Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

‘சுபா’வின் சிறை குறிப்புகள் நூலாக வேண்டும்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சிறை வைக்கப்பட்டதால் தனது தொழில் - வருவாய் - பெற்ற மகள் - என்ற அனைத்தையுமே இழந்தவர் ‘சுபா’ சுந்தரம் என்று படத்தைத் திறந்து வைத்து பழ.நெடுமாறன் குறிப்பிட்டார். மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பத்திரிகையாளர் - புகைப்படக் கலைஞர் ‘சுபா’ சுந்தரம் படத் திறப்பு - இரங்கல் கூட்டம் - 21.7.2005 மாலை 5 மணியளவில் - சென்னை பத்திரிகையாளர் குடியிருப்பு விளையாட்டரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் பழ.நெடு மாறன், ‘சுபா’ சுந்தரம் படத்தைத் திறந்து வைத்தார். அவரது உரையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் பொய்யாக சிக்க வைக்கப்பட்டார். அதனால் அவரது குடும்பமே அழிந்தது. தனது ஒரே மகளை இழந்தார். அவர் நடத்தி வந்த தொழிலும் சின்னாபின்னமானது. அவர் யாருக்கும் மனத்தாலும் தீங்கு நினைக்காதவர். எதையும் எதிர் பாராமல், எல்லாருக்கும் உதவியவர். அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர்கள் பலர். அவர் இந்தப் பொய் வழக்கில் சிக்க வைக்கப்படாமல் இருந்தால் - தனது தொழிலை இழந்திருக்க மாட்டார். ஒரே மகளையும் இழந்திருக்க மாட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து நாங்கள் போராடினோம். இயக்கம் நடத்தினோம். மூத்த வழக்கறிஞர் நடராசன் அவர்களை வைத்து வழக்கை நடத்தினோம். நீதி மன்றம் விடுதலை செய்தது. விடுதலை பெற்று என்னை சந்தித்தபோது - அவர் சிறு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதார். யாருக்கும் இத்தகைய அநீதி இழைக்கப்படக் கூடாது. இத்தகைய அநீதிகளுக்கு உள்ளாகும்போது, நாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவும் கூடாது. நீதிக்காகக் குரல் கொடுக்க முன் வரவேண்டும். அதைத் தான் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு எனது வேண்டுகோளாக வைக்கிறேன்” என்றார் பழ.நெடுமாறன்.

பத்திரிகையாளர் ‘அலைஓசை’ மணி பேசுகையில் - “தமிழ்நாடு” பத்திரிகையில் நானும் அவனும் ஒன்றாக வேலை செய்தோம். அங்கு தான் எங்கள் நட்பு துவங்கியது. பிறகு நான் வேலை இல்லாமல் இருந்தபோது, எனக்காக அழுதவன் ‘சுபா’ சுந்தரம். அவனுக்காக ஒலி பெருக்கி முன்னே நிற்காத நான், இப்போது வந்து நிற்கிறேன்” என்று கூறி உரையைத் தொடர முடியாமல் முடித்துக் கொண்டார்.

மூத்த பத்திரிகையாளர் அரங்கையன் பேசுகையில், “சுருக்கெழுத்தில் - தேர்ச்சி பெற்றவன் ‘சுபா’; தமிழ் நாட்டிலே இரண்டாவதாக தேர்ச்சிப் பெற்றான். உதவி என்று கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லக் கூடாது என்று அவன் எனக்கு சொல்லிக் கொடுத்தான். பத்து ரூபாய் இருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்பான். அதற்கு பதிலாக பத்து ரூபாய் கொடு என்று உரிமையோடு கேட்டால், உடனே கொடுத்து விடுவான். அப்படி உரிமையோடு கேட்க வேண்டும் என்று தான்அவன் விரும்புவான். எத்தனையோ புகைப்படக்காரர்களை அவன் வளர்த்தான், உருவாக்கினான். அவனைப் போன்ற மனிதநேயமிக்க பத்திரிகையாளனை நான் பார்த்த தில்லை. சுபாவுக்கு இணை சுபா தான்” என்றார்.

“நான் - மிக அதிகமாக அவரிடம் பழகியதில்லை. அறிமுகம் உண்டு. சுபா ஒரு மிகச் சிறந்த மானுடன்” என்று தோழர் ஜவகர் குறிப்பிட்டார்.

