Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2007

ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (3)
போராளிகளை மிரட்டிய உளவு நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் விடுதலைபுலிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதே தேச விரோதமாக - நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உளவுத் துறை மூலம் அறிக்கை தயாரித்தவர் எம்.கே. நாராயணன். உளவுத் துறையின் தலைவர் என்ற முறையில், அன்றைய பிரதமர் வி.பி. சிங் பார்வைக்கு இதைக் கொண்டு போயிருக்க வேண்டிய கடமை எம்.கே. நாராயணனுக்கு உண்டு. ஆனால், அதிகார மட்டத்தில் கமுக்கமாக வைக்கப்பட்டது அந்த அறிக்கை. மண்டல் குழு பரிந்துரை, ஈழத் தமிழர் பிரச்சினைகளில் - பார்ப்பன அதிகார வர்க்கத்தின் உணர்வுகளுக்கு எதிராக உறுதியோடு நின்றார் வி.பி.சிங் என்பதால் அவரது ஆட்சியை பார்ப்பன சக்திகள் திட்டமிட்டு கவிழ்த்தன. சந்திரசேகர் தலைமையில் பொம்மை ஆட்சி ஒன்றை உருவாக்கியவுடன், உளவுத் துறை தயாரித்து வி.பி.சிங்கிடம் மறைக்கப்பட்ட அறிக்கையை வைத்து, அதையே காரணமாக்கி, அன்று தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத் தில், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ராஜீவ் கொலைச் சம்பவம் நடந்தது, அதற்குப் பிறகுதான். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படாத காலத்திலேயே - அந்த இயக்கத்தினரோடு பேசுவதே ‘தேச விரோதம்’ என்ற கருத்தை உருவாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்கும் அதிகாரம் கொண்டவைகளாக உளவு நிறுவனங்கள் செயல்பட்டன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

வெளியுறவுத் துறையின் கொள்கைகளை நிர்ணயிப் பதில் வெளிநாட்டுத் துறை அமைச்சக அதிகார வர்க்க மும், உளவு நிறுவனங்களுமே, தீர்மானகரமான சக்தி களாக மாறி நிற்கின்றன. இந்திரா பிரதமராக இருந்த போது, அவர் பல்வேறு பிரச்சினைகளில் தன்னிச்சை யான முடிவுகளை எடுக்கும் பிரதமராக செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான சான்றுகள் உண்டு. பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆலோசனைகளை அவ்வப்போது ஏற்பவராக இருந்தாலும், முழுமையான கைப்பாவையாக அவர் மாறிடவில்லை என்ற முடிவுக்கே வர நேரிடுகிறது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதிய இந்திரா, அந்நாட்டை கூறு போட்டு, பங்களாதேஷ் நாட்டை உருவாக்கிட முடி வெடுத்து, அதற்கு இந்தியாவின் ராணுவ உதவியையும் வழங்கினார். அதுபோல இலங்கையையும், இந்திரா உடைத்து விடுவார் என்ற அச்சம் - அன்றைய அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு இருந்து வந்தது. இலங்கைப் பிரச்சினையில் சிங்களத் தலைவர்களைப் பற்றிய சரியான பார்வை, இந்திராவுக்கு இருந்தது என்று மறைந்த அன்டன் பாலசிங்கம் தனது ‘போரும் அமைதியும்’ நூலில் குறிப்பிடுகிறார். “இந்திரா தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால், அவர் இலங்கையை இரண்டாகப் பிரித்து விடுவார் என்று ஜெயவர்த்தனா என்னிடம் பலமுறை கூறியதுண்டு” என்று, இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஜெ.என்.தீட்சித் தனது ‘Assignment Coloumbo’ நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து, அரசியலின் ஆழம் புரியாத - ராஜீவ் காந்தி பிரதமராக வந்தார். பார்ப்பன அதிகார வட்டம் மகிழ்ச்சிக் கடலில் குதித்தது. ஆசியாவின் வலிமை மிக்க தலைவராக உயரவேண்டும் என்ற துடிப்பில் இருந்த ராஜீவுக்கு அதிகார வர்க்கம் தூபம் போட்டது. கடந்த காலத்தில் இந்திராவின் ஆட்சி யில் பின்பற்றப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கினால்தான் உடனடியான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று ராஜீவ் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டன. அதற்கு ராஜீவ் காந்தியும் பச்சைக்கொடி காட்டினார். அதன் காரணமாக இலங்கைப் பிரச்சினையில் இந்திராவின் ஆலோசகர்களாக இருந்த அதிகாரிகள் ஓரம் கட்டப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஓரளவு தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பார்த்தசாரதியிடமிருந்து அந்தப் பொறுப்புகளைப் பறித்து ரமேஷ் பண்டாரி என்ற மற்றொரு பார்ப்பன அதிகாரியிடம் ராஜீவ் ஒப்படைத்தார்.

