்காரர்கள் - அதிகாலை ஒரு மணிக்கு மாலத் தீவு கடல்பகுதியை சேர்ந்த போது - நல்ல காற்றும் மழையும் வீசியது. இதனால் திசை மாறியது கலகக் காரர்களின் படகு! அதிபர் மாளிகையைக் கைப்பற்றி, காவல் அரண்களை தாக்கி, அதிபரை கைது செய்வதே திட்டம். திசை மாறிப் போய்விட்டதால் திட்டமிட்டபடி இருளில் வந்து இறங்க முடியாமல், பொழுது விடிந்துவிட்டது. கொழும்பி லிருந்து - உமாமகேசுவரன் கொண் டிருந்த வானொலி தொடர்பு, காற்று மழை காரணமாக செயலிழந்தது. துப்பாக்கி யால் சுட்டு, அதிபர் மாளிகையை கலகக்காரர்கள் கைப்பற்றி விட்டார்கள். ஆனால், அதிபர் அங்கில்லை. அவர் வேறு ஒரு தீவுக்குப் போய் தங்கிவிட்டார்.

அடுத்து எதைத் தாக்குவது என்பதில் கலக்காரர்களிடையே குழப்பம். செய்தி யறிந்த மாலத் தீவு அதிபர் - தான் தங்கியிருந்த தீவிலிருந்தே, சர்வதேச உதவிகோரி, வானொலியில் வேண்டு கோள் விடுத்தார். அதிபரை கைது செய்யும் ‘ரா’வின் திட்டம் படு தோல்வியில் முடிந் தது. மாலத் தீவின் நட்பு நாடான பாகிஸ்தானோ, சீனாவோ, உத விக்கு படையை அனுப்பி, காப் பாற்றிவிட்டால், ‘ரா’ உளவு நிறுவனத்தின் சதி அம்பலமாகி விடும் என்ற நிலையில், இந்தியாவே முந்திக் கொண்டு, படையை அனுப்புவதே புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு ராஜிவ்காந்தி வந்தார். இந்திய விமானப் படைப் பிரிவு ஒன்றும், கப்பல்படைப் பிரிவு ஒன்றும் மாலத் தீவுக்கு உடனே அனுப்பப்பட்டது. இந்திய விமானப் படை விமானங்கள், தாக்கு தலுக்கு சென்றவர்களைக் கைது செய்து - அவர்கள், பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விடுவித்தது. கலவரக்காரர்களை மாலத் தீவுக்கு அனுப்பி வைக்கும்போது, அவர்களுக்கு பாதுகாப்பாக செயல்பட்ட அதே கப்பல் படை கப்பல்களே, அவர்களைக் கைது செய்து வந்தது, அது தான் வேடிக்கை.

நாடாளுமன்றத்திலே பேசிய பிரதமர் ராஜீவ், “நட்பு நாடு ஒன்றுக்கு உதவக் கூடிய நல்ல வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது” என்று பெருமையுடன் கூறிக் கொண்டார். இதற்குப் பின்னால் - இலங்கையுடன் மாலத் தீவுக்கு இருந்த வர்த்தகத் தொடர்புகள் குறைந்து இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்தன. மாலத் தீவின் மொத்த இறக்குமதிப் பொருள்களில் 65 சதவீதம் இலங்கையிலிருந்தே இறக்குமதி செய்யப் பட்டு வந்தன. மாலத் தீவிலிருந்து மொத்த ஏற்றுமதியில் 10 சதவீதம் இலங்கைக்குச் சென்றது. இந்தியாவுடனான மாலத் தீவு வர்த்தகம், ஒரு சதவீதம் கூட கிடையாது. இந்தியா மாலத் தீவுக்கு விமான, கப்பல் படை அனுப்பி யதைத் தொடர்ந்து நிலைமை தலை கீழானது. 1988-ல் 8.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப் புள்ள பொருள் களை கொழும்பு மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. திடீரென 1989-ல் 5.8 மில்லியன் அமெரிக்க டாலராக இது சரிந்தது. அது வரை இலங்கையுடன் மாலத் தீவு கொண்டிருந்த உறவிலும், மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்தியா வுடனான தனது உறவை மாலத் தீவு வலிமையாக்கிக் கொண்டது. இந்தியா மாலத்தீவுடன் உறவை வளர்த்துக் கொள்வதற்கான பல புதிய திட்டங்களை அனுமதித்தது.