“சுபா சுந்தரத்தின் பிரம்மாண்டத்தை நாம் உணரவில்லை” என்றார் ‘தீம்தரிகிட’ ஆசிரியர் ஞாநி. அவர் தனது உரையில்,

‘போட்டோ ஜர்னலிசம்’ என்ற ‘புகைப்பட இதழியல்’ நிறுவனத்தை, முதன்முதலாக ஒரு தனி நபராகத் துவக்கி, வளர்த்த அவரது பிரமாண்ட சாதனை சரித்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பிரம்மாண்டத்தை நாம் உணரவில்லை என்றே நினைக்கிறேன். ‘சுபா’விடம் சென்று எந்தப் படம் கேட்டாலும் சரி, ‘இல்லை’ என்ற பதிலே கிடைக்காது. யாரிடமும் கிடைக்காத படங்களையெல்லாம் - தன்னிடம் ‘இல்லை’ என்று சொல்லாதவர். அவ்வளவு அரிய புகைப்படங்களை சேமித்தார். ‘ஆனந்த விகடனும்’, ‘குமுதமும்’ தான் அவரது படங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Viduthalia Rajendran, Nedumaran, Nakkeeran Gopal

நக்சல்பாரி என்று குற்றம் சாட்டப்பட்டு, 12 ஆண்டு காலம் சிறையிலிருந்து விடுதலை பெற்ற தோழர் வள்ளுவனை நான், 1982-ல் பேட்டி கண்டு ‘தீம்தரிகிட’ பத்திரிகையில் வெளியிட்டேன். அப்போது பேட்டிக்காக வள்ளுவனை புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள் யாரும் முன்வராதபோது, ஒருவர்தான் முன்வந்தார், அவர் தான் ‘சுபா’ சுந்தரம். மற்றொரு செய்தியையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இங்கே அமர்ந்திருக்கிற சின்னக் குத்தூசியும் நானும் ‘எதிரொலி’ பத்திரிகைக்காக காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரசு வதியைப் பேட்டிக் காண சென்றபோது அவர் எங்களிடம் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

“நான் கேட்ட கேள்விகளுக்கு, வீரமணியால் பதில் சொல்ல முடியவில்லை, திணறி விட்டார்” என்றார். நீங்கள் எப்போது வீரமணியை சந்தித்தீர்கள் என்று நாங்கள் கேட்டபோது, “சோ, பேட்டி கண்டாரல்லவா? அவருக்கு, வீரமணியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை நான் தானே தயாரித்துக் கொடுத்தேன்” என்றார். இதை அப்படியே ‘எதிரொலி’ பத்திரிகையில் நாங்கள் பதிவு செய்தோம். உடனே, சோவிடமிருந்து எங்களுக்கு தொலை பேசி அழைப்பு வந்தது. சோவிடமிருந்து அவருக்காக எங்களை அழைத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் ‘சுபா’ சுந்தரம். அப்போது சோ, சங்கராச்சாரி அப்படியா சொன்னார் என்று கேட்டுவிட்டு, அவர் சொல்லாமல் நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள். உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்றார். சோவின் இந்தக் கூற்றுக்கு ஒரே நேரிடை சாட்சி, அவர் அருகிலிருந்த ‘சுபா’ சுந்தரம் தான்.

இப்படிக் கூறிய சோ - அடுத்த வாரமே ‘துக்ளக்’ ஏட்டில் - சங்கராச்சாரி தனக்கு கேள்விகள் எதுவும் தயாரித்து தரவில்லை என்று மறுத்துவிட்டார். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ‘சுபா’வுக்கு தூக்குத் தண்டனை விதித்தபோது அவரது மகன் அருண்குமார், ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில், தனது தந்தையையும், அப்போது படம் பிடித்துக் கொண்டிருந்தார். நான் ஒன்றைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட வேண்டும். ‘சுபா’ சுந்தரம் விடுதலை பெற்று - ஒரு சுதந்திர மனிதனாக வாழ்ந்து மரணமடைந்திருக்கிறார். இதுவே அவருக்குக் கிடைத்த மிகச் சிறப்பு என்று நான் கருதுகிறேன். இது அனைவருக்கும் கிடைக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“பழ நெடுமாறன் ‘செய்தி’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் இந்த நிகழ்வில் அவர் பங்கேற்பது மிகவும் பொறுத்தமானது” என்றார் மூத்த பத்திரிகையாளர் பாலன். “நாங்கள் எல்லாம் திராவிடர் இயக்க ஏடுகளில் பணியாற்றியவர்கள். “இன முழக்கம்” ஏட்டில் பல திராவிடர் இயக்கத் தலைவர்களின் பேச்சுகளை எல்லாம் பக்கம் பக்கமாக எழுதி வெளியிட்டவர்கள்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார் பாலன்.