இலங்கை உட்பட - ஆசியாவில் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்திகளாக உளவுத் துறை, வெளியுறவுத் துறையின் பார்ப்பனிய அதிகார வர்க்கம் உருவெடுத்தது. ராஜீவ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இந்த கொள்கை மாற்றங்களை விடுதலைப்புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் எழுதிய ‘போரும் அமைதியும்’ நூலில் பதிவு செய்துள்ளார். (அந்நூலின் 64, 65 ஆம் பக்கங்கள்)

இந்திராவின் ஆலோசகராக செயல்பட்டு வந்த பார்த்தசாரதியை அன்டன் பாலசிங்கம் புதுடில்லியில், அந்த அதிகாரியின் இல்லத்தில், 1985 ஜனவரியில் சந்தித்துப் பேசினார். ராஜீவ் ஆட்சிக்கு வந்த பிறகு, வெளியுறவுக் கொள்கைகள் மாற்றப்பட்டு வருகின்றன என்று கூறிய பார்த்தசாரதி, இணக்கமான அணுகுமுறைகளை கைவிட்டு இனி கடுமையான போக்குகளைப் பின்பற்ற முடிவு செய்துவிட்டார்கள். ராஜீவ், ஜெயவர்த்தனாவை நம்பத் துவங்கிவிட்டார் என்றும், ஜெயவர்த்தனாவின் இரட்டை வேடம் - சூழ்ச்சிகளை, ராஜீவிடம் எடுத்துச் சொல்லி, அவரை ஏற்க வைக்கும் நிலையில் தான் இல்லை என்றும், பிரச்சினை தனது கையை விட்டுப் போய்விட்டது என்றும், பார்த்தசாரதி தம்மிடம் கூறியதாக, பாலசிங்கம் பதிவு செய்துள்ளார்.

“போராடும் அமைப்புகள் தங்களுக்குள் ஒருங் கிணைப்பை உருவாக்கிக் கொண்டு, பொதுவான கோரிக்கைகளை உருவாக்கி, பேச்சு வார்த்தையில், அழுத்தமாக வலியுறுத்துங்கள்” என்று ஆலோசனை கூறிய பார்த்தசாரதி, இனி உளவுத் துறைதான் இந்தப் பிரச்சினைகளை விவாதிக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார். ஆக, ராஜீவ் பிரதமராக வந்த பிறகு, வெளியுறவுக் கொள்கைகளை - குறிப்பாக ஈழப் பிரச்சினைக்கான கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் தீர்மானிக் கும் உரிமைகளை உளவுத்துறை பார்ப்பனிய அதிகார வர்க்கம் எடுத்துக் கொண்டு விட்டது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஒரு ஜனநாயக அமைப்பில் அரசியல் தலைவர்கள் - அமைச்சர்கள் தீர்மானிக்க வேண்டிய கொள்கைகளை அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, அதிகாரவர்க்கம், தன் கரங்களில் எடுத்துக் கொண்டது.

இந்த மாற்றங்கள் - வெளிப்படையாகவே தெரியத் தொடங்கின. ஒரு புறம் ‘டெலோ’ அமைப்பும், மறுபுறம் விடுதலைப்புலிகள் அமைப்பும், இலங்கை ராணுவத்துக்கு எதிராகத் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வந்தன. யாழ்தேவி தொடர் வண்டியில் டெலோ நடத்திய தாக்குதலில் (1985 ஜன.19-ல்) 22 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். கொக்கிலாய் ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் (1985, பி.13) 106 சிங்கள ராணுவத்தினர் பலியானார்கள். அதிர்ந்து போனது இலங்கை ராணுவம். தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில், முல்லைத் தீவில் தமிழர் அகதிகள் முகாமில் பதிலடித் தாக்குதலை நடத்தி 52 அப்பாவித் தமிழர்களைக் கொன்றது. இந்த ‘இனப் படுகொலையைத் தடுக்க வேண்டும்’ என்று தமிழ் ஈழ அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தும் - இந்தியா மவுனம் சாதித்தது. கடந்த காலங்களில் இத்தகைய இனப் படுகொலைகளைக் கண்டித்து வந்த இந்தியா - அப்போது மவுனம் சாதித்தது, இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை அறிவிப்பதாகவே இருந்தது, என்கிறார் அன்டன் பாலசிங்கம்.

1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் - ஈழப் போராளிக் குழுக்களின் தலைவர்களை, உளவு நிறுவனங்கள் அழைத்தன. அவர்களிடம், உளவு நிறுவன அதிகாரிகள், இந்தியாவின் புதிய கொள்கைகளை விளக்கினார்கள்.