ஆனாலும், மேலை நாட்டு ஊடகங்கள் - மாலத் தீவில் இந்தியாவின் தலையீடு பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன! “தெற்கு ஆசியாவின் போலீஸ்காரனாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திட்டமிட்டு நடத்திய சதியே இது” என்று எழுதின. வேறு இரண்டு கேள்விகளையும் மேலைநாட்டு ஊடகங்கள் முன் வைத்தன. கலகக்காரர்கள் இலங்கை இந்திய கடல் பகுதியாக கப்பலில் எப்படி வரமுடிந்தது? அந்தப் பகுதிகள், “இந்திய அமைதிப் படையின்” (அய்.பி.கே.எப்.) முழு கண் காணிப்பில் இருக்கும்போது - இந்திய அமைதிப்படைக்குத் தெரியாமல், கலவரக்காரர்கள் வந்தார்கள் என்பதை நம்ப முடியாது. அத்துடன், மாலத் தீவு அதிபர், உதவி கேட்டவுடனேயே இந்திய விமானப் படைகள், உடனடியாக அனுப்பப் பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் தொடர்பு இதில் உண்டு என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி இவை உறுதியாக்குகின்றன என்று மேலை நாட்டு ஊடகங்கள் எழுதின. தமிழ்நாட்டில் திண்டிவனம் அருகே பாறைகளைத் தகர்க்கும் வெடி மருந்துகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 16 பேர் இறந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உடனே பார்ப்பன ஜெயலலிதா, விடுதலைப்புலி களோடு இச்சம்பவத்தை தொடர்புபடுத்தி தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோருகிறார். ஈழப் போராளிகள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், ஈழத்தில் தமிழர்களுக்கு ஒரு தாயகம் அமைவது இந்தியாவுக்கே ஆபத்து என்றும் பார்ப்பன ஊடகங்கள் கூக்குரலிடு கின்றன! ஆனால், இந்தியாவின் உளவுத் துறையான ‘ரா’ என்ன செய்தது?

ஈழப் போராளிக் குழுவை வேறு ஒரு நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பயன் படுத்தியது. அதற்காக - தமிழ்நாட்டிலேயே வைத்து ஆயுதங்களும் பணமும் தரப்பட்டுள்ளது. இலங்கையில் ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நிறைவேற்றச்சென்ற இந்திய இராணுவம், தமிழ் ஈழத்தில் இந்த ஆயுதங்களைப் பதுக்கி வைப்பதற்கு பாதுகாப்பு அரண் அமைத்து தந்தது. ஆயுதங்களோடு கலகக்காரர் இந்திய இலங்கைக் கடல்வழியாகப் பயணம் செய்ய பாதுகாப்பு தந்ததோடு இந்தியக் கப்பலையும் கொடுத்து உதவியது.

கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தவுடன், நட்பு நாடகமாடி, உண்மைகள் அம்பலமாகாமல் தடுக்க, விரைந்து படையை அனுப்பியது. இப்படி தேசிய சுய நிர்ணய உரிமைக்காக போராடும் இயக்கங்களை தங்களது மேலாண்மை அரசியலுக்காக அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய் களாக உருட்டி, விளையாடியவைதான், இந்திய அரசும், அதன் உளவு நிறுவனங்களும்! அவர்கள்தான் சொந்த நாட்டின் விடுதலைக்குப் போராடும் போராளிகளை பயங்கரவாதி என்கிறார்கள்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com