தொடர்ந்து பேசுகையில், “சுபா பெரியாரின் செல்லப் பிள்ளையாக இருந்தான். 1966-ல் காட்டூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இரவு 10.30 மணிக்கு காமராசர் பேசினார். அதைப் படம் பிடித்து, ‘இந்து’ நாளேட்டின் விமானத்தின் மூலம் இரவே சென்னைக்கு அனுப்பி வைத்து, அடுத்த நாள் காலையிலேயே அந்தப் புகைப் படத்தை பத்திரிகையில் வெளிவரச் செய்தவன் ‘சுபா’. தொழில் நுட்ப வசதிகள் வளர்ச்சியடையாத காலகட்டத் தில் இந்த சாதனையைச் செய்தவன். ஆஸ்திரேலியா-இந்தியா கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்த போது, மைதானத்துக்குள் திடீர் என்று புகுந்த ஒரு நாயை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், விரட்டி வந்து, மைதானத்துக்கு வெளியே கொண்டு வந்துவிட்ட காட்சியை சுபா சுந்தரம் ஒருவன் மட்டும் தான் படம் பிடித்தான். எத்தனையோ பெரிய பத்திரிகைகளின் புகைப்படக்காரர்களால் அதைப் படம் பிடிக்க முடிய வில்லை. அந்த அபூர்வ படத்துக்கு லட்சக் கணக்கில் பணம் தந்து வாங்க பல முன்னணி பத்திரிகைகள் முன் வந்தன. ஆனால் ‘சுபா’ சுந்தரம் - தான் படங்களை வழங்கிவந்த ‘ஆனந்த விகடனு’க்குத் தான் அதைத் தந்தான். நடுப்பக்கத்தில் இரண்டு பக்கங்களில் அந்தப் படத்தை ஆனந்த விகடன் வெளியிட்டது. அவனது இராயப்பேட்டை அலுவலகம் - பல பத்திரிகையாளர்களுக்கு தாய் வீடாக இருந்தது. புகைப்படத் தொழிலில் அவன் ஒரு மேதையாகவே விளங்கினான்” என்று குறிப்பிட்டார்.

விசிட்டர் அனந்த் பேசுகையில் - “மரணமடைந்த நாள் - காலையில் வழக்கம் போல் என்னை அழைத்துப் பேசிய சுபா, மரணத்தைப் பற்றியே தன்னிடம் அதிகம் பேசிக் கொண்டிருந்தார்” என்று குறிப்பிட்டார். “ஆக்ஷன் போட்டோ” என்ற கலையை அறிமுகப் படுத்தியவர் சுபா சுந்தரம் தான் என்று குறிப்பிட்ட, நக்கீரன் கோபால் ‘நக்கீரன்’ அலுவலகத்தில், பொறுப்பாசிரியர் காமராசர் அலுவலகத்தில் மாட்டப்பட்டுள்ள ஒரே படமான தனித்தன்மை மிக்க பெரியாரின் படம், ‘சுபா’ சுந்தரம் எடுத்ததுதான் என்றார்.