அப்போது ‘ரா’ உளவு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் கிரிஷ் சந்திர செக்சேனா. இவர் தான் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஆலோசகராக பிறகு நியமிக்கப் பட்டார். அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் - ‘ரா’ தலைவர் சச்சேனா அழைப்பை ஏற்று, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும், அன்டன் பாலசிங்கமும் அவரை சந்தித்தனர். அதிகார மிடுக்குடன், பேசிய அந்த அதிகாரி –

“கடந்த கால அணுகுமுறை இப் போது மாறிவிட்டது. இலங்கைத் தமிழர்களை ராணுவத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்குத்தான் உங்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதே தவிர, தனி நாடு போராட்டத்துக்கு அல்ல. அது உங்களின் உணர் வாக இருக்கலாம். ஆனால், அங்கே நாடு பிரிவதை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது. அது எங்கள் நாட்டில் பெரும் பாதிப்புகளை உருவாக்கிவிடும்” என்று கூறிய அவர், பிரபாகரனைப் பார்த்து, குரலை உயர்த்தி, “எங்களின் இந்த அணுகுமுறை யைப் புரிந்து கொண்டு, நீங்கள் ஆதரித்தாக வேண் டும்” என்றார். ‘ரா’வைத் தொடர்ந்து வேறு ஒரு நாளில், இந்திய உளவுத்துறை (அய்.பி.) அழைத்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் - அன்டன் பாலசிங்கத்தை சந்தித்தவர் உளவுத்துறை இயக்குனராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான். உ.பி. மாநிலம் காசியில் இந்த சந்திப்பு நடந்தது. சச்சேனா கடுமையான குரலில் - புதிய வெளியுறவுக் கொள்கையை விளக்கினார் என்றால், எம்.கே.நாராயணன், மென்மையாக, அதே கருத்தை பிரதிபலித்தார்.

இவை எல்லாம் உளவுத் துறை வழக்கமாகப் பின்பற்றும் தந்திரங்கள் தான். ‘தெற்கு ஆசியாவின் வலிமையான நாடு இந்தியா. இந்த மண்டலத்தில் நிலையான அமைதியைக் கொண்டு வருவது இந்தியாவின் கடமை. தெற்கு ஆசியாவை அமைதி மண்டலமாக்கிடுவதற்கான புதிய திட்டங்களை, நாங்கள் வகுத்துள்ளோம். இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார் எம்.கே.நாராயணன். இந்தியாவின் பல்வேறு இனங்களை தனது அதிகார மய்யத்தின் கீழ் அடக்கி வரும் இந்திய தேசிய ஆட்சி, தனது எல்லைகளையும் கடந்து, தெற்கு ஆசிய மண்டலம் முழுவதற்கும் ‘அமைதியை’ தனது அதிகார வலிமையால் திணிக்க விரும்பியது. தெற்கு ஆசியா அமைதி மண்டலமாக இருப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமே தவிர, அங்கு ஒடுக்கப்படுகிற இனங்களின் பிரச்சினைகள், அடக்கு முறைகள் அவர்களுக்கு முக்கியமல்ல. இதுவே ராஜீவ் காந்திக்கு பார்ப்பனிய அதிகார வர்க்கம் உருவாக்கிக் கொடுத்த, புதிய வெளியுறவுக் கொள்கைக்கான அணுகு முறையாகும். இந்திய அதிகாரப் பார்ப்பன மேலாண்மை யின் விரிவாக்கமாகவே இது அமைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

இலங்கை ராணுவத்தின் ஒடுக்குமுறை பற்றியும் ஜெய வர்த்தனா விரிக்கும் சூழ்ச்சி வலை பற்றியும் பிரபாகரன், எம்.கே.நாராயணனிடம் எடுத்துக் கூறினார், அவற்றைப் பொறுமையுடன் கேட்ட எம்.கே. நாராயணன், இறுதியில் தனது கருத்தையே மீண்டும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, வேகமான மாற்றங்கள் உருவாயின. ‘டெலோ’ ஈ.பி.ஆர்.எல்.எப்.’, ‘இரோஸ்’ ஆகிய அமைப்புகள் கூட்டாக உருவாக்கியிருந்த ‘ஈழ தேசிய விடுதலை முன்னணி’ (ஈ.என்.எல்.எல்.) என்ற கூட்டமைப்பில், விடுதலைப் புலி களும் அங்கமாகியது. பூட்டான் தலைநகரான திம்புவில் இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன், போராளிகளின் பிரதிநிதிகள் பேச்சுவாத்தை நடத்த உளவு நிறுவனங்கள் ஏற்பாடு செய்தன. பேச்சுவார்த்தை துவங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன் ராணுவ விமானத்தில் போராளி குழுக்களின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தனர். போராளிகளை ‘ரா’ தலைமை நிலையத்துக்கு அழைத்துப் பேசிய ‘ரா’ உளவு நிறுவனத் தலைவர் சச்சேனா “பேச்சு வார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு தந்தாக வேண்டும். எந்த மீறலையும், மோதலையும், ராஜீவ் அரசு சகித்துக் கொள்ளாது. அப்படி ஏதும் நடக்குமானால், இந்தியாவில் நீங்கள் பாதுகாப்பு கோரி அடைக்கலம் கோர முடியாது. எந்தப் பாதுகாப்பு உதவியையும் இந்தியா செய்யாது. பூட்டானில் பேச்சு வார்த்தை, இன்னும் இரண்டு வாரங்களில் துவங்கும். பங்கேற்க மறுப்பீர்களேயானால், இந்தியாவின் மண்ணையோ, அல்லது இந்தியாவின் கடற்பரப்பையோ நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று மிரட்டினார் (அன்டன் பாலசிங்கம் எழுதிய ‘போரும் அமைதியும்’ நூல். பக்.76)

- விடுதலை இராசேந்திரன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com