பத்திரிகையாளர் புகைப்படக்காரர் என்ற எல்லையைத் தாண்டி, ஒரு தமிழினப் பற்றாளர் என்ற பெருமைக்குரிய பிம்பம், தமிழ்நாட்டிலும், தமிழ் நாட்டின் எல்லையைக் கடந்தும், ‘சுபா’ சுந்தரத்துக்கு இருப்பதே, அவரது பெருமை என்று ‘தமிழர் கண்ணோட்டம்’ ஆசிரியர் தோழர் மணியரசன் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் என்ற முறையில் என்னுடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்தவர் சுபா என்று குறிப்பிட்ட பத்திரிகையாளர் நூருல்லாஹ், ‘சுபா காமிரா வழியாக தமிழக அரசியல் வரலாறு’ என்ற தலைப்பில், ஒரு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி பேசுகையில், “40 ஆண்டுகளுக்கு முன்னால், சம்பத் நடத்திய ‘தமிழ்ச் செய்தி’ நாளேட்டில் நான் பணியாற்றிய போது, ஒரு நிருபராக சந்தித்த இளைஞர் தான் ‘சுபா’ சுந்தரம். அப்போது அவர் ஒல்லியான உருவத்தில் இருந்தார். செய்திகளை மிக விரிவாகத் தரக்கூடிய திறமையுடையவர். அதன் பிறகு அவர் ஒரு ‘டேப்ரிகார்டு’ கருவியை வாங்கினார். பேச்சுகளை பதிவு செய்து முழுமையாக எழுதப் போவதாகக் கூறினார். அப்படி அவர் எழுதிய தலைவர்களின் பேச்சுகள், ‘நவமணி’ நாளேட்டில் முழுமையாக வெளி வந்தது. ‘ஆக்ஷன் பிக்சர்ஸ்’ என்ற முறை பத்திரிகை உலகில், ‘சுபா’ வால்தான் அறிமுகமானது. என்றும் நினைவில் நிற்கக் கூடிய பல அரிய புகைப்படங்களை எடுத்தவர் அவர். 1972-ல் எம்.ஜி.ஆரும்-கல்யாண சுந்தரமும் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்) ஆளுநரிடம் மனு கொடுக்க ஊர்வலமாகச் சென்ற காட்சியை ‘சுபா’ தான் ஒரு சுவர் மீது ஏறி நின்று கொண்டு படமெடுத்தார். அந்தப் பேரணி கடந்து சென்ற நேரம் 18 நிமிடம் தான். ஆனால் ‘சுபா’ சுந்தரம் எடுத்த படத்தைப் பார்த்தால், ஒரு லட்சம் பேர் அந்தப் பேரணியில் பங்கு கொண்டது போல் தெரியும்.

காமராசர் இறுதி ஊர்வலத்தை அவர் படம் பிடித்தார். அந்த படம் தான், காமராசர் வாழ்க்கை வரலாறுகளில், இடம் பெறும் படமாகிவிட்டது. ஒவ்வொரு தலைவரும் - பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பழகியவர் அவர். ஆனால், செய்யாத குற்றத்துக்காக அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. 1984-க்குப் பிறகு, தமிழ்நாட்டில் எல்லோருமே விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள். ஒரே நாளில் நான்கே கால்கோடி ரூபாயை அரசு பணத்தை எடுத்து, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். புலிகளுக்கு வழங்கினார். கலைஞரும், பேராசிரியரும் புலிகளுக்காக தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தார்கள். இப்படி, தமிழ்நாட்டில் எல்லோருமே விடுதலைப் புலிகளை ஆதரித்த காலத்தில், ‘சுபா’ சுந்தரமும் புலிகளிடம் நெருக்கமாக இருந்தார்.

அவர் விடுதலையான பிறகு, ஒரு முறை அவரது வீட்டுக்கு எங்களை உணவுக்கு அழைத்தார். அப்போதுதான் சிறையிலிருந்த காலத்தில் எழுதிய சிறைக் குறிப்புகளை என்னிடம் காட்டினார். அது இப்போதும் அவரது இல்லத்தில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த சிறைக் குறிப்புகளையும், அவரது வரலாற்றையும், நூலாக வெளி வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.“உலக நாடுகளைச் சுற்றி வந்தவர் ‘சுபா’ சுந்தரம். பெரியார் இயக்கத்தோடு நெருக்கமாக இருந்தார். பெரியாரை பல்வேறு கோணங்களில் அவர் படம் பிடித்துக் கொண்டே இருந்தார். பெரியாரின் ஒரே வண்ணப்படம் - ‘சுபா’ சுந்தரம் எடுத்ததுதான். அடுத்தவர்களுக்கு உதவக் கூடிய மனித நேயமிக்க பத்திரிகையாளர். எட்டு ஆண்டுகாலம் அவர் சிறைப்பட்டார். அதனால், வாழ்க்கை அர்த்தமுள்ள வரலாறாகிவிட்டது” என்று தலைமை தாங்கி நிகழ்ச்சியை வழி நடத்திய விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.

தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ‘சுபா’ குடும்பத்துக்கு ரூ.5,000-த்துக்கான காசோலையை மூத்த பத்திரிகையாளர் பாலு ‘சுபா’வின் மகன் அருண்குமாரிடம் வழங்கினார். அருண் குமார், ஏற்புரை வழங்கினார். விடுதலை இராதா நன்றி கூற 6.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. மூத்த பத்திரிகையாளர் சோலை - உடல் நலிவுற்ற நிலையிலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ‘சுபா’ உறவினர்களும், பத்திரிகையாளர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com